தொடர்புடைய கட்டுரை


கன்னிப்பூவில் பொடி விதைப்பு நெல் சாகுபடி

Dr. பா. சாம்ராஜ்

16th Aug 2018

A   A   A

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூவில் பொடிவிதைப்பு நெல் சாகுபடி இம்மாவட்டத்திற்கே உரிய தனித்தன்மை வாய்ந்தது. சுமார் 7500 ஏக்கர் இச்சாகுபடி முறையில் உள்ளது. ஏப்ரல் - மே மாதத்தில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி நெல் விதைக்கப்படுகிறது. முளைத்து வரும் பயிர் 30 முதல் 35 நாட்கள் வரை மானாவாரிப் பயிராக வளர்ந்து வரும். ஜூன் மாதத்தில் வாய்க்காலில் பாசனத்திற்கு போதிய நீர் வந்ததும் இந்தப் பயிரில் நீர் கட்டப்பட்டு தொளிப் பயிராக மாற்றப்படுகிறது.

பொடி விதைப்பு நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்கலாம்.

மார்ச் மாதத்தில் நிலத்திலுள்ள முந்தின நெல் பயிரின் அடித்தாள்களை பிடுங்கி அவற்றை வயலிலேயே இட்டு எரித்து விட வேண்டும். இதனால் பூச்சிகளின் புழுக்கூடுகள், மற்றும் நூற்புழுக்கள் அழிகின்றன. கோடை மழையைப் பயன்படுத்தி மார்ச் - ஏப்ரல் மாதத்திலேயே மூன்று முதல் நான்கு முறை உழவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு தேவையான ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிக்க 300 கிலோ தொழு உரமும், 15 கிலோ மணிச்சத்தும், 7.5 கிலோ சாம்பல் சத்தும் சேர்த்து நன்கு கலந்து குவியலாக வைத்து தொளி கொண்டு நன்கு பூசிவிட வேண்டும். ஒரு மாதத்திற்குப் பின் இந்த ஊட்டம் ஏற்றிய தொழு உரத்தை கடைசி உழவின்போது இடவேண்டும்.

ஏ.எஸ்.டி.16, ஏ.எஸ்.டி.17, டி.பி.எஸ்.1, டி.கே.எம்.9 மற்றும் ஏ.டி.ற்றி.37 ஆகியன இச்சாகுபடிக்கு ஏற்ற உயர் விளைச்சல் இரகங்களாகும். ஒரு ஏக்கருக்கு 40 கிலோ விதை தேவை.

நெல் பயிர் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்க விதையை 10 மணி நேரம் நீரில் ஊறவைத்து வடித்தபின் 1.0% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் (400 கிராம் மியூரியேட் ஆப் பொட்டாஷ் 40 லிட்டர் நீர்) மீண்டும் 10 மணி நேரம் ஊற வைத்து வடித்து விதைகளை நிழலில் நன்கு உலர்த்தி விதைக்கவும். கடினப்படுத்திய விதைகளை ஒரு மாதம் வரை வைத்திருந்தும் விதைக்கலாம்.

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் பூஞ்சாள மருந்து கலந்து 24 மணி நேரம் வைத்து விதை மூலம் பரவும் பூஞ்சாள நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பூஞ்சாள விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து, ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரமும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் உரமும், 400 மில்லி ஆறிய வடிகஞ்சியுடன் கரைத்து. இந்தக் கலவையை 40 கிலோ விதையுடன் நன்கு கலந்து 15 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து பின் நிலத்தில் நேரடியாக விதைக்கவும்.

ஏப்ரல், மே மாதங்களில் விதைப்பதற்கு போதிய அளவு அதாவது 40 மி.மீ. மழை பெய்தபின் தக்க பருவம் வந்ததும், நேர்த்திகள் செய்த விதையை நேரடியாக விதைக்க வேண்டும். விதை முளைப்பதற்கு நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும். ஆனால் மண் காலில் ஓட்டக்கூடாது. இதன்பின் இரண்டு முறை நாட்டுக் கலப்பையால் உழுது உடனே பரம்படிக்க வேண்டும். இதனால் விதைகள் நன்கு மூடப்படுகின்றன. பரம்படித்தபின் நான்கு பாக்கெட் அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தையும் 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் உரத்தையும் 20 கிலோ நன்கு மக்கின பொடி செய்த தொழு உரத்துடன் கலந்து நிலத்தில் சீராக தூவவேண்டும்.

விதைத்த 3-ம், 5-ம், 7-ம் நாட்களில் பரம்படித்தல் வேண்டும். இச்செய்முறையினால் நிலம் நன்கு அமுக்கம் பெறுகிறது. இதனால் நிலத்திலுள்ள நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு நிலத்தில் சேமித்து வைக்கப்படுகின்றது. களைச்செடிகளும் அழிகின்றன. நிலம் நன்கு சமன் நிலை அடைகிறது. விதைத்த விதைகள் சீராக முளைக்கின்றன.

மண் பரிசோதனை சிபாரிசுப்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலையில் கீழ் காணும் பொதுப் பரிந்துரையின்படி உரமிடவேண்டும். ஒரு ஏக்கருக்கு மொத்தம் 30 கிலோ தழைச்சத்து, 15 கிலோ மணிச்சத்து மற்றும் 15 கிலோ சாம்பல் சத்து தேவை. இதில் 15 கிலோ மணிச்சத்தையும் 7.5 கிலோ சாம்பல் சத்தையும் முன்னர் குறிப்பிட்டபடி ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து அடியுரமாக இட வேண்டும்.

விதைத்த 30 முதல் 35-ம் நாளில் நீர் பாய்ச்சியதும் களை எடுத்து பின்னர் இடைவெளியுள்ள இடங்களில் பயிரை ஊடு கோரிப் போட்டு 40-ம் நாளில் முதல் மேலுரமாக ஒரு ஏக்கருக்கு 15 கிலோ தழைச்சத்து மட்டும் இடவேண்டும். இதை யூரியா மூலம் இட வேண்டும். முதல் மேலுரமாக இடும் யூரியாவுடன் 5 கிலோ யூரியாவுக்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து ஒரு இரவு வைத்திருந்து பின் இட வேண்டும். இரண்டாவது மேலுரம், விதைத்த 55-ம் நாளில் 7.5 கிலோ தழைச்சத்தும், 7.5 கிலோ சாம்பல் சத்தும் சேர்த்து இடவேண்டும். மூன்றாவது மேலுரமாக 7.5 கிலோ தழைச்சத்து மட்டும் விதைத்த 70-ம் நாளில் இடவேண்டும்.

விதைத்த 3-ம், 5-ம் மற்றும் 7-ம் நாட்களில் பரம்படித்தால் களைகள் முளைப்பது கணிசமாக கட்டுப்படுகிறது. விதைத்த 30 முதல் 35-ம் நாளில் கால்வாயில் தண்ணீர் கலந்து வந்து வயலில் நீர் கட்டியதும் 35 முதல் 40-ம் நாளில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். பொடி விதைப்பு பயிரில் 7-ம் நாள் வரை பரம்படிப்பதால் களைகள் குறைவாகவே இருக்கும். இதனால் களை எடுக்கும் செலவும் மிகக் குறைவாகவே ஆகும்.

பொடி விதைப்பு விதைத்த பின்னர் 3-ம் நாள், 5-ம் நாள், 7-ம் நாள் மழை பெய்து பரம்படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது பூட்டோகுளோர் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் 20 கிலோ மணலில் கலந்து விதைத்த 8 முதல் 15 நாட்களுக்குள் நிலத்தில் சீராக தூவவேண்டும்.

பூச்சி நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பயிர் 50 சதம் பூத்த நாளிலிருந்து 25 முதல் 30 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். இத்தருணத்தில் நெல் கதிர்கள் 80 சதவீதம் முற்றி வைக்கோல் நிறத்தில் இருக்கும். கதிரின் அடிப்பகுதியில் உள்ள இரண்டு மூன்று மணிகள் பச்சையாக இருக்கும் போதே அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு அறுவடை செய்வதால் வயலில் நெல் மணிகள் உதிர்ந்து வீணாவதைக் குறைக்கலாம். மேலும், அரவையின் போது கிடைக்கும் திறனையும் அதிகரிக்கலாம்.

கன்னிப்பூவில் பொடி விதைப்பு நெல் சாகுபடியில் மேற்குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பங்களை ஒருங்கிணைந்து கடைப்பிடிப்பதன் மூலம் விவசாய பெருமக்கள் அதிக விளைவும், கூடுதல் வருவாயும் பெறலாம்.

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.