தொடர்புடைய கட்டுரை


கடற்கரை

பி.ரெ. ஜீவன்

28th Feb 2019

A   A   A

நிலமும் கடலும் சந்திக்கும் எல்லை கடற்கரை. இது நெய்தல் நிலம். இங்கு அலைகள் ஒய்வதில்லை. இவ்விடங்களில் மிக வேகமாக மாற்றங்கள் ஏற்படும். அலைகள் கடலிலிருந்து பல ஊட்டச்சத்துகளை கரைக்கு கொண்டு வருகிறது. கடற்கரை நில அமைப்பை மாற்றிக்கொண்டே வருகிறது.

கடல்மட்டம் ஒவ்வொரு காலத்துக்கும் வேறுபடும். பூமியின் மொத்த தட்பவெட்ப நிலை கடல்மட்டத்தை நிர்ணயிக்கிறது. அதிக குளிரான காலத்தில் தண்ணீர் பல இடங்களில் பனியாக உறைந்து இருக்கும். இதனால் கடலில் அதிக தண்ணீர் இல்லாமல், நிலம் வெளியில் இருக்கும். இந்த காலத்தில் கடல்மட்டம் மிக இறங்கி இருக்கும். வெப்பமான காலத்தில் எல்லா பனியும் உருகிவிடும், எனவே கடல்மட்டத்தின் அளவு மிக உயர்ந்து இருக்கும். பூமி இன்னும் வெப்பமடைந்தால் கடல்மட்டம் இன்னும் உயரும். பல நிலபரப்புகளை நாம் இழக்கவேண்டி இருக்கும்.

கடற்கரைக்கு அதிக அழகை கொடுக்கும் இடங்களில் ஓன்று காயல்கள் மற்றும் நிலத்தில் உள்ள ஆறு கடலுக்கு போய் சேரும் இடங்கள். இவ்விடங்களில் உயிரினங்கள் செழித்து வளர்கிறது. வற்றாத ஆறு இருந்தால், இவ்விடங்களில் நீர் இருந்துகொண்டே இருக்கும். காயலில் கடல்நீரும் ஆற்றுநீரும் கலக்கும். சில தாவரங்கள் உப்பு நீரில் கூட வாழ பழகியுள்ளது. இவை உப்பு சதுப்பு நிலங்கள் (Salt marshes) என்ற அழகிய சுற்றுச்சூழலை உருவாகியுள்ளது.

உப்பு சதுப்பு நிலங்கள் உப்பு நீரில் வாழும் தாவரங்களை நம்பியுள்ளது. இந்த தாவரங்களால் அதிக உப்பை சமாளிக்க முடியும். இந்த தாவரங்களை உண்ண நண்டு, நத்தை, சிப்பி போன்ற பல உயிரினங்கள் வருகிறது. அவற்றை உண்ண பெரிய விலங்குகள் இங்கு வருகிறது. இப்படி இவ்விடங்கள் பூமியின் மிக சத்தான இடங்களாக உள்ளது. சில இடங்களில் இவை உள்நாட்டு குளங்களை உருவாக்குகிறது. இப்படி சில குளங்கள் உப்பு நீராகவும், சில நல்ல நீராகவும் இருக்கும். இந்த குளங்களில் பல மிக பெரியவற்றுள் ஒன்று கேரளாவிலுள்ள வேம்பநாடு குளம். பல டால்பின்களும் (Dolphin) கூட கடலை விட்டு இங்கு வாழ வந்துள்ளன. இந்த குளங்கள் மிக அதிக உயிரினங்களை வாழ வைக்கிறது.

வேம்பநாடு ஒரு நல்ல நீர் குளம். கடல்மட்டத்தைவிட கீழ் இந்த குளம் இருந்தாலும், இங்கு கடல் நீர் புகவில்லை. இதற்கு குளத்திற்கும் கடலுக்கும் இடையே இருக்கும் மண் தான் முக்கிய காரணம். வேம்பநாடு இந்தியாவின் மிக பெரிய குளங்களில் ஓன்று. உலகின் இரண்டாவது பெரிய குளம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ளது. அதன் பெயர் சிலிக்கா (Chilika) குளம். இது உப்பு நீர் குளம். இது பல புலம்பெயர்ந்த பறவைகளுக்கு (migratory birds) சரணாலயம். உப்பு நீராக இருந்தாலும், இங்கு பல்வேறு வகையான உயிரினங்கள் காணப்படுகிறது.

சில இடங்களில் காயல் ஒரு மிக பெரிய காட்டையே கடற்கரையில் உருவாக்குகிறது. இவ்வகை காடுகளை சதுப்புநில காடுகள் (Mangrove forest) என்று கூறுவர். உலகின் இரண்டாவது மிக பெரிய சதுப்புநில காடு சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் என்ற இடத்தில் உள்ளது. உலகின் மிக பெரிய சதுப்புநில காடு இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுந்தர்பன் (Sundarbans). UNESCO அந்த காட்டுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கான வங்காள புலிக்கு இந்த காடு மிக முக்கிய புகலிடம்.

ஆங்கிலத்தில் tide மற்றும் wave என்று இரண்டு வார்த்தைகள் உள்ளது. இதில் wave என்பது கடலலையை குறிக்கும். தமிழக கடற்கரைகளில் tide மிக அபூர்வமான ஓன்று. எனவே அதற்கு சரியான வார்த்தை தமிழில் தெரியவில்லை. கடற்கரையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு tide. சில இடங்களில், குறிப்பாக தீவுகளில் கடல்மட்டத்தின் அளவு காலையில் வேறு மாதிரியும், மாலையில் வேறு மாதிரியும் இருக்கும். காலையில் நிலமாக இருப்பது மாலையில் கடலடியில் இருக்கும். இது தினமும் நடைபெறும். இப்படி ஒவ்வொரு நாளும் கடல் நிலமாகும், நிலம் கடலாகும். இது தான் tide. இதை கடல்மட்டத்தின் ஏற்றம் மற்றும் இறக்கம் என்று கூறலாம். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த நிகழ்வை காணலாம். இது சூரியன் மற்றும் நிலவின் தாக்கம் கடல் நீரின் வடிவத்தை மாற்றுவதால் ஏற்படுகிறது. பல உயிரினங்கள் இந்த சூழ்நிலையில் வாழ அதனை மாற்றியுள்ளது.

சுந்தர்பன் காடுகளில் கடல்மட்ட ஏற்றதின்போது உப்பு தண்ணீர் நாட்டினுள் வரும். அங்கு உள்ள தாவரங்கள் உப்பு நீரை உறிந்து, அதில் உள்ள உப்பை மட்டும் வெளியேற்றும் திறன்படைத்தது. கடல்மட்டத்தின் இறக்கத்தின் பொது அவ்விடங்கள் காய்ந்து நீரற்றதாக இருக்கும். கடல்நீர் நாட்டினுள் நாளுக்கு ஒருமுறை வந்துபோவதால், சுந்தர்பன் போன்ற காடுகள் சிறு மீன்கள் வாழ ஒரு சரணாலயமாக இருக்கிறது. கடலில் வாழும் பெரிய மீன்களின் குட்டிகள் கடலின் உள் சென்றால், வேறு மீன்கள் எளிதில் இவற்றை உண்டுவிடும். எனவே பெரும்பான்மையான மீன்கள் அதன் வாழ்க்கையின் முதல் காலகட்டத்தை இப்படி பட்ட காடுகளிலும், பவள பாறைகளிலும், ஒழிந்து வாழ வசதியான இடங்களிலும் வாழும்.

கடல் சிறு மீன்களுக்கு மிக ஆபத்தான இடம். எனவே பல மீன்கள் நிலத்திலுள்ள ஆறுகளுக்கு வந்து முட்டையிடும். அந்த மீன்களின் வாழ்க்கையின் முதல் காலகட்டத்தை ஆற்றில் தான் செலவழிக்கும். வளர்ந்தபின் காயல் மூலமாக கடலுக்கு செல்லும். பின்பு அவை முட்டையிட நிலத்தில் உள்ள ஆற்றுக்கு வரும். இப்படிபட்ட ஒரு முக்கிய நிகழ்வு உலகின் சில இடங்களில் மிக பிரமாண்டமாக நடைபெறும். குறிப்பாக சால்மன் (Salmon) என்ற வகை கடல்மீன் நிலத்திற்கு வந்து முட்டையிடுவது, வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இயற்கையின் மிக பிரமாண்டமான காட்சிகளில் ஓன்று. இந்த மீன்கள் கடலிலிருந்து ஆறுவளியாக நிலத்துக்கு வந்து முட்டையிட்ட உடன் இறந்துவிடும். அவை ஆறு வழியாக வரும்போது கரடி, நரி, பறவைகள் போன்ற பல விலங்குகள் இந்த மீன்களை வேட்டையாடி உண்ணும். எவ்வளவு வேட்டையாடினாலும், அதிக சால்மன் மீன் அந்த ஆறுகளுக்கு ஒவ்வொரு வருடமும் வரும். இப்படி சால்மன் இறந்து தன் உடலை நிலத்துக்கு தியாகம் செய்கிறது. கடலில் உள்ள ஊட்டச்சத்து இந்த இறந்த மீன்கள் மூலமாக நிலத்துக்கு வருகிறது.

கடல் ஆமைகளும் முட்டையிட கடற்கரைக்கு வருகிறது. ஒவ்வொரு ஆமையும் எந்த கடற்கரையில் பிறந்ததோ, அதே கடற்கரைக்கு முட்டையிட வருகிறது. எப்படி அதே கடற்கரையை கண்டுபிடிக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. இந்த சிறு ஆமைகளில் பல கடலுக்கு செல்லாது. வழியிலேயே பிற விலங்குகள் வேட்டையாடிவிடும். இன்றைய காலகட்டத்தில் பல ஆமைகள் கடலுக்கு போய் சேர்வதில்லை.

கடற்கரை நிறைய வளங்களை நமக்கு தருகிறது. உலகின் மிக பழைய மற்றும் பிரமாண்டமான நாகரிகங்களில் மிக முக்கியமான ஓன்று கடற்கரையையே நம்பி வாழ்ந்து மற்றும் வளர்ந்து வந்தது. சிந்து சமவெளி, சுமேரியன் மற்றும் எகிப்து நாகரிகங்களுக்கு முன்பாகவே மத்திய தரைக்கடலில் ஒரு பிரமாண்ட நாகரிகம் இருந்தது. மத்திய தரைக்கடலினுள் உள்ள கிரேட் (Crete) என்ற தீவு உலக வர்த்தக மையமாக 7000 - 4000 வருடத்திற்கு முன் இருந்தது. அந்த நாகரிகத்தின் பெயர் மினோவன் (Minoan). வேறு இடங்களில் இருந்து உலோகங்களை எடுத்து இங்கு வெண்கலம் தயாரித்து பிற இடங்களுக்கு வணிகம் செய்தனர். மத்திய தரைக்கடல் மூலமாக உலக வர்த்தகத்தையே தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

மினோவன்களின் பலம் அவர்களின் கப்பல்படையில் இருந்தது. கப்பல் மூலமாக வாணிபம் செய்து அவர்களின் நாகரிகத்தை வளர்த்து செழிப்படைய செய்தனர். கடல் தரும் அனைத்து வரப்பிரசாதங்களையும் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இன்று அவர்களின் நாகரிகம் சிதைந்த பின் உள்ள சிறு துண்டுகளில் சிலவற்றை மட்டுமே காணமுடிகிறது. மிக பெரிய கப்பல்படையில் இருந்த கப்பல்களில் ஒரு சிறு துண்டுகூட இன்று கிடைக்கவில்லை. கடற்கரையில் வாழ்வதில் ஒரு மிக பெரிய அபாயம் உள்ளது. மினோவன்கள் அந்த அபாயம் வருவது தெரியாமல் இருந்தனர். சுமார் சில மணிநேரத்தில் அவர்களின் நாகரிகம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அவர்கள் சந்தித்த பெரும் அபாயம் சுனாமி.

மனிதன் இதுவரை பார்த்ததிலேயே மிக பெரிய எரிமலை வெடிப்பை மினோவன்கள் பார்த்தனர். அவர்கள் வாழ்ந்த தீவுகளில் ஒன்று எரிமலையாக வெடித்து சிதறியது. இது அதை சுற்றி இருந்த கடலில் ஒரு சுனாமியை ஏற்படுத்தியது. அந்த சுனாமியில் சுற்றி இருந்த தீவுகளிலும் கப்பல்களிலும் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இதில் ஒரு மினோவன் கூட தப்பிக்கவில்லை. சுனாமி என்றால் என்ன என்பதை 2004 இல் நாம் அனைவரும் பார்த்தோம். சிறு தீவுகளிலும், கப்பல்களிலும் இருந்த மினோவன்களை அழித்த சுனாமி அதைவிட பலமடங்கு பெரியது. வரலாற்றில் மினோவன் நாகரிகம் அழிந்தது ஒரு மிக முக்கிய நிகழ்வு. வேறு பல நாகரிகம் வளர இந்த நிகழ்வு வழிவகுத்து கொடுத்தது.

எவ்வளவு பெரிய நாகரிகமாக இருந்தாலும், இயற்கை சீற்றங்கள் அவர்களைவிட பலம்வாய்ந்தது என்பதற்கு மினோவன் ஒரு எடுத்துக்காட்டு. கடற்கரை அருகே உள்ள முக்கிய அமைப்பு பவளபாறைகள். அவற்றை பற்றி பின்பு பார்க்கலாம்.

 


2018 மே மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை