தொடர்புடைய கட்டுரை


நெட்டிலிங்க மரம்

Dr. பா. சாம்ராஜ்

22nd Oct 2018

A   A   A

பொதுவாக எல்லோரும் அசோக மரம் என்று குறிப்பிடும் மரம் அசோக மரம் அல்ல. வீடுகளிலும் முகப்புகளிலும், கட்டிடங்களின் முன்புறமும் உயரமான மரங்கள் வளர்ப்பதைக் காணலாம். இந்த மரங்கள் வரிசையாக வளர்க்கப்பட்டிருக்கும். இவற்றை அசோக மரம் என்பார்கள். ஆனால் இந்த மரம் பாலியல்தியா லாங்கிஃபோலியா (Polyalthia longifolia) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட நெட்டிலிங்க மரம். அதாவது லிங்க வடிவில் நீளமாக நீண்டு இருப்பதால், இந்த மரம் நெட்டிலிங்க மரம் எனப்படுகிறது.

இந்த மரத்தின் தாயகம் ஸ்ரீலங்கா எனவும், வங்காளம் எனவும் கூறுகிறார்கள். அதிக நீர்ச் செழிப்புள்ள இடங்களில் இந்த மரம் வளரக்கூடியது. வீடுகளின் முன்புறமும், கட்டிட வளாகங்களின் எதிரிலும், பூங்காக்களின் ஓரங்களிலும் இம்மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. நெட்டிலிங்க மரம் இன்றைய உலகில் பலவாறாகப் பயன்படுகிறது. தூசி, ஒலி, ஒளி போன்றவற்றை வடிகட்டித் தரும் அரணாகவும் இந்த மரம் பயன்படுகிறது. மேலும் தூசி போன்றவற்றை சுத்தம் செய்யும் சல்லடையாகவும் நெட்டிலிங்க மரம் பயனாகிறது.

இந்த மரத்தின் இலைகள் நீளமாகவும், ஓரங்கள் வளைந்தும் பளபளப்பாகவும் காணப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில், இலைகளின் கோணப்பகுதியிலிருந்து பூக்கள் உருவாகின்றன. இந்தப் பூக்கள் வெளிர்ப் பச்சை நிறத்தில் காணப்படும். ஒரு பூங்கொத்தில் சுமார் 8 பூக்கள் இருக்கும். பின்னர் வெளிர்ப்பச்சை நிறத்தில் உள்ள பூக்கள், பச்சை நிறக் காய்களாக மாறுகின்றன. காய்கள் பழங்கள் உருளை வடிவில் காணப்படும். பறவைகள் பழங்களை உட்கொண்டு உள்ளிருக்கும் விதைகளை வெளியேற்றி விடுகின்றன. அதிலிருந்து புதிய கன்றுகள் தோன்றுகின்றன.

நெட்டிலிங்க மரத்தின் பழங்களை ஒருசிலர் உட்கொள்கின்றனர். இந்த மரத்தின் இலைகள் விழாப் பந்தல்களில் பந்தக்கால்களை அழகுபடுத்தப் பயன்படுகிறது. இந்த இலைகள் எளிதில் வாடுவதில்லை, 2 நாட்கள் வரை பசுமையாக இருக்கும். இந்த மரத்தின் உள்பட்டையிலிருந்து வலுவுள்ள நார் உரித்து எடுக்கலாம்.

நெட்டிலிங்க மரத்தின் மரப்பகுதி வெண்மையாகவோ அல்லது சிறிது மஞ்சள் சாயத்துடனோ இருக்கும். மரம் மிருதுவான தன்மையுடையது. கனமில்லாதது, எளிதில் வளையக்கூடியது. இந்த மரத்தின் மூலமாக மரப்பீப்பாய்கள், முரசுகள், பெட்டிகள், போன்றவை செய்யலாம். மேலும் கட்டுமானப் பணிகளுக்கான சட்டங்களும் தயாரிக்கலாம். அதோடு மட்டுமல்லாமல், பென்சில் செய்யவும், தீக்குச்சிகள் தயாரிக்கவும் நெட்டிலிங்க மரம் பயன்படுகிறது.

இந்த மரத்தின் பட்டைக்கு துவர்ப்பி மற்றும் உரமாக்கி ஆகிய பண்புகள் உள்ளன. இந்தப் பட்டையை நீரில் ஊறவைத்து, அந்த நீரை நோயாளிகளுக்குக் கொடுக்கும்போது சீதபேதி போன்ற குறைபாடுகள் குணமாகின்றன. இந்த மரத்தின் பட்டையிலிருந்து வெப்பகற்றி மருந்து தயாரிக்கிறார்கள். வீடுகளிலும், பெரிய கட்டிடங்களிலும் அவசியம் வளர்க்க வேண்டிய மரம். இந்த மரத்தை சாலையை ஒட்டி வளர்க்கும் போது, சிறந்த தாவரத் தடுப்பாக அமைத்து, ஒலியையும், தூசியையும் குறைத்து அனுப்புகிறது.

 


பெப்ரவரி 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.