தொடர்புடைய கட்டுரை


எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...

சிதம்பரம் ரவிச்சந்திரன்

22nd Oct 2018

A   A   A

ஒரு நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலேயே அடங்கியிருக்கிறது என்பது இன்று நம் எல்லோருக்கும் நன்றாக தெரிந்த ஒரு விஷயம் ஆகும்.  அதனால்தான் நம் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு தொழில் கூடங்களையே நாட்டின் திரு ஆலயங்களாக கருதி போற்றினார்.  முன்பெல்லாம் தகவல் தொழிநுட்பம் என்றால் தொலைபேசியோடு முடிந்துவிடும் ஒரு சங்கதியாக இருந்து வந்தது.  அப்போதெல்லாம் நம் ஊரில் இருந்து டெல்லிக்கோ, கல்கத்தாவுக்கோ பேசவேண்டும் என்றால் டிரங்க்கால் புக் செய்துவிட்டு காத்திருக்க வேண்டும்.

நீண்டநேரம் இவ்வாறு புக் செய்துவிட்டு காத்திருந்து தொடர்பு கிடைத்துவிட்டது என்றால் பேசிக்கொண்டிருக்கும்போதே ‘அடுத்தவர் பேசுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.. உங்கள் டிரங்க் காலை சீக்கிரமே முடித்துக்கொள்ளுங்கள் என்று நமக்கு நினைவூட்டுவார்கள்.  அதனால் பேச நினைத்த விஷயங்கள் எல்லாம் நமக்கு மறந்துகூட போய்விடுவதுண்டு.  ஆனால் இன்று.. பிச்சைகாரர்கள் முதல் கோடீசுவரர்கள் வரை எல்லோருக்கும் அவரவர்களுக்கென்று தனித்தனியாக ஒரு மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். உண்ண உணவு இருக்கிறாதோ இல்லையோ ஆனால் எல்லோரிடமும் கண்டிப்பாக ஆளுக்கொரு மொபைல் இருக்கிறது. செல் போன்களின் வருகையை தொடர்ந்து உலகமே நம் கைக்குள் வசப்பட்டுவிட்டது போன்ற ஒரு உணர்வு இப்போது ஏற்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது.  மக்கள் தம் அன்றாட பணிகளுக்கு மட்டும் இல்லாமல் தங்களின் அடிப்படியான பணிகளுக்கும்கூட இன்று எண்ம தொழில்நுட்பத்தையே (digital technology) நம்பியிருக்கிறார்கள்.  எல்லாத் தேவைகளுமே இன்று இணையதளம் வழியாக நிறைவுசெய்யப்படுகிறது.  எரிவாயு தேவை, சினிமா டிக்கெட், சுற்றுலா பயண வசதிகள், இரயில் டிக்கெட்கள், பேருந்து டிக்கெட்டுகள், பணம் பட்டுவாடா போன்ற காரியங்கள் எல்லாமே இன்று இணையத்தின் வழியாக நடைபெற்றுவருகிறது.  பொருள்கள் வாங்குவதில் இருந்து வீடு புதிதாக கட்டுவதற்கும் டிசைன் செய்வதற்கும், விமான டிக்கெட்டுகளை புக் செய்வதற்கும், வயிறு பசிக்கிறது என்றால் உணவு பொருள்களை வரவளைப்பதற்கும் கூட இணையவசதி இன்று பயன்பட்டுவருகிறது. இந்த வளர்ச்சி மென்மேலும் அதிகரிக்கவும், எல்லா மக்களுக்கும் கிடைப்பதற்குமே எண்ம தொழில்நுட்ப அடிப்படையில் அமைந்த ஒரு நவீன இந்தியாவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள புதியதிட்டம்தான் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகும். 

இதன் மூலம் அரசின் பல்வேறு சேவைகளும் இணையமாக்கப்படும்.  ரேஷன் கார்டு கூட ஸ்மார்ட் கார்டாக வழங்கும் திட்டம் நடந்துவருகிறது. ஆதார் அட்டைகள் எல்லோருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டமைக்கும் ஒரு முக்கியகூறாக இன்று தகவல் தொழிநுட்பம் ஆகியிருக்கிறது. குக்கிராமங்களில் உள்ள பாமரர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தின் பலன்கள் கிராமங்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதே இதன் முக்கியக் குறிக்கோளாகும். கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, மருத்துவ ஆலோசனைகள், சுற்றுலா, வழியறிதல் போன்ற பல்வேறு வசதிகள் இந்த திட்டத்தின் மூலம் அளிக்கப்படுகிறது.

படித்துமுடித்த இளைஞர்கள் தங்கள் சான்றிதழ்களையும் ஒரு தனிப்பட்ட தங்களுக்குகென்று ஒதுக்கப்பட்டுள்ள சைபர் இடத்தில் (cyfer space) பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். வேலை வாய்ப்பின்போது வேலை தரும் நிறுவனங்கள் இந்த இளைஞர்கள் தரும் தகவலின் அடிப்படையில் அவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம். டிஜிட்டல் லாக்கர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முறையில் சான்றிதழ்களை இளைஞர்கள் தங்களுடன் எப்போதும், எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லவேன்டிய அவசியம் இல்லை. இதில் சேரும் ஒவ்வொருவருக்கும் ஒரு இரகசிய கடவு சொல் (password) கொடுக்கப்படுகிறது.  சான்றிதழ்கள் மட்டும் இல்லாமல் மற்ற பொதுவான இரகசியமாக வைத்துக்கொள்ள விரும்பும் ஆவணங்களையும் நாம் இந்த கணினி பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைத்துகொள்ளலாம். எடுத்துகாட்டு- பாஸ்போர்ட். 

இதன் மூலம் நாட்டில் இருக்கும் எல்லா கிராமங்களுக்கும் அகண்ட அலைவரிசை வசதி ஏற்படும். அரசின் அனைத்து சேவைகளையும் இணையத்தின் மூலமாகவே அளிப்பது இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கம் ஆகும். இந்தியா முழுவதும் இருக்கும் 2.5 லட்சம் பள்ளிகளில் வைஃபை கம்பியில்லாத இணையதள வசதியை கொடுக்க இந்த திட்டம் வகைசெய்திருக்கிறது. குறைவான வளர்ச்சியை அடைந்திருக்கும் மாநிலங்களில் இருக்கும் மக்கள் அகண்ட அலைவரிசை வசதியை பயன்படுத்த மாதத்திற்கு ரூ.150ம், வளர்ச்சியடைந்த மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.250ம் கட்டணமாக வசூல் செய்வதற்கும் இந்த திட்டத்தின் மூலமாக திட்டமிடப்பட்டுள்ளது.

அதிவேக இணைய இணைப்பு, மொபைலில் இணைய வசதி, மின் ஆளுமை வசதியை அடிப்படியாக கொண்டு அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, அரசின் தகவல்கள் அனைத்தும் நேரடியாக மின்னணு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் சென்றடைய இதன் மூலம் வழிசெய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு மின்னணு கையெழுத்து (electronic sign- e sign) முறையும் இதில் அடங்கும். மின்னணு மருத்துவமனை வசதியும் (e hospital) இதன் மூலம் செய்யப்பட்டுள்ளது. இதில் இணையம் மூலமாக விவரங்களை பதிவு செய்து மருத்துவரை பார்க்கும் நேரம், அவருக்கு செலுத்தவேண்டிய கட்டணம், மருத்துவறிக்கை, இரத்தவங்கி கையிருப்பு நிலவரம் ஆகியவற்றை நம்மால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். இதனால் நேரம் மிச்சமாவதோடு, பணவிரயமும் தவிர்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகையை இந்த திட்டத்தின் மூலமாக விண்ணப்பித்து பெறமுடியும்.  இந்த திட்டம் ஜூலை 1 2015ல் புதுடெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 18 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திதரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது பெருமளவில் தடுக்கப்படுகிறது. லஞ்ச லாவண்யங்கள் குறைக்கப்படுகின்றன. காலமும், பணமும் விரயமாவதும் தடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூன்று முக்கிய குறிக்கோள்களாக உருவாக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு இந்திய குடிமகனும் டிஜிட்டல் கட்டமைப்பில் இணையவேண்டும். மக்களின் கோரிக்கை அடிப்படையில் நிர்வாகம், திட்டங்கள், மற்றும் சேவைகளை செயல்படுத்த முடியும். மக்களை இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பது என்பது மற்றொரு நோக்கம் ஆகும்.. இதன் பலனாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10% ஆக உயர வழி ஏற்படும். மாறிவரும் நவீன தொழில்நுட்பத்திற்கு நம்மை நாமே முழுமையாக தயார்படுத்தி கொள்வோமாக. அப்போது அதன் பலன்கள் அனைத்தையும் நம்மால் பெறமுடியும்.

 


பெப்ரவரி 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.