தொடர்புடைய கட்டுரை


உலக பூமி நாள் விழிப்புணர்வு

Dr. பா. சாம்ராஜ்

21st Sep 2018

A   A   A

ஏப்ரல் 22,1969ல் உலக பூமி நாள் என அறிமுகம் செய்யப்பட்டு 1970ல் விழா கொண்டாடப்பட்டதாக புள்ளிவிவரங்கள் சொல்லுகிறது. இதை ஸ்தாபித்தவர் செனட்டர் கையிலார்டு நெல்சன் என்பவரும் ஒருங்கிணைத்தவர் டென்னிஸ் விஸ்தான்சில் என்பவரும் ஆவர்.; சுற்றுசூழல் பாதிப்பை எடுத்துக்காட்டி நாளடைவில மக்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்குவது தான் இதன் நோக்கம். நிலம், நீர், காற்று ஆகிய இயற்கை சூழல்கள் பல சமயங்களில் மாசுபடிந்து, மனித சமுதாயத்திற்கு இடையூரு விளைவிக்கும் வண்ணமாக மாறிவிடுவதால், பூமி வெப்பமடைந்து இந்த 21ம் நூற்றாண்டில் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுகிறதை கீழே காண்போம்.

1. மிகப்பெரிய அளவில் பனிமலைகள் உருகும்.

2. கடல்மட்டம் உயரும் அல்லது கடல் உள்வாங்கும். இதனால் பெரிய நிலப்பரப்புகள் நீருக்குள் மூழ்கும், கோடிக்கணக்கான மக்கள் இறக்கவும் நேரிடும்.

3. மழை பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் உலக உணவு பொருட்களின் உற்பத்தி திறன் குறைந்துவிடும்.

4. வறட்சி அதிகரிக்கும். இதனால் மக்களின் இடப்பெயர்ச்சி அதிகரிக்கும்.

5. புயல்களும் சூறாவளிக்காற்றுகளும் அதிகரித்து எண்ணிலடங்கா நாசங்களை ஏற்படுத்தும்.

6. நீர் வள பாதிப்புகள் அதிக அளவில் நிகழும்.

7. உயிர்ச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, பல உயிரினங்கள் மறைந்து விடும்.

8. வேளாண் உற்பத்தி குறையும். இதனால் மக்கள் இயற்கை உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும்.

9. நோய்கள் அதிகரிக்கும். மருத்துவ சிகிட்சைகள் பலன் அளிக்காமல் போகும்.

10. 2025-ம் ஆண்டுடன் பூமியில் தண்ணீரின் அளவு மூன்றில் ஒரு பகுதியாக குறையும்.

இவ்விதமாக நேரிடுவதற்கு ஜன பெருக்கமும், இயற்கை வளங்களை துற்பிரயோகம் செய்வதுமே முக்கிய காரணங்களாகும். மனிதன் வாழும் காற்று மண்டலத்தின் சமநிலை மாறுபடும் போதும் முக்கியமாக நகர்புறங்களில் மனித குடியேற்றம் அதிகரித்துக்கொண்டே போவதாலும், மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகைமண்டலத்தாலும் தொழிற்சாலைகள் வெளியிடும் கரும் புகையாலும் வளிமண்டலம் பாதிக்கப்படுகிறது. இந்த பெரிய தீங்கை கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசும், ஒவ்வொரு தனிமனிதனும் இதனை சமுதாய கடமையாக எண்ணி தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியது அவசியமகும்.

இன்று தண்ணீர் பஞ்சம் உலகத்தை வாட்டுகிறது. கடந்த 300 ஆண்டுகளில் உலக அளவில் குடிதண்ணீரின் உபயோகம் 35 மடங்காக பெருகியுள்ளது. உலக ஜனதொகை 6 பில்லியனை அடைந்து விட்டது. ஆனால் தண்ணீர் அளவு அதிகரிக்கவில்லை. இயற்கையின் அமைப்பில் நாம் வாழும் பூமிப்பகுதியில் மூன்றில் இரண்டு பாகம் தண்ணீரைக் கொண்டுள்ளதென்றாலும் அதில் 97% உப்பு நீராகவும் 2% பனிக்கட்டியாகவும் இருக்கிறது. நாம் அனைத்து தேவைக்கும் பயன்படுத்தும் தண்ணீர் 1% மட்டுமே ஆகும். இவற்றில் 1% குளங்களிலும், ஆறுகளிலும், நீர் ஓடைகளிலும், 72% பூமிக்கடியிலும், 27% வான் வெளியிலும் சார்ந்திருக்கிறது. விவசாயத்திற்கு 69% நல்ல தண்ணீரும், 23% தொழிற்சாலையிலும், 8% வீட்டு உபயோகத்திற்கும் கிடைக்கிறது.

நமது நாட்டின் மக்கள் தொகையானது வரும் 2025-ம் ஆண்டில், சுமார் 140 கோடி ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நீர் வளத்தை கணக்கிட்டால், சுமார் 50 சதவீதம் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இதன் விளைவு காலப்போக்கில் நீரின் தன்மை பாதிப்பதோடு நீர்வளம் குன்றவும் ஏதுவாகிறது. இவ்வாறு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டு வருவதால், கோடை காலங்களில் கிணறுகளில், நீர் குறைவதுடன் வறட்சி நிலையும் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் சுமார் 100 முதல் 200 அடி வரை இருந்த ஆழ்துளை குழாய் கிணறுகள், தற்போது 500 அடிக்கு மேல் தோண்டப்பட்டு, நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. பல திறந்த வெளிகிணறுகளும், ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டு அதே நேரத்தில், குடிநீரும் மாசு அடைந்து வருகிறது. பாசனத்திட்டங்கள் நிறைந்த பகுதிகள், ஏரிகள், குளங்கள் ஆகியவை அக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்களாகவும், கழிவு நீர் குட்டைகளாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன் இருக்கும் சிறிதளவு நீரும் மாசுபட்டு வருகிறது.

நீர் தேக்கங்கள் மற்றும் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகள், குளங்கள் போன்ற நன்னீர் நிலங்களிலும் தூர் வாரி நல்ல பராமரிப்பு செய்தால் மீன் உற்பத்தியை பெருக்கி பயனடையவும் நல்ல வாய்ப்புகளுண்டு. மண் மற்றும் நீர்வளப்பாதுகாப்புக்கு உகந்ததாக விளங்கும் இயற்கை காடுகளை அழித்து பணப் பயிர்களான ரப்பர், யூக்காலிப்டஸ், அக்கேசியா போன்றவை நீர் பிடிப்புபகுதிகளில் பயிரிடுதல், நீர் பிடிப்பு பகுதிகளில் விரைந்து ஓடும் தண்ணீரை வற்றிப் போக வைத்துவிடுவதாகவும், நீர் மின்சாரம் குறைந்து போவதாகவும் நீலகிரி ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. வளங்களை பாதுகாப்பதற்காக மனிதனும் பலவித தாவரங்களும் பிற உயிரினங்களும் வாழ அடிப்படையாக விளங்கும் நிலநீர் வளங்களை நல்லமுறையில் பாதுகாத்து பயன்படுத்துவதின் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்குமாறு பாதுகாப்பது நமது கடமையாகும்.

வருடத்திற்கு இந்தியாவில் ஏற்படும் மண் இழப்பு சுமார் 6000 மில்லியன் டன்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு எக்டருக்கு வருடத்தில் சராசரியாக 17டன் மேல்மண் நிலத்திலிருந்து மண் அரிப்பில் எடுத்துச் செல்லப்படுகின்றது. அவற்றில் 24 சதவீதம், ஆறுகளின் மூலம் கடலுக்கு செல்கிறது. சுமார் 10 சதவீதமண் ஏரி மற்றும் பெரிய நீர்த்தேக்கங்களில் சேர்ந்து அதனுடைய கொள்ளளவை ஆண்டுதோறும் 1-2 சதவீதம் குறைக்கின்றது. பயிர்களின் இன்றியமையாத நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பொதுவாக மண் மேற்பரப்பில் சுமார் இரண்டு மீட்டர் ஆழம் வரையே கிடைக்கின்றன. மிகுந்த மழைக் காலங்களில் மண்ணின் மேற்பரப்பில் வேகமாக விழும் மழைத்துளிகள் மண் அரிமானத்தை உண்டு பண்ணுவதோடு அல்லாமல் நீரோட்டத்தின் மூலம் மதிப்பு மிக்க மண் ஊட்டச் சத்துக்களை சரிவு நிலங்களில் அடித்து சென்றுவிடுகிறது. இக்காரணத்தினால் மண்வளம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு அல்லாமல் மண்ணின் நீர்த்தங்கும் திறன் குறைந்து பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்பட ஏதுவாகிறது. எனவே, தேர்ந்த முறைகளின் வாயிலாக மண் மற்றும் மண்ணின் நீர்வளம் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக மழைநீர் சேகரிப்பைக் இந்த கோடைகாலத்திலேயே திட்டமிட்டு செயல்படுத்துவோம்.

நம் நாட்டில் தேசிய வனம், நீர், விவசாயம் போன்ற கொள்கைகள் அமுலாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் மேலும் நல்ல விதத்தில் நிறைவேற்றிட அரசாங்கமும், பொது மக்களும் சேர்ந்து நல்ல முன்னேற்றத்தை காணவேண்டும். ஆகவே மாறி வரும் இந்த சூழ்நிலையில் உலகம் வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நீர்பிடிப்புப் பகுதிகளில் மக்களால் ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றபடுமானால். நாடு செழிக்கும். நீர் பற்றாக்குறை நீங்கி வளமுடன் வாழலாம். மலைப்பகுதிகளை அழிக்காமல் வளமுடன் பாதுகாத்தால் தான் சமவெளி பிரதேசங்கள் செழித்து மக்கள் முன்னேற முடியும் என்ற கருத்தை உணர்ந்து நீர் பிடிப்பு மேலாண்மையை எல்லா இலாகாக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்