தொடர்புடைய கட்டுரை


உலக பூமி நாள் விழிப்புணர்வு

Dr. பா. சாம்ராஜ்

21st Aug 2018

A   A   A

உலக பூமிநாளாக ஏப்ரல் 22–ம் நாளை 22-04-1970 லிருந்து கொண்டாடுகிறோம். ஜீவராசிகள் அனைத்தும் தோன்றக் காரணமாயிருப்பது இந்த பூமி ஆகும். இதுவே பல்லுயிர் பண்மய பெருக்கத்திற்கும் மூலகாரணமாகும். மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு பல்லுயிர் பண்மய பெருக்கம் அவசியமானதாகும். இதற்கு சுற்றுச் சூழல் சமநிலை பராமரிப்பு மிகவும் அவசியம்.

பஞ்சபூதங்கள் எனக்கருதப்படும் நிலம். நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தும் அடங்கியதே இப்பிரபஞ்சம். நமது மூதாதையர்கள் மிகவும் சிரத்தையாக இப்பிரபஞ்சத்தை பேணிக் காத்து வந்தார்கள். பழமொழிகளும் கவிதைகளும் கதைகளும் இதனை வளர்த்துக் காக்கும் ஊக்க சக்தியாகச் செயல்பட்டன. இதற்கு மாறான செயல்களை தடுத்திடவும் உதவின. தற்போது இயற்கை சமநிலை என்பது கேள்வி குறியாகிவிட்ட நிலையில், இதன் விளைவுகளான திடீர் இயற்கை பேரிடர்களை மனித சமூகம் சந்திக்க நேரிடுகிறது.

மனிதனின் பேராசை காரணமாக இயற்கையின் மீது மனிதனின் ஆளுமை மிகவும் அதிகமாக, மோசமாக செலுத்தப்பட்டது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவும், உலகிற்கு உணர்த்தவும், மாற்று முறைகளை உருவாக்கவும் அதன் மூலம் பூமியை அழிவிலிருந்து மீட்கவும் உலக பூமிதினம் கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உலக மக்களிடம் உண்டாக்கப்படுவதோடு, பூமியை அழிவிலிருந்து மீட்கவும் வழிவகுக்குகிறது.

தற்போது நாம் வாழும் உலகத்தின் பருவ நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுக் கொண்டேயிருப்பதை நாம் காண்கிறோம். பருவங்கள் தவறுகின்றன. பயிர்கள் பொய்த்துப் போகின்றன. உயிரினங்கள் பல அழிவை நோக்கி நகர்கின்றன. இயற்கை காடுகள் இல்லையென்றால் நாம் இல்லை. நீங்கள் இந்த பூமியை நேசிப்பது உண்மையென்றால் முதலில் மரங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் மரங்களே இந்த மண்ணுலகின் காவலர்கள். மண்ணையும் விண்ணையும் இணைக்கும் அதிசய படைப்பே மரங்களாகும். இப்படி மனிதருக்கு நண்பர்களாய் விளங்கும் மரங்களைக் காப்பது நமது தலையாய கடமையாகும்.

பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்களும், பெண்களும், குழந்தைகளும் தம்மைச்சுற்றி ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் மாற்றங்களை சரிவர அறிந்து கொள்வதில்லை. இத்தகைய உண்மைகளை மக்களுக்கு உணர்த்தவும், காணப்படும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் தேவையான அறிவையும் முறைகளையும் கற்றுக்கொடுப்பதுமே இந்த விழிப்புணர்வு செயல் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலைக்கு இயற்கை வளங்கள் துர்பிரயோகம் செய்யப்படுவது மிக முக்கியமான ஒரு காரணமாகும். மக்கள் தொகை ஏறிக்கொண்டே போவதாலும் முக்கியமாக நகர்புறங்களில் மனித குடியேற்றம் அதிகமாவதாலும், மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கரும்புகையாலும் பூமி வெப்பம் அடைந்து கொண்டேப் போகிறது. அதோடு மனிதனின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

இயற்கை காடுகளின் பயன்களையும் புனித தன்மையையும் பிறப்பெருமைகளையும் சூழலையும் உணர்ந்து அவைகளை பேணிக்காக்க வேண்டிய ஒரு கட்டாய நிலையில் வந்துள்ளோம். தற்போது மலைப்பாங்கான ஒரு சில இடங்களில் தான் இயற்கை காடுகளை ஆங்காங்கே காணமுடிகிறது. இப்பகுதியில் தான் அதிக ஜீவராசிகள் காணப்படுகிறது. இவை அழிந்தால் உயிரினப்பெருக்கம் குறைந்து பொருளாதாரக் இழப்பு ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, காட்டுதீயால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் வறட்சியை தவிர்ப்பதில் இக்காடுகளுக்கு பெரும் பங்கு உண்டு. அழிந்து வரும் தாவர இனங்கள் பாதுகாக்கப்படவும் பராமரிக்கப்படவும் உகந்த சூழ்நிலைகளை உருவாக்கி இயற்கைக் காடுகளை அழியாமல் பேணிக் காக்க வேண்டும்.

வறட்சியை சமாளிக்க சில ஆலோசனைகள்:-

வறட்சியைப் போக்குவதற்கு தேசிய அளவிலான நீண்டகாலக் கொள்கை வகுக்கப்படவில்லை. இந்தியாவின் சில மாநிலங்களில் வெள்ளமும் அதே சமயம் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. வற்றாத நதிகளை பருவக்கால நதிகளுடன் சேர்க்கும் முயற்சிகளை (உதாரணமாக கங்கைகாவேரித் திட்டம்) சீக்கிரம் செயலாக்க வேண்டும். ஆற்று நீர் வீணாகக் கடலில் போய்ச் செருவதை தடுத்தல் வேண்டும். ஆற்றுப்படுகையிலுள்ள மணல் திருட்டுக்களை தடுக்க வேண்டும். மாநிலங்களில் நீர்ப் பங்கீட்டுக் கொள்கையில் மத்திய அரசு தலையிட்டுத் தேசிய அளவிலான ஒரு திட்டத்தை தீட்டி அதை செயலாக்க முனைதல் வேண்டும்.  

சொட்டு நீர்பாசனம் மற்றும் வறட்சி வேளாண்மையையும் வறட்சியை தாங்கி வளரும் பயிர்களையும் பயிரிட ஊக்குவித்தல் வேண்டும். கசிவு நீர் குட்டை போன்ற மழை நீர் சேகரிப்பு முறைகளை அமலாக்க வேண்டும். குளங்கள், ஏரிகள் மற்றும் அணைகள் போன்றவற்றை தூர்வாரி பராமரித்து அதிக மழை நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும்.

அரசாங்கம் எடுத்துள்ள வறட்சி நிவாரணப் பணிகள் பற்றியும் அவை எவ்விதமாக செயல்படுகிறது என்பதைப் பற்றியும் பொதுமக்கள் அறிந்துகொள்ள ஆவன செய்ய வேண்டும். பல்வேறு துறை அதிகாரிகளும் அரசாங்கத்தின் முயற்சிகளை எவ்வகையிலாவது மக்களிடம் கொண்டு சேர்க்கும்  வகையில் திறம்பட செயல்பட வேண்டும. மக்களே சுய உதவி குழுக்கள் மற்றும் பயனாளிகள் குழுக்கள் அமைத்து அரசாங்கத்தோடு ஒத்துழைப்பு கொடுத்து வறட்சி நிவாரணப் பணிகளை நல்ல விதத்தில் செயல்படுத்த வேண்டும். அனைத்து இலாகாக்களும் இத்திட்டத்தில் பங்கெடுத்து தங்களுடைய பங்களிப்பை விஞ்ஞான ரீதியில் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த நீர்பிடிப்பு பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லா மழைநீரையும் அந்தந்த இடத்திலேயே சேமித்தும், தடுப்பணைகள் தகுந்த இடங்களில் அமைத்தும் இத்திட்டத்தை நன்கு செயல்படுத்தலாம்.

மக்கள் முழுமையான வேளாண்மையையே நம்பியிருத்தல் இல்லாமல், சிறு கைத்தொழில்கள், மாடு வளர்த்தல், கோழி வளர்த்தல், தேனி வளர்த்தல் போன்றவைகளுக்கு ஊக்கம் அளித்தல் வேன்டும்.

நமது புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 2015ம் ஆண்டில் 12.4 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழ்கின்றனர். அதாவது ஏறக்குறைய 170 மில்லியன் இந்திய மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். ஆனால், 2009ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, வறமைக்கோட்டின் கீழ்வாழும் மக்களின் எண்ணிக்கை 29.8 சதவீதமான இருந்தது. இவ்வறட்சியினால் இது மேலும் அதிகரிக்கும் நிலைமை வரவாய்ப்புள்ளது. இவ்வறட்சியைப் போக்கி மனித வளத்தைக் காத்து அதன் உற்பத்தி திறனைப் பெருக்க அரசியல்வாதிகள், அரசாங்கம், பொதுமக்கள் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும். கருத்தொருமித்த இம்மும்முனைப் போராட்டமே வறட்சியை வெல்வதற்கான வழி ஆகும்.   

 


ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.