தொடர்புடைய கட்டுரை


எங்கே கிடைக்கும் மகிழ்ச்சி!

அதிமேதாவி ஆனந்தன்

25th Sep 2018

A   A   A

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ என்னவெல்லாம் தேவை யோசித்தபடி அமர்ந்திருந்தேன் எழுதுவதற்கு தயாராக. ஒவ்வொன்றாக நினைவுக்கு வர எழுதிக் கொண்டிருந்தேன். பட்டியல் கொஞ்சம் நீளமாக சென்றுகொண்டே இருந்தது. இவ்வளவு போதும் என்று எங்கேயும் நிறுத்திக்கொள்ள முடியவில்லை. மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

”நிறைவான மனம், வேண்டுமே அதை எழுதி விட்டாயா?” என் முன்னால் அமர்ந்திருந்த மிஸ்டர் அனுபவம் என்னிடம் கேட்டார்.

”என்ன மனமா? அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?” கொஞ்சம் கோபத்துடனேயே கேட்டேன்.

”ஹ ஹ ஹா..” என சிரித்தவர். “அது மட்டும் இருந்தால் போதும், குடிசையில் கூட மகிழ்ச்சியாக வாழலாம்” என்றார் என்னைப் பார்த்து.

சரிதான். நானும் பல தடவை அதைப்பற்றி பேசி இருக்கிறேன், பல கூட்டங்களில் உரையாற்றவும் செய்திருக்கிறேன். ஆனால், நான் இப்போது பட்டியல் போட ஆரம்பித்தது எனக்காக, என் எதிர்காலத் தேவைகளுக்காக என்கிற போது… அப்படி சுருக்கிக்கொள்ள மனம் இடம்தர வில்லை. ஒருவித தயக்கத்தோடு மிஸ்டர் அனுபவத்தின் முகத்தைப் பார்த்தேன்.

அவருக்குப் புரிந்தது என் நிலை. சிரித்தவர், “ஆனந்தா. உன்னைப் போல்தான் பலரும், எது தேவை? எது தேவை இல்லை என்று கேட்டால் பதில் சொல்ல தெரியாதவர்களாக இருக்கின்றனர். எது எல்லாம் கண்ணில் படுகிறதோ அது எல்லாம் தேவை என்றே நினைக்கின்றனர். நடந்து செல்பவர் இருசக்கர வாகனத்திலாவது செல்ல ஆசைப்படுவதும், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் கார் வாங்க ஆசைப்படுவதும் இயல்பாகவே உள்ளது.

”பொதுவாகவே நம் தேசத்தில் பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனநிலை அதிகமாகவே காணப்படுகிறது. வியாபார நிறுவனங்களும் மக்களின் மனநிலை அறிந்தே புதிய புதிய பொருள்களின் விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட்டு கவர்கின்றன. விளம்பரங்களை பார்க்கும் மக்களும் தனக்கு அது தேவைதானா என்பதை உணராமலே வாங்கி விடுகின்றனர்.”

”அப்படியானால் விளம்பரங்களை பார்த்து பொருட்களை வாங்கக் கூடாது என்கிறீர்களா?”

”அப்படி சொல்லவில்லை ஆனந்தா. விளம்பரங்கள் மக்களின் ஆசைகளை தூண்டிவிடும் படியாகவே எடுக்கப்படும். ஆனால் அவற்றை பார்த்ததும் அவசரகதியில் அவற்றை வாங்கிவிடாமல், அவற்றின் தேவையினை அறிந்து, அதன் முக்கியத்துவத்தினை அறிந்து வாங்க வேண்டும் என்றுதான் கூறினேன்.”

”தேவை இல்லாமல் பொருட்களை வாங்க வேண்டாம் என்றால், கடினமாக யாரும் உழைக்கவும் மாட்டார்களே?” என்று என் எண்ணத்தை சொன்னேன்.

”இல்லை ஆனந்தா பல மேற்கத்திய நாடுகளில் மக்கள் உழைத்து சம்பாதிக்கிறார்கள். அப்படி அவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பல நாடுகளை சுற்றிப்பார்ப்பது, சுற்றுலா தலங்களில் தங்கி ஓய்வெடுப்பது என மனம் விரும்பியவாறு செலவு செய்து மகிழ்கின்றனர். இன்னும் பலர் தாங்கள் உழைத்து சம்பாதித்ததில் பெரும்பகுதியை பிறருக்கு உதவி செய்வதற்காக செலவு செய்து மகிழ்கின்றனர்.

”அவர்கள் தங்கள் மகிழ்ச்சியாக நினைப்பது பொருட்களையோ, சொத்துக்களையோ அல்ல, சம்பாதித்ததை செலவு செய்து மகிழ்கின்றனர். தங்களிடம் இருக்கும் பணம் தீர்ந்ததும் மீண்டும் சம்பாதித்துக் கொள்கின்றனர்.”

”அப்படியானால் சேர்த்து வைப்பது தவறு என்கிறீர்களா?”

”இல்லை ஆனந்தா. சேர்த்து வைப்பதாலோ, பொருட்களை வாங்கி வீட்டில் நிறைப்பதாலோ நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியாது என்றுதான் கூறுகிறேன்.

”நீயே சொல், செலவம் சேர்ப்பதில் இவ்வளவு சேர்க்க வேண்டும் என்று ஏதாவது இலக்கு உள்ளதா? அல்லது இந்த இந்த பொருட்களை வாங்கி விட்டால் போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்று உறுதியாக கூற முடியுமா?

“செல்வம் சேர்க்க சேர்க்க இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்றே மனம் சொல்லும். அதுபோலவே புதிய பொருட்களை வாங்குவதிலும் மனம் இந்த ஒன்றை மட்டும் வாங்கி விடுவோம் என புதிய புதிய பொருட்களை விரும்பிக்கொண்டே தான் இருக்கும்.

“எதிலும் திருப்திப் பட்டுக்கொள்ளும் மனம் ஒன்று மட்டுமே மனிதனை மகிழ்ச்சியாக வாழ வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனந்தா” உறுதியாக கூறி முடித்தார் மிஸ்டர் அனுபவம்.

நானும் என் பட்டியலில் இருந்த பல பொருட்களின் பெயர்களை வெட்டி விட்டேன். நீங்கள்?

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை