தொடர்புடைய கட்டுரை


ஆழ்கடல் வெந்நீர் ஊற்று

பி.ரெ. ஜீவன்

23rd Aug 2018

A   A   A

ஆழ்கடல் ஒரு இருண்ட குளிர்ந்த உலகம். பெரும்பான்மையான இடம் ஒரு பாலைவனம். எந்தவித வெப்பமும் அங்கு வராது. ஆனால் சில இடங்களில் வெப்பம் பூமிக்கு அடியில் இருந்து மேல் வருகிறது. இவை ஆழ்கடல் எரிமலைகள், அல்லது ஆழ்கடல் வெந்நீர் ஊற்று (Hydrothermal Vent) என்றும் கூறலாம்.

பூமியின் மேற்பரப்பு பல தட்டுகளாக பிரிந்துள்ளது. இவற்றில் பல தட்டுகள் பிரியும் இடம் கடலடியில் உள்ளது. எடுத்துக்காட்டுக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் ஒரு பிளவு உள்ளது. இங்கு இரண்டு தட்டு உடைந்து தனித்தனியாக செல்கிறது. புது தட்டு உருவாகிக்கொண்டு வருகிறது. இப்படி பட்ட இடங்களில், பல எரிமலைகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. பூமியின் ஆழத்தில் இருந்து வெப்பத்தையும், இரசாயனங்களையும் அவை எடுத்துவருகின்றன. இந்த இரசாயனங்கள் ஆழ்கடல் குளிரில் உறைந்து நீள் உருளை போன்ற வடிவத்தில், பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்புகள் பல மீட்டர் உயரம் உடையவை. ஒரு சிறு எரிமலை போன்ற அமைப்பில் தோற்றம் அளிக்கும்.

ஆழ்கடலில் ஒரு குழாயில் இருந்து புகை வருவது போன்று தோற்றம் அளிக்கும். புகை போன்ற அமைப்பு, இரசாயனங்கள் கடல் நீருடன் கலப்பதால் ஏற்படுவது. இந்த வெந்நீர் ஊற்றுகளில் பல இரசாயனங்கள் கடலின் ஆழத்தில் உள்ள குளிர்ந்த தண்ணீரை வெந்நீராக மாற்றுகிறது. இந்த இரசாயனத்தில் பல ஊட்டச்சத்தும் இருக்கும். ஆழ்கடலில் இது ஒரு வரப்பிரசாதம். பல உயிரினங்கள் இதை நம்பி வாழ்கிறது.

1977இல் தான் முதன்முறையில் கிழக்கு பசிபிக் எழுச்சியில் ஆழ்கடல் வெந்நீர் உற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது உடனடியாக விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதில் இருந்து வரும் இரசாயனங்கள் சாதாரணமாக விலங்குகளுக்கு விஷமாக இருக்கும். ஆனால், அங்கு வாழும் விலங்குகளின் வகையும், எண்ணிக்கையும் அவர்களை ஆச்சரியப்பட வைத்தன.

பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய ஒளியால் தான் வாழ்கின்றன என்று நம்பி வந்தோம். ஆனால் இங்கு வாழும் விலங்குகள் முற்றிலுமாக சூரிய ஒளி இல்லாமல் வாழ்கின்றன. பூமியின் ஆழத்தில் உள்ள வெப்பத்தை நேரடியாக இவை சூறையாடுகின்றன. இவைகள் வாழ சூரியனே தேவையில்லை.

ஆழ்கடல் வெந்நீர் ஊற்றில் உள்ள இரசாயனங்களை பல கண்ணுக்கு தெரியாத விலங்குகள் சாப்பிடுகின்றன. அந்த சிறு கண்ணுக்கு தெரியாத விலங்குகளை உண்ண பல வகை மீன்கள், நண்டு, இறால், புழுக்கள், போன்ற பல வகை விலங்குகள் வருகிறது. இவை ஒன்றிக்கும் சூரிய ஒளியே தேவையில்லை. அனைத்திற்கும் ஊற்றில் இருந்து வரும் வெப்பமும், இரசாயனங்களும் போதுமானது.

ஒவ்வொரு இடங்களில் இருக்கும் ஊற்றிலும் வெவ்வேறு வகையான விலங்குகள் காணப்படுகின்றன. எந்த இரு ஊற்றிலும் ஒரே மாதிரியான விலங்குகள் இருப்பதை காண்பது அரிது. ஒவ்வோன்றும் தனிப்பட்ட வகையில் வளம் பெற்ற ஊற்றுகள். சில இடங்களில் கீழ் இருக்கும் ஊற்று அணைந்துவிட்டது. அவை அப்படியே உறைந்து, உயிரற்ற கூடாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு ஊற்றும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பாலைவனச் சோலை.

சில ஊற்றுகளை சுற்றி வாழும் விலங்குகள் மிக பெரிதாக, அதிவேகமாக வளர்கிறது. அந்த ஊற்றுகள் கொடுக்கும் ஆற்றலை இது பிரதிபலிக்கிறது. அதிக ஆற்றல் வந்தால் மட்டுமே விலங்குகள் அதிவேகமாக, மிக பெரிதாக எளிதில் வளர முடியும். சில புழுக்கள் இங்கு பல மீட்டர் நீளமுடையது. உலகில் மிக வேகமாக வளரும் புழுக்கள் இவ்விடங்களில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் சில 3 மீட்டர் நீளம் வளரும். ஒவ்வொரு ஊற்றிலும் ஏறக்குறைய 50 வகையான பெரிய விலங்குகளாவது காணப்படுகிறது.

இந்த விலங்குகள் முற்றிலும் இந்த ஊற்றை நம்பி வாழ்பவை. இந்த செழிப்பான விலங்குகளின் சமூகம் மிக அபாயத்தில் வாழ்கிறது. என்றாவது இந்த வெந்நீர் ஊற்று நின்றுவிட்டால், எல்லா உயிரினமும் இறந்துவிடும். பல விலங்குகளுக்கு இந்த இடம் பழகிவிடும். வேறு உணவை தேடி செல்ல தெரியாது. அவற்றின் அழிவு அங்கே நிகழ்ந்துவிடும். அவைகளுக்கு அந்த ஊற்று மிக அத்தியாவசியமான ஓன்று. திடீர் என்று எதிர்பாராத விதத்தில் ஊற்று நின்றுவிடலாம். ஊற்றுகள் நின்றதும் ஒரு முழுமையான சிறு உலகம் அணைந்துவிடும். இப்படிப்பட்ட குளிர்ந்த உயிரற்ற நினைவுச்சின்னங்கள் பலவற்றை கண்டுபிடித்துளோம். ஆழ்கடல் ஊற்று நினைவுச்சின்னங்களில் ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்த உயிரினங்களின் சடலங்கள் கனிமங்களாக மாறி காட்சியளிக்கிறது.

ஆழ்கடல் வெந்நீர் ஊற்றுகளில் ஒரு வகை, கார வெந்நீர் ஊற்றுகள் (Alkaline Vents). வேதியியலில் இரசாயனங்களை 2 வகையாக பிரிக்கலாம். ஓன்று காரம் மற்றொன்று அமிலம். இந்த வகை வெந்நீர் ஊற்றில் வரும் இரசாயனம் அனைத்தும் கார வகையை சார்ந்தது. அதாவது தண்ணீரை H2O என்று கூறலாம். அது திரவ நிலையில் இருக்கும்போது இது H மற்றும் OH- சாக இருக்கும். சாதாரண தண்ணீரில் H இன் அளவும் OH- இன் அளவும் சரியாக ஓன்று போன்று இருக்கும். சில இரசாயனங்கள் தண்ணீரில் உள்ள சில H சை திருடிவிடும். எனவே அந்த தண்ணீரில் OH- அதிகமாகிவிடும். இப்படி செய்யும் இரசாயனத்தை காரம் என்று சொல்லலாம். மாறாக H அதிகமாகிவிட்டால் அது அமில இரசாயனம்.

பூமியில் உயிரினம் எப்படி உருவானது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பல அருமையான கருத்துக்கள் முன்வைக்க பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஓன்று உண்மையாக இருக்கலாம். பெரும்பான்மையான விஞ்ஞானிகள் கார வெந்நீர் ஊற்றில் முதல் உயிரினம் தோன்றியிருக்கலாம் என்று கூறுகின்றனர். பூமியின் துவக்க கால கடல் அமில தன்மை உடையதாக இருந்தது. அப்போது அங்கு சில கார வெந்நீர் ஊற்றுகள் இருந்தன. இந்த இரு வகை தண்ணீரும் சேரும் பொது மின்சாரம் உற்பத்தியாகும். இந்த மின்சாரத்தை பயன்படுத்தி பூமியில் உயிரினம் உண்டாயிருக்கலாம்.

விண்வெளியில் இருந்து உயிரினம் முதலில் பூமிக்கு வந்திருக்கலாம் என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. இடி மின்னல் முதல் உயிரினத்தை பூமியில் தொற்றிவித்திருக்கலாம் என்றும் சில ஆதாரங்கள் உள்ளன. உயிரினம் துவக்க காலத்தில் தோன்றும்போது சாதாரண DNA வாக மட்டுமே இருந்தது. பின்பு பரிணாமத்தில் பல்வேறு உயிரினங்களாக அது இனப்பெருக்கம் செய்து மாறியது. துவக்க கால பூமியில் ஓசோன் படலம் (ozone layer) இல்லை. எனவே சூரியனில் இருந்து வரும் அல்ட்ராவயலட் (ultraviolet) கதிர்கள் பூமியின் பரப்பை நேரடியாக தாக்கியது. அல்ட்ராவயலட் கதிர்கள் DNA மேல் பட்டால், அது DNA வை அழித்துவிடும். எனவே முதல் உயிரினங்கள் பூமியின் பரப்பில் தோன்றியிருப்பது மிக கடினம்.

எனவே முதல் உயிரினங்கள் ஆழ்கடலில் தான் தோன்றியிருக்க கூடும். ஆழ்கடலில் கார வெந்நீர் ஊற்று மிக சிறந்த இடமாக இருந்திருக்கும். மற்ற உயிரினம் தோன்றிய கருத்துக்களைவிட இது தான் மிக உண்மையாக இருக்கும் என்று பெரும்பான்மையான விஞ்ஞானிகள் இன்று ஒத்துக்கொள்கின்றனர். எனவே சூரிய ஒளியை பயன்படுத்தும் உயிரினங்கள் பின்பு தான் தோன்றியது. முதல் உயிரினங்களும் ஆழ்கடலில் பூமியின் உள் இருக்கும் வெப்பத்தில் இருந்து தான் ஆற்றலை எடுத்துக்கொண்டு வாழ்ந்துவந்தது.

சில ஆழ்கடல் வெந்நீர் ஊற்றுகள் மிக பெரிதாக இருக்கும். கடல் மட்டம் வரைகூட பல உயர்ந்து வந்துள்ளது. இப்படி கடல் மட்டம்வரை வரும் வெந்நீர் ஊற்றுகளை நாம் தீவுகளாக உலகின் ஆங்காங்கே கடலில் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான தீவுகள் முதலில் ஆழ்கடல் வெந்நீர் ஊற்றுகளாக தான் உருவாகியுள்ளது. சில தீவுகள் கண்டங்கள் பிரிவதில் உருவாகிறது.

ஆழ்கடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தீவுகள் அருகே கடல் மட்டத்தில் கிடைக்கும். ஆழ்கடலில் உள்ள குளிர்ந்த நீரோட்டம் கடல் மட்டத்துக்கு பல அபூர்வ இரசாயனங்களை கொண்டு வருகிறது. இதனால் தீவுகளை சுற்றி உயிரினம் பல செழிப்புடன் வாழ்கிறது. கடல் மட்டம் அருகே சூரிய ஒளி இருப்பதால், உயிரினம் மிக செழிப்பாக அங்கு வாழும்.

தீவுகளை ஆழ்கடல் மலைகள் என்று கூறலாம். இவற்றில் சில மலைகள் கடல் தரையில் இருந்து அளர்ந்து பார்த்தால் இமையமலையைவிட உயரமானது. இந்த ஆழ்கடல் மலைகள், அதாவது தீவுகளை பற்றி அடுத்த மாதம் பார்க்கலாம்.

 


ஜூலை 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை