தொடர்புடைய கட்டுரை


எல்லாம் முடிந்தபின்…

அதிமேதாவி ஆனந்தன்

15th Sep 2018

A   A   A

பெருகிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கி வருவது போன்று தோன்றுகிறது. அதேப்போல் மக்களின் மனங்களும் சுருங்கி வருகிறது. எங்கோ எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. விஷயம் வேறொன்றுமில்லை, பக்கத்து வீட்டு தாத்தா திடீரென மயக்கம்போட்டு விழுந்துவிட்டார். தகவல் தெரிந்ததும் ஓடிச்சென்றேன். உதவிக்கு யாரும் வராத நிலையில் ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவ மனைக்கு அனுப்பினேன். அப்போது தான் கவனித்தேன் பக்கத்து வீடுகளின் ஜன்னல்களுக்கு பின்னால் பல தலைகள் ஒழிந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை.

கோபம் என்றால் அப்படி ஒரு கோபம் எனக்கு. என்ன மக்கள் இவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று, மனதிற்குள் திட்டியபடி வீட்டிற்கு திரும்பினேன். இது நடந்தது இரவு பதினோரு மணி இருக்கும். இரவு முழுவதும் அதே சிந்தனை. காலையிலும் தொடர்ந்தது.

”என்ன ஆனந்தா, இன்னும் கோபம் தீரவில்லையா?” கேள்வியுடன் வந்தார் மிஸ்டர் அனுபவம்.

”ஆம், இந்த மக்களை என்ன சொல்வது.” புலம்பினேன் அவரிடம்…

”நீ இதைப்பற்றி மட்டுமே யோசிக்கிறாய், ஆனால் திருமணங்களுக்கு கூட இந்த மக்கள் செல்வது கிடையாது என்பது உனக்கு தெரியுமா?”

”என்ன திருமணங்களுக்குக் கூடவா! இல்லை இவர்களுள் பலரை நான் பல திருமண வீடுகளில் பார்த்திருக்கிறேனே…”

”அதுதான் சொல்கிறேன் ஆனந்தா, திருமணத்திற்கு செல்வதில்லை. திருமணத்திற்கு பிறகு நடைபெறும் விருந்தில் சாப்பிட மட்டுமே செல்வர். அதுபோல நேற்று மயங்கி விழுந்த பெரியவரை, அவர் குணமடைந்து வீட்டிற்கு வந்த பிறகு நலம் விசாரிக்கச் செல்வர்.

”இன்னும் சொல்ல வேண்டுமானால் ஏதாவது விபத்துகள் நடக்கும்போதும் ஒதுங்கி நின்றுவிட்டு, பிறகு என்ன ஆயிற்று என்று விசாரிப்பவர்கள் இருக்கிறார்கள். உனக்கு தெரியுமா ஆனந்தா, 2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சிலர் திரும்ப திரும்ப போட்டுப்பார்த்து, யாரையாவது இழுத்துச் செல்லும் காட்சிகள் தென்படுகிறதா என தேடினார்களாம். இப்போது தேடி யாரையாவது கண்டுபிடிக்க முடியுமா என்ன? ஆனாலும் அதில் ஒருவிதமான ஈடுபாடு சிலருக்கு.”

”நீங்கள் சொன்னதில் மற்றவை எல்லாம் தவறுதான் ஆனால், திருமண வீட்டில் சாப்பிட மட்டும் செல்கிறார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி தவறாகும். மணமக்களுக்கு ஏதாவது அன்பளிப்பு கொடுத்த பிறகுதானே சாப்பிடுகிறார்கள்.?”

”ஆம் ஆனந்தா, நான் சொல்வது அந்த மனநிலையைதான். ஒருவரது திருமணத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், நானும் வந்திருந்தேன் என்று சொல்வதற்காக செல்வது போல் அல்லவா இருக்கிறது. இதே மனநிலைதான் நான் மேலே சொன்ன அத்தனை நிகழ்வுகளிலும் தென்படுகிறது, கவனித்துப் பார் புரியும்.”

”உண்மை தான் மிஸ்டர் அனுபவம். இப்போது புரிகிறது, நானும் பெரும்பாலும் அப்படித்தானே நடந்து கொள்கிறேன். நானும் அந்த ரக மனிதனாக இருப்பதை நினைக்கும்போது வெட்கப்படுகிறேன். ஆனால் இத்தகைய மனநிலை நமக்குள் எப்படி வருகிறது புரியவில்லையே?” கேள்வியோடு அவர் முகத்தைப் பார்த்தேன்.

”சொல்கிறேன் ஆனந்தா. முதலில் நாம், நம் குடும்ப நபர்களின் பிரச்சனைகளிலோ, குடும்ப திருமணங்களிலோ அல்லது விபத்தில் சிக்கியவர் நம் உறவினர் என்று தெரிந்தாலோ அப்படி நடந்து கொள்வதில்லை. அத்தகைய இடங்களை தவிர்க்க முடியாத இடங்களாக பார்க்கிறோம்.

”எங்கெல்லாம் விலகிக்கொள்ள முடியும் என நினைக்கிறோமோ அங்கெல்லாம், பெயருக்கு போய் ஆஜர் வைத்துவிட்டு வந்துவிடுகிறோம். நாம் பிறருக்கு அப்படி செய்வதால் நம்மிடம் பிறர் அப்படி நடந்துகொள்வதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதுவே இப்போது நடைமுறை பழக்கமாகி விட்டது.”

”இதை எப்படி மாற்றலாம்?”

”பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். இவர்கள் நமக்கு வேண்டியவர்கள், இவர்கள் வேண்டாதவர்கள் என்று பிரித்து பார்க்கும் மனநிலையை மாற்றிக்கொண்டால் போதும். அனைவரது துன்பத்திலும் நாம் உடனிருந்து உதவ வேண்டும் என்ற மனநிலையும், அனைவரது மகிழ்ச்சியான தருணங்களுக்கு உரிய அங்கிகாரத்தை வழங்குவதும் மட்டுமே போதுமானது. இதுவே நம் சமுதாயத்தில் பரவி இருக்கும் பல பழக்கவழக்கங்களை மாற்றிவிடும் என நம்புகிறேன்.”

”சரிதான் மிஸ்டர் அனுபவம், முதலில் என்னை மாற்றிக்கொள்கிறேன். வருகிறேன்.” இப்போது நான் விடைபெற்றுக் கொண்டேன்.

 


ஜூன் 2017 அமுதம் இதழில் வெளியானது..

தொடர்புடைய கட்டுரை