தொடர்புடைய கட்டுரை


பந்தயக் குதிரை

சிதம்பரம் ரவிச்சந்திரன்

06th Jul 2019

A   A   A

மனிதன் நாகரீகத்தில் முன்னேறிய காலம்தொட்டே தன் வேலைகளுக்காகப் பழக்கிய விலங்குகளில் மிகவும் பழமையானதுதான் குதிரை. அந்த காலத்தில் குதிரை வண்டிகள் ஊருக்கு ஊர் பிரபலமாக இருந்துவந்தன. அவைகளே நகரங்களில் போக்குவரத்துக்கு உதவுகிற முக்கிய சாதனமாகவும் இருந்துள்ளன. ஆனால் இதே குதிரைகளின் சிறந்த ஓட்டத்திறனால் அவற்றை ஓடவைத்து போட்டிகளும் நடத்தப்பட்டுவந்தன. ஒரு காலத்தில் குதிரைப் பந்தயம் என்பது மிகவும் புகழ்பெற்ற ஒரு சூதாட்டமாக இருந்தது. சென்னையில் உள்ள கிண்டி குதிரைப் பந்தயங்கள் நடக்கும் ஒரு பேர்போன இடமாக இருந்துவந்துள்ளது.  ரேஸ்கோர்ஸ் மைதானம் என்பது பல ஊர்களிலும் இன்றும் அந்த நினைவில் அழைக்கப்பட்டுவரும் ஒரு விளையாட்டு மைதானமாக இருந்துவருகிறது. ஆனால் தனிப்பட்ட இந்தக் குதிரைகளின் ஓட்டப்பந்தயத் திறனைப் போலவே இன்னொரு போட்டிப்பந்தயமும் குதிரையை வைத்து இன்றும் நடத்தப்பட்டு வருகின்றது. அதுவே குதிரை வண்டிப் பந்தயம் அல்லது ரேக்லா வண்டிப் பந்தயம்.  இவற்றுக்காகப் பராமரித்து வளர்க்கப்படும் குதிரைகளும் பந்தயக்குதிரைகள் என்றே அறியப்படுகின்றன. 

காலை எழுந்தவுடன் சத்தான ஆகாரம், பின் நடைப்பயிற்சி, அரை மணிநேரம் நீரில் நீச்சல், பின்னர் கேரட், பீட்ரூட், கொள்ளு, வெள்ளை முள்ளங்கி ஆகியவை சேர்க்கப்பட்ட காலை உணவு சரியாக 7 மணிக்கு..  வாரம் மூன்று நாள்கள் 15 கி.மீ ஓட்டப்பயிற்சி.. மதியஉணவுக்குப் பின் பாதாம், பிஸ்தா, திராட்சை, மூலிகைகள் கலந்த மருந்து உருண்டை.. மாலையில் தொடரும் பயிற்சி.. இதெல்லாம் வழங்கப்படுவது சேலம் ஆத்தூர் பகுதியில் பல ஆண்டுகாலமாக நடந்துவருகிற குதிரை வண்டிப் பந்தயத்தில் கலந்துகொள்ளுகின்ற பந்தயக் குதிரைகளுக்குத்தான் இத்தனை மதிப்பு மரியாதைகளும் அளிக்கப்படுகின்றன. சிறியவயதில் சாதாரண குதிரையாக வாங்கப்பட்டு பந்தயக்குதிரையாக அறிவியல் முறைப்படி பழக்கி பயிற்சிகள் கொடுத்து பந்தயத்தில் வெற்றி காண்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் இங்குள்ளவர்கள்.  குதிரையை தேர்வு செய்தல், பராமரிப்பு, பயிற்சி, கவனம், ஆர்வம் போன்ற பல்வேறு பண்புகளும் இந்தக் குதிரைகளிடம் ஊட்டி வளர்க்கப்பட்டு பந்தயத்துக்கு அனுப்பப்படுகிறது. 

இந்த போட்டிக்கான வண்டிகள் கனம் இல்லாத லேசான உலோகத்தால் கட்டமைக்கப்படுகின்றன. குதிரையை வண்டியுடன் பிணைக்கும் பெல்ட் மற்றும் தோல் வார் போன்றவை மாட்டுத்தோலால் குதிரையை உறுத்தாதவிதமாகச் செய்யப்படுகின்றன. குதிரையின் வலுவான கால்கள் சிறந்த உறுதியுடையவையாக பயிற்றுவிக்கப்படுகின்றன. சாதாரணமாகவே குதிரையின் உடல் அமைப்பு வேகமாக ஓடுவதற்கேற்றவாறு அமைந்துள்ளதும் கூடுதல் நன்மையாகும். இவற்றின் குளம்புகள் ஓடுவதற்கு இவற்றுக்கு உதவுகின்றன. 

உயரத்தின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. குதிரைகள் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொள்கின்றன. இவற்றுக்கு என்று சிறந்த மருத்துவசிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தனி மருத்துவரும் இதற்காக இருக்கிறார்.  மின் அதிர்ச்சி போன்ற பிரச்சனைகள் திடீரென்று குதிரைக்கு ஏற்படாதவண்ணம் மருத்துவரின் கண்காணிப்பு அமைக்கப்படுகிறது. வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையுடன் காற்றைக் கிழித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இந்தக் குதிரைகள் பறந்து பாய்ந்து ஓடும்போது பார்ப்பவரை அந்தக் காட்சி மெய்சிலிர்க்கவைக்கும். 

வாகனங்களின் வரவால் குதிரை வண்டிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துபோய்விட்டது என்றே சொல்லலாம்.  திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே தற்போது குதிரைகள் ஓரளவுக்குப் பயன்பாட்டில் இருக்கின்றன.  வடஇந்தியாவில் பரவலாக இன்றும் குதிரைகள் வண்டிகளை இழுத்துச்செல்கின்றன.  கொடைக்கானல், சிறுமலை, பசுமைக்காடு, அரளிக்காடு, பன்றிமலை, ஆடலூர், ஆச்சலூர் போன்ற மலை கிராமங்களில், போக்குவரத்து மற்றும் சாலைவசதிகள் இன்றும் முழுமையாக இல்லாததால் அந்த இடங்களில் குதிரைகள்தான் இன்றும் முக்கியப் போக்குவரத்து வாகனமாக உள்ளன. இவையே சுமையை சுமக்கும் வேலையையும் செய்கின்றன. மட்டக்குதிரை மற்றும் கோவேறுகளும் இன்று அழிந்துகொண்டு வருகின்றன.  அங்குள்ள விவசாயிகள் பயிரிடும் வாழை, காப்பி, பலா, முந்திரி, எலுமிச்சை, பலவகையான மலர்கள், ஆகியவற்றை விளையும் இடத்தில் இருந்து சந்தைகளுக்கு குதிரைகளே கொண்டு செல்கின்றன. முற்காலத்தில் அப்பகுதிகளை ஆண்டுவந்த பாண்டிய மன்னர்கள் குதிரை வண்டிகளிலேயே பயணம் செய்துள்ளனர்.  குதிரைகளும் இவர்களின் பயணங்களுக்காகப் பயன்பட்டிருக்கின்றன.  சிறுமலை கரும்புக்கோயில் பகுதியில் பாண்டிய மன்னர் குதிரையில் பயணம் செய்து அங்கு விஜயம் செய்ததற்கான வரலாற்று சான்றாக இன்றும் இருக்கின்றன. 

சிறுமலையில் உள்ள 400 குதிரைகள் விரும்பிச் சாப்பிடும் பழங்கள், இலைதழைகள்..  ஆனால் இவை வளர்ப்புக் குதிரைகள்..  வளர்ப்பவர்கள் இவற்றைப் பராமரிக்கமுடியாமல், இவற்றை அவிழ்த்துவிட்டு விடுகிறார்கள்.  அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அவை சாலைத்தெருக்களுக்குச் சென்று அங்குள்ள குப்பைகளைக் கிளறி கழிவுகளைத் தின்றுவிடுகின்றன.  இதன் மூலம் நோய்க்கிருமிகள், புழுக்கள் போன்றவை குதிரைகளின் உடலில் நுழைந்து உடல் முழுவதும் புண்களை ஏற்படுத்திவிடுகின்றன.  இவை சரியாக கவனிக்கப்படாததால் சில நாள்களில் இந்தக் குதிரைகள் சோகமாக இறந்துவிடுகின்றன.  வயிற்றுவலி, டெட்டானஸ் போன்ற நோய்களே இவற்றுக்கு அதிகமாக ஏற்படுகின்றது.  சமூகத்தொண்டு நிறுவனங்கள் ஓரளவுக்கு இப்போது முகாம்கள் நடத்தி தடுப்பூசிகள் போட்டு இவற்றின் எண்ணிக்கைய மேலும் குறையாத மாதிரி அழிவின் விளிம்பில் இருந்து மீட்டுவருகின்றன. 

உலகம் முழுவதிலும் குதிரைப் பந்தயங்கள் நடக்கின்றன.  வெற்றிப் பெற்றால் இந்த குதிரைகளுக்குக் கோடிக்கணக்கில் பணம் பரிசாகக் கிடைக்கிறது. துருக்கிய குதிரை உடல் வலுவானவை.. அரேபியக்குதிரை உடல் நேர்த்தியான வடிவமைப்புப் பெற்றது. இங்கிலாந்து குதிரை வேகமாக ஓடக்கூடியது. இந்த மூன்று இன குதிரைகளின் மரபணுக்களை சிக்கலான முறையில் கலப்பு செய்து தருப்ரெட் என்ற கலப்பின குதிரையை உருவாக்குகிறார்கள்.  மரபியல்ரீதியாக உருவாக்கப்படும் இந்தக் கலப்பினக் குதிரைதான் இன்று, உலக குதிரைப் பந்தய மைதானங்களில் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆண்டின் எந்த மாதத்தில் இந்த குதிரைகள் பிறந்தாலும் ஜனவரி முதல்தேதி பிறந்ததாகவே இவற்றுக்கு பிறப்புச் சான்று எழுதப்படுகிறது. இரண்டு ஜனவரிகள் கடந்த பின்னர் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஏழு ஜனவரிகளுக்குப் பிறகு விருப்ப ஓய்வு கொடுக்கப்படுகிறது.  பொதுவாக இந்தக் குதிரைகள் ஐந்து ஆண்டுகள் பந்தயத்தில் ஓடும். சிறப்பான சாதனைகள் செய்தால் அந்தக் குதிரைக்கு ராஜமரியாதை அளிக்கப்படும்.  பத்தாண்டுகள் ஓடியபின் இவற்றுக்கு அரசபோகமான வாழ்வு வழங்கப்படுகிறது. காயம், நோய் ஏதாவது ஏற்பட்டு உயிருக்குப் போராடினால், அனுமதி பெற்று கருணைக்கொலையும் மனிதனால் நடத்தப்படுவதும் உண்டு. 

இருசக்கரங்களும், நான்கு சக்கரங்களுமே அதிகமாக நம் ஊர் சாலைகளை இயந்திரமாக்கிவிட்ட நிலையில் அவற்றோடு நாமும் இயந்திரங்களாகவே அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.. இந்த நிலையில் ஒரு காலத்தில் நம்மோடு இருந்து, நம்மில் ஒன்றாக வாழ்ந்து, நமக்காகவே வாழ்வை அர்ப்பணித்த இந்த உயிரினங்களை அழிந்துவிடாமல் பாதுகாப்பது அவசியமானதாகும். இதற்காக பாடுபடும் நிறுவனங்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம்.. அதன் மூலமாக இந்த உயிரினங்களைக் காப்போம்.

 

 


டிசம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்