தொடர்புடைய கட்டுரை


ஏழு வரி ஆமை

சிதம்பரம் ரவிச்சந்திரன்

09th Feb 2019

A   A   A

உலகில் உள்ள கடல் ஆமைகளிலேயே மிகவும் பெரிய ஆமை இனம் இது. ஆங்கிலத்தில் லெதர் பேக் டர்டில் (leather back turtle) அல்லது லூத் என்றும் இது அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த ஆமையை ஏழுவரி ஆமை அல்லது பேராமை என்று அழைக்கிறோம்.  இதன் அறிவியல் பெயர் டெர்மொச்ஹெலிஸ் கொரிசியே (Dermochelys coriacea) என்பதாகும். இதன் சராசரி எடை 200 முதல் 750 கிலோ வரை இருக்கும். இதன் மென்மையான ஓட்டின் மேல் சாம்பல் நிறம் கலந்த தவிட்டு நிறத்தில் வெண்புள்ளிகள் காணப்படுகின்றன.  மழைக்காலத்தில் இந்த ஆமைகள் தரைக்கு வந்து 1 மீட்டர் ஆழத்திற்கு குழிகளைத் தோண்டி முட்டைகளை இடுகின்றன. ஒரு சமயத்தில் 80 முதல் 100 முட்டைகள் வரை இவை இட்டுச் செல்கின்றன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் (IUCN) பட்டியலில் இந்த பேராமைகள் மிகவும் அருகிவரும் இனமாக (threatened species) சிவப்பு பட்டியலில் (red book) வைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள கடல் ஆமைகளில் மிகப்பெரிய இனம்தான் இந்த தோல்முதுகு ஆமைகள் (leather back turtle).  நீலம் கலந்த கறுப்பு நிறத்தில் உள்ள நீளமான மேல் ஓடு, நகங்கள் இல்லாத கை கால்கள் இவற்றின் சிறப்பம்சங்கள் ஆகும். இந்தப் பண்புகளே இவற்றை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காட்ட உதவுகிறது.  இரப்பர் போல உள்ள மேல் ஓட்டின் நெடுக்கிலும் ஏழு மடிப்புகளும் இருக்கின்றன.  ஒரு சிறிய காரினுடைய அளவுக்குப் பெரியதாக வளருகிற இந்த ஆமைகளுக்கு சாதாரணமாக 7 அடிகள் வரை நீளமும், 200 முதல் 500 கிலோ வரை எடையும் இருக்கும். 916 கிலோ எடையுள்ள ஒரு ராட்சச ஆமையை ஆஸதிரேலியாவின் கடற்கரை பகுதியில் 1988ல் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

உலகின் பெரும்பாலான கடல்களிலும் இவற்றைக் காணமுடியும்.  இந்தியாவில் முக்கியமாக இவை வாழும் பகுதி அந்தமான் நிக்கோபார் தீவுகள்தான்.. லட்சத் தீவுகளிலும், குஜராத்திலும், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இவை காணப்படுகின்றன. ஒரு காலத்தில் கடலோரப் பகுதிகளுக்கு முட்டை இடுவதற்காக வந்துகொண்டிருந்த இந்த வகை ஆமைகள் இன்று காணாமல் போயிருக்கின்றன. 

1956 ஜூலை 2ம் தேதி பகல்நேரத்தில் கோழிக்கோடு நகரத்திற்கு அருகில் கடற்கரையில் முட்டை போட வந்த இந்த வகை ஆமையைப் பற்றி மத்திய மீன்வள மையத்தை சேர்ந்த அறிவியல் அறிஞரான டாக்டர். ஜான்ஸ் எழுதிய கட்டுரை மும்பை இயற்கை வரலாற்று சங்கத்தின் (Bombay Natural History Society – BNHS) இதழில் 1958ம் ஆண்டில் பிரசுரமாகியிருந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், கேரளாவின் பல பகுதிகளிலும் இந்த வகை ஆமைகள் ஒருகாலத்தில் மிக சாதாரணமாக காணப்பட்டன என்று மீனவர்கள் சொல்கிறார்கள். உணவு தேடி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இவை கடலில் நீந்துவது உண்டு. 

85 நிமிடங்களுக்கு நீருக்குள்ளே இருக்கக்கூடிய திறனும் இவற்றுக்கு உண்டு. இவைகளின் முக்கியமான உணவு ஜெல்லி மீன்கள் ஆகும். வேறு சில கடல் உயிரிகளையும் இவை உணவாக எடுத்துக்கொள்வது உண்டு. இனப்பெருக்கத்திற்கும், இரையைத் தேடியும் இவை பல கிலோமீட்டர் தூரத்திற்கு வலசை செல்வது உண்டு. மணிக்கு 35 கி.மீ வரை வேகமாக தண்ணீரில் நீந்துகிற ஆற்றலும் இவற்றுக்கு உண்டு. இனப்பெருக்க மையமான இந்தோனேஷியாவில் இருந்து உணவு தேடி குறிப்பாக இவற்றுக்கு மிகவும் பிடித்தமான உணவான கலிபோர்னியா ஜெல்லி மீனைத் தேடி பசுபிக் பெருங்கடலை நோக்கி 9,700 கி.மீ இவை நெடுந்தூரப் பயணம் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

உலகில் இந்த வகை ஆமைகள் மொத்தமாகக் குறைந்துகொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மிகவும் பிடித்த உணவான ஜெல்லி மீன் என்று நினைத்துக்கொண்டு மிதந்துசெல்லும் பிளாஸ்ட்டிக் கவர்களைத் இவை தின்றுவிடுகின்றன. இது இவற்றின் இன அழிவுக்குக் காரணமாகிறது. சமீபத்தில் பசுபிக் பெருங்கடலில் நடத்திய ஒரு ஆய்வில், மூன்றில் ஒரு ஆமையுடைய வயிற்றில் பிளாஸ்ட்டிக் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு ஆமையின் வயிற்றில் இருந்து மட்டும் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்ட்டிக் கவர்கள் கிடைத்தன. பலவிதமான கொடுமைகளை பல திசைகளில் இருந்தும் இவை எதிர்நோக்குவதால், இவை அழிந்துகொண்டிருக்கின்றன. 

தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இவை அடியோடு அழிந்துவிட்டன.  இந்த பூமியில் ஒவ்வொரு உயிரினமும் மனிதனின் நீடித்த நிலையான நிம்மதியான வாழ்விற்கு முக்கியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். முன்பெல்லாம் ஆமையும், முயலும் கதை, குரங்கும் முதலையும் கதை, நரியும், காகமும் கதை போன்ற பல்வேறு கதைகளின் மூலம் குழந்தைகளின் உள்ளத்தில் விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு வேரூன்றப்பட்டது. ஆனால்..  இன்று.. கணினியும், ஆன்ட்ராய்ட் மொபைல் போனும் இருந்தால் போதும் வாழ்வதற்குப் போதும் என்ற மோசமான ஒரு கருத்தை நம் வளரும் தலைமுறையினரிடம் நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.. காக்கைக்கும், குருவிக்கும் உணவை அளித்து, எறும்புக்கும் பசுவுக்கும் ஆகாரம் கொடுத்து வாழ்ந்த நம் பாரம்பரியத்தை மீட்டு எடுக்கவேண்டிய தருணம் இது.. வானத்தையும், மண்ணையும் அதில் உள்ள கோடானுகோடி உயிரினங்களையும் நம் உயிர் போல மதித்து வாழப் பழகிக்கொள்வோம். நம் வருங்காலத் தலைமுறையினருக்கும் பழக்கப்படுத்துவோம்.

 


2018 ஏப்ரல் அமுதம் இதழில் வெளியானது….

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.