தொடர்புடைய கட்டுரை


பயமுறுத்தும் சில பூச்சி இனங்கள்

மெல்விலா

22nd Sep 2018

A   A   A

நம்மில் பலருக்கும் பூச்சிகளை பார்த்தாலே அருவருப்பாகவும், பயமாகவும் இருப்பது உண்டு. பூச்சிகளில் பல கோடி இனங்கள் உள்ளன. அவற்றுள் பல மனிதர்களுக்கு நேரிடையாக தீங்கு செய்யாதவை. ஆனால் பார்த்த மாத்திரத்தில் அனைவரையும் அச்சம் கொள்ளச் செய்யும் சில பூச்சி இனங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி கீழே பார்ப்போம்.

கோலியாத் சிலந்தி, இதற்கு ’பறவை உண்ணும் கோலியாத் சிலந்தி’ என்ற பெயரும் உண்டு. இந்த சிலந்தியை கண்டுபிடித்தவர் முதன்முதலாக இதை பார்த்தபோது இந்த சிலந்தி ஒரு சிட்டுக்குருவியை சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த சிலந்திகள் வலை பின்னுவதில்லை. இவை பல நேரங்களில் எலிகளை பிடித்து உண்ணும். மேலும் பாம்புகள், வவ்வால்கள், பல்லிகள் போன்றவையும் இவற்றிற்கு மிகவும் பிடித்தவை.

தென் அமெரிக்காவின் மழைக்காடுகளிலும், அதை சார்ந்த இடங்களிலும் இவை காணப்படுகின்றன. இவற்றின் கால்களின் நீளம் சுமார் ஒரு அடிக்கு மேல் வளரக்கூடியது. இவற்றின் உடல் முழுவதும் ப்ரௌன் நிற முடிகளால் சூழப்பட்டிருக்கும். இந்த முடி நம் உடலில் பட்டால் தோலில் அரிப்பு ஏற்படும்.

அடுத்ததாக தோட்டா எறும்பு என்று அழைக்கப்படும் எறும்பு. இது கடித்தால் தேனீ கடியை விட முப்பது மடங்கு அதிக வலியை ஏற்படுத்தும். குறிப்பாக இதன் கடிபட்டவர் துப்பாக்கியால் சுடப்பட்டவர் போன்ற வலியை அனுபவிப்பார். இவை நிகராகுவா மற்றும் பராகுவே மற்றும் ஹாண்டுராஸ் நாடுகளின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் வரையிலான உயரமுடைய இடங்களில் இவை வாழ்கின்றன. இவை 18 முதல் 30 செ.மீ நீளம் வளரக்கூடியவை. இவையே எறும்புகளில் மிகப் பெரியவை.

இனி ஜப்பானிய ராட்சச குழவியைப் பற்றி பார்க்கலாம். இந்த குழவிகள் சுமார் இரண்டு இஞ்ச் நீளத்தையும்விட பெரிதாக இருக்கும். இந்த குளவி கொட்டியதால் சுமார் நாற்பது பேர் ஆண்டுதோறும் மரணமடைந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இவை தேனீக்களின் புழுக்களை உணவாக உட்கொள்கின்றன. ஒரு குழவி ஒரு நிமிடத்தில் 40 தேனீக்களை கொன்றுவிடும் ஆற்றல் கொண்டவை. இவை கொட்ட ஆரம்பித்தால் மரணம் ஏற்படும்வரை திரும்ப திரும்ப கொட்டிக்கொண்டே இருக்கும். குழுவாக வாழும் இவற்றின் ஒரு குழுவில் 700 குழவிகள் வரை இருக்கும்.

இவை அனைத்தையும்விட பயங்கரமானவை கொலைக்கார தேனீக்கள். பூச்சி இனங்களில் ஆதிக்கம் செலுத்தும் இவை ஒருமுறை தங்களிடம் கடி வாங்கியவரை சுமார் ஒரு மைலுக்கும் அதிகமான தூரம் பின்தொடர்ந்து செல்லும் குணமுடையது. ஒருமுறை இவற்றை யாராவது தொந்தரவு செய்துவிட்டால் அடுத்த 24 மணிநேரத்திற்கு விழிப்புடன் தயாராக இருக்கும். அச்சமயத்தில் அவற்றின் எல்கைக்குள் மனிதர்களோ விலங்குகளோ நுளைந்தால் அவ்வளவுதான் அவற்றின் கதையை முடித்துவிடும். இவை மனிதர்களை தாக்கும்போது அவர்களின் முகம் மற்றும் கண்களை குறிவைத்து தாக்கும். இவற்றின் விஷம் அவ்வளவு கொடியது இல்லை என்றாலும் இவை தாக்கி இதுவரை சுமார் ஐந்து லட்சம் பேர் வரை மரணமடைந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவை ஒரு குழுவாக வாழும். ஒரு குழுவில் சுமார் 80,000 தேனீக்கள் இருக்கும்.

டிரைவர் எறும்புகள் உலகிலேயே மிகப்பெரிய காலனியை கொண்டவை. இவற்றின் ஒரு காலனியில் சுமார் இரண்டு கோடி எறும்புகள் வாழ்கின்றன. மிகப்பெரிய யானைகளும் இந்த டிரைவர் எறும்புக் கூட்டத்தின் தாக்குதலுக்கு பயந்து ஒடிவிடுகின்றன. இவற்றின் ஒரு வேட்டையின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு விலங்குகள் இவற்றால் கொல்லப்படுகின்றன. இவை மற்ற விலங்களின் அல்லது பூச்சிகளின் கூடுகளை வேட்டையாடி அவற்றின் உணவுகளை கொள்ளையடிப்பதுடன் அவற்றையும் கொன்றுவிடுகின்றன.

வட அமெரிக்காவில் காணப்படும் கறுப்பு விதவை சிலந்திகள் கொடிய விஷத்தினை உடையவை. இதன் விஷம் பாம்பின் விஷத்தைப்போல் 15 மடங்கு கொடியவை. இவற்றில் பெண் சிலந்திகள் ஆண் சிலந்தியுன் உறவு கொண்டவுடன் அதை கொன்று தின்றுவிடுவதால் விதவை சிலந்திகள் என அழைக்கப்படுகின்றன. பெண் சிலந்தி ஒன்றரை இஞ்ச் பெரிய உடலுடன் கால்களையும் சேர்த்து ஐந்து இஞ்ச் அளவுடையவை. ஆண் சிலந்தி பெண் சிலந்தியின் அளவில் பாதி அளவு உடலையும், நீண்ட கால்களையும் உடையவை. இந்த சிலந்தியில் ஆண் சிலந்திகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல.

 


 மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்