தொடர்புடைய கட்டுரை


அழிவின் பாதையில் கழுகுகள்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

13th Apr 2019

A   A   A

இயற்கையின் படைப்பில் வினோதமான ஆனால் அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் முக்கிய இடம்பெற்றிருப்பது கழுகுகள் ஆகும். இந்தியாவில் ஏறக்குறைய 16 வகையான கழுகுகள் இருப்பதாக கருதப்படுகிறது. பெரிய வடிவத்தையும், உறுதியான உடலமைப்பையும், கூர்மையான பார்வைத்திறனையும் பெற்றுள்ள இந்த பெரிய பறவைகளும் கூட சூழல் சீர்கேட்டினால் அழிவை நோக்கி இழுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கழுகுகளையும் கூட நம் முன்னோர்கள் போற்றி பாதுகாத்து வந்துள்ளார்கள். கருடன் என்கிற இனம் தெய்வமாக கொண்டாடப்படுகிறது.  புராண காவியமான இராமாயணத்தில் முக்கிய இடம் ஜடாயு என்ற பறவைக்கு தரப்பட்டுள்ளது. கருடர் விஷ்ணு என்ற உலகைக் காக்கும் பெருமாளின் வாகனமாக விளங்குகிறது. கழுகு வந்து இறைவனுக்கு படைத்த படையலை சாப்பிட்டுச் சென்றபிறகுதான் மனிதர்கள் படையலை எடுத்து சாப்பிடும் வழக்கம் இன்றும் திருக்கழுக்குன்றம் திருக்கோயிலில் நடைமுறையில் இருந்துவருகிறது. கழுகு வந்து அமரும் குன்று என்பதால் கழுகின் பெயராலேயே அந்த திருத்தலமும், அந்த ஊரும் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் மாலைநேரங்களில் நம் ஊர்ப் பெரியவர்கள் குளத்தங்கரைகளிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் பெருமாள் அல்லது சிவன் கோயிலின் கோபுரத்தின் மேல் வட்டமிட்டுப் பறக்கும் கருடனைப் பார்த்தால் புண்ணியம் கிட்டும் என்ற நம்பிக்கையில் கூடிநிற்கும் காட்சியை இன்றும் நம்மால் சில இடங்களில் காணமுடிகிறது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்பது பழமொழி. பருந்துகளும், கழுகுகளும் சுற்றுச்சூழலில் நாம் ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளால் அழிவை எதிர்கொள்கின்றன. 

கழுகுகளில் ஒரு முக்கிய இனம்தான் பிணம்தின்னி கழுகுகள்.  இவற்றின் அறிவியல் பெயர் ஜிப்ஸ் இன்டிகஸ் என்பதாகும். இந்த உலகப் புகழ்பெற்ற கழுகு இனம் அழிவை இப்போது மிகவும் விரைவாக எதிர்கொண்டுள்ளது. இந்த இனம் இப்படி திடீரென்று வேகமாக அழிவதற்கு காரணம் சில காலம் முன்புவரை மர்மமாகவே இருந்தது. லின்சி ஔக்ஸ் என்ற அமெரிக்க கால்நடை மருத்துவர் 2003ம் ஆண்டில் டிப்லோசினா என்ற வேதிப்பொருள் இறந்துபோன கால்நடைகளின் உடல்களில் அதிக அளவு இருப்பதை கண்டறிந்தார். இறந்துபோன கால்நடைகளை உணவாக கொள்ளும் இந்த கழுகு இனம் ஒருவிதத்தில் இயற்கை துப்புரவாளர்களாக (National scavengers) ஒரு காலத்தில் செயல்பட்டுவந்தது. அப்போது இவை இறந்த கால்நடைகளை உணவாக உட்கொண்டன. கால்நடைகளுக்கு காய்ச்சல் வரும்போது நச்சுத்தன்மையுடைய டிப்லோசினா மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை உட்கொண்ட கால்நடைகள் இறக்கும்போது அவற்றின் உடலில் இந்த நச்சு தங்கியிருந்து அவற்றை உணவாக உட்கொள்ளும் கழுகுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சிறுநீரக பிரச்சனைகள் கழுகுகளில் ஏற்பட இது காரணமானது. 

கழுகுகளின் இனம் அழிவதால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடுகிறது. இதனால் அழுகிய கால்நடைகளின் உடலை உணவாக உட்கொள்ளும் எலிகளும், நாய்களும் எண்ணிக்கையில் பெருகிவிட்டன. இவற்றால் மனிதர்களுக்கு ரேபிக்ஸ், ஆந்த்ராக்ஸ் மற்றும் ப்ளேக் நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த ஆராய்ச்சிகளுக்கு பிறகு டிப்லோசினாக்கின் பயன்பாடு கால்நடை மருத்துவத்தில் தடை செய்யப்பட்டது.  இதற்கு மாற்று மருந்தாக மொனாக்சிகம் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மாற்று மருந்து கால்நடைகளை பாதிக்காது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாழ்கின்ற சூழ்நிலையில் ஒரு சிறிய எறும்புக்கும் கூட எந்த தொல்லையும் தராமல் எல்லா உயிரினங்களையும் போற்றி பாதுகாத்து வந்த பரம்பரையில் வந்தவர்களான நாம் நம் முன்னோர்களின் பெயரையும், பெருமையையும் காக்கும் விதத்தில் நடந்துகொள்வோம்..  கழுகுகளையும், காக்கைகளையும், பாம்புகளையும், பறவைகளையும் எல்லாம் புனிதமாக கருதி வந்த நம் பழமையை மீட்டு கொண்டுவருவோம். அப்போதுதான் நாளை இந்த உலகத்தின் புதிய தலைமுறையினர் முன்னால் இயற்கையை அழித்ததற்கான விசாரணையில் நாம் தலைகுனிந்து நிற்காமல் இருப்போம். 

 


2018 செப்டம்பர் மாத அமுதம் இதழில் வெளிவந்தது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.