தொடர்புடைய கட்டுரை


பாழ் படும் பால்

Dr. S. பிரகாஷ்

23rd Oct 2018

A   A   A

தூய்மைக்கு இலக்கணமான பால் பாழ்ப்பட்டு கிடக்கிறது இன்று. புரத சத்துகளும், கால்சிய சத்துகளும் நிறைந்த மாட்டுப்பால் தாய்ப்பாலுக்கு இணையாக கருதப்பட்ட காலம் இருந்தது. “தாய்ப்பால் குடித்ததோ இல்லையோ மாட்டுப்பால் குடிக்காத குழந்தையில்லை” என்ற கோஷம் மெரினாவில் ஜல்லிக்கட்டிற்கான போராட்டத்தில் முதன்மை இடம்பிடித்த கோஷம். மாட்டைப்பற்றி மீண்டும் சிந்திக்க தொடங்கிவிட்ட ஓர் மெரினா புரட்சி, இரண்டாம் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட களம். மனிதர்களாகிய நாம் வந்து நிற்கின்ற புள்ளி சரிதானா என்பதை சற்று ஓய்ந்து திரும்பி பார்க்க செய்த மாணவப் பட்டாளம். உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கை முறை என அத்தனையையும் சீர்தூக்கி பார்க்க ‘மெரினாவில் செல்போன் ஒளிப்பொறி’ ஏற்படுத்திய தாக்கம் சற்று அதிகம் தான். இந்த கட்டுரையும் அதன் தாக்கம் தான்.

பழமையும் புதுமையும் சரிவர கலக்க இயலாமல் வாழும் வாழ்க்கை முறை, எதை உண்போம், எதை குடிப்போம் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல், அதற்கான விழிப்புணர்வும் இல்லாமல், இதைப் பற்றியெல்லாமே அக்கரை இல்லா இந்த அரசு என வந்து நிற்கின்றோம் இந்த புள்ளியில், விடை கிடைக்குமாவென்று? வெளிநாட்டில் வாழும் நண்பர்களிடம் கேட்டேன் அங்கு உள்ள சாலை ஓரங்களில் கைக்கு எட்டும் தூரத்தில் பழங்கள் காய்த்து தொங்கிக்கொண்டிருக்கும். குறிப்பாக ஆப்பிள் மரங்களில் ஆப்பிள்களை பொதுமக்கள் பறித்து செல்ல மாட்டார்களா என்று. அவர் கூறிய பதில் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நாட்டு மக்கள் எந்த ஒரு உண்ணும் பொருட்களையும் இப்படிப்பட்ட பகுதிகளிலிருந்து பறித்து உண்ணமாட்டார்கள். கடைக்கு சென்றுதான் ஆப்பிள்களை வாங்குவார்கள். கடைகளில் விற்கப்படும் பழங்கள், காய்கறிகள், சாப்பிடும் பொருள்கள் அனைத்தையும் அந்நாட்டு அரசு சோதனை செய்து மனிதர்களை பாதிக்கும் பொருள்கள் ஏதாவது இருக்கின்றனவா? என தரநிர்ணயம் செய்து அதைப்பதப்படுத்தி முத்திரையிட்டு சான்றளித்த பின்னரே விற்கப்படும். அதைத்தான் அந்நாட்டு மக்களும் வாங்கிச் செல்வர். இதனால் தான் மரத்திலிருந்து கூட பழங்களை பறித்து உண்ணமாட்டார்கள் என்றார்.

அந்த நாட்டு அரசுக்கு மக்கள் மீது எத்தனை அக்கறை. மேற்கத்திய நாடுகளில் எல்லாம் இந்த முறைதான். இந்தியாவிலும் இத்தகைய தர நிர்ணய (Standards) முறைகள் எல்லாம் இருக்கின்றன. இருப்பினும் அவைகள் முறைப்படுத்தப்பட வில்லை அல்லது கண்காணிக்கப் படவில்லை என்றே சொல்லலாம். லஞ்சம்தான் அத்தனைக்கும் காரணம். பால் இந்த அளவிற்கு பாழ்பட்டதற்கும் இவைகள் தான் காரணம்.

உலகளாவிய மாட்டுப்பால் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில் பாலின் நிலைமை வேறு எந்த நாட்டிலும் ஏற்படாத நிலை. மாட்டு பால் உற்பத்தியில் அமெரிக்க ஐக்கிய நாடு முதலிடம் வகிக்கிறது. 2013 – ஆம் ஆண்டில் 91,271,058 மெட்ரிக் டன் உற்பத்தி செய்திருக்கின்றனர். இதற்கு அடுத்த படியாக இந்தியா 60,600,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்திருக்கின்றது. மூன்றாவதாக சீனா 35,310,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்துள்ளது. ஆட்டுப்பால் உற்பத்தியிலும் (5,000,000 மெட்ரிக் டன்), எருமைப்பால் உற்பத்தியிலும் (70,000,000 மெட்ரிக் டன்) உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.

தென்மாநிலங்களை தவிர்த்து வடமாநிலங்களில் பால் உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. 2008-2009 ஆம் ஆண்டிற்கும் 2014-2015 ஆம் ஆண்டிற்கும் இடையிலான கணக்கெடுப்பில் ராஜஸ்தான் 16.2 சதவிகிதமும், மத்தியபிரதேசம் 12.3 சதவிகிதமும், பீகார் 8 சதவிகிதமும் பால் உற்பத்தியை அதிகரித்துள்ளது. தமிழகமோ 2008-2009 உற்பத்தியை விட 0.5 சதவிகிதம் குறைந்துள்ளது வருந்ததக்கது. இந்திய அளவில் மாடுகளின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டில் 190.9 மில்லியன் அளவிலுள்ளது. 1951 ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 155.3 மில்லியனாக இருந்தது. மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் வைத்துப் பார்த்தால் 1951 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட 2012 ல் அதிகரித்திருந்தாலும் இதன் சதவிகித வளர்ச்சி குறைவு.

இந்தியாவை பொறுத்த வரையில் 37 வகையான நாட்டின மாடுகள் இருப்பதாக அறியப்படுகின்றன. இவற்றுள் கிர், சாகிவால், ரெட்சின்டி, ரதி, டார்பார்கர், டியோனி, ஹரியானா, காங்ரெஜ், ஓங்கோல், ரெட்காந்தாரி, நிமாரி, மால்வி, டாங்கி, கில்லாரி கேட்டில், அம்ரித்மகால், ஹாலிக்கர், காங்கேயம், நகோரி, பராகுரு, கெங்கதா, சிரி, பச்சோர், ஹெரிகார், மிவாட்டி, அம்பலசேரி, கிருஷ்ணவாலி, பான்வார், வெச்சூர், மெலநாடு கிடா, காசர்கோடு போன்றவை முக்கியமானவை. மேலை நாட்டு கலப்பின வகைகள் குறிப்பாக ஜெர்சி, சிபு, டான்சுவிஸ், ஹோல்ஸ்டீன் ஃபிரசியன் (HF) போன்றவைகள் அதிகமாக காணப்படுகின்றன. அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் தான் அதிகளவில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. சீனா மற்றும் ரஷ்யா தான் உலகளவில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்த நாடுகள் வரிசையில் முதன்மை வகித்தவை. ஆனால் 2016 ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளும் பால் உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ளன.

ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான நாடுகளில் ஒன்று. அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் பால் வர்த்தகத்தில் இந்தியாவிலோ பாலின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இந்திய மக்களுக்கு வழங்கப்படும் பாலில் மிகப் பெரிய கலப்படங்களும் (Adulteration), தரம் குறைந்ததாகவும் அமைந்துள்ளது பல நோய்களுக்கு காரணமாகின்றன என பலராலும் வலியுறுத்தப்படுகின்றன.

2011 ஆம் ஆண்டின் FAO அறிக்கையில் உலகளவில் பாலின் தேவையில் பசுக்கள் 85% சதவிகிதத்தை பூர்த்தி செய்கின்றன. எருமைகள் 11 சதவிகிதத்தையும், ஆடுகள் 2 சதவிகிதத்தையும், செம்மறியாடுகள் 1.4 சதவிகிதத்தையும், ஒட்டகங்கள் 0.2 சதவிகிதத்தியும் பூர்த்தி செய்கின்றன.

பாலூட்டிகள் தங்கள் குட்டிகளின் வளர்ச்சிக்காக பாலுறுப்புகளில் உள்ள பால் சுரப்பிகள் பாலை சுரக்கின்றன. பசும்பாலில் மனிதர்களின் வளர்ச்சிக்கும், உடல் பாதுகாப்பிற்கும் தேவையான பல பொருள்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக புரதங்கள், வைட்டமின்கள், கொழுப்பு பொருட்கள், சர்க்கரை பொருள்கள், மினரல் சத்துக்கள் குறிப்பாக கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற பொருள்கள் அதிகமாக காணப்படுகின்றன.

இருப்பினும் மனிதர்கள் விலங்கின பால்களை குடிக்க தொடங்கிய காலங்களில் அவற்றை சரிவர ஜீரணிக்க கூடிய நொதிகள் கூட உடலில் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரை பொருள்களை ஜீரணம் செய்யக்கூடிய காக்டேஸ் எனும் நொதிகள் உடலில் உற்பத்தி செய்யப்படவில்லை. பல ஆண்டுகள் பயன்பாடுகளின் விளைவாக உடல் மரபணு மாற்றத்திற்குட்பட்டு இத்தகைய சர்க்கரை பொருள்களை ஜீரணிக்க உதவி புரிந்திருக்கின்றன. லாக்டோஸ் சர்க்கரை பொருள்கள் ஜீரணிக்கப் படவில்லை எனில் வயிற்றுவலி, வயிற்றுபோக்கு போன்ற உபாதைகள் ஏற்படும்.

இந்திய உணவு கட்டுப்பாட்டு மற்றும் தரநிர்ணய கழகம் (FSSA) 2011 ஆம் ஆண்டு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது. இந்தியாவில் உற்பத்தியாகும் பால்களை சோதனை செய்ததில் 70 சதவிகித பாலில் வரையறுக்கப் பட்ட தரநிர்ணயங்கள் இல்லை என அறிவித்தது. 70 சதவிகித பால் மாதிரிகள் தரமற்றவையாக இருந்தது. இவற்றுள் 8 சதவிகித பால் மாதிரிகளில் நுரைக்காக பயன்படுத்தும் சோப்பு கலவை கலந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியாவில் உற்பத்தியாகும் பால்களில் அதிகளவில் சீனி கலக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் கொள்முதல் செய்யும் பாலில் லாக்டோ மீட்டர் எனும் உபகரணத்தை பயன்படுத்தி பாலின் அடர்த்தியை கண்டுபிடிப்பார்கள். அடர்த்தியான பாலுக்கு அதிக பணம் கிடைப்பதால் சாதாரண சீனியை கலக்கின்றனர். இதற்காக அம்மோனியம் சல்பேட் எனும் வேதிப்பொருள்களும் கலக்கப்படுகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட பாலை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பதப்படுத்தி பாக்கெட்களில் அடைத்து விற்கின்றனர். ஒவ்வொரு பால் பதப்படுத்தும் நிலையங்களில் பார்த்தாலும் கொள்முதல் செய்யும் பாலைவிட விற்பனை செய்யும் பாலின் அளவைப்பார்த்தால் பன்மடங்கு அதிகமாக இருக்கும். அதிலும் அடர்த்தி கொள்முதல் செய்த பாலைவிட விற்பனை செய்யும் பாலில் அதிகமாக இருக்கும். இது எப்படி சாத்தியம்? கொள்முதல் செய்த பசும்பாலில் கொழுப்புகள் பிரித்தெடுக்கப்பட்டு பால் சார்ந்த பொருள்கள் தயாரிக்கப் பட்ட பின்னும் பால் அடர்த்தியாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

முதல் நிலையில் கொள்முதல் செய்வதற்கு முன் கலப்படங்கள் நடந்தேறினாலும், இரண்டாம் நிலையில் பதப்படுத்தும் நிலையங்கள் தங்கள் பங்கிற்கு அறிவியல் முறையில் பல கலப்படங்களை நிறைவேற்றுகின்றனர். பாலில் திடதன்மையை அதிகரிக்க ஸ்டார்ச் பொருள்களை கலப்பது, ஜவ்வரிசி, சோயா பொடி மற்றும் பல தாவரம் சார்ந்த பொருள்கள் பாலில் கலக்கப்படுகின்றன. இந்த பால் கெட்டுப்போகாமல் அதிக நாள்கள் இருப்பதற்காக பல வேதிப்பொருள்கள் பென்சாயிக் அமிலம், சாலிசிலிக் அமிலங்கள் கலக்கப்படுகின்றன. இவைகள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதிப்படைய செய்யும் பொருள்களாகும். பாலிலுள்ள பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் போன்ற வேதிப்பொருள்கள் அதாவது சோதனைச்சாலைகளில் பாம்பு, பல்லி கெட்டுப் போகாமல் குப்பிகளில் வைத்து பாதுகாக்க பயன்படுத்தும் வீரியமிகு வேதிப்பொருள்கள் பாலில் கலக்கப்படுகின்றன. மேலும் பாலின் அடர்த்தியை அதிகரிக்க விலை குறைந்த கொழுப்பு பொருள்களை சேர்க்கின்றனர். குறிப்பாக தாவர எண்ணெய்கள், யூரியா போன்ற பொருள்களும் இதைவிட மேலாக பன்றி கொழுப்புகளையும் பாலில் சேர்ப்பது வேதனைக்குரியது.

சாதாரணமாகவே பாலில் உள்ள பால் பொருள்கள் மனிதர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. அதற்குமேலும் மனிதர்கள் இந்த பாலை பாதிப்படைய செய்து நோய்களை உருவாக்கும் மிகப் பெரிய சக்தியாக உருவாக்கி வைத்துள்ளனர். பாலில் காணப்படும் புரதங்களில் 80 சதவிகிதம் கேசின் எனும் புரதம் ஆக்ரமித்துள்ளது. இந்த கேசின் நான்கு வடிவங்களில் காணப்படும். அவை முறையே ஆல்பா S1, ஆல்பா S2, பீட்டா மற்றும் கப்பா எனும் வகையில் இருக்கும். இவற்றுள் பீட்டா வகை கேசின் 12 வகைகளில் பாலில் காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானவை A1 மற்றும் A2 இதை வைத்து தான் பாலை A1 பால் மற்றும் A2 பால் என வகைபடுத்தப்பட்டுள்ளது. புரதங்கள் (Proteins) சாதாரணமாக அமினோ அமிலங்களால் (Amino acids) உருவாக்கப்பட்டிருக்கும். அதாவது புரதம் எனும் மாலை அமினோ அமிலம் எனும் பாசிகளால் கோர்க்கப்பட்டிருக்கும். இந்த மாலையில் 67 வது இடத்தில் கிஸ்டிடின் எனும் அமினோ அமில பாசி கோர்க்கப்பட்டிருந்தால் அது A1 பால். இந்த புரத மாலையில் 67 வது இடத்தில் புரோலைன் எனும் அமினோ அமிலம் இருந்தால் அது A2 பால் சரிதானே, மூச்சு வாங்குகிறதா?

பாலை நாம் உட்கொள்ளும்போது நம் ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகள் இந்த புரதங்களை உடைத்து சிறு சிறு துண்டுகளாக்கும். இந்த துண்டுகள் தான் உடலினுள் உட்கிரகிக்கப்படுகின்றன. இந்த A1 பால் நாம் உட்கொள்ளும் போது இந்த புரதங்கள் (பீட்டா கேசின்) உடைக்கப்பட்டு சிறு துண்டுகளாக்கப்படும். இந்த உயிரியல் வீரியமிக்க துண்டுகள்தான் “பீட்டா கேசோமார்பின் 7” (BCM 7) என்றழைக்கப்படுகின்றன. இந்த புரத துண்டுகள் உடலினுள் உட்கிரகிக்கப்பட்டு உடலின் பல செல்களுடன் இணைந்து குறிப்பாக நரம்பு செல்கள், ஹார்மோன்கள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்களுடன் இணைந்து பிரச்சனைகளை உருவாக்குவதாக கூறப்படுகின்றன. இதனால் Type1 சர்க்கரை நோயும், இருதய நோய்களும் உருவாவதாக முற்றிலும் அறிவியல் பூர்வமாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.  A2 வகையில் இந்த குளறுபடி இல்லை என கூறப்படுகிறது. இந்திய மாடுகளில் 98 சதவிகிதம் A2 வகையாகவும், ஐரோப்பிய வகை மாடுகளில் 90 சதவிகிதம் A1 வகையாகவும் கூறப்படுகிறது. வரைமுறையற்ற கலப்பின முறைகளால் இடத்திற்கு இடம் இவைகள் வேறுபடுகின்றன.

இந்தியாவில் இத்தகைய மாடுகளை பற்றிய ஆராய்ச்சியை National Bureau of animal Genetic Resources (NBAGR) 2009 ஆம் ஆண்டுகளிலிருந்து நடத்தி வருகின்றது. முடிவில் இந்நிறுவனம் பாலிற்காக பயன்படுத்தப்படும் இந்திய மாடுகள் 100 சதவிகிதம் A2 வகையை சார்ந்தது என அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்திய அரசு (ICAR) இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம், NDRI மற்றும் NBAGR நிறுவனங்களுக்கு அனுமதியளித்து இந்திய கலப்பின மாடுகளை கண்காணித்து வருகின்றன.

தாய்ப்பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வந்த பசும்பாலில் இத்தனை குளறுபடிகள் இருப்பதை நினைக்கும்போது, பழைய பால் இல்லா கருப்புகட்டி காப்பிக்கு திரும்பிவிட தோன்றுகிறது.

 


பெப்ரவரி 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.