தொடர்புடைய கட்டுரை


உலகின் விலையுயர்ந்த புவியடிப் பூசணம்…

Dr. S. பிரகாஷ்

23rd Aug 2018

A   A   A

எதை உண்பது, எதை குடிப்பது என்ற குழப்பம் தற்போது அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் எந்த உணவை உண்டாலும் ‘கேன்சர்’ எனும் அச்சுறுத்தல். பாலில் விஷம், தண்ணீரில் விஷம், காய்கறிகளில் விஷம், காற்றில் விஷம் என்றெல்லாம் பரப்புரைகள். அரிசி சாப்பிட்டால் சர்க்கரை நோய், மற்றொரு கூட்டம் கோதுமை சாப்பிட்டாலும் சர்க்கரை. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் இதயநோய் மற்றொரு கூட்டம் தேங்காய் எண்ணெய் இதயத்திற்கு நல்லது என்பர். ஆலீவ் ஆயில் நல்லது, தவிட்டு எண்ணெய் நல்லது, கடுகு எண்ணெய் நல்லது, நல்லெண்ணெய் நல்லது என மக்களை குழப்பும் டாக்டர்களும், போலி டாக்டர்களும் வலைதளங்களில் சுற்றுகின்றனர்.

எதை தான் உண்பது எதை தான் குடிப்பது, எதுதான் உடலுக்கு நல்லது என 44 வயதாகியும் தெளிவு பிறக்கவில்லை. மெத்த படித்தவர்களும் தெளிவு தர முடியவில்லை. அரசாங்கத்தாலும் ஒரு தெளிவை மக்களுக்கு தர இயலவில்லை. சிக்கன் நல்லது என ஆங்கில மருத்துவர்களும், சிக்கன் கெட்டது என பிற மருத்துவர்களும், மாட்டிறைச்சி உண்டால் மனிதர்களையே கொல்லும் நிகழ்வுகளும், மீன் உணவு நல்லது என ஒரு கூட்டமும், மீனினால் பல நோய்கள் வருவதாக இன்னொரு கூட்டம் என குழம்பி போய் நிற்கிறோம். இயற்கை உணவு நல்லது எனவும், பாஸ்ட் புட் மோசமானது எனவும் பட்டிமன்றம் நடத்தி குழப்புவது தற்போது சர்வ சாதாரணம்.

எந்த உணவு நல்லது என ஆராய்ச்சி செய்து முடிவு சொல்வதற்குள் நம் தலைமுறை முடிந்துவிடும். எதை நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லிவிட்டு செல்வது. எல்லா நோய்களுக்கும் உணவுதான் காரணம் என்றும் பயமுறுத்துகின்றனர். பயமுறுத்துகின்றவர்கள் எந்த உணவை உண்டால் நோய் வராது என்று சொல்லுகிறார்களோ அந்த உணவுகளும் நோய்களைத் தான் உருவாக்குகின்றன. நோயின்றி வாழ்வது கடினம் என்பது உலகிலுள்ள ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கின்றனர்.

பரோட்டா சாப்பிட்டால் நோய், அரிசி சாப்பிட்டால் நோய், கோதுமை சாப்பிட்டால் நோய், மைதா சாப்பிட்டால் நோய் அப்போ எதைதான் சாப்பிடுவது. விடை தெரியாத கேள்விகள்? இந்த உலகில் மனிதன் வாழ்வு கடினமாகிக் கொண்டுதான் இருக்கின்றது.

மனித உடலுக்கு சத்துக்கள் தேவை, எது வேண்டாதது என்பதை கண்டுபிடித்து சொல்வதற்கும் ஆட்கள் இல்லை. மனிதனின் அடிப்படை தேவையான உணவில் இத்தனை குழப்பம். யார் இந்த குழப்பத்தை தீர்ப்பது. எந்த உணவு நல்லது என வலைதளங்களில் தேடிக்கொண்டிருந்தபோது உலகிலேயே மிக விலை உயர்ந்த உணவு ஒன்று கவனத்தை ஈர்த்தது. ‘புவியடிப் பூசணம்’ (Truffle) என்பது தான் அந்த உணவு. ஐரோப்பிய நாட்டில் 450 கிராம் இந்த புவியடி பூசணம் இரண்டு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் (2,33,000) ரூபாய்க்கு விலை போனது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

‘புவியடிப் பூசணம்’, ‘மணமூட்டும் காளான்’, ‘நிகண்டு’ எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த உணவு சில மரங்களில் வேர்களில் பூஞ்சைகளால் (Fungi) உருவாக்கப்படும் கிழங்கு போன்ற உணவாகும். ‘சமையலறை வைரம்’ எனும் இந்த உணவிற்கு சுவை, மணம், சத்துக்கள் அதிகம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த உணவு மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட வரலாற்று குறிப்புகள் ஏராளமாக உள்ளது.

சில மரங்களின் வேர்பகுதியில் காணப்படும் பூஞ்சைகள் இந்த உணவை உருவாக்குகின்றன. ‘புவியடிப் பூசணம்’ ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்க பகுதிகளிலும் அதிகமாக காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட வகை மரங்களின் வேர்களின் அருகில் வாழும் இத்தகைய பூஞ்சைகளில் வகைகள் பல. Tuber aestivum, T.gibbosum, T.magnatum, T.melanosporum, T.texensis போன்ற பூஞ்சைகள் கிழங்கு போன்ற இந்த உணவை உற்பத்தி செய்கின்றன. ஓக், பைன், டீக், ஊசல் போன்ற மரங்களின் வேர்களில் சார்புண்ணிகளாக இந்த பூஞ்சைகள் வாழும். இவைகள் பல நிறங்களில், பல வடிவங்களில் காளான் போன்ற இந்த உணவை உற்பத்தி செய்கின்றன. இவற்றுள் கறுப்பு மற்றும் வெள்ளை புவியடி பூசணம் விலை உயர்ந்ததாக கருதப்படுகின்றன. பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் இந்த கறுப்பு பூசணம் அதிகமாக காணப்படுகின்றன.

வெள்ளை பூசணம் மிக அபூர்வமானது. ஆகவே இதன் விலை மிக அதிகம். 450 கிராம் இரண்டு கோடி ரூபாய் வரை விற்பனை ஆனதாக தகவல்கள் உள்ளது. இத்தாலி நாட்டின் வட பகுதிகளில் இவை காணப்படுகின்றன. சீன புவியடி பூசணம் (Tuber himalayensis) ஆசிய பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் இமாலய பகுதிகளிலும், திபெத் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. காரத்தன்மை வாய்ந்த மண்களில் வளரும் ஓக், பீச் மற்றும் பைன் மரங்களின் வேர்களுக்கு அருகில் வளரும் பூஞ்சைகள் இந்த உணவை உருவாக்குகின்றன. மண்ணிற்குள் 30 செ.மீ ஆழத்தில் இவைகள் உருவாக்கப்படுகின்றன.

இந்த உணவு மிக விலை உயர்வானதால் வேட்டையாடுபவர்கள் பெண் பன்றிகளையும், பழக்கிய நாய்களையும் வைத்து இந்த உணவு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆண் பன்றிகள் உடலில் சுரக்கும் வேதிப்பொருளை ஒத்த மணத்தை இந்த உணவு பெற்றுள்ளதால் பெண் பன்றிகள் ‘புவியடிப் பூசணத்தை’ எளிதாக கண்டுபிடித்துவிடும். இதனால் பெண்பன்றிகள் இந்த வேட்டைக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் விலை அதிகமாக உள்ளதால் இவற்றை வளர்த்தெடுக்கும் விவசாயம் மேலை நாடுகளில் வளர்ந்து வருகின்றன. குறிப்பிட்ட மரங்களின் விதைகளை பூஞ்சை வித்துக்களில் ஒட்டச்செய்து, அதை காரம் நிறைந்த மண்ணில் விதைக்கின்றனர். இந்த மரம் வளர்ந்து 7 ஆண்டுகளில் முதல் புவியடி பூசணத்தை உருவாக்குகின்றன. தொடர்ந்து இவை 15 வருடம் அல்லது 30 வருடங்கள் வரை அறுவடை செய்யலாம். இத்தனை வருடம் காத்திருந்து பெறப்படுகின்ற இந்த சுவைமிகு, விலையுயர்ந்த உணவுப்பொருள்கள் பல தாது சத்துக்களை உள்ளடக்கியது. இவைகளின் சுவை அதிகமாக இருப்பதாலும், மிக அரிதாக கிடைக்கப்பெறுவதாலும் இவற்றின் விலை சந்தையில் அதிகம். நமக்கு தெரியாத பல உணவுகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டாலும், நாம் வாழும் பகுதிகளின் அருகில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டியதுதான்.

உலகமயமாக்கலால் பல மேற்கத்திய உணவுகளும், உணவு முறைகளும் நம் வீட்டின் அருகில் வந்ததின் விளைவுதான் நோய்கள். அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல நம் அருகில் இருந்த உணவுகளை மறந்து மேலைநாட்டு உணவின் மேல் மோகம் கொண்டதின் விளைவு, நீண்ட வரிசையில் காத்துகிடக்க வேண்டியிருக்கிறது மருத்துவமனைகளில்.

 


ஜூலை 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை