தொடர்புடைய கட்டுரை


மனம் குதூகலிக்க…

அதிமேதாவி ஆனந்தன்

22nd Oct 2018

A   A   A

அன்று ஆற்றில் நிரம்ப தண்ணீர் வருவதாக பக்கத்து வீட்டு மாமா சொன்னதை கேட்டதும் மனது துள்ளியது. சிறு வயது நினைவுகள் எட்டிப்பார்க்கத் துவங்கின. ஆங்காங்கே மா பலா நிறைந்த தோப்புக்குள் ஒரு வீடு தனியாக இருக்கும். குளிர்ந்த காற்றும், சலசலக்கும் ஓசையும் புல்லரிக்கச் செய்யும். அதிலும் குளிர்ந்த ஆற்று நீரில் நீச்சலடித்து குளிப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தருவதாக இருந்தது.

’அது ஒரு காலம்பா, இப்போ அப்படியா’ மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு மிக நெருக்கமாக வீடுகள் தோன்றிவிட்ட தெருவை பார்த்து பெரியப்பா ஏக்கத்தோடு கூறியது நினைவிற்கு வந்தது. இழந்துபோன அந்த காலம் மீண்டும் வராதா? கேள்வியோடு ஒரு ஏக்கம் எட்டிப் பார்த்தபோது வந்தார் மிஸ்டர் அனுபவம்.

”என்ன ஆனந்தன், பழைய நினைவுகளா? எப்படி மீண்டும் அந்த நாட்கள் திரும்ப வேண்டுமா?” என்னை பார்த்து சிரித்தார்.

”ஆமாம், அந்த நாள்கள், அந்த இயற்கை சூழ்நிலைகள் அருமையாக இருந்தன. துள்ளி விளையாடித் திரிந்த நம் இளம் பருவம் மீண்டும் கிடைக்காது என உறுதியாக தெரிந்திருந்தும் ஆசையாகத்தான் உள்ளது” சொல்லிவிட்டு சிரித்தேன்.

”ஏன் கிடைக்காது. நீ துள்ளி விளையாடினால் இப்போதும் உன்னை இளமையாக உணரலாமே. உன்னை விளையாடக் கூடாது என்று யாராவது தடுத்தார்களா என்ன?” அவரும் சிரித்தார்.

”ஆனந்தா. பொதுவாக நம் மக்களிடம் ஒரு மனநிலை உள்ளது. கொஞ்சம் வயதாகிவிட்டாலோ, குடும்ப பொறுப்பினை ஏற்றுவிட்டாலோ, அடுத்த தலமுறை பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவதை கேவலமாகவும் கௌரவ குறைச்சலாக நினைப்பது.

”உண்மையில் ஓடி ஆடி விளையாட வேண்டியது எல்லா வயதிலும் செய்ய வேண்டிய ஒன்று.”

”ஏன் ஓடி ஆடி விளையாட வேண்டும்?”

”ஆனந்தா, நாம் ஓடி ஆடி விளையாடும் போது நம்மை, நம் சூழ்நிலைகளை மறந்திருப்போம். அதனால் மனம் லேசாகிறது. உடல் முழுவதும் இரத்த ஒட்டம் சீராக நடைபெறுவதால், அனைத்து உறுப்புகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன. மனதோடு சேர்ந்து உடலும் லேசாகிறது. கவலைகளை மறந்து சில மணித்துளிகள் இருப்பதால் பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது என்று அறிவியல் பூர்வமாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.”

”இத்தனை நன்மைகள் இருந்தும் ஏன் எல்லோரும் அப்படியான தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கின்றனர்.” சந்தேகத்துடன் கேள்வியை எழுப்பினேன்.

”நான் ஏற்கனவே சொன்னவைகளுடன், இந்த நவீன நாகரீகத்தின் பின்னால் ஓடும் வாழ்க்கை முறையும் அதற்கு காரணமாக இருக்கின்றது. மனிதன் எப்போதும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவே தன்னை உணர்கிறான். அதையும் தாண்டி தனக்கென்று ஒரு உடலோ மனமோ இருப்பதை பெரும்பாலான நேரங்களில் மறந்து விடுகிறான். உழைப்பு மட்டுமே தன்னை காப்பாற்றும் என நம்புகிறான்.

”தன் பிள்ளைகளும் அதிகமான பொருள் ஈட்ட வேண்டும் என விரும்புகிறான். பிள்ளைகளிடம் அதை மட்டுமே நோக்கமாக போதித்து வளர்க்கின்றனர். மனதைப் பற்றியோ, அந்த மனதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றியோ சொல்லிக் கொடுப்பதே கிடையாது. இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமானால் தன் பிள்ளைகளுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பின்னால் அதன் விளைவுகளையும் அனுபவிக்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் அப்போதும்கூட தன் தவறை உணர்வது கிடையாது. அதுதான் மிகவும் வருத்தமான உண்மை.”

”உண்மைதான் அனுபவம், ஆனால் இன்று சூழ்நிலை அப்படி ஆகிவிட்டதே. எங்கும் எதிலும் அவசரம். ஓடி உழைத்தால்தான் இன்றைய விலைவாசியை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டதே.”

“சரி ஆனந்தா. நான் எப்போது வேலை செய்ய வேண்டாம், உழைக்க வேண்டாம் என்றேன். அதோடு கொஞ்சம் நேரத்தை மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி ஊட்ட செலவிடுங்கள் என்றுதானே சொல்கிறேன். கொஞ்சம் விளையாட்டு, அதுவும் வீட்டிற்குள்ளாக குழந்தைகளோடு சேர்ந்தே விளையாடலாம். குடும்பத்துடன் அருகிலிருக்கும் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று கொஞ்சம் நேரத்தை செலவிடலாம். இப்படி எத்தனையோ வழிகள் மனதிற்கு இதம் அளிப்பதாக இருக்கிறது. இதில் எதிலெல்லாம் மனம் லயிக்கிறதோ அவற்றிற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் வாழ்க்கை நிச்சயம் சிறப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.”

”உண்மைதான் மிஸ்டர் அனுபவம். நீங்கள் சொன்னதுபோல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தாலே பல துன்பங்கள் விலகிப் போகும் என்பதில் சந்தேகம் இல்லைதான். உலகில் நோய்நொடிகள் இல்லாமல் வாழ்தலே முக்கியம் என்பது புரிகிறது. இனி அப்படி வாழ முயற்சிக்கிறேன்” என்றேன் நான்.

”சரி நான் கிளம்புகிறேன்…” விடைபெற்றார் மிஸ்டர் அனுபவம்.

 


பெப்ரவரி 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.