தொடர்புடைய கட்டுரை


கவசம் அணிந்த விலங்கு

சிதம்பரம் ரவிச்சந்திரன்

10th May 2019

A   A   A

இயற்கையின் படைப்பில் நம்மை வியக்கவைக்கும் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் இருக்கின்றன. அதிமேதாவி என்று நம்மை நாமே பாராட்டிக் கொண்டாலும், இயற்கையின் முன் நாம் சிறுபிள்ளைகளாகவே இருந்து வருகிறோம்.. அன்றாடம் நாம் காணும் நாய், பூனை, காகம், எறும்பு போன்ற உயிரினங்களே அதிசயிக்கத்தக்க பல பண்புகளைப் பெற்றிருக்கின்றன. நாம் அறியாத உயிரினங்கள் இந்த பூமியில் எத்தனையோ உள்ளன. அப்படிப்பட்ட உயிரினங்களில் ஒன்றுதான் இந்த ‘கவசம் அணிந்த விலங்கு. போர்க் காலங்களில் வீரர்கள் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள கனத்த உலோகத்தால் ஆன உடல் கவசங்களை அணிந்துகொண்டு போரிட்டதாக நாம் படித்திருக்கிறோம்.  ஆனால் இந்த விலங்கின் உடலே கவசம் அணிந்ததுபோல காணப்படுவதுதான் அதிசயம். 

‘கவசம் அணிந்த இந்த விலங்கின் பெயர் தான் ஆர்மடில்லோ (ARMADILLO). இது தமிழில் நலங்கு என்று அறியப்படுகிறது. தென்அமெரிக்காவில் குடியேறிய ஸ்பெயின் நாட்டுக்காரர்கள்தான் இதை முதல்முதலாக பார்த்தவர்கள். கவசம் போர்த்தியது போல இருந்த இதன் உடம்பைப் பார்த்து வியப்படைந்த அவர்கள் இதற்கு ஆர்மடில்லோ என பெயரிட்டனர். ஆர்மடில்லோ என்னும் சொல்லுக்கு கவசம் அணிந்த விலங்கு என்பது பொருள்.  

    எலியின் முகம் போல நீளமான முகம், பெரிய அளவு மிளகு போன்ற கண்கள், கொய்யா இலை போல காதுகள், பெருச்சாளியின் தடிமனான வால் போன்ற வால், குள்ள மனிதனின் கால்கள் போன்ற குட்டையான கால்கள், அவற்றின் முனையில் கோழியின் கூர்மையான, வளைந்த கால்கள் போன்ற வளைந்த நகங்கள் கொண்ட ஒரு வித்தியாசமான உடலமைப்பைப் பெற்றிருக்கும் வினோதமான விலங்குதான் ஆர்மடில்லோ.. 

மனிதனுடைய வாயில் 32 பற்கள் இருக்கின்றன. ஆனால், இந்த விலங்கின் வாயில் 100 பற்கள் இருக்கின்றன. இவ்வளவு பற்கள் இருந்தும் அவை மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு நோயாளியைப் போல பலமற்றவையாக இருக்கின்றன. பற்கள் பலம் இல்லாததால் ஆர்மடில்லோவும் கடினமான உணவை உண்பது இல்லை. மென்மையான தவளை, சிறிய பாம்புகள், புழு, பூச்சி ஆகியவற்றையே பிடித்து உண்ணும். தன் உடலின் மேற்புறம் கண்ணைக் கவரும் சிறிய சிறிய தகடுகளால் பொருத்தப்பட்டது போன்ற கவசம் காணப்படுகிறது. இந்த பகுதி எலும்புகளால் ஆக்கப்பட்டுள்ளன. வலுவானவை. சில ஆர்மடில்லோக்களின் முதுகுப் பகுதியில், கவர்ச்சிகரமான மூன்று பட்டைகள் காணப்படுகின்றன.  வேறு சில ஆர்மடில்லோக்களில் இந்த பட்டைகள் 6 முதல் 7 வரை கூட காணப்படுகின்றன.  அபூர்வமாக சில 9 பட்டைகளைப் பெற்றிருக்கின்றன. 

இந்த பட்டைகளின் அடிப்படையிலேயே இந்த கவசம் போர்த்திக்கொண்ட விலங்குகள் மூன்று பட்டை ஆர்மடில்லோ, ஆறு பட்டை ஆர்மடில்லோ, ஒன்பது பட்டை ஆர்மடில்லோ என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆர்மடில்லோவில் 20 வகைகள் உள்ளதாக உயிரியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். எலியைப் போல இவை உணவு தேடும் பழக்கத்தைப் பெற்றவை. காலில் உள்ள கூர்மையான நகங்களால் மண்னைத் தோண்டி கிடைக்கும் கிழங்குகளை உண்ணும். நிலத்தை ஆழமாக தோண்டி அங்கே இருக்கும் கறையான்களையும் சாப்பிடும். புற்றை தோண்டும்போது அதன் உள்ளேயிருந்து வெளியே ஓடிவரும் கறையான்கள் மீது பசைத்தன்மை கொண்ட தன் நாக்கை வைத்து அதில் ஒட்டிக்கொள்ளும் கறையான்களை உணவாக்கிவிடும். 

சாதாரணமாக ஆர்மடில்லோ பூனைக்குட்டியைப் போல இருக்கும்.  பார்ப்பதற்கு பூனைக்குட்டியைப் போல இருந்தாலும் இதன் தலையும், உடலும் சேர்ந்த பகுதி 41 செ.மீ நீளம் இருக்கும்.  இதன் வால் மட்டும் இதில் 36 செ.மீ நீளமுடையதாக இருக்கும்.  இதன் எடை 8 கிலோ வரை இருக்கும். பெரியவகை ஆர்மடில்லோக்கள் 150 செ.மீ நீளம் உடையதாகக் காணப்படுகின்றன. இவற்றின் எடை 60 கிலோ ஆகும்.  பழங்காலத்தில் வாழ்ந்த ஆர்மடில்லோ புதைபடிவம் கிடைத்துள்ளது.  பார்ப்பதற்கு அந்தப் புதைப்படிவம் அப்போது இருந்த ஆர்மடில்லோக்கள் மாடு போன்ற உடலமைப்பை பெற்றிருந்ததை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.  இந்த புதைப்படிவத்தின் உயரம் மட்டும் 1.5 மீ ஆகும்.  இதன் முதுகில் 36 பட்டைகள் காணப்பட்டன. 

முயல் ஒரு சாது விலங்கு. அதுபோலதான் ஆர்மடில்லோவும் ஒரு சாதுவான பிராணி.  எதிரியைக் கண்டால் இது ஓடி மறைந்துகொள்ளவே முயலும். அப்போது இதைப் பார்ப்பதற்கு ஒரு ஓட்டப்பந்தய வீரனைப் போல நமக்குத் தோன்றும். ஓடி எதிரியிடம் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்று இது உணர்ந்தால், ஆமையைப் போல தன் தலையை தன் கடினமான ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு விடும். பிறகு மரவட்டையைப் போல உடலை சுருட்டிக்கொண்டு எதுவுமே தெரியாதது போல பாசாங்கு செய்யும். ஒரு சில சமயங்களில் மண்ணை வேகவேகமாகத் தோண்டி துளை ஒன்றை உருவாக்கி அதற்குள் ஒளிந்துகொள்ளும். 

இயற்கை தான் படைத்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் இயற்கையான எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக பல்வேறு சிறப்பான அமைப்புகளை தந்துள்ளது. சிங்கத்திற்கும், புலிக்கும் கூர்மையான நகங்களையும், பற்களையும் தந்துள்ளது. காட்டெருமைக்கும், மான்களுக்கும் கொம்பைக் கொடுத்துள்ளது.  முள்ளம்பன்றிக்கு கூர்மையான முள்களை அளித்துள்ளது.  பாம்புக்கு நஞ்சையும், தேனீக்களுக்கும், தேளுக்கும் நஞ்சைப் பாய்ச்சும் கொடுக்குகளையும் தந்துள்ளது. அதுபோல இந்த ஆர்மடில்லோவுக்கு வலிமையான கவசத்தைத் தந்துள்ளது இயற்கை. 

    இது மற்றொரு சிறப்பையும் பெற்றுள்ளது. நீருக்குள் மூழ்கிய மனிதனால் 2 நிமிடங்களுக்கு மேல் மூச்சைப் பிடித்துக்கொண்டு இருக்கமுடியாது. ஆனால் இந்த அதிசய விலங்கால் 6 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருக்கமுடியும்.  இது உள்ளே இழுத்துக்கொள்ளும் காற்று அதன் வயிறு, குடல் ஆகியவற்றிலும் சென்று தங்கிவிடும். அதனால் இது நீரில் மிதக்கும். நன்றாக நீந்தவும் செய்யும் இந்த அபூர்வமான விலங்கின் தசை மிகவும் சுவையாக இருக்கும்..

நம்மைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் இதுபோன்ற அதிசயமான விலங்குகளைப் பற்றியும் அற்புதமான தாவரங்களைப் பற்றியும் நாம் அறிந்துகொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இது பற்றி எடுத்துச்சொல்லி சூழலைக் காப்பதற்கு உரிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துவோம்.

 


2018 அக்டோபர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்