தொடர்புடைய கட்டுரை


கடல்சார் மண்டல ஆராய்ச்சி நிறுவனம்

Dr. பா. சாம்ராஜ்

24th Jun 2019

A   A   A

கடற்கரையோர மணல்வெளிகள் மக்களின் வாழ்வாதாரமாகும். இந்தியாவின் மக்கள் தொகையில் 25 விழுக்காடு கடல்சார்ந்த மண்டலமாக இருக்கின்றது. பல்வேறு பயன்களை அளிக்கவல்ல மணல்தேரிகள், மணல்திடல்கள், அங்கே வாழ்கின்ற விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை பேணிப்பாதுகாப்பது பற்றியெல்லாம் ஆராயவும், அவற்றை பாதுகாக்கவும் வேண்டி இருப்பதினால் இதற்கென்றே ஒரு தனியாக மத்திய கடல்சார்ந்த மண்டல ஆராய்ச்சி நிறுவனம் பல இலாகாக்களின் ஈடுபாட்டோடு அமைய வேண்டும். இது குமரி மாவட்டத்தில் அமைந்தால் தீபகற்ப இந்தியாவின் கடலோரப்பகுதிகளின் சுற்றுச்சூழல் தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக அமையும். தற்பொழுது இராஜாக்கமங்கலத்தில் செயல்படும் மீன்வள ஆராய்ச்சி நிலையம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் கிருஷி விஞ்ஞான் கேந்திரா (KVK)-வாக கடலோர மக்களுக்கு உதவியான தொழில்நுட்பங்களை வழங்கினாலும், ஜோத்பூரில் அமைந்துள்ள மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனம் (CAZRI) மாதிரியில் ஒரு தனி நிறுவனமாக அமைக்காததினால் கடல்சார்ந்த இயற்கை மணற்பாங்கான சூழலை பாதுகாப்பதிலும் அதனை மேம்பாடு அடைய செய்வதிலும் பேரிடர்களை சமாளிக்கவும் போதுமானதாக அமையவில்லை.

கடல்சீற்றத்தாலும், கடலரிப்பினாலும் தொடர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கடலோர கிராமங்களுக்காக விரைவில் செயல்படுத்த வேண்டிய மத்திய கடல்சார்ந்த மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் அவசியத்தையும், உண்மை நிலையையும் ஒரு மூத்த வேளாண் விஞ்ஞானி என்கிற முறையில் மத்திய மாநில அரசின் கவனத்திற்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பரிந்துரையை சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஏனென்றால் மீனவ கிராமங்களில் கடல்நீர் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து பெரிய சேதங்களையும், கடலரிப்பையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 2004 டிசம்பர் 26-ம் நாள் தாக்கிய சுனாமியும், 2017 நவம்பரில் ஏற்பட்ட ஓகிப்புயலும் இன்னும் நமது நினைவிலிருந்து அகலவில்லை. இயற்கை எழுப்பிய காற்று தடுப்பரணாகிய அலையாற்றி காடுகளும், மணற்மேடுகளின் தடுப்பு அரண்களும் இந்த பேரழிவில் தப்பி பிழைத்ததும் நம் கண்முன் காட்சியாக விவரிக்கின்றதல்லவா?  

இந்தியாவின் மணல் மேடுகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று, பாலைவன மணல் மேடுகள். இரண்டாவது, கடலோர மணல்மேடுகள் (தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா). இவ்வகை மணல்மேடுகள் கடுமையான காற்றால் இடம் பெயர்வது மூலம் பெரிய நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து விடுகிறது. ஆகவே, இது ஒரு நிரந்தர பிரச்சினையாக இந்த மாநிலங்களின் முன்னேற்றத்தை தடைசெய்கிறது. கடலோரப்பகுதிகளில் காற்று வீசும் திசையை நோக்கி மணல்மேடுகள் அழிவுக்குள்ளாகி நகருகிறது. இயற்கையில் காணப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மீண்டும்; புதுப்பித்து பயன்படுத்த முடியாதவை என்பதை மனித குலம் உணர்ந்து செயல்படவேண்டும். இவ்வாறு மனிதனால் இயற்கை அழிக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்க இயலாத சூழ்நிலை வரும்போது இந்த மாதிரி “சுனாமி, ஓகி போன்ற கொடிய விளைவுகளை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதை உணர்ந்து சரிசெய்ய வேண்டிய தருணமாகத் தற்காலச் சூழ்நிலை மாறிகொண்டிருக்கிறது.

குறிப்பாக இக்கடலோரப்பகுதிகளில் கனிம வளங்களை பிரித்தெடுப்பதற்காக ஆழமாக தோண்டுவதும் அதற்காக அப்பகுதிகளை குத்தகைக்கு விடுவதும் வழக்கமாயுள்ளது. புள்ளிவிபரங்களின்படி, இந்த மணல்மேடுகள் 5000-6000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவானதாக கூறுகிறார்கள். இவை அகற்றப்படும்பொழுது, கடல் நீர் ஊடுருவி நன்னீர் நிலங்களையும், கிணற்று நீரையும் உப்பு நீராக மாற்றுகிறது. குறிப்பாக, கேரளா மற்றும் கன்னியாகுமரி கடலோரங்களும் இந்த கடலரிப்புக்கு உள்ளாகின்றன. வடகிழக்கு, தென்மேற்கு காற்றுகளினால் ஏற்படும் புயல் மற்றும் கடலரிப்பு பல இடங்களை உவர் நிலமாக்கி, உபயோகமற்ற தரிசு நிலங்களின் பரப்பளவை அதிகரிக்கிறது. மணல் மற்றும் நீர் பாதுகாப்பு முறையில் அறிவியல் ரீதியான கோட்பாடுகளை முறையாக திட்டமிட்டு ஒடிசா போன்ற தென் கடலோர மாநிலங்களின் மண்வளப் பாதுகாப்புத் துறை ஈடுபாட்டுடனும் மக்கள் ஒத்துழைப்புடனும் கடலரிப்பை தடுக்கவும் சூறாவளிப்புயல் போன்ற இடறல்களை சமாளிக்கவும் காற்றுத்தடை அரண்கள் மற்றும் பாதுகாப்பு அரண்கள் நேர்த்தியாக அமைத்துள்ளதை நன்கு அறிவேன். அங்கு சவுக்கு (காற்றாடி) மரத்தை 10மீ இடைவெளியில் கடலோரங்களில் நட்டு வளர்ப்பதின் மூலமாகவும், உட்பகுதிகளில் முந்திரி (கொல்லா) மரங்கள் மற்றும் பனை, புன்னை, தென்னை, பூவரசு, புங்கு, உதிய மரம் போன்ற மரங்களையும் வளர்ப்பதன் மூலம் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், மகாபலிபுரம்; போன்ற கடலோரங்களிலும் வெற்றிகரமாக சவுக்கு மரம் வளர்க்கிறார்கள்.    

தீபகற்ப இந்தியாவில் கடலோரப் பகுதியின் நீளம் 6,090 கி.மீ என்றும், இதில் மணற்பாங்கான பகுதி 8.4 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் உவர் நிலங்களாகவும், வடிகால் வசதியின்மையால் நீர் தேங்கிய சதுப்பு நிலங்களாகவும் மாறி விவசாய உற்பத்தியை பெரிதும் பாதித்துள்ளன. இது மேலும் அதிகரித்து வருகிறது. போதிய மழையின்மையாலும், அதிக வெப்பத்தாலும் காற்றின் அதி வேகத்தாலும் களர் உவர் நிலங்கள் உருவாகியுள்ளன. இங்கு பயிர்கள் குன்றிய வளர்ச்சியுடனும் காய்ந்தும் காணப்படுகின்றன. இவற்றுடன் காற்றினால் ஏற்படும் மணல்மேடுகளாலும் ஒடைகளாலும் பல பகுதிகளில் தரிசு நிலங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க மக்களின் ஒத்துழைப்போடு இயற்கை வளங்கள் மேம்பாட்டு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தை குமரி மாவட்டத்திலேயே செயல்படுத்தி விஞ்ஞான ரீதியில், ஜோத்பூரில் அமைந்துள்ள மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தைப் போல் செயல்பட்டால், நம் கடல் சார்ந்த நிலங்களும் சோலைவனமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. இயந்திர மற்றும் உயிரியல் நடவடிக்கைகளை பல ஒழுங்குமுறைகள் மூலம் விஞ்ஞான ரீதியில் நிறுவி செயல்படுத்துவதின் மூலம் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடல்சீற்றங்களினால் உண்டாகும் பாதிப்புகளையும் பெருமளவில் தடுக்க முடியும். தேவையான இடங்களில் தூண்டில் வளைவுகள் நிறுவுதல் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல், வெப்பமடைந்த வறண்ட நிலத்தை வளமான பகுதியாக மாற்றுதல் போன்ற பணிகளையும் இந்த ஆராய்ச்சி மையம் நிறைவேற்றி நிலைத்த வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.   

ஜோத்பூரில் உள்ளதுபோல ஒரு ஆராய்ச்சி நிறுவனம் கன்னியாகுமரியிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் பணியிலிருக்கும்போதே முன்வைத்தேன். மேற்படி திட்டத்தை திரும்பவும் 2004-ல் சுனாமி தாக்கியபோது பரிசீலனை செய்வதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கும், முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு ஏ. பி. ஜெ. அப்துல்கலாம் அவர்களுக்கும், அன்றைய மத்திய அரசாங்கத்திற்கும் பரிந்துரைசெய்ததை இச்சமயத்தில் நான் நினைவுகூருகிறேன்.  மேலும், மத்திய பாலைவன மண்டல ஆராய்ச்சி நிறுவன இயக்குநருக்கு அனுப்பி வைத்தது, அந்த நிறுவனம் அதை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பரிசீலனைக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில் மண்ணியல் விஞ்ஞானி டாக்டர். ஜெவகர் அவர்களோடு சேர்ந்து ஒரு குழுவாக நானும் கடலோர கிராமங்களை பார்வையிட்டு ஒரு அறிக்கையை சமர்பித்ததையும் நினைவுகூறுகிறேன். அதில் அங்குள்ள மக்களோடு கலந்து ஆலோசித்து அவர்களின் கருத்துக்களோடு மணக்குடி அலையாற்றிக்காடுகளை விரிவாக்குதல் மற்றும் இதர நம்நாட்டு மரங்கள், புதர்கள், செடிகொடிகள், புற்கள் வளர்த்தல் போன்ற பல பரிந்துரைகளை சமர்ப்பித்தோம். குறிப்பாக, ஒரு ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல கருத்துக்களை எடுத்துரைத்தோம். இந்த ஆராய்ச்சி மையம் பேரிடர்களிலிருந்து பாதுபாப்பதோடு மட்டுமல்லாமல், வளர்ச்சி திட்டங்களையும், பொருளாதார திட்டங்களையும் சமநிலைப்படுத்தி மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காமல் இருப்பதற்கேற்ற திட்டங்களை நடைமுறைப் படுத்தும் என்பதில் ஐயமில்லை!

வளரும் மக்கள்பெருக்கத்திற்கு ஏற்ப, இயற்கை வளங்களான மண் மற்றும் நீரைப்பாதுகாத்து என்றும் நிரந்தரமாக பயன்படுத்த வழிகோல வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். நாட்டில் ஆண்டுதோறும் தரிசு நிலங்கள் அதிகமாகிக் கொண்டும், வருடாவருடம் வறட்சியும், வெள்ளமும், புயலும், இயற்கை மற்றும் கடற்சீற்றங்களும் மக்களை பயப்படுத்தியும் வருகின்றன. இவற்றையெல்லாம் சமாளித்து, வரும் ஆண்டுகளில் மக்கள் நன்றாக வாழ முயற்சி எடுத்தாக வேண்டும்.

 



நவம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.