தொடர்புடைய கட்டுரை


சிரிங்க ப்ளீஸ்…

அதிமேதாவி ஆனந்தன்

22nd Sep 2018

A   A   A

அன்று வீட்டிற்கு என் பெரியப்பா மகன் தினேஷ் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். என்னைவிட மூத்தவர். அவரது பிள்ளைகள் எங்காவது அழைத்துச் செல்லும்படி கேட்க, என் பிள்ளைகளும் சேர்ந்துகொண்டனர் அவர்களுடன். சரி, எங்கே செல்லலாம். பல்வேறு திட்டமிடல்களுக்கு பின் அப்போது திரையரங்கில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்திற்கு செல்வதென முடிவானது. இரண்டு குடும்பமும் சேர்ந்து கிளம்பினோம்.

எனக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் அவ்வளவாக விருப்பம் கிடையாது என்ற போதிலும் அந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் என நண்பர்கள் சொல்லியிருந்ததால் நானும் இணைந்து கொண்டேன்.

திரைப்படத்தில் ஒரு காட்சி, அரங்கிலிருந்த அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். திடீரென என் அண்ணன் தினேஷ் அமர்ந்திருந்த இருக்கைப் பக்கம் திரும்பிய எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முகத்தில் கொஞ்சமும் சிரிப்பைக் காட்டாமல் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அட, என்ன மனுசனய்யா இவர், இப்படி இருக்கிறாரே! என நினைத்தபடி படத்தில் மூழ்கினேன். அவ்வப்போது அவர் பக்கம் கவனித்ததில் அவர் படம் முழுக்க சிரிக்கவில்லை என்பது உறுதியானது.

என்ன மனிதர் இவர். ஏன் இப்படி சிரிக்க மறுத்து அமர்ந்திருந்தார். சிந்தித்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

”சரி விடு ஆனந்தா. சிலர் அப்படிதான். சிரித்தால் பல் விழுந்துவிடும் என்பதுபோல் வேண்டுமென்றே சிரிக்காமல் இருப்பார்கள். நஷ்டம் அவர்களுக்குத் தானே!” என்றபடி வந்தார் மிஸ்டர் அனுபவம்.

”என்ன நஷ்டமா? சிரிக்காமலிருந்தால் எப்படி நஷ்டம் ஏற்படும்?” கேள்வியோடு அவர் முகத்தைப் பார்த்தேன்.

”ஆம் நஷ்டம்தான் ஆனந்தா. சிரிப்பதால் நாம் பெறும் பயன்கள் ஏராளம். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று ஒரு பழமொழி சொல்லக் கேட்டிருப்பாய் தானே, உடலுக்கு மட்டுமல்லாமல் மனமும் இதனால் லேசாகிறது. இதன் மூலம் பல மனநோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.”

”பிறகு ஏன் இப்படி சிலர் சிரிக்க மறுக்கிறார்கள்?” என்றேன்.

”தன் பிரச்சனைகளை எப்போதும் மறக்காமல் வைத்திருக்க விரும்புபவர்கள் போலியாக தன்னை எப்போதும் ஒருவித பதட்டத்துடனே வைத்திருக்க விரும்புவதனால் ஏற்படுவது. ஆரம்பத்தில் சுயநினைவுடன் அப்படி நடந்துகொள்ளும் இவர்களுக்கு, பின்னர் அதுவே பழக்கமாகி விடுகிறது.

”எப்போதும் எதையாவது சிந்தித்தபடி, உலக பிரச்சனைகள் அனைத்திற்கும் தான் ஒருவனே தீர்வு காண வேண்டும் என்பது போலவும் இருந்து கொண்டு இருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை சிரித்து கலகலப்பாக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள், நேரத்தை வீணாக்குபவர்கள்.”

”சரி, சிரிக்காமல் இருப்பதால் அவர்களுக்குத் தான் இழப்பு என்று சொன்னீர்களே அதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்…”

”இழப்பை பற்றி சொல்வதை விடவும் சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று சொல்கிறேன் தெரிந்துகொள்.

“முதலில் சிரிப்பதால் மனம் அவ்வளவு நேரமும் மற்ற எல்லா கவலைகளையும், துன்பங்களையும் மறந்து இருக்கிறது, அதனால் மனபாரங்கள் குறைந்து நாம் தெளிவு பெறுகிறோம். நம் முகமும் பொலிவு பெறுகிறது. சிரிக்கும்போது இதயத்தின் தசைகள் அனைத்தும் சீராக இயங்கி உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது.

”உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் நன்கு உட்கிரகிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. சிரிப்பின் மூலம் மூளையில் எண்டோர்ஃபின் என்ற ஹார்மோன் சுரக்கிறது இதன் மூலம் மூளை சுறுசுறுப்பு பெறுகிறது. மேலும், அதிகமாக சிரிப்பவர்களுக்கு உடலிலுள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகிறது, இதனால் உடல் எடை அதிகரிப்பது குறைகிறது.

“மேலும் ஜீரண சுரப்பிகள் நன்கு சுரந்து உணவுகள் எளிதாக ஜீரணமாகின்றன. சிரிக்கும்போது உடல் வலியை குறைக்கும் ஹார்மோன்கள் சுரந்து உடல் வலிகள் தீர்கின்றன. நன்மைகளை சொல்வதானால் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆனந்தா..!”

“நாம் சிரிக்கும் ஒரு சிரிப்பிற்கு இத்தனை பயன்களா?” ஆச்சர்யமடைந்தேன் நான்.

“இன்னும் ஒன்றை தெரிந்துகொள் ஆனந்தா, சிரிப்பு உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள அற்புத வரமாகும்.”

சிரிப்பதன் மூலம் இத்தனை நன்மைகள் கிடைக்கும்போது நாம் ஏன் சிரிப்பதற்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை