தொடர்புடைய கட்டுரை


கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

பி.ரெ. ஜீவன்

19th Jun 2018

A   A   A

மாணிக்க கற்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது வைரம். வைரம் பூமியின் ஆழத்தில் உருவானவை, பூமியின் பரப்பில் உள்ள தட்டுகள் எப்போது நகர துவங்கியது என்ற தகவல்களை உள்ளடக்கியவை.

பெரும்பான்மையான வைரம் நிறமற்ற கல். விக்டோரியா மகாராணி வைத்திருந்த இந்தியாவின் கோகினூர் வைரம் ஒரு நிறமற்ற வைரம். ஆனால் அதன் அளவு மிக பெரியதாக இருப்பதால் அதன் மதிப்பும் அதிகமானது. பெரிய வைரங்கள் மிக அரியது. இதனால் தான் கோகினூர் வைரம் விலைமதிப்புக்கு அப்பாற்பட்ட ஓன்று.

சில வைரங்கள் நிறம் உடையவை. உலகின் மிக பிரபலமான வைரமாக கருதப்படும் ஹோப் வைரம் (Hope Diamond), இலங்கையில் எடுக்கப்பட்ட ஒரு பெரிய நீல நிறமுடைய வைரம். இது நாற்பத்தைந்தரை காரட் களங்கமற்ற வைரம். இது தான் இதுவரை கண்டுபிடித்ததிலேயே மிக பெரிய நீல நிறமுடைய வைரம். இந்த வைரம் விலைமதிப்பிட முடியாத அளவு அதிக அழகும், வரலாறும் உடையது.

17ஆம் நூற்றாண்டில் ஜான் பாப்டிஸ்ட் டேவணியே (Jean-Baptiste Tavernier) என்ற வணிகர், பிரெஞ்சு மன்னர் 14 ஆம் லூயி (King Louis XVI) யிடம் ஹோப் வைரத்தை விற்றார். பிரெஞ்சு புரட்சியின்போது இதை ஆங்கிலேயர் கைப்பற்றினர். இது பின்பு ஹோப் என்ற குடும்பம் வைத்திருந்தது. அவர்களின் பெயர் தான் அந்த வைரத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஈவ்லின் வால்ஷ் மெக்லீன் (Evelyn Walsh McLean) என்ற பெண் இதை வாங்கியதும், அவரது வாழ்க்கை பல இன்னல்களினுள் சென்றது. இதனால் இந்த வைரம் சபிக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. இன்று அது வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹோப் வைரத்தின் மேல் உள்ள சாபத்தை அறிவியல் மூலமாக ஆராய முடியாது. ஆனால் அது ஏன் நீல நிறத்தில் உள்ளது என்பதை நம்மால் ஆராய முடியும். கார்பன் அணு மட்டுமே இருக்கும் வைரங்கள் நிறமற்றவை. நீல வைரங்களில் கார்பனுடன் போரான் என்ற அணுவும் குறைந்த அளவில் கலந்துள்ளது. வைரத்தில் போரான் ஒரு அசுத்தம். ஆனால் அந்த அசுத்தம் அதன் அழகை அதிகப்படுத்துகிறது. போரான் அசுத்தம் வைரத்தை நீல நிறத்தில் மாற்றுகிறது. இதை போன்று பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு போன்ற பல நிறங்களில் வைரங்கள் காணப்படுகிறது. உலகின் மிக அரிய வைரங்கள் சிகப்பு நிறமுடையது. ஒவ்வொரு நிறமும், வெவ்வேறு வகையான அசுத்தம் உடையது.

இந்த அசுத்தம் குறைவான அளவு தான் இருந்தாலும், அசுத்தம் அதன் அழகையும் மதிப்பையும் உயர்த்துகிறது. பல மாணிக்க கற்களுக்கு இன்று போலிகளை நம்மால் தயாரிக்க முடியும். இந்த அசலை போலியில் இருந்து கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் கருவிகளை முதலில் கண்டுபிடித்தவர் தமிழகத்தின் சி. வி. ராமன் (C V Raman). அவர் பல மாணிக்க கற்கள் மற்றும் பதிகங்களை சேகரித்து வந்தார்.

வைரங்கள் மிக அரியது. ஆனால் வைரத்தைவிட மிக அரிய கற்கள் பல உலகில் உண்டு. அதில் ஓன்று நீலமாணிக்கம் (sapphire). இவை வைரங்களைவிட மிக அரியது. இலங்கையில் இவை அதிகம் காணப்படுகின்றன. வைரங்கள் போன்று இவை பூமியின் ஆழத்தில் உருவானவை அல்ல, இவை பூமியின் பரப்பின் அருகில் உருவானவை. நீலமாணிக்கம் உருவாக அதிக அழுத்தம் தேவை.

பூமியின் தட்டுகள் நகரும்போது, ஒரு தட்டு அருகில் உள்ள தட்டின் மீது அதிக அழுத்தம் கொடுக்கிறது. பூமியின் கீழ் இருக்கும் வெப்பமும், இந்த அழுத்தமும் சேரும்போது, சில நேரங்களில் அவை நீலமாணிக்கங்களாக மாறுகின்றன. இலங்கை சுமார் 60 கோடி ஆண்டுகளுக்கு முன் தட்டுகள் மோதிக்கொண்டதின் நடுவில் மாட்டிக்கொண்டது. இதனால் இலங்கையில் நீலமாணிக்கம் போன்ற பல மாணிக்க கற்கள் கிடைக்கிறது.

இலங்கையில், பூமியின் அடியில் பல மாணிக்க சுரங்கங்கள் வெட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கங்களின் உள் செல்வது ஒரு அபாயகரமான வேலை. ஆனால் அந்த சுரங்கங்களுக்கு சென்று மண் எடுத்து வந்து மாணிக்கங்களை வடிகட்டி எடுப்பார்கள். பெரும்பாலும் அவைகளில் ஒன்றும் இருக்காது. ஆனால் எப்போதாவது அதில் ஒரு மாணிக்க கல் கிடைக்கும்.

நீலமாணிக்கம் மண்ணியலின்படி கோரொண்டம் (corundum) என்ற கனிமத்தினால் ஆனது. கோரொண்டம் சாதாரணமாக வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். கோரொண்டம் வழக்கமாக அலுமினியம் மற்றும் ஆக்சிஜன் அணுக்களால் ஆனது. வைரத்திற்கு அடுத்ததாக மிக கடினமான பொருள் கோரொண்டம். நீலமாணிக்கத்தில் சாதாரண கோரொண்டத்தில் இரும்பு மற்றும் டைட்டானியம் (titanium) அசுத்தமாக சேர்ந்தது. சாதாரண சுத்தமான கோரொண்டத்திற்கு மதிப்பு கிடையாது. அதனுடன் அசுத்தம் சேரும்போது தான் அதற்கு மதிப்பு வருகிறது.

வைரம் போன்று, வெவ்வேறு அசுத்தங்கள் வெவ்வேறு நிறத்தில் கோரொண்டத்தை உருவாக்குகிறது. வெள்ளை, ஊதா, மஞ்சள், சிகப்பு மற்றும் நீல நிறங்களில் கோரொண்டம் காணப்படுகிறது. நீல நிற கோரொண்டம் தான் நீலமாணிக்கம். சிகப்பு நிற கோரொண்டத்தை ரூபி (ruby) என்று கூறுவர். நீலமாணிக்கம் மற்றும் ரூபி ஒரு வகை கோரொண்டம் தான். கோரொண்டத்தில் சிறு அளவு குரோமியம் (Chromium) என்ற தனிமம் அசுத்தமாக சேர்ந்திருந்தால் அது ரூபி, இவை அனைத்தும் பூமியின் தட்டு நகர்வதால் உருவானவை தான்.

சில தனிமங்கள் நீலமாணிக்கம் மற்றும் ரூபியைவிட மிக அரியது. அதில் ஓன்று மரகதம் (emerald). இவைகளும் தட்டுகள் நகர்வதால் பூமியின் பரப்பின் அருகில் உருவானவை தான். இவை நிலப்பரப்பில் தான் பெரும்பாலும் கிடைக்கும். ஆனால் கடின பாறைகளினுள் மாட்டி கிடக்கும். எனவே பாறைகளை வெடிமருந்து பயன்படுத்தி வெடிக்கவைத்து தான் எடுப்பார்கள்.

மாணிக்கங்கள், குறிப்பாக வைரம் மிக அரியது என்று நீங்கள் நினைப்பீர்கள். ஒரு மிக பெரிய வைரம் மிக அறியாது தான். ஆனால் உண்மையில் சிறு வைரங்கள் நீங்கள் நினைப்பதைவிட மிக பொதுவாக கிடைக்கும் கல். மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகின்றார்கள் என்பதற்காக நகை சந்தை அதிக விலைக்கு விற்கிறது என்று பல மண்ணியல் ஆராச்சியாளர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுவது உண்டு. எல்லா மாணிக்கங்களையும் பளபளப்பாக்குவதற்கு தேய்த்து சரியான வடிவத்திற்கு கொண்டு வருவது ஒரு பெரிய வேலை. அதற்கு விலை உண்டு. ஆனால் அதை தேடுவது ஒப்பீட்டளவில் எளிது தான்.

ஜேட் (jade) என்ற கல் பார்க்க அழகாகவும் இருக்கும், மிக கடினமானதும் கூட. சீனார்கள் பழங்காலத்தில் இருந்தே இந்த கல்லின்மீது ஒரு மோகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்றும் சீனர்கள் இந்த கல்லை பயன்படுத்தி நகை செய்து அதிக விலைக்கு விற்பதுண்டு. வேறு இடத்தில் உள்ள மக்கள் வழக்கமாக இதை நகையாக பயன்படுவதில்லை. இது மிக அரிய கல்லாக இல்லாவிட்டாலும், சீனாவில் விலை அதிகமாக விற்கப்படுகிறது. ஜேட் பெரும்பாலும் சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் ஜேட் போன்ற வேறு ஒரு பொருள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பெயர் ஒப்பல் (opal).

உலகின் 95% ஒப்பல் ஆஸ்திரேலியா நாட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒப்பல் பல நிறங்களில் உள்ளது. ஜேட் மற்றும் ஒப்பல்களில் கண்ணுக்கு தெரியாத பல சிறு வடிவங்கள் உள்ளது. அவை தான் அந்த கற்களை மிக கடினமாக வைக்கிறது. ஒப்பல் சிறு சிறு உருண்டை பந்துகள் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு கல். ஒப்பலின் உள் தண்ணீரும் இருக்கும்.

எப்படி ஒப்பல் உருவாகிறது என்பது மிக முழுமையாக நமக்கு தெரியாது. தண்ணீர் பாறைகளின் இடையே உள்ள வெடிப்புகளினுள் இறங்கி, அதில் இருக்கும் சிலிக்கா மண்ணையும் சிலநேரம் கரைக்கும். இந்த மண் கலந்த தண்ணீர் மெதுவாக திடமாக மாறி ஒப்பல்லாக மாறுகிறது. இப்படி ஒப்பல் பல பாறைகளின் இடுக்குகளில் தான் காணப்படும். சில நேரங்களில் பழைய இறந்து போன விலங்குகளின் மேல் இருக்கும் தோடு அப்படியே ஒப்பல் படிவமாக மாறுகிறது.

ஒவ்வொரு மாணிக்க கற்களும் பூமியின் வெவ்வேறு செய்முறையில் உருவானது. பூமிக்கு எப்படி வெவ்வேறு மாணிக்கங்களையும் உருவாக்குவது என்று தெரியும். பூமியைப் பற்றிய மிக முக்கிய தகவல்களை வைரங்கள் உள்ளடக்கி வைத்துள்ளது. குறிப்பாக பூமியின் தட்டுகள் எப்போது நகர துவங்கியது என்பது.

 


ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.