தொடர்புடைய கட்டுரை


ஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்

பி.ரெ. ஜீவன்

17th Sep 2018

A   A   A

ஆழ்கடலை ஆராய்ந்த மனிதர்கள், கடலின் ஆழத்தில் எந்தவித உயிரினமும் இருக்காது என்று எதிர்பார்த்தனர். ஆனால், அங்கு பல விசித்திரமான உயிரினங்கள் வாழ்வதை கண்டு வியப்படைந்தனர். அவற்றில் சில, கட்டுக்கதைகள் சொல்லும் கற்பனைக்கு எட்டாத அளவு அதிசய உடலமைப்பு உடையன. வேற்றுகிரகத்தில் இருந்து வந்த விலங்குகள் போன்று பல காட்சியளிக்கின்றன. பூமியின் இருண்ட எல்லையில் வாழும் விசித்திரமான விலங்குகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

கடலடியில் சுமார் 100 மீட்டருக்கு மட்டுமே சூரிய வெளிச்சத்தின் நேரடி தாக்கம் உயிரினங்களுக்கு இருக்கும். இந்த இடத்தில் இருந்தால் தான் ஒளிச்சேர்க்கை (photosynthesis) பயன்படுத்தி உயிரினங்களால் உணவு தயாரிக்க முடியும். எனவே அவ்விடத்தில் தான் பவள பாறைகள் மற்றும் பல தாவரங்களை காணமுடியும். கடலின் மேல் இருந்து 100 மீட்டர் கீழ் வந்தால், ஒரு வித்தியாசமான விசித்திர உலகம் தென்படும்.

உலகின் எல்லா விலங்குகளும் தாவரங்களை நம்பி வாழ்கிறது. தாவரங்கள் இல்லாவிட்டால் உணவு சங்கிலியின் (food chain) அடிப்படையே இல்லாமல் போய்விடும். அதன் மேல் இருக்கும் நீர் பெரும்பான்மையான சூரிய வெளிச்சத்தை மறைத்துவிடும். சுமார் 300 மீட்டர் ஆழத்தில் கரும் இருட்டாக தான் இருக்கும். அங்கு எந்தவித வெளிச்சமும் வராது. தாவரங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. பெரும்பான்மையான இடங்களில் கடலின் ஆழம் சுமார் 4 கிலோமீட்டர் (km). அங்கும் பல விலங்குகள் வாழ்கின்றன.

சுமார் 100 மீட்டர் ஆழத்தில், நீரின் அழுத்தம் கடல்மட்டத்தைவிட 10 மடங்கு அதிகமானது. அப்படி கீழ் செல்ல செல்ல நீரின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வரும். ஒவ்வொரு 100 மீட்டர் ஆழத்துக்கும் 10 மடங்கு நீரின் அழுத்தம் அதிகரிக்கும். அதாவது 1 கிலோமீட்டர் (km) ஆழத்தில் நீரின் அழுத்தம் கடல்மட்டத்தைவிட 100 மடங்கு அதிகமானது. நாம் அங்கு சென்றால் நீரின் அழுத்தத்தில் நம் எலும்பு அனைத்தும் முறிந்துவிடும். கடலின் பெரும்பான்மையான இடம் 4 கிலோமீட்டர் என்பதால், அங்கு கடல் மட்டத்தைவிட 400 மடங்கு நீரின் அழுத்தம் அதிகம்.

கடலடியில் நாம் செல்ல செல்ல, கடல் நீரின் வெப்பமும் குறையும். கடலின் ஆழம் பெரும்பாலும் ஒரு குளிர்ந்த பாலைவனம். சுமார் 200 மீட்டர் கீழ் தண்ணீர் தெள்ள தெளிவாக இருக்கும். அங்கு உயிரினங்கள் மிக குறைவாக இருப்பதால், அவை அவ்வளவு தெளிவாக இருக்கிறது.

ஆனால், அவ்விடங்களில் கடல் தண்ணீரில் சிறு சிறு தூசு போன்ற பொருட்கள் இருக்கும். இவை கடலின் மேல் வாழும் மற்ற விலங்குகளின் கழிவு மற்றும் இறந்த சடலங்கள். இந்த சிறு தூசி மெதுவாக கடலின் கீழ் செல்லும். இது பனி விழுவது போன்று இருக்கும். இதை கடல் பனி (Marine snow) என்று கூறுவார்கள். எப்போதும் ஏதாவது ஒருசில இடங்களில் கீழே விழுந்துகொண்டே இருக்கும். பெரும்பாலும் சிறு சிறு தூசி போன்று இருக்கும், சில வேளையில் இறந்த பெரிய மீன்கள் மற்றும் திமிங்கலங்களும் வரும்.

இந்த கடல் பனி தான் கீழ் இருக்கும் விலங்குகளுக்கு உணவு. பெரும்பான்மையான கடல் பனி சுமார் 1 கிலோமீட்டர் (km) ஆழத்துக்கு முன்பாகவே முடிந்துவிடும். சில பெரிய இறந்த சடலங்கள் மட்டுமே கடலடிக்கு செல்லும். பூமியின் ஆழமான பகுதிகளில், சுமார் 11 கிலோமீட்டர் (km) ஆழத்தில் கூட விலங்குகள் காணப்படுகிறது. பெரும்பான்மையான கடல் சுமார் 4 கிலோமீட்டர் (km) ஆழத்தில், கடலின் மேல் இருந்து இறந்து கீழே வரும் விலங்குகளின் சடலங்களில் 3% மட்டுமே வந்து சேரும். இவ்விடங்களில் உயிரினங்களே இல்லாததுபோன்று தோற்றம் அளித்தாலும், நம்மை ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அங்கும் விலங்குகள் வாழ்கிறது. அங்கு வாழும் விலங்குகளால் பல மாதங்கள் உணவின்றி வாழமுடியும். எப்போதாவது மேலிருந்து உடல்கள் வரும் என்று காத்துகொண்டு இருக்கும். வரும்பொது வரும் உணவை விட்டு வைக்காது. எனவே அங்கிருக்கும் விலங்குகள் அந்த உணவுக்கு போட்டி போடும்.

இந்த விலங்குகள் கடுமையான குளிர், கரும் இருட்டு, அதிக நீர் அழுத்தம் போன்ற பல கடுமையான சூழ்நிலையில் வாழ அதன் உடலமைப்பை மாற்றியுள்ளது. இதனால் இவற்றின் உடலமைப்பு பார்ப்பதற்கு மிக விசித்திரமாக இருக்கும். இவ்விலங்குகளை பிடித்து கடல் பரப்புக்கு கொண்டுவந்தால் அவை உடனடியாக இறந்துவிடும். இவற்றில் சில, மேல் வாழும் விலங்குகள் போன்ற உடல் தோற்றத்தை சிறிது பெற்று இருக்கின்றன. மற்றும் சில விலங்குகளை எந்த பட்டியலில் வகைப்படுத்தலாம் என்றே தெரியவில்லை. சிறு விலங்கில் துவங்கி பெரிய சுறா வரை இங்கு காணப்படுகிறது.

இங்கு வாழும் பல விலங்குகள் ஒளி ஊடுருவும் உடல் அமைப்பை உடையவை. இவைகளால் மற்ற விலங்குகளை பார்க்கவும் முடியவேண்டும், அதே சமயத்தில் வேறு விலங்குகள் தன்னை கண்டுபிடிக்க முடியாதவாறும் இருக்கவேண்டும். சில விலங்குகள் கடல் பனியை உண்கிறது, மற்றும் சில இவ்விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன.

      ஆழ்கடலில் வாழும் உயிரினங்களுக்கு எப்போதாவது கிடைக்கும் உணவை வைத்து பல வாரங்கள் உயிர்வாழவேண்டும். எனவே அவை அதிக ஆற்றலை வேட்டையாடுவதற்கோ, பாலியல் துணையை தேடுவதற்கோ செலவழிக்க முடியாது. மிக சிக்கனமாக செயல்படவேண்டும். எனவே இந்த விலங்குகள் பெரும்பாலும் மிக மெதுவாக தான் நகரும்.

வேட்டையாடுவதற்கும் பாலியல் துணையை தேடுவதற்கும் சில விலங்குகள் “உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி” (Bioluminescence) முறையை பயன்படுத்துகிறது. உணவை தேடி போவதைவிட, உணவை தன்பக்கம் வரவைப்பது தான் எளிது. மின்மினி பூச்சிகள் உடலில் இருந்து உற்பத்தியாகும் ஒளி போன்று, இவையும் அதன் உடலில் இருந்து ஒளியை உற்பத்திசெய்யும். மிக அழகான மற்றும் பல வண்ணங்கள் நிறைந்த ஒளி இதன் உடலில் இருந்து வரும். தெரு விளக்கில் ஈசல் ஈர்க்க படுவதுபோன்று, வேறு விலங்குகள் இந்த ஒளியை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இதை பயன்படுத்தி அவை வேட்டையாடும்.

பல விலங்குகள் பாலியல் துணையை எப்போதும் தன்னுடன் கூட்டிகொண்டே செல்லும். அவைகளின் உடல் எப்போதும் இணைத்தே இருக்கும். ஆழ் கடலில் பாலியல் உறவினரை தேடுவதைவிட, எப்போதும் கூடவே செல்வதுதான் எளிது. ஆனால் பெரும்பான்மையான விலங்குகள் பாலியல் துணையை தேடித்தான் செல்கின்றன. அதற்கு பல “உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளியை” பயன்படுத்துகின்றன.

      இவற்றில் பல விலங்குகள் பரிணாமத்தை நிறுத்தியுள்ளது. சுமார் 7 கோடி ஆண்டுகள் முன்னதான சுறா மீன் படிவங்கள் பல நமக்கு கிடைத்துள்ளன. அதே சுறா, எந்தவித உடல் மாற்றமும் இல்லாமல் அப்படியே அங்கு காணப்படுகிறது. பரிணாமத்தை முற்றிலுமாக நிறுத்தமுடியாது. இவை பரிணாமத்தின் விளைவுகளை குறைத்து பரிணாமத்தை மெதுவாக செல்லுமாறு மாற்றியுள்ளது. அந்த சூழ்நிலையில் வாழ தேவையான உடலமைப்பு ஏற்கனவே அந்த விலங்குகளிடம் இருந்தால், எதற்காக அவை பரிணாமத்தில் உடலமைப்பை மாற்றவேண்டும்.

      இவற்றில் பெரும்பான்மையான விலங்குகளை பற்றி மிக குறைவாக தான் நமக்கு தெரியும். ஒவ்வொருமுறை ஆழ்கடலில் நாம் செல்லும்போதும், புது புது விலங்குகளை அங்கு கண்டுபிடித்து வருகிறோம். பெரும்பான்மையான விலங்குகளை சில நிமிடங்கள் மட்டுமே நாம் பார்த்துள்ளோம். அங்கு வேறு என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

      இங்கு வாழும் விசித்திர விலங்குகளில் ஓன்று இராட்சச கணவாய் (Giant Squid). இவை ஏறக்குறைய 20 மீட்டர் நீளம் உடைய கணவாய் மீன்கள். அவ்வப்போது கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும். ஆழ்கடலில் 2004 இல் ஒருமுறை மற்றும் 2012 இல் ஒருமுறை மட்டுமே நாம் இதை பார்த்துள்ளோம். இவைகள் இராட்சச திமிங்கலங்களை வேட்டையாடி உண்ணும்.

நாம் இந்த கட்டுரையில் பார்த்த அனைத்து விலங்குகளும் மறைமுகமாக சூரிய வெளிச்சத்தை நம்பி வாழும் விலங்குகள். மேல் இருந்து இறந்து கீழ் விழும் உயிரினங்களின் சடலங்கள் சூரிய வெளிச்சத்தின் உதவியால் உண்டானது. சூரிய வெளிச்சமே இல்லாமல் பல குகைகளில் பாக்டீரியாக்கள் (bacteria) வெறும் பாறையை உண்டு வளர்ந்து வருகிறது. அப்படி கடல் அடியே, சூரிய வெளிச்சத்தை நம்பாமல் பல உயிரினங்கள் உள்ளன. அவற்றை பற்றி அடுத்த மாதம் பார்க்கலாம்.

 


ஜூன் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை