தொடர்புடைய கட்டுரை


ஆச்சா மரம்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

01st Apr 2019

A   A   A

தமிழக கலச்சாரத்தோடும், பண்பாட்டோடும் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு அருமையான தாவரம்தான் இந்த ஆச்சா மரம்.  திருவிழா என்றாலும், துயரமான நிகழ்வு என்றாலும் இந்த மரத்தால் செய்யப்பட்ட நாதஸ்வரம் என்ற இசைக்கருவி இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலை இன்றும் உள்ளது. தொலைக்காட்சி என்றாலும், வானொலி என்றாலும் மங்களகரமான நாதஸ்வரத்தின் இசை இல்லாமல் ஒரு நாளின் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவது இல்லை. 

அற்புதமான ஒலி எழுப்பும் நாதஸ்வரம் என்ற இந்த மகத்தான இசைக்கருவியை செய்யப் பயன்படும் மரம்தான் ஆச்சா மரம். இந்த மரம் தவிர வேறு எதனாலும் இந்தக் கருவிக்கு இத்தனை இனிய ஒலியை கொடுக்க முடியாது. இதன் அறிவியல் பெயர் ஹார்பிக்கியா பினேட் என்பது ஆகும். உறுதியான இது வேலைப்பாடுகள் செய்ய உகந்த மரம் ஆகும்.  அழகிய சிற்பங்களை வடிவமைக்க இந்த மரம் பெரிதும் உதவுகிறது. அனைத்து வகையான மண்வகைகளிலும் வளரக்கூடிய இயல்பு உடையது. இந்தியாவின் பசுமை படர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள், மத்திய இந்தியப் பகுதிகள், தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் இது வளர்கிறது. தமிழ்நாட்டில் காவிரி, பவானி ஆற்றங்கரைப் படுகைகளில் இந்த மரம் செழிப்பாக வளர்கிறது. இமயமலைச் சாரலில் சுமார் 1500 மீட்டர் உயரம் வரையிலான இடங்களில் வளரும் தன்மை உடையது. 

இந்த மரம் வறட்சியையையும், வெய்யிலையும் தாக்குப் பிடிக்க இலைகளை உதிர்த்துவிடுகிறது. புதிய இலைகளும், பூக்களும் மே மாதத்தில் பூக்கத் தொடங்குகிறது. இதன் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்கின்றன. இந்தப் பறவைகளின் எச்சம் வழியாக இந்தத் தாவரம் பல இடங்களில் பரவுகிறது. 

மரங்களை ஒருவர் பிறந்த நட்சத்திரத்தோடு இணைத்துப் போற்றும் பண்பு நம் பாரம்பரியத்தில் ஊறியது ஆகும்.  மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் நம் பண்பாட்டின் ஒரு அங்கம் ஆகும் இந்தப் பழக்கம். அதன்படி பார்த்தால் இந்த மரம் மிருகசேஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கான மரம். தென்னையையும், வாழையையும் கூட அறியாமல் வளரும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இது போன்ற நம் நாட்டுகே உரிய அரியவகை மரங்களை அறிமுகப்படுத்த வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு ஆகும்.

 


ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்