தொடர்புடைய கட்டுரை


ஈஸ்டர் தீவு

பி.ரெ. ஜீவன்

10th Aug 2018

A   A   A

உலகில் காணப்படும் எல்லா நிகழ்வுகளும், சிறு அளவில், அதிவேகமாக நடைபெறும் இடம் தீவுகள். உலகில் நடைபெறும் ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளுக்கும் எடுத்துக்காட்டு தீவுகளில் காணலாம். அதை படித்து நாம் எதிர்காலத்தை யூகிக்கலாம்.

மனிதர்கள் பூமியின் வளங்களை பலவகையில் அழித்து வருகின்றனர். அப்படி அளிக்கும் வளங்களில் ஒன்று மரங்கள். உலகின் எல்லா மரங்களையும் அழித்துவிட்டால் என்ன நடக்கும்? இந்த நிகழ்வு ஏற்கனவே ஒரு தீவில் நிகழ்ந்துள்ளது. அந்த தீவு ஈஸ்டர் தீவு (Easter Island). இங்கு ஒரு காலத்தில் ஒரு நாகரீகம் இருந்தது. மரங்கள் அனைத்தையும் அழித்தால், நம் நாகரீகங்களுக்கு என்ன ஆகும் என்பதை இந்த தீவின் கதை ஏற்கனவே நமக்கு காட்டியுள்ளது. அதை பற்றி ஒரு சிறு பார்வை.

பசிபிக் பெருங்கடலில் பல தீவுகளில் பல பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவற்றில் ஓன்று 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உண்டான ஈஸ்டர் தீவுகள். 163 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே உடைய இந்த தீவு உலகில் மிக தனிமைப்படுத்தப்பட்ட இடமாக கருதப்படுகிறது. இந்த தீவை சுற்றி 2073கிலோமீட்டருக்கு கடல் தான் உள்ளது. இன்று அங்கு 3 எரிமலை வாய்கள் உள்ளன, ஆனால் அவை வெறும் அணைந்த எரிமலைகள். அவை இன்று குளங்களாக காட்சியளிக்கிறது.

ஈஸ்டர் நாள் அன்று 1722இல் ஜேக்கப் ரோக்கோவென் (Jacob Roggeveen) என்ற டச்சு நாட்டு மாலுமி இந்த தீவை கண்டுபிடித்தார். ஏற்கனவே அங்கு மக்கள் வாழ்வதை அவர் கண்டார். அந்த மக்கள் சுமார் கி.பி. 700 - கி.பி. 1100 இடையே முதலில் அந்த தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த மக்கள் அங்கு ஒரு பிரமாண்டமான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். மிக பிரமாண்டமான இராட்சச கல் சிலைகளை அவர்கள் அங்கு எழுப்பியுள்ளனர். இன்று அந்த சிலைகள் உலக புகழ் பெற்று மிக தனிப்படுத்தப்பட்ட கலாச்சாரத்தை குறிக்கிறது. ரோக்கோவென் நீண்ட காலம் அங்கு தங்கவில்லை. அவருக்கும் அங்கு வாழ்ந்த மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, 12 ஈஸ்டர் தீவு மக்கள் அதில் இறந்துவிட்டனர். ஆனால் அவர் அங்கு பார்த்த சிலைகள் அவரை பிரமிக்க வைத்தது.

ரோக்கோவென் சென்று 52 வருடத்திற்கு பின்னர், ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்ததால் புகழ்பெற்ற ஜேம்ஸ் குக் (James Cook) ஈஸ்டர் தீவுக்கு வந்தார். அந்த தீவுகளில் உள்ள பிரமாண்டமான இராட்சச கல் சிலைகளை கண்டு வியப்படைந்தார். இந்த சிலைகளை அவர்கள் வழிபடவில்லை. அவைகள் தெய்வங்களை குறிக்கவில்லை. அவர்களின் மதிப்பிற்குரிய முன்னோர்களை மட்டுமே குறிக்கிறது என்பதை குக் அவர்களிடம் இருந்து கண்டுபிடித்தார். எப்படி அந்த பழங்குடி மக்கள் அந்த சிலைகளை உருவாக்கினர்? எப்படி அவைகள் எழுப்பப்பட்டது? அந்த தீவில் உள்ள மக்களுக்கு இந்த பெரிய சிலைகளை உருவாக்கி எழுப்பும் அளவுக்கு திறமை உண்டா? இதை போன்று பல கேள்விகள் அங்கு வந்த ஐரோப்பியர்கள் மனதில் வந்தது.

பின்பு அங்கு வந்த ஐரோப்பியர்கள் பல கற்பனை விளக்கங்களை கூற துவங்கினர். சுமார் 12 அடி உயரமுடைய பல இராட்சச வகை மனிதர்கள், அந்த சிலைகளை எழுப்பிருக்கலாம் என்று சிலர் கூறினர். மற்றும் சிலர் அவை வேற்று கிரக வாசிகளால் உருவாக்கப்பட்டது என்று கூறினர். இந்த விளக்கங்கள் இன்று வேடிக்கையாக இருந்தாலும், அப்போது யாராலும் இந்த சிலைகளை நம்ப முடியவில்லை என்பதை அது குறிக்கிறது.

தோர் ஹெயேர்தல் (Thor Heyerdahl) என்பவர் 1955 இல் அந்த சிலைகளை படித்தார். அங்கு காணப்பட்ட பாறைகளில் நடைமுறை சோதனைகள் பல நிகழ்த்தி மிக எளிதில் இந்த சிலைகளை உருவாக்கிவிடலாம் என்பதை எடுத்துரைத்தார். அந்த சிலைகளை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதும், போதிய மக்கள் இருந்தால் எளிது தான் என்பதையும் அவர் விளக்கினார். ஒரு காலத்தில் மிக அதிக மக்கள் இங்கு வாழ்ந்ததை இது காட்டுகிறது.

ஈஸ்டர் தீவு இன்று எந்தவித பெரிய மரங்களும் இல்லாமல், ஒரு தரிசு நிலமாக காணப்படுகிறது. இந்த தீவில் வாழ்ந்த மக்கள் ஜப்பான் நாட்டு பக்கம் இருந்து வந்த பொலினேஷியர்கள் (Polynesian) என்பது நிரூபணமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு முதலில் வரும்போது, ஈஸ்டர் தீவு ஒரு அடர்த்த காடாக இருந்தது. பல மரங்கள் அங்கு இருந்தது.

ஈஸ்டர் தீவில் காணப்பட்ட டோரோமிரோ மரம் (toromiro tree) உலகின் வேறு எங்கும் கிடையாது. அந்த தீவிலே உருவான தனிப்பட்ட மரம். இது மிக பலமான மரம். அங்கு வாழ்ந்த மக்கள் இந்த மரத்தை மிகவும் நம்பி வாழ்ந்தனர். கட்டு மரம் செய்வது, வீடு கட்டுவது, மீன் பிடிக்கும் கருவிகள் செய்ய, மர சிலைகளை செய்வது போன்று பல்வேறு வேலைக்கு டோரோமிரோ மரம் அவர்களுக்கு பயனளித்தது. அவர்களின் பிரமாண்டமான சிலையை போக்குவரத்து செய்வதற்கும் டோரோமிரோ மரம்தான் பயன்பட்டது.

டோரோமிரோ மரத்தினால் உருவான ஈஸ்டர் தீவு கலாச்சாரம், மிக செழித்து வளர்ந்தது. சுமார் கி.பி. 1500 ஆண்டுகளில் ஏறக்குறைய 15000 மக்கள் ஈஸ்டர் தீவில் வாழ்ந்திருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செழிப்பான கலாச்சாரம் இந்த ஒரு மரத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தது. இந்த மரம் இல்லாவிட்டால் அவர்கள் மீன் பிடிக்க படகு செய்ய முடியாது, மீன் பிடிக்கும் கருவி செய்ய முடியாது, வீடுகள் செய்யமுடியாது. அதைவிட முக்கியமாக அவர்கள் வழிபட்ட கடவுளின் உருவத்தை மரத்தில் செதுக்க முடியாது. டோரோமிரோ மரம் அங்கு அதிக உணவு கிடைக்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தது. இது அவர்களின் சமூகம் செழித்து வளர உதவியது.

ஒவ்வொரு முறையும் புது படகு அல்லது புது வீடு கட்டுவதற்கு புது டோரோமிரோ மரங்கள் வெட்டப்பட்டது. அந்த மரங்களை அவர்கள் வெட்ட வெட்ட அவர்களின் வளங்களும் அழிந்து போனது. அங்கு மக்களின் எண்ணிக்கை குறைவானது. ரோக்கோவென் அங்கு சென்ற பொது 2000-3000 மக்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து வந்தனர். அப்போது ஏற்கனவே அங்குள்ள கலாச்சாரம் சாக துவங்கியிருந்து. அப்போது அங்கு குறைவான டோரோமிரோ மரம் தான் இருந்தது. உணவுக்காக அவர்களிடையே சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலைமையை குக் அங்கு செல்லும்போது கண்டார். அப்போது யாருக்கும் அந்த கல் சிலை செய்வது எப்படி என்று கூட தெரியவில்லை. உணவு இல்லாமையினால் அவர்களால் ஒரு காலத்தில் இருந்த அவர்களின் செழிப்பான கலாச்சாரம் கைவிடபட்டது. 1877இல் வெறும் 111 மக்கள் மட்டுமே ஈஸ்டர் தீவில் வாழ்ந்தனர்.

1956இல் ஒரே ஒரு டோரோமிரோ மரத்தின் தண்டு மட்டுமே உயிருடன் இருந்தது. அதன் மேல் பக்கம் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. அந்த கடைசி மரமும் காலப்போக்கில் இறந்துவிட்டது. கடைசி டோரோமிரோ மரம் வெட்டப்பட்டதுடன் ஈஸ்டர் தீவு கலாச்சாரமும் அழிந்தது.

அவர்கள் மாக்கிமாக்கி (Makemake) என்ற கடவுளை வழிபட்டு வந்தனர். அவர்களின் பாரம்பரியத்தின்படி மாக்கிமாக்கிதான் அவர்களை உருவாக்கி, காக்கும் கடவுள். அவர்களின் செழிப்புக்கு மாக்கிமாக்கி தான் காரணம். மாக்கிமாக்கிக்கு வருடத்துக்கு ஒருமுறை பெரிய விழா நடத்தி சிறப்பித்தனர். 6 விரல் உடைய, சிரித்த முகம் உடைய மாக்கிமாக்கியின் விசித்திர உருவம் பல கற்களில் செதுக்கப்பட்டது.

ஈஸ்டர் தீவு மக்கள் மிக அழகிய மரச்சிலை செய்யும் கலையில் சிறந்து விளங்கினர். டோரோமிரோ மரம் இதற்கும் பயன்பட்டது. அவற்றில் மிக முக்கியமானது மாக்கிமாக்கியின் உருவம் மர சிலையாக செய்யப்பட்டது. ஈஸ்டர் தீவுக்கு சென்ற ஐரோப்பியர்கள் பல சிறு மரச்சிலைகளை அங்கிருந்து எடுத்து வந்துள்ளனர். இன்று உலகின் பல அருங்காட்சியகங்களில் அவற்றை காணலாம். இவற்றில் சில உலகின் மிக பழமையான மரச்சிலைகள் என்று கருதப்படுகிறது.

ஈஸ்டர் தீவின் கலாச்சாரம் அழியும்போது அங்கு உள்ள மக்கள் மாக்கிமாக்கி அவர்களை கைவிட்டதாக உணர்ந்தனர். மாக்கிமாக்கிக்கு கொடுக்கவேண்டிய வழிபாடு குறைந்தது. ஐரோப்பியர்கள் அங்கு வரும்போது டோரோமிரோ மரத்தினால் செதுக்கப்பட்ட பல சிலைகளை ஈஸ்டர் தீவினர் அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தனர். இத்துடன் அவர்கள் பரிசுத்தமாக கருதி தினமும் வழிபட்ட மாக்கிமாக்கியின் மரச்சிலையும் ஐரோப்பியர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அவர்கள் தங்கள் கடவுள்களை உருவாக்க பயன்படுத்திய டோரோமிரோ மரம் தான் அவர்களின் கடவுள் என்பதை அவர்கள் உணரவில்லை. இயற்கை தான் தெய்வம், இயற்கை தான் மாக்கிமாக்கி. ஈஸ்டர் தீவு கலாச்சாரம் அழிந்ததுடன், அவர்கள் வழிபட்ட கடவுளும் அழிந்துவிட்டது. கடவுள்களைவிட இயற்கையை பாதுகாப்பது முக்கியம் என்ற பாடத்தை ஈஸ்டர் தீவு நமக்கு கற்றுகொடுத்துள்ளது. இயற்கையைவிட மாக்கிமாக்கி சக்திவாய்ந்தது ஒன்றும் அல்ல. மாக்கிமாக்கி ஈஸ்டர் தீவு மக்களை கைவிடவில்லை. அந்த மக்கள் தான் மாக்கிமாக்கியை கைவிட்டுவிட்டனர்.

ஐரோப்பியர்கள் அங்கு முதலில் செல்லும் போது கூட அங்கு போதிய மரங்கள் இல்லை. எனவே அப்போதே அந்த கலாச்சாரம் மெதுவாக அழிய துவங்கிவிட்டது. இன்று அது முற்றிலும் அழித்துவிட்டது. இதை போன்று தான் நாம் இன்று வாழும் சமூகமும். பல இயற்கை வளங்களை நம்பி நாம் வாழ்கிறோம். என்று எல்லா வளங்களையும் அளிக்கிறோமோ, அன்று பூமி வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். மொத்த பூமியின் கதையை ஈஸ்டர் தீவின் கதை ஒரு சிறு அளவில் நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளது.

தீவுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. அதில் ஈஸ்டர் தீவின் கதை மிக முக்கியமானது. இயற்கை வளங்களை பாதுகாக்காவிட்டால் ஏற்படும் பின்விளைவுகளை அது காட்டுகிறது.  

ஈஸ்டர் தீவில் வளங்களை அழித்ததில் தீவுக்கு ஒன்றும் ஆகவில்லை. அங்கிருந்த மனிதர்களும், கலாச்சாரமும், கடவுளும் தான் அழிந்தது. அந்த தீவு இன்னும் ஒரு பெரிய பாறையாக தான் காட்சியளிக்கிறது. அங்கு சிறு தாவரங்கள் மற்றும் சில விலங்குகள் வாழ்கிறது. இயற்கை வளங்களை அழித்தால், பூமிக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. பூமி அப்படியே தான் இருக்கும். நாமும், வேறு பல விலங்குகளும் தான் அழிவோம். பாதிப்பு நமக்கு தான். பல பேரழிவுகளை பூமி ஏற்கனவே கண்டுள்ளது.

 


நவம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.