தொடர்புடைய கட்டுரை


இந்திய வனவிலங்கு பாதுகாப்பு

Dr. பா. சாம்ராஜ்

12th Aug 2018

A   A   A

உலகில் நாம் வாழ வழிவகுக்கும் பூமியும் அதன் நிறைவும் இன்று மனிதனுடைய குறுக்கீட்டாலும், பேராசையாலும் அழிந்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனிதன் செய்யும் ஒவ்வொரு துர்ச்செயல்களுக்கும் ஏற்ற பலனை இயற்கை சீற்றத்தின் மூலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தாவரங்களும், உயிரினங்களும் நம் வாழ்வோடும், சமயத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்தே உள்ளன. சங்க இலக்கியங்களும், நம் முன்னோர்கள் வெவ்வேறு மரங்களோடு இணைந்து தங்கள் வாழ்க்கையை நடத்தினர் என்பதைத் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்தக் காலக்கட்டத்தில் தாவரங்களும் உயிரினங்களும் சுற்றுச்சூழல் பராமரிப்பில் எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

வனம், மக்கள் வாழ்வின் பெருமைக்குரிய ஒரு வரம். சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வசிக்கும் இடங்களைத் தாவர இனங்களுக்கு ஏற்றவாறு பிரித்தனரே அன்றி மனிதனின் ஜாதிமத அல்லது ஏற்றத் தாழ்வுகளை வைத்துப் பிரிக்கவில்லை. ஓரிடத்தில் விளையும் விளைபொருளே மக்களின் வாழ்க்கையைப் பறை சாற்றியது. இயற்கை வளம் ஒரு நாட்டின் வளமைக்கு மிக அவசியம். அது ஒரு நாட்டின் உயிர்நாடி என்பதே உண்மை. வனத்தின் வீழ்ச்சி வையகத்தின் வீழ்ச்சியாகும். இன்றைய மக்கள்பெருக்கத்தின் விளைவால் இயற்கை வளங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. வனங்களை அழிப்பதால் விலங்கினங்களும், பறவையினங்களும், பூச்சியினங்களும், தாவர இனங்களும் வெகுவாக அழிந்துவிட்டன.

உலகின் உயிரினங்களில் 6.4 சதவீதமான சுமார் 81,000 இனங்கள் இந்தியாவில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 5,000 முதுகெலும்பில்லாதவை, 57,000 பூச்சிவகைகள் என விலங்கினக் கோர்வை இருக்கிறது. 2,546 வகை மீன்கள், 204 வகை நீர் நில வாழினங்கள், 428 வகை ஊர்வன, 1,228 வகைப் பறவையினங்கள் மற்றும் 372 வகைப் பாலூட்டிகள் இங்கே வாழ்கின்றன. இவற்றில் சுமார் 62 சதவீதம் இந்தியாவிற்கு மட்டுமே உரிய இனங்களாகும்.

இந்தியாவின் வளமையான ஆதாரங்கள் 51 வகையான தானியங்களையும் தினைகளையும், 140 வகையான பழங்களையும், 27 வகையான வாசனை மற்றும் மசாலாப் பொருட்களையும், 55 வகையான காய்கறி மற்றும் பருப்பு வகைகளையும், 24 வகையான நார்ப் பயிர்களையும், 12 வகையான எண்ணெய் வித்துக்களையும் தன்னிடம் கொண்டுள்ளது.

நூற்றுக்கணக்கான வனப்பயிர் வகைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. கிழக்கு தீபகற்ப பரப்பு காட்டு (ஒயில்டு) நெற்பயிரின் முக்கிய மையமாக விளங்குகிறது.

உலகின் எட்டுவகையான எருமை வகைகளில் அனைத்தையும் இந்தியா பிரதிநிதப்படுத்துகிறது. மேலும் 26 வகைக் கால்நடைகள், 40 வகைச் செம்மறி ஆடுகள், 20 வகை வெள்ளாடுகள், 3 வகை ஒட்டகங்கள், 6 வகை குதிரைகள் 2 வகைக் கழுதைகள் மற்றும் 18 வகை இறைச்சிக் கோழிகள் இங்கு காணப்படுகின்றன. இமாலய எருது, மிதுன் வாத்துக்கள் ஆகியனவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. விவசாயத்திற்காக காடுகளைக் களைதல் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் ஏற்படும் அழுத்தம் பல்லுயிர்க் கோர்வையின் இழப்பிற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்தியச் சிறுத்தை, இந்திய காண்டாமிருகம், இளம் சிவப்பு வண்ணத் தலை வாத்து, மலைக்குயில் முதலியன இந்நாட்டில் அழிந்து போய்விட்டன. 81 வகையான பாலூட்டிகள், 47 வகைப் பறவைகள், 15 வகை ஊர்வன, 3 வகை நீர்நில வாழினங்கள் அதிக எண்ணிக்கையில் வண்ணத்துப்பூச்சிகள், விட்டில் பூச்சிகள், வண்டுகள் மேலும் 1,500 தாவர வகைகள் இந்தியாவில் அளவில் குறைந்து வருவதாகவும் மறைந்துவிடும் ஆபத்திற்குள்ளாகி இருப்பதாகவும் அறியப்படுகிறது. கடந்த 6 முதல் 10 தலைமுறைகளாகக் காணப்படாத காரணத்தால் சுமார் 20 வகை தாவர இனங்கள் நிச்சயமாக அழிந்து போன இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அணு ஆயுத தயாரிப்பில் இயற்கையின் மென்மை மெல்ல மெல்லக் கரைந்து நாம் அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதை உணர முடிகிறது. இதன் தாக்கம் இயற்கைச் சூழல், உயிர்ச் சூழலோடு மட்டுமின்றி பொருளாதாரத்தையும் அதன் வாயிலாக இச்சமுதாயத்தையும் பாதித்து வருகின்றது. இவ்வுண்மையை, பாமர மனிதன் முதல் சட்டமியற்றும் அரசு வரை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

இந்தியாவின் நிலப்பரப்பு 329 மில்லியன் ஹெக்டேர் ஆகும். உலகப்பரப்பில் இது வெறும் இரண்டு சதவீதம்தான். இந்தச் சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் இறைவன் பகிர்ந்தளித்துள்ள உயிரின வகைகளின் பட்டியலைப் பார்த்தால் இப்பல்லுயிர் பெருக்கம் மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியதாய் இருக்கிறதல்லவா? பூமியின் மேல் பரவியுள்ள வெப்ப மழைக்காடுகளின் பரப்பு 1935 மில்லியன் ஹெக்டேர்கள் ஆகும். இது பூமிப்பரப்பில் 20 சதவீதம் மட்டுமே. இதில் ஆறில் ஒரு பங்கு இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதற்கு மேலும் 7000 கிலோ மீட்டருக்கு மேல் நீண்ட கடற்கரையும், அதையொட்டிய கடல்வளமும் இந்தியாவுக்குச் சொந்தமாக உள்ளது.

அபாயம் என்ன?

கோடிக்கணக்கில் மரபினங்கள் இருந்தாலும், தாவர வகைகள் சுமார் 2503 மட்டுமே இப்போது மனிதனால் பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றனஇவற்றிலும் எட்டே எட்டு வகைத் தாவரங்கள் மட்டுமே மனித குலத்துக்குத் தேவையான அடிப்படை உணவை உற்பத்தி செய்ய பயன்படுகின்றன. இன்னும் இருபது வகைச் செடிகள் துணை உணவுப் பொருளைத் தருகின்றன. சுமார் 20,000 வகைச்செடிகளின் பல்வேறு பாகங்கள் சதைப் பற்றுடன் கூடிய பாகங்களை (Edible parts) கொண்டிருப்பதாக ஆராயப்பட்டுள்ளது. ஆனால் பயன்படுவது சுமார் 3000 வகை மடடுமே.

ஆனால், எவ்வகையிலேனும் பயன்படக்கூடிய பல உயிரின வகைகள் அழிவினை எதிர் நோக்கியுள்ளன. இயற்கையான வாழ்விடங்களையும் (wild habitat) சூழல் அமைப்புகளையும் அழிப்பதால், ஆங்காங்கே வாழும் உயிரினங்களைத் தத்தளிக்க விடுகிறோம். எதிர்வரும் கடும் சூழல் மாற்றங்களான உலகம் வெப்பமயமாதல் மற்றும் பருவக்கால மாற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்ள முடியாத உயிரினங்கள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. உலகமெங்கும் மக்கள் பெருக்கமும், பசியும், பஞ்சமும், பட்டினியும் தாண்டவமாடும்போது, பயன்மிக்க உயிரினங்கள் பாழ்பட்டு அழிந்துபோக விடுவது ஆபத்துக்கும் அபாயத்துக்கும் அறிகுறி அல்லவா?

மனிதனால் தனக்குத் தேவையானவைகள் தெரிவு செய்யப்பட்டு நில இனங்கள் சிறப்புக் கவனத்தோடு விருத்தி செய்யப்படுகின்றன. அரிசியில் மட்டும் 6,000 ரகங்கள் இருப்பதற்குக் காரணம் மனிதனின் (சுயநலமிக்க) அக்கறையே. இவ்வாறு செல்லமாக வளர்க்கப்பட்டு, போற்றிப் பாதுகாக்கப்படும் உயிரின வகைகள் சொற்பமே. பிறவெல்லாம் தமக்கென உகந்த சூழ்நிலையில், பிற உயிரினங்களோடு ஒருங்கிணைந்து சுயவாழ்விற்காக தத்தம் சூழல் அமைப்புகளில் நிலைத்திருக்கின்றன. கடலும் அதில் காணும் நீர்வாழினங்களும் மழைக்காடுகளும் மாங்குரோவ் எனப்படும் அலையாற்றி மற்றும் சதுப்புக் காடுகளும் பாலைவனமும் கூட பிறவகைகளே.

கோடிக்கணக்கான ஆண்டுகளாக நாம் எந்தப்பகுதியில் தோன்றி வளர்ந்தோமோ, அந்தச் சூழலில் ஏற்படும் எந்த ஒரு சிறுமாற்றமும் உயிரினங்களின் நிலைத்தன்மையைப் பாதிக்கும். பாலைவனத்து ஒட்டகத்தைப் பனிப்பகுதிக்கும் அடர்ந்த காட்டில் வசிக்கும் சிங்கத்தை பாலைப்பகுதிக்கும் மாற்றினால் அவை வாழ இயலாது. காரணம், சுற்றுச்சூழலில் பத்தாண்டுகளுக்கு 0.1 டிகிரி வெப்பநிலையில் மாற்றம் கண்டால் மடடுமே அதற்கேற்ப உயிரினங்கள் தங்களையும் மாற்றி அமைத்துக்கொள்ள இயற்கை வழி செய்துள்ளது.

இப்படிப்பட்ட வளமையான புவியை இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, பாதுகாப்பது நமது தலையாயக் கடமையாகும்.

 


நவம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.