தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை - 5

குமரி ஆதவன்

11th Mar 2019

A   A   A

அப்போது நான் ஏழாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தேன். மேக்கு வீட்டுக் களத்தில் நானும் எனது சித்தப்பா மகன் இயேசுகுமாரும் தள்ளும் பிள்ளும் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரு முழம் கொண்ட நீண்ட ஒரு குச்சியும், ஒரு சாண் நீளம் கொண்ட சிறிய குச்சியும் கொண்டு விளையாடும் உன்னதமான விளையாட்டு இது.  இந்த இடம்தான் பலர் நெல் அறுத்துவந்து அடித்து நெல்லை தனியாகப் பிரிக்கின்ற இடம். இன்றுள்ள குழந்தைகளுக்கு களமும் தெரியாது நெல்லும் தெரியாது.

இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு மாணவனிடம், ‘அரிசி எங்கிருந்து கிடைக்கிறது?’ என்று கேட்டேன். அவன் எந்தத் தடுமாற்றமுமின்றி, ‘ரேசன் கடையிலிருந்து கிடைக்கிறது சார் என்றான். இன்னொரு மாணவனோ, ‘நாங்க ரேஷன் கடை அரிசி சாப்பிடமாட்டோம். மார்ஜின் பிஃரீ கடையிலருந்து தான் வாங்குவோம் என்றான். என் தேசத்தில் விவசாயமும் விவசாயியும் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதன் வேதனைப் பிழிவு இது. அடுத்தத் தலைமுறைக்கு விவசாயம் சார்ந்த எதையும் காட்டாமல் எல்லாவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகள் வீட்டிலேயே கொண்டு கொடுத்து எதுவும் தெரியாத இயந்திரங்களாக நம்மை மாற்றி வருவதன் அடையாளம்தான் இது.

களமும், நெல் அடித்த வைக்கோலை தரையிலே விரித்து, மிச்சம் சொச்சம் இருக்கும் நெல்லையும் பிரித்தெடுக்க மாடு கட்டி போரடிக்கிற அதிசயம் எல்லாம் மனிதனுக்கு இன்று அன்னியமாகிப் போயிருக்கிறது. கடைசியாக மிச்சும் வைக்கோலை மலைபோல் குமிக்கிற அழகே தனியழகு. இந்த வைக்கோல் பந்தலில் ஏறி தொட்டு விளையாடியதும், வைக்கோல் பந்தலில் சுற்றித்திரியும் புட்டான் (தட்டான் பூச்சி) பூச்சியைப் பிடித்து விளையாடிய ஆனந்தமும் இன்னும் மறந்தபாடில்லை. இண்டர் நெட்டும் வீடியோ கேமும் இல்லாத காலம் தந்த மகிழ்வு இன்று எங்கே இருக்கிறது? கடையிலிருந்து வாங்காத இயற்கையான விளையாட்டுப் பொருள்கள் தந்த மகிழ்வை பல ஆயிரம் கொடுத்து வாங்கும் விளையாட்டுப் பொருட்கள் தருமா? 

அன்றைக்கு மாலையில் தள்ளும் பிள்ளும் விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் இருவரும் மாறி மாறி வெற்றியும் தோல்வியும் அடைந்தோம். வென்றவர் தோற்றவருக்கு ‘காக்கா அடிக்கிற தண்டனை உண்டு. ‘காக்கா அடித்தல் என்றால், வென்றவர் பிள்ளை (ஒரு சாண் குச்சியை) தள்ளால் நீண்ட தூரத்தற்கு அடித்தல் ஆகும். தோற்றவர் ஓடிப் போய் அதை எடுத்து விட்டு ‘கா ... கா ... கா ....’ என்று கத்திக் கொண்டே எல்லைக் கோட்டை அல்லது பிள்ளை குழியைத் தாண்ட வேண்டும்.

நான் தோற்றபோது சரியாகக் தண்டனையை அனுபவித்தேன். ஆனால் எனது தம்பி இயேசு குமார் அவன் தோற்றபோதெல்லாம் எதேனும் காரணம் சொல்லி ஓடி ஒழிந்து கொள்வதும், நான் காக்கா வேண்டாம் என்றதும் மீண்டும் விளையாட வருவதுமாய் இருந்தான். ஒரு முறை அவன் தோற்றபோது நான் விடாமல் காக்காய் தண்டனை அனுபவித்தேயாக வேண்டும் என்று அவனை ஓட விடாமல் மறிந்துக் கொண்டு நின்றேன். அவனோ எனது முகத்தில் காறி உமிழ்ந்து விட்டான். எனக்கு எங்கிருந்து கோபம் வந்ததென்றேத் தெரியாது. எனது கையிலிருந்த பிள்ளைக் குச்சால் அவனது தலையில் ஒரு குத்து விட்டேன்.

அவன், அப்படியே சாய்ந்து களத்துத் தரையில் விழுந்துவிட்டான். அவனது பெயரைச் சொல்லி அழைத்தால் அவன் எழும்பவே இல்லை. தட்டிப் பார்த்தேன், அசையவே இல்லை. உருட்டிப் பார்த்தேன், அப்போதும் எந்த அசைவையும் அவன் காட்ட வில்லை. மயங்கி விழுந்தால் முகத்தில் தண்ணீர் தெளிப்பார்கள் என்பது தெரிந்ததால், பக்கத்து வீட்டிலிருந்து குடிப்பதற்கென்று தண்ணீர் வாங்கி வந்து அவன் முகத்தில் தெளித்துப் பார்த்தேன். அப்போதும் அவன் அசையவில்லை. நான் சரியாக பயந்து அழுது அழுது அவனை அழைத்துப் பார்த்தேன். அவன் பதிலேத் தரவில்லை. எனக்கு உடலெல்லாம் வேர்த்து வழிகிறது; யாரிடமும் போய்ச் சொல்லவும் அச்சமாக இருந்தது. அவன் இறந்து விட்டான், இனி என்னை போலீஸ் பிடித்துச் சென்றுக் கொன்றுவிடும் எனப் பயந்து மணலிக்கரை சந்தை பக்கமாக ஓடினேன்.

மணலிக்கரை சந்தையும், மேக்காமண்டபம் சந்தையும்தான் எனக்குத் தெரியும். காரணம் அப்பா இறந்த பிறகு இந்த இருச் சந்தைக்கும் எனது அம்மா கைக்குத்தல் அரிசி கொண்டு சென்று மொத்தவிலைக்கு விற்று வருவார்கள். நான் அண்ணன் எல்லோருமாக அரிசியைச் சுமந்து கொண்டு செல்வோம். அப்பா இறந்த பிறகு எங்களை வளர்ப்பதற்காக அரிசி விற்கிற தொழிலை அம்மா செய்யவேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டு விட்டது. காரணம் நாங்கள் எல்லோரும் ஆகச் சிறுவர்களாக இருந்தோம். வருமானம் வந்து கொண்டிருந்த சொத்துக்களும் அப்பாவின் மருத்துவச் செலவிற்காக அப்போது விற்றுத் தீர்ந்திருந்தது.

அம்மா மணலிக்கரைச் சந்தைக்குத்தான் போயிருப்பார்கள் என்ற நினைப்பில் மணலிக்கரைக்குப் போனால் அம்மா அங்கு இல்லை. நேரம் வேறு இருட்டத் தொடங்கியிருந்தது. பயத்தில் தாகம் எடுக்க, மணலிக்கரைச் சந்தைப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டிலிருந்து தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு நேராகச் செம்பருத்திவிளை வழி மேக்காமண்டபம் சந்தைக்கு ஓடி விட்டேன். இப்போது பசி ஒரு புறம்; பயம் மறுபுறம். என்னுடைய மனம் முழுவதும் என்னை இப்போது போலீஸ்காரர்கள் ஒரு புறமும், சித்தப்பா வீட்டில் உள்ளவர்கள் இன்னொருபுறமும் தேடிக் கொண்டிருப்பார்கள். நான் பிடி கிடைத்ததும் கொல்வார்கள். பாவம் எனது தம்பி இயேசுகுமாரை இப்படிச் செய்து விட்டேனே என்று வழி நெடுக அழுதழுது ஓடினேன்.

சந்தைக்குப் போனால், அம்மா அப்போதுதான் சந்தையில் அரிசியை விற்றுவிட்டுப் போயிருந்தார்கள். பயம், குற்ற உணர்வு இரண்டும் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. உப்பு விற்கிற இடம் மட்டும் அப்போது ஓலை வைத்துக் கட்டியிருப்பார்கள். அந்த உப்புக் கடையின் ஓரமாக ஒழிந்து உட்கார்ந்தேன். இதை என் ஊரிலிருந்து சந்தைக்கு வந்த சிலர் கண்டிருக்கிறார்கள். ஆனால் அம்மாவோடு நான் வழக்கமாகச் சந்தைக்கு வருவதால், அம்மா சந்தையில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் போய் விட்டார்கள்.

நேரம் இப்போது நன்றாக இருட்டியிருந்தது. வீட்டில் என்னைக் காணாமல் அம்மா, ஊரெல்லாம் தேடியிருக்கிறார். கடைசியில் யாரோ நான் சந்தையில் நின்றதைச் சொல்ல, எனது மூத்த அண்ணனை (கிறிஸ்துதாஸ்) அம்மா சந்தையில் தேடச் சொல்லியிருக்கிறார். அண்ணன் சந்தைக்கு வந்து நான் பதுங்கி இருப்பதைக் கண்டு, என்னை அழைத்து வந்தான்.

அண்ணன், ‘ஏன் இங்குவந்து ஒழிந்திருந்தாய்?’ எனக் கேட்டதற்கு நான் பதிலேச் சொல்லவில்லை. ஆனால், ‘சித்தப்பா வீட்டுலருந்து யாராவது என்னத் தேடுனாங்களா? அங்கச் சண்டை ஏதும் உண்டுமா?’ என்று நான் அண்ணனிடம் கேட்கிறேன். அதற்கு அவன், ‘நீ அங்க போய் எதையாவது ஒடச்சுகிட்டு வந்தியோ?’ என்றான். எனக்கு ஒன்றும் புரியவும் இல்லை. உண்மையைச் சொல்லுகிற தைரியமும் வரவில்லை.

கோயில் அருகாமையில் வந்ததும் இதயத்துடிப்பு இன்னும் வேகமாகிறது. நேராக மேக்கு வீட்டுக் களத்திற்கேச் சென்று பார்ப்போமா? இன்னும் யாரும் பார்க்காமலே தம்பி அங்கு கிடக்கிறானோ என்னமோ? ஆண்டவரே அவனுக்கு ஒண்ணும் ஆகாமப் பாத்துக்கோ. இப்படியெல்லாம் மனம் துடிக்கிறது. நான் நடக்கத் தயங்கியதும் அண்ணன் கையைப் பிடித்தபடி அழைத்துப்போகிறான்.

வீட்டை நெருங்க நெருங்க இன்னும் பயம் அதிகரிக்கிறது. வீட்டைச் சுற்றி பனைமரங்கள் நின்றதால் அதன் இருள் நிலா வெளிச்சத்தை மறைக்கிறது. ‘பய கெடச்சாண்டி அம்மா!’ என்று அண்ணன் சொல்லவே, அம்மா ஓடி வந்து எனது முகத்தை சேலையால் துடைத்தபடி, ‘எதுக்கு மக்களே, ஓடிப்போய் சந்தையில ஒழிச்சிருந்த?’ என்று முகத்தைத் தடவவும், எங்கள் வீட்டிற்குள்ளிருந்து குதித்து வந்து, ‘நான் சொல்லுயேன்’ என்று சப்தமிட்டுச் சிரித்தான் சித்தப்பா மகன் இயேசுகுமார்.

எனக்கு உயிர் போகிறதா? வருகிறதா? என்றேத் தெரியவில்லை. ஒரு கணம் திகைத்தும் மகிழ்ந்தும் போனேன்.

அவன் சிரித்துச் சிரித்து, நடந்ததையெல்லாம் சொல்லி விட்டு, ‘நான் செத்ததுபோல நல்லா நடிச்சேன். இவன் பயந்து அழுதான். நான் இன்னும் அழட்டும்ணு மூச்சப் பிடிச்சுகிட்டுக் கெடந்தேன். இவன் அம்மிங்கிருக்கிட்ட (அந்தச் சமூகத்துப் பெண்களை அப்போது அப்படித்தான் சொல்வார்கள்), குடிக்கதுக்கு தண்ணி கேக்கும்ப எழுப்பிட்டு, கிட்ட வந்ததும் மூச்சுவிடாம கெடந்துட்டேன். இவன் தண்ணிய மேல்ல, ஊத்துனப்பவும் கம்முண்ணு கெடந்தேன். நல்லா பயந்து அழுதுட்டே ஓடுனான். நான் எழும்பி எங்க வீட்டுல போய் நல்லா இறச்சி வச்சி சோறு சாப்பிட்டுகிட்டு பெரியம்மக்க வீட்டுல ஒறங்கப்போறேன்ணு சொல்லிட்டு வந்தேன் என்று துள்ளித் துள்ளிச் சிரித்தான். இன்று வரைக்கும் இந்த நிகழ்வையும் அது ஏற்படுத்திய அசாதாரண அசைவுகளையும் என் நெஞ்சம் மறக்கவில்லை.

(நினைவுகள் தொடரும்....)

 


2018 மே மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.