தொடர்புடைய கட்டுரை


உலகை காக்க வரும் மெழுகு புழுக்கள்

Dr. S. பிரகாஷ்

22nd Sep 2018

A   A   A

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய உச்சநீதிமன்ற அமர்வு ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை ஒரு வழக்கில் குறிப்பிட்டது. “இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் டைம் பாமின் (Plastic time bomb) மேல் அமர்ந்திருக்கிறோம்” என்று தெரிவித்தது. இது ஒன்றும் ஆச்சர்யமான தகவலாக எண்ண வேண்டாம். ஏனென்றால் இதைவிட மோசமான வார்த்தையை பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த அளவிற்கு இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடுகளும் அவற்றின் விளைவுகளையும் சந்தித்து வருகிறோம். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உலகளவில் உருவாக்கப்படுகின்றன. இவற்றுள் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலினுள் சென்றடைகின்றன.

2015 ஆம் ஆண்டு தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவிலுள்ள 60 பெரிய நகரங்கள் ஒரு நாளுக்கு 15,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. இவை மறுசுழற்சி செய்யப்படாமல் குப்பை மேடுகளாகவும், நீர்நிலைகளில் கொட்டப்படுவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் குறிப்பாக டெல்லியில் ஒரு நாளுக்கு 689.5 டன் பிளாஸ்டிக்குகள் உருவாகின்றன. இதை தொடர்ந்து சென்னை 429.4 டன், கொல்கத்தா 425.7 டன், மும்பை 408.3 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வது 50 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் 50 சதவிகிதத்திற்கும் மேல் மறுசுழற்சி செய்யப்படாமல் பொது இடங்களில் கொட்டப்படுகின்றன. இவற்றின் தீமைகள் நாம் அறிந்ததே, இருந்தும் இவற்றை தடைசெய்வதற்கோ அல்லது மறுசுழற்சி செய்வது குறித்தோ இந்திய அரசிற்கும், பொதுமக்களுக்கும் தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படவில்லை. உச்ச நீதிமன்றம் விமர்சனங்கள் எழுப்பியும் பயன் ஏதுமில்லை. இத்தகைய சீர்கேடுகளில் இருந்து இந்த உலகையும், மனிதர்களையும் காப்பாற்ற போவது யார்? பல நாடுகள், பல ஆராய்ச்சிகள், பல விஞ்ஞானிகள் என முயற்சிகள் எடுத்தும் ஏனோ பலன் பூஜ்ஜியம் தான்.

இந்த உலகைப்படைத்த கடவுளுக்கு எல்லாம் தெரியும். இத்தனை நேர்த்தியாக படைக்கப்பட்ட இந்த அழகிய பூமிபந்தை இந்த மனிதர்களின் அறிவால் அழித்துவிட முடியுமா என்றால் முடியாது தான். எல்லாவற்றையும் அறிந்த கடவுளுக்கு இந்த பிளாஸ்டிக் பிரச்சனை தெரியாதா என்ன? உலகே இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சிதைத்தழிக்க விடைதேடி கொண்டிருந்த வேளையில் ஸ்பென் நாட்டை சேர்ந்த ஒரு பெண் ஆராய்ச்சியாளர் “Current Biology” என்ற ஆராய்ச்சி புத்தகத்தில் (Journal) வெளியிட்ட தகவல் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிளாஸ்டிக்கை அழிக்க இத்தகைய எளிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எல்லாரிடமும் ஏற்பட்டது. மலைப்போல் வந்த பிரச்சனை பனிபோல் கரைந்தது என்று சொல்வது போன்று ஓர் எளிய வழிமுறை இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாகும் என நம்பப்படுகிறது. உலகின் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றை தேடி செல்லும்போது மற்றொன்றிற்கான விடை கிடைக்கும். அலெக்ஸாண்டர் பிளம்மிங் முதல் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் விஞ்ஞானி “ஃபெடெரிக்கா பெர்டோச்சினி” (Dr. Federica Bertocchini) வரை இது நிருபணமானது.

 ஆய்வு கூடத்தில் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்றிருக்கும் ஃபெடெரிக்காவிற்கு மாலை வீட்டிற்கு சென்று மன அமைதிக்காக தேனீ வளர்க்கும் பழக்கம் இருந்தது. இவர் வளர்க்கும் தேனி கூடுகளில் உள்ள மெழுகை உண்பதற்காக மெழுகு புழுக்கள் வருவது உண்டு. இந்த புழுக்கள் இறந்த தேனீக்களின் தோலையும், மகரந்தங்களையும், தேன் கூடுகளையும் கூட விட்டு வைப்பதில்லை. இந்த புழுக்கள் தேனி வளர்ப்பில் பெரிய தொல்லைகளை கொடுக்கும். இந்த மெழுகு புழுக்கள் பூச்சிகளாக (moth) பறந்து செல்லும். மூன்று வகையான பூச்சிகள் உலகில் காணப்படுகின்றன. லெஸ்ஸர் மெழுகு பூச்சி (lesser wax moth – Achroia grisella), கிரேட்டர் மெழுகு பூச்சி (Greater wax moth – Galleria mellonella), இந்தியன் மீல் பூச்சி (Indian meal moth – Plodia interpunctella). இந்த பூச்சிகளின் வளர்ச்சியின் ஒரு நிலைதான் ‘புழுப்பருவம்’ (Larvae). இந்த புழுப்பருவத்தில் தான் இவை ’மெழுகு புழுக்கள்’ என்றழைக்கப்படுகின்றன. இவைதான் தேனி வளர்ப்பு சமயத்தில் பெரிய தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

ஒரு நாள் மாலை வேளையில் ஸ்பெயின் விஞ்ஞானி தன் தேனி வளர்ப்பு தோட்டத்தில் இந்த மஞ்சள் புழுக்களை கண்டறிந்தார். இவற்றை ஒவ்வொன்றாக பொறுக்கி ஒரு பிளாஸ்டிக் பையிலிட்டு வெளிவராதபடி மூடி அடுத்தநாள் ஆய்வு கூடத்தில் கொண்டு சென்று ஆய்வு செய்யலாம் என்று வீட்டில் வைத்திருந்தார். அடுத்தநாள் காலையில் விஞ்ஞானிக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த புழுக்கள் அதில் ஓட்டை இட்டு வெளியே வந்து வீடு முழுவதும் பரவி கிடந்தது. மீண்டும் புழுக்களை பொறுக்கி எடுத்து ஆய்வறைக்கு கொண்டுசென்று ஆய்வுகளை மேற்கொண்டார். முதல் நிலையில் இந்த புழுக்கள் பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் திறனை கொண்டிருப்பதை கண்டறிந்தார். பின், தான் மேற்கொண்டிருந்த முந்தைய ஆய்வுகளை எல்லாம் மூடி வைத்துவிட்டு, இந்த புழுக்களின் மேல் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

100 புழுக்களை பிளாஸ்டிக் கேரி பேக்கில் இட்டு வைத்தார். ஒரு மணி நேரத்தில் அந்த பையில் 22 ஓட்டைகளை இட்டு எல்லா புழுக்களும் வெளியேறிவிட்டது. ஆராய்ச்சியை தொடர்ந்த விஞ்ஞானிக்கு மேலும் பல தகவல்கள் கிடைத்தன. ஒரே இரவில் 100 புழுக்கள் 92 மில்லிகிராம் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் சக்தி இருந்தது. 100 புழுக்கள் ஒரு மாதத்தில் 5.5 கிராம் பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் சக்தியை பெற்றிருந்தது. மேலும் வெவ்வேறு வகையான பிளாஸ்டிக்குகள் இந்த புழுக்களுக்கு விருந்தாக படைக்கப்பட்டது. பாலிவினைல் குளோரைடு – ஷாம்புபாட்டில் தயாரிக்கும் பிளாஸ்டிக், பாலிஸ்டீரின் – முட்டை வைக்கும் பிளாஸ்டிக், பாலிபுரொப்பலின் – பால்பொருள்கள் வைக்கும் பிளாஸ்டிக் பாகங்கள் என வகை வகையாக விருந்து படைக்கப்பட்டது. அத்தனையையும் இந்த புழுக்கள் வயிறுமுட்ட சாப்பிட்டது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது.

மேலும் இந்த புழுக்களை ஆராய்ந்த விஞ்ஞானிக்கு பல தகவல்கள் கிடைத்தது. புழுக்கள் உட்கொண்ட பிளாஸ்டிக் பொருள்கள் அவற்றின் வயிற்றினுள் சென்று நொதிகளால் வேறு நிலைக்கு மாற்றப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் பொருள்கள் ஒவ்வொன்றும் எத்திலின் கிளைக்காலாக (Ethylene glycol) மாறியிருந்தது. மேலும் ஆய்கையில் வயிற்றிலுள்ள நொதிகளும், இப்புழுக்களின் வயிற்றிலுள்ள பயனுள்ள பல நுண்கிருமிகள் (Micro Organisms) உற்பத்தி செய்கின்ற வேதிப்பொருள்கள் பிளாஸ்டிக்கை சிதைத்தழித்திருந்தது ஆராய்ச்சியில் தெரியவந்தது. உலகிலேயே மிக கடினமான, சிதைத்தழிக்க இயலாத பிளாஸ்டிக் பொருள்களை ஒரு சாதாரண புழுக்கள் சிதைத்தழிக்கின்றன என்ற செய்தி உலக விஞ்ஞானிகளை திகைப்படையச் செய்துள்ளது.

சாதாரணமாக தூண்டிலில் மீன் பிடிப்பதற்கும், பல விலங்கினங்களுக்கும், பறவையினங்களுக்கும் உயிர் உணவாக (Live feed) பயன்பட்ட இந்த மெழுகுபுழுக்கள் பிளாஸ்டிக்கை சிதைத்தழிக்கும் சக்தியை பெற்றிருப்பது உண்மையில் ஆச்சர்யம் தான். இந்த புழுக்கள் வயிற்றில் உற்பத்தி செய்யும் நொதிகளையும், இதன் உடலிலிருந்து வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் நுண்கிருமிகளையும், இந்த வேதிப்பொருள்களையும் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வேதிப்பொருட்களை கண்டறிந்தபின் அவற்றை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து பிளாஸ்டிக்குகளை சிதைத்தழிக்க பயன்படுத்த முடியும் என்ற செய்தி, பூமிக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைத்துள்ளது என்ற நம்பிக்கையை தந்துள்ளது.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை