தொடர்புடைய கட்டுரை


நாம் செய்திருக்க வேண்டியது..!

அதிமேதாவி ஆனந்தன்

13th Aug 2018

A   A   A

அன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தனது கைப்பேசி வாட்சப்பில் வந்திருந்த செய்தி ஒன்றினை எடுத்துக்காட்டினார். அதில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தில் ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி கையில் கொஞ்சம் ரூபாய் நோட்டுடன் சோகமே உருவாக அமர்ந்திருக்கிறார். பக்கத்திலேயே அதைப்பற்றிய செய்தியும் இடம்பெற்றிருந்தது. அந்த மூதாட்டி மாதா மாதம் தனக்கு வரும் முதியோர் பென்சனை எடுக்க, அன்று வங்கிக்கு வந்திருக்கிறார். இவரது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லை என காரணம் சொல்லி அவருக்கு கிடைக்க வேண்டிய ஆயிரம் ரூபாயில் முன்னூற்று ஐம்பதை எடுத்துக்கொண்டு மீதம் எழுநூற்று ஐம்பது அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில்தான் என் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அதாவது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற்று அந்த பணத்தில் வாழ்க்கையை நடத்தும் ஒருவரால் எப்படி மூவாயிரமோ, ஐயாயிரமோ எடுக்காமல் வங்கியில் வைத்திருக்க முடியும்?

“முடியாதுதான் ஆனந்தா. அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் ஏற்படும் சிரமங்களுள் ஒன்றுதான் இது.”

“இதை வெறும் சிரமமாக மட்டும் பார்க்க முடியவில்லை மிஸ்டர் அனுபவம். இது மக்களிடம் நடத்தப்படும் கட்டாய வழிப்பறியாகவே உள்ளது. மிகச்சிறிய தொழில் செய்பவர்களால் எப்படி வங்கிக் கணக்கை வைத்திருந்து அதன் வழி வியாபாரம் செய்ய முடியும்” என் மனதில் எழுந்த கோபம் வார்த்தைகளில் வெடித்தது.

“உண்மைதான் ஆனந்தா. எப்போதும் உன் கேள்விகளுக்கு மிக சுலபமாக பதில் சொல்லிவிடும் என்னால் இதற்கு என்ன தீர்வு சொல்ல முடியும், புரியவில்லை. எப்படி யோசித்தாலும் அது சட்ட சிக்கலை தோற்றுவிப்பதாகவே அமைந்துவிடும். யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனந்தா. நானே இதுவரை சில ஆயிரங்களை தொலைத்தாகி விட்டது.”

“நம்மை போன்றவர்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால் இதில் அகப்படாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த மூதாட்டியின் நிலையில் இருப்பவர்களை நினைக்கும் போதுதான்..” அதற்குமேல் எதுவும் சொல்லாமல் நிறுத்தினேன்.

“உண்மைதான் ஆனந்தா. இதைப் பற்றி எந்த கட்சிகளோ அல்லது வேறு அமைப்புகளோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. யாரும் போராட்டம் நடத்தவும் முன்வரவில்லை.

”குறைந்தபட்சம், இந்த திட்டத்தில் இருந்து அரசு உதவி பெறுபவர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்ற வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்காவது விலக்கு அளித்திருக்க வேண்டும். அதைகூட செய்யவில்லை என்பது உண்மையில் வேதனைக்குரியதே.”

“சரி நம்மை போன்றவர்கள் என்ன செய்யலாம்?” கேள்வியுடன் மிஸ்டர் அனுபவத்தின் முகத்தை பார்த்தேன்.

“செய்யலாம் ஆனந்தா. ஒருவருக்கு ஒரு வங்கிக் கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை மூடிவிடலாம். கூடுமானால் குடும்பத்திற்கு ஒரு வங்கிக் கணக்கு மட்டும்கூட வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பல இடங்களில் நம் பணம் தேங்குவதை அல்லது பணம் பிடிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

”இன்னும் இதுபோன்ற மக்களின் நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கலாம்.”

“என்ன மிஸ்டர் அனுபவம் எப்போது நாம் என்ன செய்யலாம் என்று மட்டும்தானே பேசுவீர்கள். இப்போது நம்மால் என்ன செய்ய முடியும் என்று கை விரிக்கிறீர்களே!” ஆச்சரியத்துடன் அவரது முகத்தை பார்த்தேன்.

”ஹ ஹ ஹா” சத்தமாக சிரித்தவர், தொடர்ந்தார். “ஆனந்தா இதிலும் நாம் செய்ய வேண்டியது உள்ளது. சொல்லப்போனால் முன்பே கூட செய்திருக்க வேண்டும். அது நம் ஊர் வார்டு கவுன்சிலர் முதல் நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வரை நம் கஷ்டங்களை தெரிந்தவர்களை தேர்ந்தெடுப்பது தான்.

“இனிமேலாவது ஜாதி, மதம் கடந்து அரசியல் கொள்கைகளுக்காகவும், நல்ல திட்டங்களுக்காகவும் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம்தான், எதிர்காலத்திலாவது இதுபோன்ற துன்பங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்” என்றார் நிறைவாக.

”உண்மைதான் மிஸ்டர் அனுபவம் நாம் தான் நம்மீது திணிக்கப்படும் திட்டங்களுக்கு பொறுப்பு என்பதை புரிந்துகொண்டேன்.” என்றபடி விடைபெற்றேன். அவரும் விடைபெற்றார்.

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை