தொடர்புடைய கட்டுரை


விதிமுறைகள் நமக்காகவே

அதிமேதாவி ஆனந்தன்

17th Jan 2019

A   A   A

வழக்கம் போல் பேரூந்து நிறுத்தத்தில் நான் செல்ல வேண்டிய பேரூந்திற்காக நின்று கொண்டிருந்தேன். என் கண்ணெதிரே ஒரு விபத்து நடந்துவிட்டது. வேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது சிக்னலை கவனிக்காமல் வலது பக்கமிருந்து வந்த டெம்போ ஒன்று தட்டிவிட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டதில் கை கால்களில் காயங்கள், உயிர்ச் சேதம் இல்லை என்பதில் மனது நிம்மதி அடைந்தது.

ஆனால், இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்த, அங்கு வந்த போக்குவரத்து காவலர் இருவரையும் ஓரம் கட்டி பேச்சுவார்த்தையில் இறங்கினார். கொஞ்ச நேரத்தில் இரு தரப்பும் சென்றுவிட என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் அருகிலிருந்த கடைக்காரரிடம் விசாரித்தேன்.

”அதுவா… பைக்காரரிடம் லைசென்ஸ் இல்லையாம், டெம்போ காரரிடம் இன்சுரன்ஸ் இல்லையாம்… கடைசியில போலீஸ்காரர் பாக்கேட் நிறைந்ததுதான் மிச்சம்” என்றார் கொஞ்சமாக சிரித்தபடி.

கேட்டவுடன் போலீஸ்காரர் மீதுதான் கோபம் வந்தது. முறைபடி அவர் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், சம்பந்தபட்ட இருவருமே வழக்கை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. அதனால் தங்களை வழக்கிலிருந்து விடுவித்துகொள்ள முயற்சித்து இருப்பர். அதற்கு சன்மானமாக ஒரு தொகையை கொடுத்திருப்பர். விஷயம் கொஞ்சம் யோசித்தபோது புரிந்தது.

இப்போது என் கோபம் இதுபோல் லஞ்சத்தை வளர்த்துவிடும் சாமானியர் மீது திரும்பியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு வாகனமும் சேதம் அடைந்திருக்கும், உடலிலும் காயமும் பட்டிருக்கும். முறைப்படி வழக்கு தொடர்ந்திருந்தால் இன்சுரன்ஸ் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கிடைத்திருக்கும். அதையும் இழந்து கையிலிருந்த பணத்தையும் இழந்திருக்கிறாரே... நினைக்கும்போது இவர்களின் அறியாமையை (அறியாமை என்பதா? அல்லது வேண்டுமென்றே செய்கிறார்கள் என்பதா? புரியவில்லை எனக்கு..) நினைத்து வருந்தினேன்.

அப்போது வந்தார் மிஸ்டர் அனுபவம்.. ”என்ன ஆனந்தா இன்னைக்கு என்ன பிரச்சனை. விதிமுறைகளை தெரிந்து கொள்வதில் யாரும் அக்கறை கொள்ளவில்லை என்கிறாயா? இல்லை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு அறிவு வளரவில்லை என்கிறாயா.”

”இரண்டும் தான் காரணம் என்கிறேன் நான்..” என்றேன் பதிலுக்கு.

”உனக்கு தெரியுமா ஆனந்தா, பலருக்கு எல்லாம் தெரிந்திருந்தும் சட்டத்தை மதிப்பதில்லை. ஆனால், கொஞ்சமாக தெரிந்து வைத்திருப்பவர்களோ மிகவும் கவனமாக விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் அதிகம் படித்த சிலரும், பணம் படைத்த பலரும் வேண்டுமென்றே மீறுகின்றனர். ஏதாவது பிரச்சனை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுகின்றனர். ஓட்டுனர் உரிமம் பெறவும், இன்சுரன்ஸ் போன்றவற்றை புதுப்பித்துக்கொள்ளவும் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதால் தயக்கம் காட்டுகின்றனர்.

”இது போன்றவர்களால் தான் நாட்டில் ஊழல் இல்லாத இடமே இல்லை எனும் அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் புகுந்து கொண்டுள்ளது.”

”ஆம், உண்மைதான். ஆனால் சட்டத்தை இன்னும் கடுமையாக்கினால் இதை சரி செய்ய முடியாதா என்ன?”

எப்படி ஆனந்தா. எத்தனை புதிய சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், காத்துக்கொள்ளவும் என்ன செய்யலாம் என ஒரு கூட்டம் சிந்திக்க துவங்கிவிடும். அப்படி சிந்திப்பவர்கள் கொஞ்சமாக இருந்தால் நீ சொல்வது போல் சட்டத்தால் நீதியை நிலைநாட்டி விடலாம். ஆனால் அது ஒரு பெரிய கூட்டமாக அல்லவா இருக்கிறது. தவறு செய்பவர் அறிவு, பணம் இவற்றின் துணையை தவிர்த்து அதிகாரம் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுடனான நட்பு, உறவு இவற்றின் துணையுடனும் தப்பித்துக் கொள்கின்றனர். பிறகு எப்படி அரசு அதிகாரிகளும், காவலர்களும் தங்கள் கடமையை செய்ய முடியும் சொல்.”

”உண்மைதான் மிஸ்டர் அனுபவம். மக்கள் தாங்களாக முன்வந்து சட்டத்தை மதிப்பவர்களாக ஆக வேண்டும். இல்லாதவரை கஷ்டம் தான்.”

”இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் மேலும் எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும். முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’ என்று ஒரு பாடல் வரி வருமே அதை நினைவில் வைத்துக்கொள். சரி நான் வருகிறேன். நாடு வளம்பெற என் புத்தாண்டு வாழ்த்துக்கள். வீட்டில் அனைவருக்கும் தெரிவித்துவிடு” கிளம்பினார்.

நானும் விடைபெற்றேன். ‘சட்டங்களையும் விதிமுறைகளையும், பிறருக்காக இல்லாவிட்டாலும் நமக்காகவாவது பின்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன். நீங்களும் பின்பற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை