தொடர்புடைய கட்டுரை


பொருந்தாக் கல்வி...

அதிமேதாவி ஆனந்தன்

20th Jun 2018

A   A   A

“ஆனந்தா.. ஆனந்தா..” கூப்பிடும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். அங்கு என் பால்ய நண்பன் ஸ்ரீராம் நின்று கொண்டிருந்தான். பார்த்து நீண்ட நாள் ஆகி இருந்ததால் இருவர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள்...

“என்ன ஸ்ரீராம் இத்தனை நாள் எங்க போயிருந்தே?” கேள்வியுடன் பேச்சை ஆரம்பித்தேன்.

“அதுவா...” என்று பதிலளித்தவனுடன் என்னென்னவோ பேசி இறுதியாக இன்றைய தமிழக கல்வியின் நிலை என்பதில் வந்து நின்றது.

அதிக மதிப்பெண் வேட்டையில் மாணவர்களை கசக்கி பிழியும் பள்ளிகள், இருக்கும் பாடத்தில் பாதியை சொல்லித்தராமலே விடுவது, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் விடுவது, இதன் காரணமாக உயர் கல்வியில் பாடங்கள் புரியாமல் மாணவர்கள் தடுமாறுவது என அடுக்கிக் கொண்டே சென்றான்.

எப்போதுமே ஏதாவது ஒரு அப்போதைய பிரச்சினையை கையிலெடுத்து பேசாமல் விடமாட்டான் ஸ்ரீராம். இது அவனிடம் சிறு பருவத்திலிருந்தே ஒட்டிக்கொண்ட ஒரு பழக்கம்.

முடிவாக அத்தனைக்கும் பள்ளி நிர்வாகங்களே காரணம் என்றான் அவன். அதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. நீண்ட விவாதத்திற்கு பின்பும் முடிவின்றி இருவரும் விடை பெற்றோம். இப்போது மிஸ்டர் அனுபவம் என்னுடன் இணைந்து கொண்டார்.

“என்ன ஆனந்தா. ரொம்ப நீண்ட விவாதமோ என்றவரிடம் விவாதத்தின் சாராம்சத்தை சுருக்கமாக சொன்னேன்.

“உன் கருத்தும் நியாயமானதுதான் ஆனந்தா. ஆனால், இப்போது அவன் சொன்னதுபோல் பள்ளி நிர்வாகங்களும் மோசமாகவே நடந்து கொள்கின்றன. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? பன்னிரெண்டாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், கல்லூரிகளில் மிக மோசமான நிலையிலேயே படிப்பை தொடருகின்றனராம். இன்னொன்றும் கேள்விப்பட்டேன். பல மாணவர்கள் மனமுடைந்து செய்ய கூடாத காரியங்களில் ஈடுபடுவதற்கும் அதிலும் குறிப்பாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் கூட இத்தகைய மதிப்பெண் கல்வி முறைதான் காரணமாம்.” என்று அதிர்ச்சி செய்தியையும் சேர்த்து சொன்னார்.

“ஐயையோ... இந்த மதிப்பெண் பின்னால் ஓடும் கல்வி முறையை மாற்ற முடியாதா?” கேள்வி எழுப்பினேன்.

“அங்குதான் சிக்கலே உள்ளது! ஆரம்பத்தில் பள்ளிகள் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டன. அப்போது பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியாக டியூஷனுக்கு அனுப்ப ஆரம்பித்தனர். அதனை பயன்படுத்தி பல ஆசிரியர்கள் பள்ளியில் சரியாக பாடம் நடத்தாமல் மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து கூடுதலாக பணம் பார்க்க ஆரம்பித்தனர். இதனால் பாதிக்கப்பட்டது ஏழை மாணவர்களும், டியூஷன் போக விரும்பாத மாணவர்களும்தான். அதனால் புகார்கள் எழுந்தன.

“அதனால் பல பள்ளிகள் கூடுதல் நேர வகுப்புகளை (டியூஷன்) ஏற்பாடு செய்தன. இப்போது, நிலைமை மாறிவிட்டது. எந்த பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கின்றனர் என்பதில் போட்டியே நிலவுகிறது. காரணம், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதிக மதிப்பெண் வாங்கிய பள்ளியை தேடிச்சென்றே சேர்க்கின்றனர்.”

“அத்தனை தவறும் நம் மீதுதான் என்றால், அதை சரி செய்வது சுலபமாயிற்றே...”

“இப்போது திடீரென நம்மால் மாற்றிவிட முடியாது. பிரச்சனை பெற்றோர்களின் கையை மீறி சென்றுவிட்டது. பிள்ளைகள் தங்களுக்காக வேண்டாமென்றாலும், பள்ளியின் பெயருக்காக கட்டாயப்படுத்தப்படும் நிலை வந்துவிட்டது. இப்போது மக்கள் மாறினால் மட்டும் போதாது அரசும் தலையிட்டு சில சட்டங்கள் இயற்றினால்தான் இதை சரிசெய்ய முடியும் என்று நினைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.”

“அப்படி என்ன சட்டம் இயற்றினால் இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்கள்?”

“முதலாவதாக பள்ளிகள் தங்கள் பள்ளி விளம்பரங்களில் மாணவர்களின் புகைப்படத்தையோ, தனிப்பட்ட மதிப்பெண் விபரங்களையோ வெளியிட தடை விதிக்க வேண்டும். இரண்டாவது தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை கூறி விளம்பரம் செய்யவும் தடை விதிக்க வேண்டும். பதிலாக தங்கள் பள்ளியின் வசதிகள், மாணவர்களுக்கு பயிச்சியளிக்கப்படும் விதம், வகுப்பிற்கு எத்தனை மாணவர்கள் அனுமதிக்கப்படுவர், கூடுதலாக வழங்கப்படும் தனித்திறன் பயிற்சிகள், மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் (கவுன்சலிங்) வசதி உள்ளதா போன்ற தகவல்களை தங்கள் விளம்பரங்களில் உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய சிறிய சிறிய கட்டுப்பாடுகள் மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த இயலும்.”

“எல்லாம் சரிதான், பெற்றோர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமே? அங்குதானே பிரச்சனையே என்றேன் நான்.

சிரித்தபடி ஆமோதித்தார் என் கருத்தை. இருவரும் விடைபெற்றோம்...

 


மார்ச் 2016 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை