தொடர்புடைய கட்டுரை


ஆகாயத் தாமரை..

சிதம்பரம் ரவிச்சந்திரன்

15th Sep 2018

A   A   A

நாம் வாழும் இடத்தை சுற்றிலும் எத்தனை எத்தனையோ தாவரங்களை நாம் காண்கிறோம்.. அப்படிப்பட்ட தாவரங்களில் சில வேண்டாத தாவரங்களாகப் பெருகி நம் சூழலையும், சுற்றுப்புறத்தின் நன்மையையும் பாழ்படுத்துவதாக உள்ளன. உதாரணத்துக்கு, கருவேலம் எனப்படும் தீக்கருவை அல்லது வேலிகாத்தானை அழிப்பதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிக கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளிவிடுவதும், வறண்ட காலநிலையிலும் செழித்து வளரக்கூடியதும், சுற்றும்முற்றும் மண்ணில் இருக்கும் நீரையும், மற்ற சத்துக்களையும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு மற்ற தாவரங்களை வளரவிடாமல் அழிப்பதுமான இந்தக் கருவை தாவரத்தை அழிப்பதற்கு என்று தனியார் தொண்டுநிறுவனங்களும் கூட மக்களோடு சேர்ந்து கை கோர்த்து செயல்பட்டுவருகின்றன. பாண்டிச்சேரி மாநிலத்தில் நிதிநிலை அறிக்கையில் இந்தத் தாவரத்தை ஒழிப்பதற்காகவே தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றால் இதன் தீவிரத்தன்மையை நாம் புரிந்துக்கொள்ளலாம். 

இது போல ஒரு தாவரம்தான் இந்த ஆகாயத்தாமரை. தீக்கருவை செடிகள் விதைக்காமலேயே வளர்ந்து மரமாகப் பெருகி சுற்றுப்புறத்துக்கும், நமக்கும் மண்ணில் தீமை செய்வதைப் போலவே இந்த ஆகாயத்தாமரை நீரில் எல்லா அழிவுவேலைகளையும் அருமையாக செய்துவருகிறது. ஆகாயத்தாமரை, நீர்த்தாமரை, வெங்காயத்தாமரை என்று பலவிதமான பெயர்களில் இந்தத் தாவரம் அழைக்கப்பட்டாலும் இது செய்கிற தீமைகள் எல்லாம் அளவற்றதாகவே உள்ளது. 

இந்தியாவில் இந்தத் தாவரம் முதல்முதலாக கி.பி.1800 களில், பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவை அழகு செய்வதற்காக என்று இந்தியாவுக்குள் வந்த இந்தத் தாவரம் இப்போது ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுவதைப் போல நம் சூழலையும், இங்கு வாழும் நீர்த்தாவரங்களையும் அழித்துவருகிறது. தற்போது இந்த ஆகாயத்தாமரை இந்தியாவில் இல்லாத நீர்நிலைகளே இல்லை என்ற அளவுக்கு எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

இது ஒரு நீர்நிலைக்குப் புதிதாக வரும்போது, வேகவேகமாக இனப்பெருக்கம் செய்து பரவுகிறது. இவற்றை நீர்நிலைகளில் இருந்து அப்புறப்படுத்தினாலும், அடுத்த 15 நாள்களில் திரும்பவும் முளைத்துப் பரவி படர்கிறது. நம் ஊரில் உள்ள ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு இவை வந்துசேர்ந்தவுடன் வேகமாகப் பரவி ஏற்கனவே அங்கு காலம்காலமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் பாரம்பரியமான நீர்வாழ்த் தாவரங்களை இல்லாமல் செய்துவிடுகிறது. நீர்நிலைகளில் இருக்கும் முக்கியமான சத்துகளையும், நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனையும் இந்தத் தாவரம் உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. 

இந்தத் தாவரம் பரவியுள்ள நீர்நிலைகளில் நீர்வாழ் விலங்குகளான தவளை, பாம்பு, மீன் இனங்கள், போன்ற உயிரினங்கள் போதுமான அளவுக்கு சத்துகள் கிடைக்காததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் உடல் நலிந்து இறந்து விடுகின்றன. இந்தத் தாவரங்கள் நீர்நிலைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய மிதவை உயிரிகளையும் அழித்துவிடுகிறது. மற்ற உயிரினங்கள் எவையும் வாழ இயலாத சூழ்நிலைக்கு இதனால் நீர்நிலைகள் தள்ளப்பட்டு விடுகின்றன. இத்தகைய நீர்நிலைகளில் வாழும் மீன்களை நம்பியிருக்கும் மீனவர்களின் பொருளாதாரத்தையும் இது பாதிக்கிறது.

ஆய்வுகளின்படி இந்தத் தாவரங்கள் அதிகமாக பரவியுள்ள நீர்நிலைகள் கொசுக்களின் உற்பத்தி மையங்களாகவும் ஆகிவிடுகின்றன. மேற்குவங்கத்தில் இந்தத் தாவரத்தின் அசுரவேக ஆக்ரமிப்பால் பாதிக்கப்பட்ட ஏரிகளின் நீரின் தரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பது சமீப ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.  அஸ்ஸாம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்தத் தாவரத்தின் கட்டுக்கடங்காத இனப்பெருக்கம் நீர்வழிப் போக்குவரத்தையும் பாதித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சில இடங்களில் விவசாயத்திற்குப் பயன்படும் நீரில் 4% முதல் 5% வரை வேளாண் பயன்பாட்டுக்குரிய நீரையும் இது மாசுபடுத்தி இருக்கிறது. மழைக்காலங்களில் இவை நீர்நிலைகளை அடைத்துக் கொண்டிருப்பதால் செயற்கையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சீர்கேடுகள் உருவாகின்றன. அதனால் அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்ட இந்த தாவரங்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து பெருகவிடாமல் பாதுகாப்பது ஒன்றே சிறந்தவழி. 

அழகுக்காக வந்த ஒரு தாவரம் ஆபத்தானதாக மாறியுள்ளது. நம் ஊரிலும் இருக்கும் நீர்நிலைகளை எல்லாம் இந்தத் தாவரம் ஆக்கிரமிப்பு நடத்தாமல் ஒன்றுகூடி அடித்துவிரட்டுவோம்.. அழித்து ஒழிப்போம்..

 


ஜூன் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்