தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை – 11

குமரி ஆதவன்

24th Jun 2019

A   A   A

வாழ்க்கையில் என் முகவரிக்கு வந்த சில கடிதங்கள் என் நெஞ்சைப் பிழிந்திருக்கின்றன. ஆனால் அவற்றின் தீர்வுகள் எனக்குக் கிடைத்ததே இல்லை. முதல் கடிதம் ஒரு ஜீவ கடிதம். இதுபற்றி அருமைமகளே நூலில் கவிதையும் எழுதியிருக்கிறேன். அப்போது நான் கல்லூரியில் முதலாமாண்டு மாணவனாக இருந்தேன்.

அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. தினமும் பேருந்துக் கட்டணம், மதிய உணவு, இதரச் செலவுகள் என அனைத்தையும் அம்மாவால் தரமுடியாது என்றுணர்ந்து, அரசு பிற்பட்டோர் விடுதியில் தங்கிப் படிக்க விண்ணப்பித்தேன். நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள விடுதியில் தங்கிப் படிக்க இடம் கிடைத்தது. இரவு கூடடையவும் பசியாறவும் கிடைத்த விடுதி ஏராளம் நண்பர்களையும் அவர்களது அனுபவ அறிவையும் எனக்குத் தந்தது.     

இந்த விடுதிக்கு எனது மூத்த அக்காள், இரண்டாவது அண்ணன், அருட்பணியாளர் பீட்டர் ஆகிய மூன்று பேரிடமிருந்தும் தான் எனக்குக் கடிதங்கள் வரும். ஆனால் 1990 சனவரி மாதம் இறுதியில் அனுப்பியவர் பெயரோ முகவரியோ இல்லாமல் ஒரு கடிதம் வந்தது. கடிதத்தை உடைத்துப் பார்த்தால், கடிதம் பென்சிலால் எழுதப்பட்டிருந்தது. அது ஏகதேசம் மிரட்டல் கடிதம்தான்.

“அப்பாவுக்குத் தெரியாமல், அம்மாவை ஏமாற்றி, அண்ணன் கண்ணில் படாமல் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இந்த வாரம் முடிவதற்குள் பதில் தர வேண்டும். பதில் தராமல் இருந்தாலோ, முடியாது என்று மறுத்தாலோ நான் செத்துப்போய்விடுவேன். நீங்கள் காதலிக்க மறுத்ததால் இளம்பெண் தற்கொலை எனத் தினத்தந்தியில் செய்திவரும். இப்படிக்கு, ………” எனப் போடப்பட்டிருந்தது. பெயர் இல்லாத இந்த ‘……’ யை நான் எங்குபோய்த் தேடுவது?

தினமும் என் விடுதி நண்பர்கள் உறக்கம் எழும் முன்னரே எழுந்து, விடுதியின் பின்பக்கமாக ஓடி, பேருந்து நிலையத்திற்குச் செல்வேன். தினத்தந்தி; பத்திரிகையை வாங்கி ஏழுமுறை திரும்பத் திரும்பப் படிப்பேன். எங்கேயாவது ‘இளம்பெண் தற்கொலை எனக் கிடக்கிறதா?’ என்று தேடுவேன். ஒரு மாதம் தேடியும் அப்படியொரு நிகழ்ச்சி நடந்ததற்கான அறிகுறியே இல்லை. அப்போது, “என் இதயம் எத்தனை வேகமாகத் துடித்தது? என் கை கால்கள் எப்படியெல்லாம் நடுங்கின?” என்று நினைத்துப் பார்க்கையில் ஏதோவொரு திகில் படம் போல் பால்ய நாட்கள் ஞாபகச் சிறகுகளை விரிக்கின்றன.

உண்மையைச் சொன்னால் சுமார் ஒன்றரை வாரம் நான் உறங்கவே இல்லை. பென்சிலால் முத்து முத்தாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை எத்தனைமுறை படித்தேன் என்றுகூட எண்ணிக்கை வைக்க முடியவில்லை. என் வகுப்பு மாணவிகளுக்குத் தெரியாமலே ஒவ்வொருவர் கையெழுத்தையும் எடுத்து கடிதத்தோடு வைத்து ஒப்பு நோக்கினேன். எதுவும் ஒத்துப்போகவில்லை. யார் என்று அறிகிற இளமையின் ஆர்வம் ஒருபுறம். அநியாயமாக ஒரு உயிர் போய்விடக்கூடாதே என்கிற மனிதநேசம் இன்னொருபுறம். இரண்டும் என் உணவையும் உறக்கத்தையும் பறித்தன. 

மலரினும் மெல்லியதல்லவா காதல்! உடலுக்கு அப்பாற்பட்டு இரண்டு உயிர்களுக்குள் நடக்கும் ரசவாதம் அல்லவா காதல்! அதை மிரட்டியோ, பின்னால் அலைந்தோ பெற முடியாதென்பது கடிதம் எழுதிய நபருக்குத் தெரியவில்லை. காதல் ஒரு கனி, அது இனிப்போடு நம் கையில் விழவேண்டும், ஆயுள் உள்ளவரைக்கும் தூய மனதோடு கணவன் மனைவியாக சுவைக்க வேண்டும். ஒர் அற்புதமான ஓவியத்தை இரசிப்பது போல், ஆழமும் விரிவும் காண இயலாத ஒரு கவிதையை அணு அணுவாகப் படித்துச் சுவைப்பதுபோல், ஒரு சிற்பியின் உன்னதமான சிற்பத்திற்குள் மூழ்கிவிடுவதுபோல், பூவுக்கும் வலிக்காமல் நாருக்கும் வலிக்காமல் ஒரு பெண் முல்லைப்பூவைத் தொடுப்பதுபோல் காதல் கனக்காமல் இதமாக இருக்க வேண்டும்.

இந்த மிரட்டல் கடிதம், காதல் மீது அச்சத்தையும், ஒரு வகையான வெறுப்பையுமே என்னில் விதைத்தது. மிரட்டுகிற ஆணோ பெண்ணோ திருமணத்திற்குப் பிறகும் மிரட்டி மிரட்டியே நிம்மதியைத் தொலைத்து விடுவார்கள் என்கிற புரிதலை இந்நிகழ்வு என்னில் உருவாக்கியது. ஒருவரது காதலைப் பெறுவதற்காக தற்கொலை மிரட்டல் விடுவது, தாடி வளர்த்து சோகம் சுமப்பதுபோல் நடிப்பது, திரும்பத் திரும்ப வழிந்தபடி ஒரு நபருக்குப் பின்னால் நேரத்தை வீணாக்கி அலைவது, இவற்றையெல்லாம் அருவெறுப்பவனாகவே இருந்தேன். இருக்கிறேன். காரணம் இது காதல் அல்ல காமம் என்று உணர்கிற ஞானத்தை இறைவன் அன்றைக்கே எனக்குத் தந்திருந்தார். குரைக்கிற நாய் கடிக்காது என்பதுபோல் மிரட்டுகிற மனிதர்களும் எதையும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு மீட்டுருவாக்கம் பெற்றேன். இந்தக் கடிதத்தின் உரிமையாளரை பார்க்க முடியவில்லை. ஆனால், 28 ஆண்டுகளுக்குப்பின் கடிதத்தின் உரிமையாளர் குறித்தும், அவர் பண்புநலன் குறித்தும் தற்செயலாகத் தகவல் அறிந்தேன்.

2017 இல் ஒரு கல்லூரிக்கு பட்டிமன்றத்தில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். ‘மகிழ்ச்சியான வாழ்வுக்குப் பெரிதும் தேவை காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா?’ என்பது பட்டிமன்றத்தின் தலைப்பு. நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி என்று தீர்ப்பு வழங்கினார் நடுவர். நாங்கள் திரும்பும் நேரத்தில் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ஒரு பேராசிரியை ஓடி வந்தார். சில நிமிடங்கள் பட்டிமன்றம் குறித்துப் பேசி விட்டு, ‘நீங்கள் கல்லூhயில் படிக்கும் போது பென்சிலால் எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம் வந்ததா?’ என்றார். ‘ஆமா ஆமா …’ என்று தலையாட்டினேன். ‘உங்களுக்குக் கடிதம் எழுதிய நபரை எனக்குத் தெரியும். இப்படி பலருக்கும் அவள் எழுதுவாள், அதில் ஆனந்தப்படுவாள். சில ஆண்டுகளிலேயே அவள் மனநோயாளியாகி மரித்துப் போனாள்’ என்றார். மொட்டைக் கடிதம் எழுதி விளையாடியதன் விளைவை நினைத்து நான் விக்கித்தும் துக்கித்தும் போனேன். 

எனக்கு வந்த இரண்டாவது கடிதமும் இந்த வகையறாவைச் சார்ந்ததுதான். நான் மூன்றாண்டுகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த நேரம் அது (மே,1991). எனது வீட்டு முகவரிக்கு அஞ்சல் உறையொன்று (Parcel) வந்தது. கடித உறையைவிடப் பெரிதாக இருந்தது மட்டுமல்ல, உள்ளே ஏதேதோ பொருட்களும் இருந்ததுபோல் தோன்றியது. மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதற்குள் ஒரு பெரிய சந்தன செபமாலையும் ஒருசில செப புத்தகங்களும், ஒரு கடிதமும் இருந்தது.

கடிதம் இரண்டு பக்க அளவுக்கு இருந்தது. படிக்கத் தொடங்கியபோதே ஒரு பெண்தான் எழுதியிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டேன். அதில் என்னை திட்டுமளவுக்கு திட்டியிருந்தாள். “பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளத் தெரியாத மடையன். கவிதை எழுதத் தெரிந்த உனக்கு காதலைப் பற்றித் தெரியுமா? கவிதை எழுதி அடுத்தவர்களின் மனதைத் திருடிவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிபோல் திரிகிறாய். உணர்வற்ற ஜடம். நீ சாமியாராகத்தான் லாயக்கு. இந்தச் சந்தண செபமாலையை அதிக விலை கொடுத்து உனக்காகத்தான் வாங்கினேன். பேசாமல் சாமியாராகப் போய்விடு. நிறைய செபப் புத்தகங்களும் வாங்கி வைத்திருக்கிறேன். நன்றாகச் செபம் செய்து புனிதனாகு.” என்றெல்லாம் எழுதியிருந்தாள். இந்தக் கடிதம் என்னைக் குழப்பவும் வருத்தப்படுத்தவும் செய்ததே தவிர வேறெந்த பாதகத்தையும் அரங்கேற்றவில்லை. 

யாரென்று இன்றுவரைக்கும் அறிய முடியாத நிலையிலும் அவள் எனக்குப் பரிசாக அனுப்பியிருந்த செபமாலையையும், செபப்புத்தகங்களையும் இன்றுவரை பாதுகாக்கிறேன். கடிதத்தை வீட்டிற்குப் பயந்து அடுத்தநாளே கீறி எறிந்து விட்டேன். என்னை விரும்புவதாகக் கல்லூரி காலத்தில் எந்தப் பெண்ணும் நேரடியாக என்னிடம் சொன்னதில்லை. நானும் யாரிடமும் சொன்னதில்லை. ஒரு வேளை காதலின் குறியீடுகள் எனக்குத் தெரியாமலோ விளங்காமலோ இருந்திருக்கலாம். எப்படியோ சகோதரியின் சாமியார் சாபம் எனக்குப் பலிக்கவில்லை. இங்கே நான் தப்பித்தேனா? திருச்சபை தப்பித்ததா? என்பதுதான் தெரியவில்லை!

மூன்றாவது கடிதம் என் திருமணம் முடிந்த மூன்றாவது நாள் (மே15,1999) வந்தது. இதய வடிவில் கடும் சிவப்பு நிறத்தில் ஒர் அழகான வாழ்த்து அட்டை. அதில் ஆங்கிலத்தில், “I Missed You” என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. அனுப்புநர் பகுதியில் “Guess Who?” என்றும் எழுதப்பட்டிருந்தது. ஒரு குடும்பம் குழப்புவதற்கு இதைவிட என்ன வேண்டும்? 1999 டிசம்பர் கடைசியில் அதே கையெழுத்தில் றோஸ் நிற இதயத்தோடு புத்தாண்டு வாழ்த்தும் வந்தது. இதிலும் அனுப்புநர் பகுதியில் “Guess Who?” என்றுதான் எழுதப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் திருமணமாகிற பெண்களின் கணவருக்கு மொட்டைக் கடிதங்கள் எழுதுகிற அறிவிலிகள் மலிந்திருக்கிறார்கள். நாங்களும் குறைந்தவர்கள் இல்லையென்று பெண்களும் அவ்வப்போது நிரூபிக்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்களது விளையாட்டு எத்தனைக் குடும்பங்களை குலைத்திருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். எனக்கு கடிதம் எழுதிய மூவரும் மனமுதிர்ச்சி இல்லாதவர்கள். சுய முகவரியும் இல்லாதவர்கள். தங்களது பெயரை எழுதுவதற்குக்கூட தைரியம் இல்லாத இவர்கள் மகிழ்வோடும் நிறைவோடும் வாழ்ந்திருக்கவே வாய்ப்பில்லை.

எனக்குத் திருமணமாகி பத்தொன்பது வருடமாகி விட்டது. இன்றுவரை இது யாருடைய வேலை என்று என்னால் கண்டுணர முடியவில்லை. இக் கடிதங்கள் தந்த காயங்கள் ஏராளம் ஏராளம். ஆனாலும் இவை என் வாழ்க்கைப் படகை மூழ்கடித்து விடாமல் மனதையும் உடலையும் பாதுகாத்து வருகிறேன். இப்போதெல்லாம் கடிதங்கள் என் பெயருக்கு வருவதில்லை. என் மனைவி பெயருக்குத்தான் வருகின்றன. என்னைப் பற்றி அவதூறாக என் மனைவிக்கு எழுதி அனுப்பிய கடிதங்கள் என்னை சிலகாலம் நடை பிணமாகவே மாற்றின. அந்தக் கடிதங்களும் எங்கள் அன்புறவை பிரிக்க முடியுமா? என்று சோதித்துப் பார்க்கவே வந்தன. குடும்பங்களைப் பிரிக்க முடியுமா? என்றே குறிவைத்தன. 

இவர்கள் உருவாக்கியத் தற்காலிக நரகங்களைக் கடந்து சொர்க்கத்தின் பாதையில் நான் பிரவேசித்துக் கொண்டிருந்தாலும் அந்த நரக நாட்களை என் நெஞ்சம் இன்னும் மறக்கவில்லை.

(நினைவுகள் தொடரும் ….)

 


நவம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.