தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை– 6

குமரி ஆதவன்

29th Mar 2019

A   A   A

சிறு வயதிலேயே எதிலும் ஆழமும் விரிவும் தேடுகிற குணமும் என்னிடம் இருந்தது. விளையாடும் சூழல் இல்லாத நேரங்களில் பொருட்களை உடைப்பது சேர்ப்பது இதுதான் எனது பணியாகவே இருக்கும். எங்கிருந்தேனும் ஒரு துண்டு கம்பி கிடைத்தால் உடனே அதில், ஏதேனும் ஒரு ஆயுதம் செய்துவிடுவேன். அடுப்பில் வைத்து பழுக்கக் காய்ச்சி அதை கல்லில் வைத்துச் சுத்தியால் அடித்து வேறு ஒரு வடிவத்திற்குக் கொண்டு வருவேன். அவை சிறிய கத்திபோல் வந்ததும் அதை கடைவைத்தல், வீடுகட்டுதல் போன்ற விளையாட்டுகளுக்குப் பயன்படுத்துவோம். சுத்தி அடி பட்டு இடது கை ஆள்காட்டி விரல் உடைந்தபோதும் இந்தப் பழக்கத்தை நான் நிறுத்தவில்லை. இந்தப் பண்பாற்றல் எனது மாணவப்பருவம் முழுவதும் இருந்தது.

விளையாடும் போது கை கால்களைக் கிழித்துக் கொள்வது, யாருக்கும் தெரியாமல் அத்தலபொருந்தி அல்லது முறியம் பச்சிலையைப் பறித்து சாறு பிழிந்து காயத்தில் இட்டு விட்டு, காயும்வரை வீட்டிற்கு வராமல் ஏதேனும் விளைகளில் ஒழிந்திருப்பது வாடிக்கையான ஒன்று. எங்கள் பருவத்து பெரும்பாலான மாணவர்களிடமும் இந்தக் குணம் இருந்தது. இன்றுள்ள பெற்றோர்களைப் போல் சின்ன உரசல் பட்டதும் மருத்துவமனைக்கு ஓடுபவர்களல்ல அன்றையப் பெற்றோர், “ஒன்றும் செய்யாது என்று குழந்தைகளுக்குத் தைரியம் ஊட்டுபவர்களாக இருந்தார்கள். வீட்டு மருந்துகளையேப் பயன்படுத்தி நோய்களைத் தீர்த்துக் கொண்டார்கள்.

வீட்டைச் சுற்றி பல்வேறு வகையானப் பச்சிலைகள் நிற்கும். இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலிக்கெல்லாம் பாட்டி வைத்தியம்தான். ஓடுவதும் விழுவதும் மருந்திடுவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி தான். இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்த வளர்ப்பு முறை என்னிடம் அச்சமில்லா வாழ்க்கையை உருவாக்கியிருந்தது. எதில் என்ன இருக்கிறது? இது இதை இப்படிச் செய்தால் என்னவாகும்? என்ற கேள்விகள் ஓயாமல் என்னிடம் ஒலித்துக் கொண்டிருக்கும். தீர்வு கிடைக்காததுவரை எனக்கு உறக்கமே இருக்காது. இன்றளவும் இந்தத் தேடல் என்னில் தொடர்கிறது.

என் நெஞ்சம் விட்டு மறக்காத ஒரு ஆராய்ச்சி நிகழ்வு நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது நிகழ்ந்தது. வேதியியல் பாடத்தில் எனக்கு விருப்பம் மிக மிகக் குறைவாகவே இருந்தது. எந்த அளவுக்கென்றால் காலாண்டுத் தேர்வுக்கு நூற்று ஐம்பதுக்கு இரண்டு மதிப்பெண்களும், அரையாண்டுக்கு நூற்றி ஐம்பதுக்கு ஏழு மதிப்பெண்களும் எடுக்கும் அளவுக்கு விருப்பம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

தமிழ் மீது எனக்குக் காதலே இருந்தது. மற்ற பாடங்கள் மீதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வேதியியல் தான் எனக்கு முற்றிலும் அன்னியமாகி விட்டது.  காலாண்டுத் தேர்வு விடைத்தாளைத் தந்துவிட்டு, “வருத்தப்படாத, இன்னும் நிறைய காலம் இருக்கு. அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி வரைக்கும் இருக்கு. முயற்சி செஞ்சா நிச்சயம் நல்ல மார்க் வாங்கிரலாம் என்ற எனது வேதியியல் ஆசிரியை மேரி ஜாயிஸ் அவர்கள், அரையாண்டு விடைத்தாளைத் தந்துவிட்டு கோபத்தில் சப்தமிட்டார்கள். அப்போது நான் பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசுகளைக் குவித்துக் கொண்டிருந்த நேரம். நான் போட்டிகளுக்குச் செல்வதால்தான் படிக்கவில்லை என்ற கோபத்தில், “வேணும்ணா பாரு, பொலிட்டிக் ஸ்பீக்கர் ஆவுறதுக்குத்தான் நீ லாயக்கு. படிச்சு பணிரெண்டாம் வகுப்பு பாசாகுறது நடக்காது போலத்தான் இருக்கு. பிறாக்டிகல்ல ஐம்பதுக்கு ஐம்பது வாங்கியிருக்கல்ல. கொஞ்சம் தியறியும் படிச்சா என்னவாம். மேடையில பரிசு வாங்கும்போது கை தட்டுறவங்க எல்லாம் நீ பெயிலாயிட்டண்ணா திரும்பிக்கூடப் பாக்க மாட்டாங்க. இதரத் திறமைத் தேவைத்தான், அதோடப் படிப்பும் வேணுமில்லையா?” என்று கோபத்தோடு பார்த்தார்கள். எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் அவர்கள் கோபப்பட்டது நியாயமாக இருந்தாலும் ஆச்சரியமாகவும் இருந்தது.

அரையாண்டிற்குப் பிறகு நான் மிகவும் சிரமப்பட்டு வேதியியல் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அடிப்படைத் தெரியாததால் ஆட்டம்தான் கண்டேன். ஓரளவு நான் படிப்பதைப் பார்த்துச் சந்தோசப்பட்ட என் ஆசிரியைக்கு நான் நடத்திய ஆய்வுக்கூட ஆராய்ச்சி அதிர்ச்சியைத் தான் தந்தது.

1998 சனவரி மாதம் இரண்டு பாடவேளை தொடர்ச்சியாக இருந்த ஒரு நாள் எளிய உப்பைக் கண்டறியும் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது எல்லா இரசாயினங்களும் ஆய்வறைக்கு இருபக்கத்திலும் வரிசையாக வைத்திருப்பார்கள். திரு. பயஸ் அவர்கள்தான் ஆய்வக உதவியாளர். அவர் உப்பைத் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்வார். நாங்கள் பரிசோதனையை ஆரம்பிப்போம். ஆமில உப்பையும் (குளோரைடு, நைட்ரேட், சல்பேட், கார்பனேட், சல்பைடு) கார உப்பையும் (காரியம், தாமிரம், அலுமினியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம், பேரியம், மெக்னீசியம்) கண்டறிய வேண்டிய நான், அன்றைக்குச் சோதனைக் குழாயை எடுத்து உப்பைப் போட்டதும் எனக்கு ஒரு அபூர்வ ஆசை பிறந்தது. ஆய்வகத்தில் இருக்கும் அனைத்து திரவங்களையும் சோதனைக் குழாயில் உப்போடு ஒன்றாகச் சேர்த்தால் என்ன நடக்கும் என்று அறிய ஆசை வந்தது. மாணவர்களும் மாணவியரும் குழுமி நின்றதால் ஆசிரியைக் காணமாட்டார் என்ற நம்பிக்கையில் மெதுவாகச் சென்று, சில்வர் நைட்ரேட், நீர்த்த கைட்ரோ குளோறிக் அமிலம், பெரஸ் சல்பேட், பொட்டாசியம் அயோடைடு, பொட்டாசியம் பெறோ சயனைடு, அமோனியம் நைட்ராக்சைடு என ஒவ்வொரு திரவமாக பத்துச் சொட்டுகள் வீதம் விட்டேன். சுமார் பத்துக்கு மேல் பாட்டில்களைத் திறந்து விட்டு விட்டேன்.

அப்போது நான் சல்பியூரிக் அமிலத்தை சோதனை குழாயில் விட்டதாக நினைவு. கண் இமைக்கும் நேரத்தில் சோதனை குழாய் வெடித்துச் சிதறியது. ஆசிரியையிடம் பிடிபட்டுவிட்டேனே என்று நான் சங்கடப்பட, ஓடி வந்த எனது ஆசிரியை எனது வயிற்றை அழுத்திப் பிடிக்கிறார்கள். குனிந்து வெக்கத்தோடு நான் பார்க்க அவர்களது கையை மீறி இரத்தம் வடிகிறது. சட்டையில் பல இடங்களில் எரிந்திருந்தது.

அடிக்கவோ, திட்டித் தீர்க்கவோப் போகிறார்கள் என்று பயந்தால், நடந்தது எதையும் கேட்காமல் என்னை பயஸ் அவர்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். கார்மெல் மருத்துவமனைக்குச் சென்று தையலிட்டுத் திரும்பி வந்தபிறகுதான், என்ன நடந்ததென்று கேட்டார்கள். நான் எதையும் மறைக்கவில்லை. என் ஆசையையும் நான் செய்ததையும் ஒன்று விடாமல் சொன்னேன். என்னைத் திட்டாமல், “ஆய்வு செய்யும்போது இதுவெல்லாம் சகஜம்தான். ஆனாலும் கவனம் வேணும். விஞ்ஞானி அகிறதுக்கு முன்ன பனிரெண்டாம் வகுப்புல பாஸ் பண்ணிரு என்றபடிச் சிரித்தார்கள்.  அப்போது அவர்கள் காதில் அணிந்திருந்த பெரிய வளையம் அவர்களையும் தாண்டிச் சிரித்துக் குலுங்கியதை இன்றளவும் மறக்க முடியவில்லை.

நான் அன்றாடம் குளிக்கும்போதெல்லாம் அன்று வயிற்றில் கண்ணாடித்துண்டு கிளித்து தையல் இட்ட வடு, எனது மரிய கொரற்றிப் பள்ளியின் வேதியியல் ஆய்வகத்தையும், எனது வேதியியல் ஆசிரியையும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

நான் பனிரெண்டாம் வகுப்பில் வெற்றி பெற்றபோது அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இன்று அவர்களோடு அதே பள்ளியில் நானும் ஒரு எளிய ஆசிரியனாக இருப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

(இன்னும் நினைவு கூர்வேன் …)

 


2018 ஜூன் மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை