தொடர்புடைய கட்டுரை


நூற்றாண்டு நோக்கி அரிமா சங்கம்.

Dr. பா. சாம்ராஜ்

01st Nov 2019

A   A   A

அரிமா இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்ட இலக்காக 2018 ல் 100 மில்லியன் மக்களை அரிமாப்பணி சென்றடைய வேண்டும். ஏற்கனவே 80 மில்லியன் பொதுமக்கள் பயன் பெற்றிருப்பது பெருமிதம் அளிக்கிறது. நமது பன்னாட்டு இலக்குகளாக இளைஞர் நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பார்வைதிறன், ஆதரவற்றோற்கு உதவிசெய்தல், பசிப்பிணி ஆற்றுதல் போன்ற பணிகளில் நட்பினை குறிக்கோளாகக் கொண்டு நமது சேவைத்திட்டங்கள் அமைந்திட வேண்டும்.

அரிமா இயக்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் வரலாறு:

1879 ஆம் ஆணடு ஜனவரி 13 ஆம் நாள் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் ராணுவ முகாம் ஒன்றில் நமது இயக்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்தார். அமெரிக்க ராணுவத்திற்கும், சையு அப்பாச்சி இந்தியர்களுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருந்த போரில், அமெரிக்க ராணுவத்தின் கேப்டனாக தலைமையேற்று, தந்தையார் கால்வின் ஜோன்ஸ் போரிட்டுக்கொண்டிருந்தார். அவரது தாயார் லிடியா தன் மகனை போர் மேகங்களுக்கு இடையேயும் அரவணைத்து வளர்த்தார்.

ஏழு வருடங்கள் நீண்ட போருக்குப் பின் தந்தையார் செயின்ட்லூயிசுக்கு மாற்றப்பட்ட போது, அங்கே அவர் தன் பள்ளி படிப்பினை தொடர்ந்தார். பட்டபடிப்பினை யூனியன் வணிகக் கல்லூரியிலும், இல்லினாய்ஸ் மாநிலத்தின் செடாக் கல்லூரியில் சட்டப்படிப்பினையும் பயின்று கொண்டிருந்தபோது, துடிப்பான இளவலாகவும், பிரபல பாடகராகவும் விளங்கினார். பின்னர் 1904 ஆம் ஆண்டு சிக்காகோவில் இருந்த ஜான்சன் ஹிக்சின்ஸ் ஏஜன்சி நிறுவனத்தின் விற்பனையாளர் பணியில் சேர்ந்தார்.

சிக்காகோ நகரில் ரோசா அமெண்டா ப்ரீமேனை 1909 ல் வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அன்பு மனைவியாய், மாதிரியாய் இவர் அளித்த ஊக்கத்தாலும், ஏராளமான நண்பர்களின் ஆதரவினாலும் மெல்வின் ஜோன்ஸ் இன்சூரன்ஸ் ஏஜென்சி என்ற நிறுவனத்தைத் துவக்கி, மிகக் குறுகிய காலத்தில் சிக்காகோ நகரின் தலைசிறந்த வணிகராக உயர்ந்தார்.

சிக்காகோ நகரின் வணிக வட்டம் என்ற அமைப்பு, வணிக வளர்ச்சி பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்வதற்காக பழைய பாஸ்டன் ஆய்ஸ்டர் இல்லத்தில் ஒவ்வொரு வாரமும் கூடி வந்தது. இது போல நூற்றுக்கும் மேற்பட்ட வணிக சங்கங்கள் ஆங்காங்கே சந்தித்து கலந்துரையாடி வந்தன.

ஒரு நாள் ஒரு வணிக வட்டம், மெல்வின் ஜோன்ஸ் அவர்களை அவருடைய தொழில் வளர்ச்சியின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அழைப்பு விடுத்தது. அந்த நாளே இந்த மாபெரும் இயக்கம் உதயமாவதற்குத் தூண்டுகோலாக இருந்த நாளாயிற்று. வணிக வட்டத்தின் கொள்கைகள் இவருக்கு இணக்கமாக இருந்ததால் அன்றே அச்சங்கத்தின் உறுப்பினரானார். பின்னர் அவருடைய திறமையாலும் நட்பினாலும் 1915 ஆம் ஆண்டு, அச்சங்கத்தின் செயலாளரானார். இத்துடிப்பான இளைஞர் தன் ஆர்வம் மிக்க பேச்சாற்றலினால், சங்கத்தின் உறுப்பினர் பெருக்கம், கோட்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி மிகச் சிறப்பாகப் பேசி அனைத்து உறுப்பினர்களையும் தன்பால் ஈர்த்தார்.

1916 ல் வணிக வட்டத்தின் இயக்குநர் கூட்டத்தில் சங்கம், தன் குறுகிய வட்டத்திலிருந்து சமுதாயத்திற்கும், ஏழ்மையில் அவதியுறும் மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். அந்தக் கூட்டமும் இக்கருத்தினை ஏற்க, நகரிலும் பின் நாடு முழுவதிலும் இருந்த ‘தி ஆப்டிமிஸ்ட்-ரிசிப்ரோசிட்டி கிளப்ஸ், வீல்ஸ், தி ஸெர்கோனியன்ஸ் ஆப் லாஸ்ஏஞ்சல்ஸ், தி கன்கார்டியா கிளப்ஸ் ஆப் ஓமகா வோர்டெக்ஸ் ஆப் செயின்ட் லூயிஸ் ஆன்ட் டெட்ரோய்ட், தி லயன்ஸ் கிளப் ஆப் இன்டியானா அன்ட் தி பிசினஸ்/புரொஃபஸ்னல் மென் ஆப் செயின்ட் பால்’ போன்ற சங்கங்களோடு தொடர்பு கொண்டு, அனைத்து சங்கப் பிரதிநிதிகளை 1917 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் கூட்டினார்.

லயன்ஸ் கிளப் (LIONS CLUB) என்ற பெயர் மெல்வின் ஜோன்ஸ் அவர்களுக்கு மிகவும் விருப்பமாயிருந்ததால், வீரம், பலம், கம்பீரம் இவற்றின் சின்னமாக விளங்கிய சிங்கத்தினைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே மேற்கொண்டார். எனவே லயன்ஸ் கிளப் என்ற பெயரினை ஏற்க வேண்டுமென்ற முயற்சி வெற்றி பெற்று, வித்திடப்பட்ட அக்கூட்டத்தில் அப்பெயர் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்று வித்திட்ட இந்த இயக்கத்தின் கரு, இன்று ஆல்போல் தழைத்து, உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது.

1917 அக்டோபரில் நடைபெற்ற மாநாட்டில் லயன்ஸ் கிளப் என்ற பெயர் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு மெல்வின் ஜோன்ஸ், அவர்கள் அதன் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1917 அக்டோபர் 8 அரிமா இயக்கத்தின் முதல் மாநாட்டின் ஆரம்பநாள். அந்த நாளை உலக அரிமா சேவை தினமாக கொண்டாட வேண்டுமென்று 1967 - ஆம் ஆண்டின் பண்பாட்டுத் தலைவர் பணித்துள்ளார். இவ்வியக்கத்தின் சட்ட திட்டங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் சீர் செய்யப்பட்டு, 1920 - ஆம் ஆண்டு மார்ச் 12 - ஆம் தேதி, கனடாவில் உள்ள லின்ஸ்டாரில் ஒரு கிளை துவங்கப்பட்ட போது இது ஒரு சர்வதேச இயக்கமாயிற்று.

பின்னர் மிக வேகமாக வளர்ந்து 1939 ஆம் ஆண்டில் 1,17,000 உறுப்பினர்களுக்கும் அதிகமாக உள்ள மாபெரும் இயக்கமானது. மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் வணிக நிறுவனத்தின் அறையிலிருந்து செயல்பட்டு வந்த அகில உலக அரிமாக்களின் தலைமை செயலகம் 1955 ஆம் ஆண்டு தனது சொந்த இடமான மிக்சிகன் அவென்யூவிற்கு மாற்றப்பட்டது. 1971 ஆம் ஆண்டு ஒன்பதரை ஏக்கர் இடத்தில் வடிவமைக்கப்பட்டு, உலக அரிமாக்களின் வெற்றிச் சின்னமாக விளங்குகிறது.

தனது இன்சூரன்ஸ் தொழிலை 1926 ல் விட்டு விட்டு, அரிமா சங்கத்தின் முழு நேர பணியாளராகப் பொறுப்பேற்றார் மெல்வின் ஜோன்ஸ். இயக்கத்தின் வளர்ச்சி 1950 ல் 4,00,000 உறுப்பினர்களை எட்டியபோது, சர்வதேச அரிமா சங்கத்தின் ஆயுட்கால பொதுச்செயலாளர் பொறுப்பினை ஆட்சிக் குழு வழங்கியது.

45 ஆண்டுகள் ஓயாது தன் தோளோடு தோள் நின்ற அன்பு மனைவி ரோசாவை 1954 ல் இழந்தார். தனிமையிலும், உடல் நலக்குறைவிலும் அமிழ்ந்து கொண்டிருந்த அவர் லிலியன் ரோடிகானை 1956 ல் தன் வாழ்க்கை துணையாக்கி அரிமா பணியினை மீண்டும் தொடர்ந்தார்.

44 ஆண்டுகள் ஓயாது இயக்கத்திற்காக தொண்டாற்றிய அந்த 82 வயது அன்பு உள்ளம் 1961 ல் ஜூன் 1 ஆம் நாள் நிரந்தர ஓய்வினை மௌண்ட் ஹோப் மயானத்தில் மேற்கொண்டது. அரிமா இயக்கம் மூலம் அனைத்து இனத்திற்கும் தொண்டாற்றிய அவருடைய வாழ்க்கை, மானுட நேயத்தின் மாசற்ற வெளிப்பாடு. எதையும் எதிர்பாராது மக்கள் சேவை புரியும் எண்ணற்ற அரிமாக்களுக்கு ஓர் எழுச்சியூட்டும் வரலாறு என்பது மிகையாகாது.

 


நவம்பர் 2016 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.