தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை - 4

குமரி ஆதவன்

14th Feb 2019

A   A   A

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் கிராமத்தில் பத்து வீட்டுக்கு ஒரு விளையாட்டு மைதானம் சின்னதாகவோ, பெரிதாகவோ இருக்கும். மாலையானால் எல்லா மைதானத்திலும் விளையாட்டுகள் நடந்து கொண்டிருக்கும். ஒரு மைதானத்தில் கபடி என்றால் இன்னொன்றில் கிளியாந்தட்டு நடக்கும். வேறொரு மைதானத்தில் மாசம் காத்தல் நடக்கும். இதற்கிடையே விளைநிலங்களில் அம்பு எறிதல், தொட்டு விளையாடுதல் போன்றவை நடக்கும். வீட்டு அருகாமையில் பெண்கள் கண்டு விளையாடுதல், கள்ளன் போலிஸ், பாண்டியாட்டம் என விளையாடிக் கொண்டிருப்பர். மாலையில் விளையாட்டு என்பது எல்லோரும் பங்கு கொள்ளும் ஒன்றாக இருந்தது. விளையாட்டு முடிந்தால் நிலா வெளிச்சத்தில் பெரியவர்கள் கதை சொல்லுவார்கள். சுற்றியிருந்து கதை கேட்டு விட்டு, ஏழு மணிக்குப் பிறகுதான் உண்பதற்கோ படிப்பதற்கோ செல்லுகிற வழக்கம் இருந்தது. அன்று வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தார்கள். இன்று எல்லோரையும் தொலைக்காட்சி இயந்திரமாக்கி விட்டது.

என் அப்பா இறந்த பிறகு நான் முக்கியமாகக் கதை கேட்கிற களங்கள் மூன்று உண்டு. ஒன்று ஹரியின் பாட்டி தேவருவிளை காளியம்மை அவர்கள் வீடு. இரண்டு எங்கள் முன் வீட்டில் உள்ள ஜெகனின் பாட்டி பாலம்மாள் அவர்கள் வீடு, மூன்றாவது சொக்கநாதன் விளையில் உள்ள எனது மாமி திரேசம்மாள் அவர்களின் வீடு. எந்த இடத்தில் விளையாட்டு நிறைவடைகிறதோ அதற்கு அருகாமையில் யாருடைய வீடு இருக்கிறதோ, அங்கு கதை கேட்டல் நடைபெறும்.

கதை கேட்டுவிட்டு எல்லோரும் வீட்டிற்குச் சென்றாலும் நானும் எனது சித்தப்பா மகன் ஏசுகுமாரும் வீட்டிற்குச் செல்லாமல் ரேடியோவில் பாட்டு கேட்பதற்காக ஏதேனும் ஒரு வீட்டிற்குச் செல்வோம். அப்போது எங்கள் பகுதியில் மூன்று வீடுகளில்தான் ரேடியோ இருந்தது. தேவர்விளையில் விளையாடினால் அந்தோணிமுத்து மாமா வீட்டிலும், மாமி வீட்டருகே, சொக்கநாதன் விளையில் விளையாடினால் குஞ்சு வீட்டிலும் ரேடியோ கேட்போம். குஞ்சு வீட்டில் பிலிப்ஸ் ரேடியோ சிறியதாக இருந்ததால் வீட்டிற்கு வெளியே எடுத்து வைத்தும் பாடல் கேட்பார்கள். இதனால் மாமி வீட்டில் இருந்தாலே கேட்கலாம். எப்போதாவது அருகிலிருந்து கேட்க ஆசை வந்தால் மட்டுமே அவர்கள் வீட்டு அருகாமைக்குச் செல்வோம்.

எனது சித்தப்பா மகன் ஏசுகுமார், குஞ்சு வீட்டில் இருந்த வயதான பெண்மணிக்கு நிறைய உதவிகள் செய்வான். கடையில் போய் மசால் சாதனங்கள் வாங்கிக் கொடுப்பது, கல் சுமந்து கொடுப்பது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என சர்வ சாதாரணமாக அவர்கள் வீட்டிற்குள் செல்லும் பழக்கம் அவனிடம் மட்டும் இருந்தது. அவர்களுக்குக் கல் சுமந்து கொடுத்தபோது கையில் ஒரு விரலையும் இழந்தான். நாங்கள், அவன் விரலை குஞ்சு வீட்டு அம்மாவுக்கு எண்ணை தாளிக்கக் கொடுத்தான் எனக் கிண்டல் அடிப்போம்.         

அப்போது (1980) நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இரண்டாவது சகோதரி சுசீலா அவர்கள் குழந்தை பிறந்து எங்கள் வீட்டில் நின்று கொண்டிருந்தார். எனது அத்தான் திரு. கிறிஸ்துராஜ் அவர்கள் கேரளாவில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அவர் ஒருநாள் ரேடியோ ஒன்று கேரளாவிலிருந்து வாங்கி வந்திருந்தார். எனக்கு சந்தோஷமென்றால், அப்படியொரு சந்தோஷம். அதை எங்கள் வீட்டில் சில நாட்கள் வைத்திருக்கும்படி கெஞ்சினேன். அத்தான் மூன்று நாட்கள் வைத்திருந்து விட்டு, கேரளாவுக்குத் திரும்பவும் வேலைக்குச் சென்றதும் கொண்டுபோய் விட்டார். இதனால் திரும்பவும் ரேடியோ கேட்க குஞ்சு வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தோம்.

திடீரென்று ஒருநாள் குஞ்சு வீட்டு ரேடியோ களவு போய்விட்டது. நாங்கள் அவர்கள் வீட்டிற்கு பாடல் கேட்கச் சென்றபோது, குஞ்சு வீட்டம்மையின் இளைய மகன் ரேடியோ களவுபோன கதையை கண்ணீரோடு சொன்னார். நாங்களும் அவரது சோகத்தில் பங்கேற்று அழுததோடு, ‘எடுத்தவன் விளங்காமப் போவான்’ என்று சாபம் போட்டுவிட்டு வந்தோம்.    

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் எங்கள் வீட்டில் திடீரென்று இரண்டு காவலர்கள் வந்தார்கள். வந்தவர்கள் எனது பெயரைச் சொல்லி அழைத்தார்கள். எல்லோரும் பயத்தோடு, எதற்கு போலிஸ் வந்திருக்கிறார் என்ற எண்ணத்தில் வருத்தத்தோடு காரணம் கேட்க, அவர்களோ, ‘உங்க பையன் குஞ்சு வீட்டுலருந்து எடுத்துவந்த ரேடியோவ எங்க வச்சிருக்கீங்க?’ என்றார்கள். எனது அம்மாவும், அக்காவும், ‘இண்ணைக்கு வரைக்கும் எங்க வீட்டுக்கு போலிசே வந்ததில்ல. எங்க குடும்பத்துல வறுமை இருந்தாலும் யாருக்கும் திருடுற பழக்கம் இல்ல சார்’ என்றார்கள். அவர்களோ, எங்கள் வீட்டிற்குள் ஏறி எங்கும் தேடி விட்டு, ரேடியோ இல்லாத கோபத்தில், ‘பையனையும் கூட்டிக்கிட்டு தக்கலை போலீஸ் ஸ்டேசனுக்கு வந்திருங்க’ என்றார்கள்.   

‘யாருக்க வீட்டுக்கும் ரேடியோ கேக்கப் போகாதண்ணு சொன்னப்ப கேட்டியா? இப்போ கள்ளனுண்ணு பேரு கேட்டாச்சா? இதுபோலக் கேவலம் உண்டுமா?’ என்று அழுதும் திட்டியும் தீர்த்தார்கள். அக்காள், அண்ணன் என்று ஆளாளுக்குத் திட்டித் தீர்த்தனர். ஊரிலுள்ளவர்களும் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது அம்மா குஞ்சு வீட்டிற்குச் சென்று, ‘என் பையன் திருடமாட்டான். அப்படி ஒரு ரேடியோ எங்களுக்குத் தேவையுமில்ல’ என்று சொன்னபோது, ‘உங்க வீட்டுல ரேடியோ பாடிக்கிட்டிருந்ததக் கேட்டு உங்க பக்கத்துல உள்ளவங்கச் சொன்னதுனாலத்தான் கேஸ் போட்டோம். ரேடியோவ மரியாதையாக் கொண்டு தந்துருங்க என்று சப்தமிட்டு அனுப்பியிருந்தனர்.

எனது சித்தப்பாவும், ஏசுகுமாரும் சேர்ந்து எவ்வளவு சொல்லியும் அவர்கள் நம்புவதற்குத் தயாரில்லை. கடைசியில் இரண்டு வாரத்திற்கு முன்பு அத்தான் கொண்டு வந்து மூன்று நாட்கள் வைத்துவிட்டுச் சென்ற ரேடியோதான் அவர்களுக்குச் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட எங்கள் குடும்பத்தினர் குஞ்சு வீட்டிலும், காவல் நிலையத்திலும் சொல்லிப் பார்த்தார்கள். யாரும் நம்பத் தயாரில்லை. எனது அக்காவின் மாமியார், அவர்களது உறவினரான லாறன்ஸ் வழக்கறிஞரை (முன்னாள் அமைச்சர்) அழைத்து வந்திருந்தார். அவர் என்னிடம், ‘ரேடியோவ எடுத்தியாடே?’ என்றார். எனக்கு அவர் கேட்டது கூடப் புரியவில்லை. நான் அழுதுகொண்டே நின்றேன். என் முகத்தைப் பார்த்த வழக்கறிஞர் பரிதாபத்தோடு, ‘கள்ளம் கபடம் இந்தப் பையன் முகத்துல கொஞ்சம் கூட இல்ல சார். இவன் எடுத்திருக்க வாய்ப்பில்லை’ என்றார்.

ஆனால், இல்லாதவர்கள் திருடுவார்கள் என்றுதானே ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் நினைக்கிறது. அதைத்தான் காவல்துறையும், குஞ்சு வீட்டாரும் கூட நினைத்தார்கள். அத்தானிடமிருக்கும் ரேடியோவை கேரளாவிலிருந்து உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்று சப்தமிட்டார்கள்.

அலைபேசியே இல்லாத அந்த காலத்திலும் டிரங்கால் புக் செய்து அவர்கள் தங்கியிருந்த அருகாமை வீட்டு தொலைபேசி வழி, அத்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது நாள் அத்தான், அவரோடு வேலை செய்து கொண்டு நின்ற எனது சித்தப்பா மகன் வர்க்கீஸ் இருவரும் வந்தனர். ரேடியோ சகிதமாக காவல் நிலையத்திற்குச் சென்றோம். வழக்குத் தொடுத்தவர்களும் வந்திருந்தனர்.

அத்தானின் ரேடியோவைப் பார்த்த வழக்கறிஞரும் காவலரும் குஞ்சு வீட்டு மணி மற்றும் அவரது சகோதரரிடம், ‘இது உங்கள் ரேடியோவா?’ என்று கேட்டார்கள். அவர்கள் பதில் சொல்லாமல் நிற்கவே, ‘உங்க கம்ளெயண்ட்ல பிலிப்ஸ் ரேடியோ காணமப் போனதா, எழுதியிருக்கீங்க. இது மர்பி ரேடியோ. வீணா இந்த சின்னப் பையன சந்தேகப்பட்டு பிஞ்சுலேயே ஸ்டேசனுக்கு வரவச்சிட்டீங்களே! அவன் மச்சான் வேற, கேரளத்துலருந்து வந்திருக்காரு. வேலை நஸ்டம்; போக்குவரத்துச் செலவு நஸ்டம். எல்லாம் உங்களாலத்தான். ஆனா திருடன நாங்க புடிக்காம விட மாட்டோம் என்றார்.

வழக்கறிஞர் லாறன்ஸ் அவர்கள், ‘உங்க ரேடியோ காணாமப் போறதுக்கும் ஒரு மாசத்துக்கு முன்ன ஆற்றிங்கல்லருந்து இந்த மர்பி ரேடியோ வாங்கிருக்காங்க. அதோட, உங்க ரேடியோ தொலையிறதுக்கு முன்னமே, அவங்க மாமியார் வீட்டுக்குக் கொண்டுவந்து மூணு நாள் வச்சிட்டு கொண்டு போயிருக்காங்க. இந்தா பாருங்க, அவங்க ரேடியோ வாங்கின கடையில குடுத்த பில், கேரண்டி கார்டு எல்லாம் இருக்கு. இனி பேசுறதுக்கு ஏதாவது இருக்கா?’ என்றார். அவர்கள் தலை கவிழ்ந்து நின்றார்கள்.

காவலர் திரும்பவும் அவர்களிடம், ‘ஐந்தாம் வகுப்பு படிக்கிற ஒரு குழந்தை மேல கேஸ் போட்டீங்களே, அதோட மனசு என்ன பாடுபடும்ணு நெனச்சீங்களா?’ என்றார். நான் அங்கு பிடித்து கொண்டுவரப்படுகிற மற்ற குற்றவாளிகளையும், விலங்கிட்டுக் கொண்டு வரப்பட்ட திருடர்களையும் பார்த்துக் கொண்டு நின்றேன். ஒருவேளை என்னைப் போல் ஒன்றும் அறியாதவர்களும் அதில் இருந்திருக்கலாம்.

நாங்கள் தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்தோம். வந்ததும் என் அத்தானும் சித்தப்பா மகன் அண்ணன் வர்க்கீஸ் இருவருமாக என் கையில் மர்பி ரேடியோவைத் தந்து இலங்கை வானொலியைச் சத்தமாக வைத்து, அவர்கள் வீட்டு வழியே சித்தப்பா வீட்டிற்குச் செல்வது போல் இரண்டு மூன்று முறை அழைத்து வந்தனர். வரும்போதெல்லாம், ‘ஏழைங்க இல்லண்ணு ஏங்குவம், ஆனா திருடமாட்டோம் தெருஞ்சுக்கோங்கடே’ என்று சப்தமாகச் சொன்னது இன்றும் என் ஞாபகப் பொட்டிலிருந்து தெறித்து விழுகிறது.

ஒரு வாரத்திற்குப் பிறகு, காவலர்கள் அவர்களது நெருங்கிய உறவினர் ஒருவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் கையில் அவர்களது பிலிப்ஸ் ரேடியோவும் இருந்தது.   

இந்தப் பழி ஏற்றல் வேறு வேறு வடிவங்களில் இன்றுவரைத் தொடர்கிறது. நானும் அவற்றைத் துடைத்தெறிந்த படியே நகர்ந்து போகிறேன். இறைவன் எனக்களித்த கோட்டையை எட்டுவதற்கான பயணத்தில் இன்னும் நெடுந்தூரம் இருக்கிறது.           

(நினைவுகள் தொடரும்....)

 


2018 ஏப்ரல் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை