தொடர்புடைய கட்டுரை


டார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்

பி.ரெ. ஜீவன்

25th Jan 2019

A   A   A

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) மற்றும் ஆல்ஃபிரட் ரசல் வாலஸ், இருவருமே ஒரே காலகட்டத்தில் பரிணாம கோட்பாட்டை கண்டுபிடித்தவர்கள். இருவருக்கும் இந்த கோட்பாட்டில் சம பங்களிப்பு உள்ளது. இவர்களின் வாழ்க்கை பயணங்கள் இயற்கையின் அடிப்படை கோட்பாட்டினுள் ஒன்றை கண்டுபிடிக்க உதவியது. அவர்கள் இருவருமே தனிப்பட்டமுறையில், உலகம் சுற்றும் வாலிபர்கள். அவர்களின் பயணம் பரிணாமத்தை புரிய உதவுகிறது.

ஆங்கில அரசாங்கத்தின் HMS பீகிள் என்ற கப்பல், விவரம் சேகரித்தல் பயணத்தில் டிசம்பர் 1831 முதல் அக்டோபர் 1836 வரை உலகம் சுற்றி வந்தது. இக்கப்பலில் மாலுமிக்கு பேச்சு துணையாளனாக சென்றவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்கத்தில் உயிரியல் மற்றும் மண்ணியல் பயின்ற 22 வயதுடைய இளைஞன் டார்வின். இந்த பயணத்தில் பல்வேறு விஷயங்களை நுட்பமாக கவனித்து குறிப்பெடுத்து வந்தார். பல்வேறு பொருட்களையும் சேகரித்து வந்தார். குறிப்பாக இறந்துபோன விலங்குகளின் எலும்புகள், பல்வேறு பட்டாம்பூச்சி மற்றும் வண்டுகள், பதப்படுத்தப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள், கடல் மீன்கள்.

டார்வின் மற்றும் வாலஸ், இருவருமே அமேசான் காடுகளுக்கு அக்காலத்திலே சென்று விலங்குகள், பூச்சிகள், செடிகள் போன்றவற்றை சேகரித்தனர். வாலஸ் இதை சேகரித்து விற்பதையே தொழிலாக வைத்திருந்தார். இன்று மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிபைன்ஸ் போன்ற நாடுகள் இருக்கும் தீவு கூட்டங்களிலும் வாலஸ் இப்படிப்பட்ட விஷயங்களை சேகரித்து வந்தார்.

விலங்குகளை சேகரிப்பது விஞ்ஞானிகளிடம் இருக்கும் ஒரு பழக்கம். இப்படி சேகரித்தால், ஒவ்வொன்றிற்கும் இடையே இருக்கும் சிறு சிறு வித்தியாசங்களை பார்க்கலாம். இந்த சிறு சிறு வித்தியாசங்கள் பரிணாமம் நடைபெற்றிருப்பதை சுட்டி காட்டும். இந்த சேகரிப்பு தொழில், இவர்கள் இருவரையுமே பரிணாம கோட்பாட்டை தனிப்பட்டமுறையில் கண்டுபிடிக்க வைத்தது.

இன்றைய பட்டியலிட்டு பெயர்சூட்டும் முறையை நமக்கு கண்டுபிடித்து தந்தவர் காரல் லின்னேஷ் (Carl Linnaeus). இது உயிரினங்களை பட்டியலிடும் அறிவியல் முறை. லின்னேஷ் காலகட்டத்தில் யாருக்கும் பரிணாமம், மரபியல் (genetics) போன்ற அறிவியலில் எண்ணம் இல்லை. ஆனால் லின்னேஷின் பட்டியலிடும் முறை எல்லாவற்றிக்கும் அடித்தளமாக அமைந்தது. உலகின் எல்லா உயிரினங்களுக்கும் இந்த பட்டியலிடும் முறையில் பெயர் உண்டு. அதை விட முக்கியமாக, பரிணாமத்தில் ஒவ்வொரு விலங்குகளும் வேறு விலங்குகளுடன் எப்படி தொடர்புடையது என்பதை இந்த பட்டியலிடும் முறை பிரதிபலிக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு உலகில் இன்று சுமார் 2700 இன மண்புழுக்கள் உள்ளது. ஒவ்வொன்றும் சிறு மாற்றங்கள் உடையவை. எப்படி ஒவ்வொன்றுக்கும் அனைவருக்கும் தெரிந்த மாதிரி பெயரிடுவது? இதற்கு முதலில் ஒவ்வொரு மண்புழுக்கள் இடையே இருக்கும் சிறு சிறு வித்தியாசங்களை சுட்டிகாட்ட வேண்டும். இப்படி சுட்டி கட்டுவதற்கு டார்வின், வாலஸ் போன்றவர்கள் உலகெங்கும் சென்று சேகரித்தது உறுதுணையாக இருந்தது. இன்று இயற்கையை பற்றி நமக்கு அதிகம் தெரிவதற்கு காரணம், அவர் போன்றவர்கள் உலகெங்கும் சென்று அக்காலத்தில் சேகரித்தது தான்.

ஒவ்வொரு இடங்களிலும் காணப்படும் விலங்குகள், வேறு இடங்களில் காணப்படுவதில்லை என்பதை அவர்கள் இருவரும் கவனித்தனர். எடுத்துக்காட்டுக்கு ஐரோப்பாவில் காணப்படும் பெரும்பான்மையான விலங்குகள் தென் அமெரிக்காவில் இல்லை. ஆனாலும் சில விலங்குகள், செடிகள் இரு இடங்களிலும் இருக்கிறது. சில விலங்குகள் இரு இடங்களிலும் வெவ்வேறு மாதிரி உள்ளது. எடுத்துக்காட்டுக்கு ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் மான்கள் உள்ளது. ஆனால் இரு மான்களும் வெவ்வேறு தோற்றம் மற்றும் குணங்கள் உடையவை. ஏன் இப்படி உள்ளது?

தீவுகளில் பரிணாமம் அதிவேகத்தில் நடைபெறும். டார்வின் மற்றும் வாலஸ் இருவருமே பரிணாம கோட்பாட்டை தீவுகளில் தான் கவனித்தனர். இந்த தீவுகளுக்கு அவர்கள் பயணித்தது அவர்கள் வாழ்க்கையையே மாற்றியது. உலகத்தை புதிய பார்வையில் பார்க்க அவர்களுக்கு வழி வகுத்தது. அவர்களின் பார்வை உயிரினங்களின் மீது உள்ள நம் கண்ணோட்டத்தை மாற்றியது.

மடீரா (Madeira) என்ற தீவு ஐரோப்பா கண்டத்திலிருந்து சுமார் 550 கி.மீ தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது. இந்த தீவில் வாழும் உயிரினங்கள் ஏறக்குறைய ஐரோப்பா கண்டத்தில் இருப்பது போன்று தான் இருக்கிறது. சிறு வித்தியாசங்கள் இருந்தாலும், பல ஒற்றுமை உள்ளது. ஆனால் தென் அமெரிக்காவும், ஐரோப்பாவும் 9500 கி.மீ தொலைவில் உள்ளது. இப்படி தூரம் செல்லும் பொது, வேறுபாடுகளும் அதிகமாக உள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள கலப்பகோஸ் (Galápagos) தீவு கூட்டங்களுக்கு டார்வின் சென்றார். இது தென் அமெரிக்காவிலிருந்து ஏறக்குறைய 1000 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த தீவுகளில் டார்வின் சுமார் 5 வாரங்கள் செலவிட்டார். அந்த 5 வாரங்கள் அவரின் வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. இங்கு வாழும் விலங்குகள் உலகின் வேறு எந்த பகுதியிலும் காணப்படாதது. அனைத்து விலங்கும் அதற்கென்ற தனிப்பட்ட குணங்கள் உடையதாக இருந்தது. எடுத்துக்காட்டுக்கு கடல் அடியே நீந்தி சென்று, அங்கு இருக்கும் பாசியை உண்ணும் உடும்புகள். எப்படி இந்த விசித்திர விலங்குகள் அங்கு சென்றது?

ஆஸ்திரேலியாவில் கங்காரு (kangaroo) போன்று வயிற்றின் வெளிப்பக்கத்தில் இருக்கும் பை போன்ற அமைப்பில் குழந்தையை சுமக்கும் விலங்குகள் பெரும்பாலும் உள்ளது. ஆசியாவில் அப்படி இல்லாமல், நம் ஊரில் தோப்பில் குழி இருப்பது போன்ற விலங்குகள் இருக்கிறது. வாலஸ் மேலே தீவு கூட்டங்களில் இருக்கும்போது அங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்தார்.

போர்னியோ (Borneo) மற்றும் சுலாவெசி (Sulawesi), இரண்டும் மிக அருகில் இருக்கும் தீவுகள். ஆனால் இவை இரண்டிலும் வெவ்வேறு வகையான விலங்குகள் காணப்படுகிறது. போர்னியோ ஆசியா பக்கம் இருக்கும் தீவு. சுலாவெசி ஆஸ்திரேலியா பக்கம் இருக்கும் தீவு. சுலாவெசியில் ஆஸ்திரேலியாவில் இருப்பது போன்றவற்றின் வெளிப்பக்கத்தில் இருக்கும் பை போன்ற அமைப்பில் குழந்தையை சுமக்கும் விலங்குகள் இருந்தன. அதன் அருகே இருந்த தீவு போர்னியோவில் அப்படி இல்லை. சுலாவெசியுக்கு கிழக்கு பக்கத்தில் இருக்கும் எல்லா தீவுகளிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள விலங்குகள் போன்றவையே இருந்தது. போர்னியோவுக்கு மேற்கு பக்கத்தில் அப்படிபட்ட விலங்குகள் இல்லை.

ஒரு காலத்தில் சுலாவெசி ஆஸ்திரேலியா கூட சேர்ந்து இருந்திருக்கலாம், போர்னியோ ஆசியா கூட சேர்ந்து இருந்திருக்கலாம் என்று யூகித்தார் வாலஸ். அவர் யூகித்தது சரியே. கண்டங்கள் நகர்வதால் இந்த தீவுகள் காலப்போக்கில் பக்கத்தில் இருக்கும் தீவுகளாக மாறியுள்ளது. அவைகள் இரண்டின் இடையே கடல் அடியில் இரு கண்டங்களின் தட்டுகள் மோதுகிறது. கண்டங்கள் நகர்கிறது என்பதை பற்றிய ஆராய்ச்சி துவங்குவதற்கு முன்பாகவே வாலஸ் அப்படி இருக்கலாம் என்று யூகித்து வைத்திருந்தார்.

இந்த சிறு சிறு விஷயங்களை கவனித்ததின் மூலமாக தான் பரிணாமம் எப்படி நடைபெறுகிறது என்பதை அவர்கள் இருவரும் தனிப்பட்டமுறையில் கண்டுபிடித்தனர். பரிணாம கோட்பாட்டை வெளியிடுவதற்கு முன்பாகவே டார்வின் அவரின் பயணங்களை பற்றி பல புத்தகங்களில் எழுதி உலகெங்கும் ரசிகர்களை சேகரித்திருந்தார். அக்காலத்தில் இப்பயணங்களை பற்றி வாசிப்பதே ஒரு சுவாரசியமாக அனைவருக்கும் இருந்தது. அப்படி சுவாரசியமாக எழுதுவதில் டார்வின் ஒரு வல்லுநர் என்று சொல்லலாம். பரிணாம கோட்பாடும், அவற்றின் ஆதாரமும் பற்றி மேலும் பார்க்கலாம்.

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.