அமைதிதரும் ஒரு மருத்துவ சிகிட்சை..

சிதம்பரம் ரவிச்சந்திரன்

23rd Jul 2018

A   A   A

நோய்நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் கிடைப்பதற்கரிய ஒரு பெரும் செல்வமாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான மனது ஆரோக்கியமான உடலில் நல்ல விதத்தில் இயங்கும் போதுதான் நம் வாழ்வு சிறப்படைகிறது. ஆனால், பலருக்கும் நோய்களோடு இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக தீர்க்கமுடியாத அல்லது சிகிட்சை எதுவும் பலன் அளிக்காத நோயாளிகளும் நம் இடையில் இருக்கிறார்கள். மருத்துவ உலகமும் கை விட்டுவிட்ட நிலையில் இவர்களின் வாழ்வே ஒரு நரகமாக பூமியில் மாறிவிடுகிறது. காசு பணம் என்று எவ்வளவு இருந்தாலும், இவர்களை கவனிக்க அவர்களின் இரத்த சொந்தங்களே முன்வருவது இல்லை. இப்படிப்பட்ட ஒரு துயரமான நிலையில் முக்கியத்துவம் பெறுவதுதான் அமைதிதரும் மருத்துவ சிகிட்சையாகிய பாலியேட்டிவ் கேர் எனப்படும் சிகிட்சை என்ற மருத்துவ சேவையின் புதிய பிரிவு. 

நலமாக மாட்டோம் என்று நன்கு தெரிந்தாலும் மரணம் வரும்வரை வாழும் நாள்களை துயரம் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் கழிப்பதற்கு உதவக்கூடிய ஒரு மகத்தான மனிதசேவைதான் இந்த பாலியேட்டிவ் கேர் என்பது.  இந்தியாவில் இந்த சேவை அதிக அளவில் கேரள மாநிலத்தில்தான் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இந்த சிகிட்சை முறை உடல்நலக் கேடுகளாலும், இறப்பை நேருக்குநேர் காணப்போகும் வேதனையான நிலையில் இருப்பவர்களுக்கும்தான் அளிக்கப்பட்டு வருகிறது. இது பலருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், புதிய விளக்கத்தின்படி, நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பாலியேட்டிவ் கேர் வழங்கப்படுகிறது.

நோயின் ஆரம்ப நிலையில் இருந்து நோயினால் ஏற்படும் வேதனையையும், கஷ்டங்களையும் முடிந்தளவுக்கு குறைப்பதற்கும், நோயின் தீவிரத்தால் உண்டாகும் துன்பத்தை ஒரு அளவுக்கு சமாளிப்பதற்கும் ஒருவருக்கு வழங்கப்படும் அக்கறையுடன் கூடிய பராமரிப்பும், கவனிப்பும்தான் பாலியேட்டிவ் கேர் எனப்படுகிறது.  2008ல் இந்தியாவில் முதல் மாநிலமாக கேரள மாநில அரசாங்கம் பாலியேட்டிவ் கேர் எனப்படும் இந்த அமைதிதரும் தீர்க்கமுடியாத நோய்களால் அவதிப்படுபவர்களுக்கான சட்டதிட்டங்களை இயற்றி வெளியிட்டது. உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த இரண்டு இத்தகைய தீராத நோய்களால் வாடுபவர்களுக்கு வழங்கப்படும் கரிசனம் மிக்க சேவைக்கான இரண்டு மையங்கள் மட்டுமே இந்தியாவில் இப்போது செயல்பட்டு வருகிறது. இவை இரண்டுமே இப்போது கேரளாவில்தான் இயங்கி வருகிறது. இவற்றில் ஒன்று கோழிக்கோடு நகரில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலியேட்டிவ் மெடிசின் (Institute of palliative medicine) என்ற பெயரில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. அடுத்தது திருவனந்தபுரத்தில் இயங்கி வருகிறது.

பாலியம் இந்தியா என்ற பெயரில் உள்ள ஒரு பொதுநல அறக்கட்டளை அமைப்பு (charitable trust) தான் இந்த பாலியேட்டிவ் இந்தியா என்கிற நிறுவனம்.  பாலியம் இந்தியா திருவனந்தபுரத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்திருக்கும் பயிற்சிகளை இந்த நிறுவனம் நடத்திவருகிறது. இதை வாசிப்பவர்கள் யாருக்காவது பாலியேட்டிவ் கேரை பற்றியோ, இங்கு நடத்தப்பட்டு வரும் பயிற்சிகளைப் பற்றியோ கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், பாலியம் இந்தியாவுடைய தகவல்மையம் 24 மணிநேரமும் தகவல் தர காத்துக்கொண்டிருக்கிறது.  தொலைபேசி எண்- 9746745497.

பாலியேட்டிவ் கேர் எனப்படும் இந்த தன்னார்வத் தொண்டின் மூலம் நோயாளிக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைக்க நம்மால் முடியாது என்றாலும் எதார்த்தத்தோடு பொருந்தி வாழ அவர்களுக்கு உதவ நம்மால் நிச்சயமாக முடியும்.  தன்னையும் கவனித்துக் கொள்வதற்கு என்று சில பேர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்ற நினைப்பே நோயால் துன்பப்படுபவருக்கு பெரும் ஆறுதலாக இருக்கும். 

சிகிட்சை இல்லாத நோயின் கொடுமைகளால் கஷ்டப்படுபவர்கள், பல நாள்களுக்கு பராமரிப்பும், கவனிப்பும், அக்கறையான சேவையும் அவசியமானவர்கள், வயது முதிர்ந்தவர்கள் போன்றவர்கள் எல்லோருக்கும் இத்தகைய சேவை அவசியமாகிறது.  சரியான நேரத்தில் சரியான விதத்தில் தகுந்த இத்தகைய சிகிச்சையை அளிக்க நாம் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். இத்தகைய மகத்தான ஒரு மனித சேவையில் சிறப்பாக செயலாற்ற, அரும்பெரும் மனிதாபிமானம் மிக்க இந்த சேவையில் நாம் ஒரு பாகமாக முயற்சி செய்வோமாக. இதை வலியுறுத்துவதற்காகத் தான் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை உலக பாலியேட்டிவ் கேர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த பூமியில் வாழ்வது எவ்வளவு காலம் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இது போன்ற மகத்தான மனித சேவைகளில் நம்மை ஈடுப்படுத்திக் கொள்வதன் மூலம் நாமும் இந்த உலகத்தில் மனிதராகப் பிறந்தோம்..  மனிதராக வாழ்ந்தோம்.. மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்தோம் என்ற மனநிறைவுடன் இந்த உலகை விட்டு விடைபெறுவோம்..

 


ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.