தொடர்புடைய கட்டுரை


வாயேஜர் பயணிகள்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

20th Jun 2018

A   A   A

தூக்கம் வந்தால் நாம் தூங்குவோம். உடம்பு சரியில்லை என்றால் படுத்துக் கொள்வோம். களைப்பாக இருந்தால் ஓய்வு எடுப்போம். ஆனால் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒருவர் உழைத்துக்கொண்டே இருக்கிறார். யார் அவர் என்கிறீர்களா? அவர் இங்கு இல்லை. பூமிக்கு வெளியே... எங்கு என்று கேட்கிறீர்களா? பூமிக்கு வெளியே சூரிய மண்டலத்தின் எல்லையை தொண்டுக்கொண்டு இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் தாண்டிவிடுவார் அவர். அமெரிக்க நாசா நிறுவனம் விண்ணில் ஒரே நேரத்தில் மூன்று கிரகங்களை ஆராய்வதற்காக அனுப்பிவைத்த விண்கலம் வாயேஜர்தான் அவர். அண்டவெளியில் சுற்றிவரும் கோடிக்கணக்கான நட்சத்திர கும்பல்களுக்கு இடையே எங்காவது மனிதனைப் போல அல்லது மனிதனைவிட புத்திசாலியான ஒரு உயிரினம் இருக்குமா என்ற கேள்வி வெகுநாட்களாக மனிதன் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அது இன்றும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதன் விளைவுதான் இந்த வாயேஜரில் பயணம் சென்றுள்ள பயணிகள்..

ஆம், வாயேஜர் பூமிக்கு வெளியே இன்னும் பல கோடி ஒளி ஆண்டுகள் வரை பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனால் வாயேஜர் சூரிய மண்டலத்தையும் தாண்டி செல்லும் வண்ணம் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. அது வியாழன், சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களை ஆய்வு செய்து செய்திகளை பூமிக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்போது சூரிய மண்டலத்தின் எல்லையை தொட்டுக்கொண்டிருக்கும் அது இன்னும் கொஞ்ச நாட்களில் அண்டவெளியில் பிரவேசம் செய்யப்போகிறது. ஒருவேளை வேறெங்கும் இருக்கிறார்களா என்று தேடிச்செல்லும் பயணத்தில் ஈடுபடப்போகிறது இந்த வாயேஜர் விண்கலம். அப்படி ஒருவேளை உயிரினங்கள் எவரும் இருந்தால் மனிதனை பற்றி அவர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்த விண்கலத்தில் ஒரு தங்கத்தட்டில் பல விஷயங்கள் பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பழையகாலத்தில் வந்த கிராமபோன் ரெகார்டை போன்ற வடிவம் உடைய அந்த தட்டில் உள்ள விவரங்கள் இவை தான்.

உலகின் பிரதான மொழிகளில் ஐம்பத்தெட்டு நாடுகளில் இருந்து மக்கள் பேசும் மொழிகளில் மனிதன் தன்னை பற்றி சுருக்கமாக ஒரு அறிமுகம் செய்துகொள்ளும் விதத்தில் அது அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மராட்டி, ராஜஸ்தானி, வங்காளி, குஜராத்தி ஆகிய மொழிகளில் பேசிய உரைகள் அதில் உள்ளன. இந்திய மொழிகள் அனைத்திலும் பேசப்படும் முதல் சொல் ‘நமஸ்தே’ என்பதுதான்.

வேற்றுமனிதர்கள் போன்ற உயிரினங்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் மழை, இடி, காற்றின் ஓசை, நீரின் சலசலப்பு போன்ற ஒலிகளும், அதோடு நாய், யானை, தவளை போன்ற விலங்குகளின் ஒலிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் வாழ்த்து செய்தியும் அதில் உள்ளது. மனிதனின் உடலுறுப்புகள், அவை இயங்கும் விதம் போன்றவை பற்றிய விவரங்களும் உள்ளன.

பல நாடுகளின் இசையும் அந்த கிராமபோன் ரெகார்டில் உள்ளது. இந்தியாவிலிருந்து ஹிந்துஸ்தானி இசையில் கேதார் கேல்ட்கர் என்ற ஹிந்துஸ்தானி பாடகர் பைரவி ராகத்தில் பாடிய பாடலும் அதில் இடம்பெற்றுள்ளது.

ஜன நெரிசல் மிக்க பாகிஸ்தான் நாட்டின் ஒரு நகரின் காட்சியும் படமாக உள்ளது. அதில் ஒரு வீதியின் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஓடும் வாகனங்கள், தெருவோரம் அமர்ந்திருக்கும் நாய் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல இந்தியாவின் ஒரு நெரிசலான வீதியின் காட்சியும் உள்ளது.

டிரெயின், பஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் எழுப்பும் ஒலிகளும் பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளது. பல புகழ்பெற்ற இடங்களின் காட்சிகளும் உள்ளது. இந்தியாவில் இருந்து தாஜ்மஹாலின் படம் உள்ளது. ஏனென்றால் அது எந்த அரசியல் சார்புடையதோ, தனிநபர் துதி பாடுவதோ இல்லாமல் தனது பிரியமான மனைவிக்காக எழுப்பப்பட்ட நினைவு ஆலயம் என்பதால்.

சூரிய மண்டலத்தைவிட்டு இன்னும் கோடானுகோடி ஆண்டுகள் சுறுசுறுப்பாக செயல்படப்போகும் இந்த வாயேஜர் விண்கலம் நமக்கு இன்னும் நாம் முன்பின் அறிந்திராத பல நட்சத்திரக் கூட்டங்களை பற்றியும், கோள்களையும் சுவையான, மனிதகுலத்திற்கு பயன்படப்போகும் அரிய செய்திகளை அனுப்பப்போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதன் நீண்ட, இல்லை இல்லை மிக மிக நீண்ட பயணத்தில் ஒருவேளை மனிதனைப்போல அல்லது மனிதனைவிட இன்னும் அதிபுத்திசாலியான உயிரினத்தை கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்கலாம்.

அவ்வாறு ஒரு அதிசயம் நிகழ்ந்துவிட்டால் அது மனிதனின் பூமி வாழ்வில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. வாயேஜர் தன்னுடைய பயணத்தில் எல்லா வெற்றிகளையும் பெற நாம் வாழ்த்துவோம். ஆனால், நமக்கு இருக்கும் கவலை இதுதான். அப்படி ஒருநாள் வேற்றுலக அதிபுத்திசாலி உயிரினம் பூமிக்கு வாயேஜர் எடுத்துச்செல்லும் தகவல் தட்டின் மூலம் வழி அறிந்து வந்துசேரும் போது, ‘அடடா.. நாம் வருவதற்கு முன் மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொண்டு விட்டானே... நம்மால் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லையே’ என்று வருத்தப்பட்டுவிடக் கூடாது. அதுவரை மனிதன் தன் தாய்வீட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்... செய்வோமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


மார்ச் 2016 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.