தொடர்புடைய கட்டுரை


குமரி மாவட்ட இயற்கை வளப்பாதுகாப்பு

Dr. பா. சாம்ராஜ்

05th Apr 2019

A   A   A

இன்றைய சூழ்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தால் பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் அழிக்கக்கூடாத இயற்கை வளங்களும் எல்லா உயிர்களுக்கும் அடிப்படையானதுமான நிலத்தையும், நீரையும், கனிமங்களையும், இதர வளங்களையும் தவறான முறையில் பயன்படுத்தி அழித்துக்கொண்டிருக்கிறோம். இதனால் நாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகிறோம். 2004 டிசம்பர் 26 சுனாமி, 2017 நவம்பர் 30 ஓகிப் புயல் போன்ற பேரிடர்கள் நம் கண்முன் நிற்கின்றன. இந்த அழிவுகளுக்குப் பிறகும் தொடர்ந்து கொடூர காற்று வீசிக்கொண்டிருப்பதால் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். கடந்த காலங்களில் ஆனி, ஆடி மாதங்களில் வீசும் பலத்த காற்றுகளால் இதுபோன்ற சேதங்கள் ஏற்பட்டதில்லை. ஓகிப்புயலை காரணம் காட்டி அநேக மரங்கள் ஆங்காங்கே வெட்டி அகற்றப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். இதனால் நாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறோம். மண்ணரிப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கும், நாட்டிற்கும் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அடித்துச் செல்லப்பட்ட மண்வளங்கள் மலைப்பகுதிகளிலிருந்து கீழ்மட்டத்திலுள்ள ஆறுகள், ஏரிகள், நீர்தேக்கங்கள் ஆகியவைகளில் படிந்து அவைகளின் உபயோகத்தை குறைத்துவிடுகிறது. குடித்தண்ணீரிலும் கூட மண்கலந்து வருகிறது.

இவைகளை கருத்தில் கொண்டுதான் பல ஆராய்ச்சிகள் செய்தும், மேல்நாடுகளில் கண்ட ஆராய்ச்சி முறைகளையும் அனுபவத்தைக்கொணடும் நம்நாட்டில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு பணிகள் பெருமளவு நடைபெறுகிறது. மண்வளப் பாதுகாப்பு பணிகள் என்றால், மண்அரிப்பை தடுத்து மழைநீரை தேக்கி நல்ல மகசூல் பெற நிலத்தை தகுதிப்படுத்துவதே ஆகும். நிலத்தை பூமியின் தன்மைக்கு ஏற்பவும், சரிவுக்கு ஏற்பவும், சாகுபடி செய்ய தகுதி வாய்ந்த நிலம் என்றும், தகுதியற்ற நிலம் என்றும் இரண்டு விதமாக பிரித்து மண்வளப் பாதுகாப்பு முறைகளை ஒழுங்காகவும், கவனமாகவும் கடைபிடித்து இயற்கையை சீர்குலையாமல் பாதுகாத்து சமநிலைக்கு கொண்டுவர வேண்டும்.

சாகுபடி செய்ய தகுதியற்ற நிலங்களான மலையுச்சிகள், செங்குத்தான சரிவுகள் போன்ற பலவீனமான பகுதிகளில் புல்லினங்களையும், சில காட்டு மரங்களையும் வளர்த்து ஆடுமாடுகளின் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வெண்மைப் புரட்சியை கொண்டுவரலாம். மேலும் விவசாயிகளின் விருப்பப்படி பயன்தரக்கூடிய உகந்த பழ மரங்களாகிய மா, பலா, வாழை, கொய்யா, அன்னாசி, நெல்லி, கொல்லா மரம் (முந்திரி), சீதா, பாஞ்சி போன்றவற்றை பயிரிடலாம். மேலும் தோட்டக்கலை பயிர்களையோ, வாசனைப் பயிர்களையோ, இதர நம் நாட்டு தடி மரங்களாகிய தேக்கு, ஈட்டி, வேங்கை, கோங்கு, வாகை, நாவல், வேம்பு, பூவரசு, பெருமரம், பனை, மருது, அயனி மற்றும் புளி போன்றவற்றையோ நட்டு வளர்த்து மண் வளத்தை பாதுகாப்பதுடன் அதிக இலாபத்தையும் பெறலாம். ஓகிப்புயலால் பாதிக்கபட்ட ரப்பர் தோட்டங்களில் திரும்பவும் ரப்பர் மரம் பயிரிடுவதற்குப் பதிலாக மாற்று மரங்களான மூங்கில் மற்றும் பனை போன்றவற்றை தகுந்த இடங்களில் பயிரிட்டு பயனடையலாம் என்ற கருத்தை மத்திய, மாநில அரசுகளின் பார்வைக்கு ஒரு வனவிஞ்ஞானி என்ற முறையில் சமர்ப்பிக்கிறேன். இம்மாதிரியை பின்பற்றி ரப்பருக்கு பதிலாக மாற்று மரங்களை தங்கள் நிலங்களில் விருப்பப்படி நட்டு வளர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி அரசு அவர்களை கௌரவிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலைகள் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறதை நாம் அறிவோம்.  இம்மாவட்டத்தில் குலசேகரத்தில் வளர்க்கப்படும் ரப்பர் உலகத்தரம் வாய்ந்ததாகும். பயிரிட்ட 8-வது வருடத்திலிருந்து ரப்பர் பால் மூலம் வருமானம் தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஏறக்குறைய 30 வருடங்கள் தொடர்ந்து வருமானத்தை பெறக்கூடியதான ஒரு முக்கியமான இந்த பணப்பயிரோடு ஊடுபயிராக வாழை, மரவள்ளிக்கிழங்கு, காய்கறிகள், மற்றும் பயறு வகைகளையும் மூன்று வருடங்களுக்கு குறையாமல் பயிர்செய்து பயனடையலாம்.

கடந்த நவம்பர் 30, 2017-ல் நடந்த கோர சம்பவமாகிய “ஓகி என்ற அசுரப்புயல் தாக்கத்தினால் இலட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்து விழுந்தும் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தினது மல்லாமல் தொடர்ந்து உயிர்ச் சேதமும் கடலோரப் பிரதேசங்களில் ஏற்பட்டது. என்னுடைய வாழ்நாளில் இம்மாதிரியான கொடூரப்புயலை நீலகிரிக்கு அடுத்தாற்போல் குமரிமாவட்டத்தில் இப்பொழுதுதான் பார்த்தேன். இத்தகைய பேரிடர்களை மக்கள் கருத்தில் கொள்ளாமல் தற்பொழுதும்கூட ஓரினப் பயிரான பிரேசிலை தாயகமாக கொண்ட இந்த ரப்பரையே தொடர்ந்து பயிர் செய்து வருகிறார்கள். இதற்கு மானியமாக அரசு ஒரு சிறிய தொகையை மான்யமாக வழங்க ரப்பர் விவசாயிகளுக்கு ஊக்கமளித்து வந்தாலும், இம்மாதிரி இயற்கை பேரிடர்களாகிய மண் மற்றும் நீர் அரிமானம், திடீர் வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கங்கள் போன்ற அழிவுகள் தொடர்ந்து நம் மாவட்டத்தைத் தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

நான் ஆய்வு செய்ததில், கடலோர மாவட்டமான குமரி மாவட்டத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ஐ. சி. ஏ. ஆர்) அங்கமான ஒரு மத்திய கடலோர மண்டல ஆராய்ச்சி நிறுவனம் (சி. சி. ஆர். ஐ) உதகையில் அமைந்திருக்கும் மத்திய மண்வளப் பாதுகாப்பு மற்றும் பயிற்சி நிலையம் (சி. எஸ். டபிள்யு. சி. ஆர். டி. ஐ) போன்று அமைத்தால், தற்பொழுது எதிர்கால மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தீவிரமாக அமைக்கவிருக்கும் வளர்ச்சித் திட்டங்களாகிய சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம், விமான நிலையம் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற வளர்ச்சித் திட்டங்களை இயற்கையின் சமநிலையை பாதிக்காதவண்ணம் நிறுவி செயல்படுத்த முடியும்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களின் ஒத்துழைப்போடு இயற்கைக்கு பெருமளவில் பாதிப்பு வராமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி விஞ்ஞான ரீதியில் செயல்படுத்த வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளுகிறேன். இதுப்போன்று இராஜஸ்தான்ஜோத்பூரில் அமைந்துள்ள மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனம் (சி. ஏ. இசட். ஆர் .ஐ) வெற்றிகரமாக செயல்பட்டு வருவதையும் பாலைவனத்தை இன்று சோலைவனமாக மாற்றி ஒலிவமரக்கன்றுகளை சில இடங்களில் அறிமுகம் செய்து வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்து நட்டு பயன் அடைந்து வருவதையும் நான் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் அந்நிறுவனத்தில் (196870)-ல் பணியாற்றிய காலங்களில் பாலைவன மணல்மேடுகளில் தாவரப்போர்வை அமைத்ததையும் காற்றுத் தடைகள் மற்றும் பாதுகாப்பு அரண்கள் அமைத்ததையும் தற்போது நினைவு கூர்கிறேன்.

மேற்கூறிய அம்சங்களின்படி குமரி மாவட்டம் விவசாயம் மற்றும் தொழிற்துறையில் முன்னேற்றம் அடைய சாலை கட்டமைப்பு, மண்வளம், நீர்வளம், தொழில்வளம், மின்சார வசதி, விமான போக்குவரத்து, துறைமுகம், ரெயில் போக்குவரத்து போன்றவற்றில் தன்னிறைவு பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறேன். 

நிலங்களை பாதுகாக்க ரப்பருக்கு மாற்றாக மூங்கிலை சில இடங்களிலாவது இந்த பருவமழை காலத்தில் நட்டு வளர்த்து இயற்கை சீர்குலைவை சமநிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தற்போதைய சுற்றுச்சூழல் இயக்குனர் திரு. வெங்கடாச்சலம் இ.வ.ப. அவர்களை பாராட்டுகிறேன். ஏற்கனவே தமிழ்நாடு சுற்றுக்சூழல் அமைச்சர் மாண்புமிகு கே. சி. கருப்பண்ணன் அவர்கள் மரவளர்ப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாட்டில் எல்லா மாவட்டத்திலும் இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை கொடுப்பதாக அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நன்னீர் நிலங்களையொட்டி முன்பு விளைநிலங்களாக இருந்து பின் மண் அரிப்பாலும், மழையின்மையாலும், களர் உவர் தன்மையாலும், வடிகால் வசதியின்றி நீர் தேங்கி நிற்கும் நிலங்களிலும், விவசாயத்திற்கு தகுதியற்றதாக மாறியுள்ள நிலங்களிலும் ரப்பருக்கு மாற்று பயிராக மூங்கில், இதர மரங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாகுபடி செய்து பயன் அடையலாம். மேலும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் மற்றும் நீர் ஓடைகளின் இருபக்கங்களிலும், அவைகளைச் சுற்றியும் திட்டமிட்டு வரிசைப்படி மூங்கில் மரக்காடுகளை வளர்ப்பதின் மூலம், குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களைப் போல் மூங்கில் மரங்களையும் நட்டு தொழிற்சாலைகளை நிறுவி அதன்மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்க வாய்ப்புகள் ஏற்படுத்தலாம்.

 


ஆகஸ்ட் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.