தொடர்புடைய கட்டுரை


இயற்கை சூழலை மீட்போம்

Dr. பா. சாம்ராஜ்

16th Mar 2019

A   A   A

ஜுன் 5ம் நாள் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நிலம், நீர், காற்று ஆகிய இந்த இயற்கை சூழல்கள் பல சமயங்களில் மாசு படிந்து, மனித சமுதாயத்திற்கு இடையூறு விளைவிக்கும் வண்ணமாக மாறி விடுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு இந்த 21-ம் நூற்றாண்டில் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் முன்னாள் டைரக்டர் ஜெனரல் டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன் அவர்கள் கூறியதாவது, “இயற்கையையும் உயிர்களையும் அழிப்பதன் மூலம் பேரழிவுகளை மனித இனம் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்” என்று கணித்துத் தெரிவித்திருந்தார். அவர் அன்று கூறிய கூற்றானது இன்றைக்கு நம் கண்முன்னே நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

      “யாதும் ஊரே யாவரும் கேளீர்”

      “தீதும் நன்றும் பிறர் தரவாரா”

என்றார் கணியன் பூங்குன்றனார். அவருடைய கூற்றின்படி இயற்கை சுற்றுச்சூழல் சேதமடைந்தது மனிதனின் செயல்பாட்டினால்தான் என்பது புலப்படுகிறது.

தற்பொழுது, உலகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இதுவரை சந்திக்காத ஆபத்தான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தொழிற்புரட்சியும் காலனி ஆதிக்கமும் தொடங்கி வைத்த சுற்றுச்சூழல் பேரழிவு இனறு உச்சக்கட்டத்துக்கு சென்றடைந்துள்ளது. புவி வெப்பமடைதலும் அதன் விளைவாக பருவநிலைகளில் ஏற்படும் தாறுமாறான மாற்றங்களுமே அதற்கு அறிகுறி. அதன் காரணமாகத்தான் ஆர்டிக், அண்டார்டிக் பனிப்பிரதேசங்களில் பெரும் பனிப்பாறைகள் உருகுகின்றன. திடீர் வெள்ளம், கடல் உட்புகுதல், பருவமழை மாற்றம், அதிகபடியான வெப்பநிலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் நாளை நம்மையும் தாக்கும் நிலை உருவாகலாம். குடிநீர் குறைபாடு இவைகளை காணும்போது, பயிர் வளர்க்க பாசன நீருக்கும் கூட திண்டாட வேண்டிய நிலைமையும் ஏற்படலாம் எனக் காண்கிறோம்.

வளிமண்டலத்தில் பெருகி வரும் கார்பன் உள்ளிட்ட பசுமை வாயுக்கள் தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். ஏற்கெனவே உலகம் முழுவதும் உமிழப்பட்டு வரும் கார்பனின் அளவு எல்லையை மீறிச் சென்று 390 பி.பி.எம. (கன அளவில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) ஆக இருக்கிறது. பூமியும் நாமும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு 350 பி.பி.எம் கார்பன்தான் உகந்தது என்று நாசா காலநிலை விஞ்ஞானி ஜெம்ஸ் ஹான்செனும் அவரது குழுவும் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி புவி வெப்பமடையச் செய்து கொண்டிருக்கும் பசுமையில்லா வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான புதிய உலக ஒப்பந்தத்தை உருவாக்கவே டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் சமீபத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் பற்றிய 15வது மாநாட்டில் உலகத் தலைவர்கள் விவாதித்தனர்.

மேலே கூறப்பட்ட இயற்கைச் சீற்றங்களை தடுத்து நிறுத்தி உலகை சீராக இயங்க வைப்பதற்கான முடிவை அந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் உறுதியாக எடுத்திருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பை வழக்கம்போலத் தவறவிட்டுவிட்டு, முக்கியத்துவம் மிகுந்த இந்த மாநாட்டிலும் வளரும் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் நெருக்கடிக்குப் பணிந்துவிட்டனர். அறிவியல் ஆதாரங்கள் ஆணித்தரமாக உருப்படியான திட்டத்தையும், ஒப்பந்தத்தையும் அடைய அந்தத் தலைவர்கள் தவறவிட்டதற்கு, அவர்களின் சுய நலமே காரணம். இதனால் பூவுலகு மோசமான அழிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சுற்றப்புற சூழலைப் பாதுகாக்க இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. நம்மால் அதிகமாக எதையும் செய்து விட முடியாது என்று தோன்றினும், நாம் பூமியைக் காக்க ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

இந்த ஓலங்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, புவியில் அதிக வளமுண்டாக்கும், சிறப்பு பயக்கும் என்று நாம் எதிர்பார்ப்போமாக. ஏனென்றால் இயற்கைக் காடுகள்தான் உலகத்தின் நுரையீரல் என வருணிக்கப்படுகிறது. மரங்கள் நாட்டின் வரப்பிரசாதங்களாக கருதப்படுவதால், மரம் வளர்ப்பதை மாபெரும் அறமாகச் செய்திடல் வேண்டும். மனிதனின் அறிவியல் வளர்ச்சி மண்ணின் இயற்கைச்சூழலுக்கு எதிரானது என்று ஒதுக்கிக் தள்ளுதல் ஆகாது. மாறாக, அறிவியல் திறனால் இயற்கையோடு கரம் கோர்த்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

1952 தேசிய வனக்கொள்கை (திருத்தப்பட்டது 1988)-ன் படி நம் நாட்டில் வனப்பகுதியின் அளவு சூழல் சமநிலைக்குத் தேவையான 33 சதவீதம் இல்லையென்பதும் அதிலிருந்து மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பதும் கவலைதரக் கூடியதாகும். வனவளப் பாதுகாப்பிற்கான சிந்தனையும், விழிப்புணர்வும், ஒருங்கிணைந்த செயல்பாடும் தேச எல்லைகளைக் கடந்து பிரபஞ்சம் முழுவதுமான ஓரு செயல் வடிவம் பெறவேண்டும். வனப்பகுதியின் பரப்பளவை அதிகரிக்கத் தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளவும், காடுகளை வளர்க்கவும் தாமதமில்லாமல் முயற்சிகள் செய்யப்படவேண்டும். காடுவளர்ப்புத் திட்டத்தில் சமூகக்காடுகள், பண்ணைக்காடுகள், அரசுக்காடுகள், தேசிய தரிசு நில மேம்பாட்டு வாரியம், கடல் மணல் மேடுகளை பாதுகாத்து நிலைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் வனக்கொள்கைகளில் முதன்மை திட்டங்களாக அமைய வேண்டும். நதிகளை தேசியமயமாக்கும் திட்டம் மற்றும் நதிகளை இணைக்கும் திட்டம் போன்றவற்றை கடைபிடித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

சுற்றுக்சூழல் என்பது இயற்கையை மட்டும் சார்ந்ததல்ல. அதில் மனித வாழ்வும் அடங்கியிருக்கிறது. கிராம பகுதிகளிலும், நகர பகுதிகளிலும் மக்கள் அடிப்படை வசதியின்றியும் நல்ல குடிநீர் கிடைக்காமலும் அல்லல்படுகிறார்கள். இந்தப் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்கவும், சுற்றுச் சூழலைப் பேணி பாதுகாக்கவும் பெருகி வரும் மனித இனப்பெருக்க விகிதத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

மாசற்ற நீர், உயர்ந்த மரங்கள், அடர்ந்த காடுகள், தூயகாற்று ஆகியவை நோயற்ற வாழ்விற்கு தேவை. இத்தகைய செல்வங்களைப்பெற்று மனிதன்வாழ இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் தாமே முன்வந்து சுற்றுப்புறத் தூய்மையைப் பேணி, மற்றவர்களையும் பேணுமாறு செயல்பட வேண்டும்.

புவி வெப்பமடைதலைக் குறைக்க வெப்பமதிகமாகி வரும் பூமியை பழைய நிலைக்கு கொண்டு வர கீழே குறிப்பிட்டிருக்கும் சில முயற்சிகளை எடுக்க முன்வருவோமாக!

• மரங்கள் நட்டு பராமரித்தல்

• சிறுபயணத்திற்கு மிதிவண்டியை பயன்படுத்துதல்

• மின்சாரத்தை சிக்கனமாக உபயோகித்தல்

• பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்தல்

• இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்

• தண்ணீர் பயன்பாட்டை சிக்கனப்படுத்துதல்

• பழைய பொருட்களை பயன்படுத்துதல்

• காகிதங்களை சிக்கனமாக பயன்படுத்துதல்

• பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்தல்

• பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துதல்

• மாசில்லாத தொழிற்சாலைகளை உருவாக்குதல்

• இயற்கை விவசாய முறைப்படி பயிரிட்டகாய்கறிகளை உபயோகித்தல்.

• பகல் நேரத்தில் மின் விளக்குகளைத் தவிர்த்தல்

• சூழல் காக்கும் விளக்குகளை எரித்தல் குறிப்பாக சூரிய ஒளி மின்சார விளக்கு.

• சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை சில கருத்துக்கள் ஆகும்.

 


2018 ஜூன் மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்