தொடர்புடைய கட்டுரை


தீவுகள்

பி.ரெ. ஜீவன்

21st Aug 2018

A   A   A

24 செப்டம்பர் 2013 அன்று பாகிஸ்தான் நாட்டின் தென் மேற்கு கடலில், ஒரு புது தீவு திடீர் என்று உருவானது. அந்த தீவு உருவானதை தொடர்ந்து ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. அந்த சின்ன தீவின் பெயர் ஷல்ஷலா கோஹ் (Zalzala Koh). இதே போன்று புது தீவுகள் அவ்வப்போது உலகில் ஆங்காங்கே உருவாக்கி வருகிறது. கடந்த 50 வருடங்களில் ஏறக்குறைய 10 புது தீவுகள் பூமியில் உருவாகியுள்ளது.

உலகின் பெரும்பான்மையான தீவுகள் கடலடியில் ஏற்படும் எரிமலை வெடிப்பால் உருவாகிறது. இவை கடல் ஆழத்தில் இருந்து கடல்மட்டம்வரை எழும்பி வந்த மலைகள். மலையின் உச்சியை தான் தீவுகளாக நாம் காண்கிறோம். கடலில் உள்ள எல்லா தண்ணீரையும் எடுத்துவிட்டால், இவைகள் மலைகளாகவே காட்சியளிக்கும். அதன் கீழிருந்து மேல்வரை அளந்து பார்த்தால் இதில் சில, இமையமலையை விட உயரமானது.

பல தீவுகள் மிக சிறியவை. உருவாகி சில ஆண்டுகளில் கடலடியே மூழ்கிவிடும். ஷல்ஷலா கோஹ் உருவானதிலிருந்து இன்று ஏறக்குறைய 3 மீட்டர் கடலினுள் மூழ்கியுள்ளது. அதன் உயரமான புள்ளி கடல்மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 20 அடி உயரத்தில் உள்ளது. இந்த தீவு சில ஆண்டுகளில் முழுவதும் கடலடியே சென்றுவிடும் என பல மண்ணியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மற்றும் சில தீவுகள் வளர்ந்துகொண்டே வருகிறது. ஜப்பான் நாட்டில் நிஷினோஷிமா (Nishinoshima) என்ற தீவு 1974இல் முதலில் உருவாகியது. அதை தொடர்ந்து அடிக்கடி பல எரிமலை வெடிப்பு ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து அந்த தீவை பெரிதாக்கியுள்ளது. 2013 முதல் 2015 வரை கூட அங்கு ஒரு பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு வெடிப்பின்போதும் அந்த தீவு பெரிதாகிறது. இன்று அதன் உயரமான புள்ளி கடல்மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 449 அடி உயரத்தில் உள்ளது. காலப்போக்கில் இது மேலும் வளரும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இது கல்டேறா (Caldera) என்ற இராட்சச வகை எரிமலையால் உருவாக்கப்பட்ட தீவு.

பல இடங்களில் எரிமலை கூட்டமாக உருவாகும். அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் ஓன்று ஏமன் (Yemen). அந்த நாட்டின் கடலில் உள்ளது ஜுபைர் (Zubair) தீவுகள். அதில் ஏறக்குறைய 10 தீவுகள் உள்ளது. அந்த தீவுகளில் மிக பெரியது ஜுபைர் தீவு. 2011 இல் அதன் அருகே சோலன் (Sholan) என்ற தீவும், 2013 இல் ஜாடிட் (Jadid) என்ற தீவும் உருவானது. இந்த தீவுகளின் கூட்டம் வளர்ந்துகொண்டே வருகிறது. ஜுபைர் உட்பட இவை அனைத்தும் மிக புதிதாக உருவான தீவுகள். ஜப்பான் நாடு போன்ற தீவுகள் இதைவிட பழமையானது.

தீவுகள் அதன் கீழ் இருக்கும் எரிமலையின் ஆற்றலினால் தான் தாக்கு பிடிக்கிறது. எரிமலை அணைந்துவிட்டால் தீவுகளினால் அதன் எடையை தாக்குபிடிக்க முடியாது. புவி ஈர்ப்பு விசை அந்த தீவை நிலைகுலைய செய்துவிடும். காலப்போக்கில் அந்த தீவுகள் அழிந்துவிடும். தீவுகளின் நிலைகுலைவை இன்றும் பல இடங்களில் காண முடிகிறது.

பழைய வயது முதிர்ந்த எரிமலையற்ற தீவுகள் உலகில் ஆங்காங்கே சிறு வளைவு வடிவத்திலும், நேர் கோடு போன்ற வடிவத்திலும் காணப்படுகிறது. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பசிபிக் பெருங்கடலில் உள்ள காலாபாகோஸ் (Galápagos) தீவுகளில் உள்ள ஓநாய் தீவு (Wolf Island). இந்த தீவின் வடிவம் ஒரு வட்டத்தில் உள்ள இரு வளைவு தனியாக பிரிந்து கிடப்பது போன்று காட்சியளிக்கும். இந்த தீவு ஒரு காலத்தில் ஒரு மலைபோன்ற அமைப்பு உடையதாக இருந்தது. அதன் நடு பகுதி ஒரு சிகரம் போன்று இருந்தது. இந்த சிகரம் இருந்த பகுதி தான் கனம் கூடின பகுதி. பின்பு அதன் கீழ் இருக்கும் எரிமலை அணைந்ததும், அதன் கனமான நடு பகுதி நிலைகுலைந்து கடலினுள் மூழ்கிவிட்டது. இப்போது அதன் இருபக்கத்திலும் இருந்த கனம் குறைந்த இடங்கள் இரு வளைவுகளாக காட்சியளிக்கிறது.

காலாபாகோஸ் புதிய மற்றும் பழைய தீவுகளின் கலவை. இதில் 16 பெரிய தீவுகளும், சுமார் 4 சிறு தீவுகளும் உள்ளது. இந்த தீவுகள் ஏறக்குறைய 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகின. நில்லுக்க மிக பழைய தீவுகள் ஏற்கனவே நிலைகுலைந்து தண்ணீரினுள் மூழ்கிவிட்டது. காலாபாகோஸின் சிறு தீவுகளில் ஒன்றான டாப்நீ மேஜர் (Daphne Major). ஓநாய் தீவு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை டாப்நீ மேஜர் பிரதிபலிக்கிறது. இதன் நடுவில் உள்ள கனமான பகுதி ஏற்கனவே நிலைகுலைந்துவிட்டது. ஆனால் ஓநாய் தீவு மாதிரி இது இரண்டாக உடையவில்லை.

இப்படி பல்வேறு வயதுடைய தீவுகளை காலாபாகோஸில் பார்க்கலாம். அதன் பெர்னாண்டின (Fernandina) தான் மிக இளமையானது. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் அது தோன்றியது. காலாபாகோஸின் பெரிய தீவான (Isabela) தீவில் பல புதிய மற்றும் பழைய தீவுகளின் அமைப்புகளின் கலவையை பார்க்கலாம்.

காலாபாகோஸ் போன்ற பல வயதுடைய தீவுகளின் கலவை பல்வேறு இடங்களில் உள்ளது. இதற்கு காரணம் பூமியின் தட்டுகள். பூமியின் பரப்பு பல்வேறு தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் மெதுவாக, நம் விரல் நகம் வளரும் வேகத்தில் நகர்ந்துகொண்டு வருகிறது. காலாபாகோஸ் பசிபிக் தட்டில் உள்ளது. காலாபாகோஸ் இருக்கும் இடத்தின் கீழ் ஒரு பிரம்பாண்டமான சூடான திரவ நிலையில் உள்ள பாறை மேல் எழும்பி வந்துகொண்டிருக்கிறது. இது பசிபிக் தட்டின் கீழ் இருக்கிறது. நிலநடுக்கத்தை அளக்கும் கருவியான நிலநடுக்கப்பதிவு (seismograph) பயன்படுத்தி இந்த திரவ நிலையில் உள்ள பாறையை படித்துள்ளோம். பூமியின் ஆழத்தில் இருந்து ஒரு குழாய் வடிவத்தில் இந்த இடத்தில் இது எழும்பி வந்துள்ளது. இது தான் காலாபாகோஸ் அங்கு இருப்பதற்கான காரணம்.

காலாபாகோஸ் கீழ் இருக்கும் திரவ நிலையில் உள்ள பாறை, பசிபிக் தட்டை துளைத்துவிட்டு மேல் எரிமலையாக எழும்புகிறது. இதனால் பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் இந்த தீவுகள் உருவாகத் துவங்கி, இன்று பிரமாண்ட தீவுகளாக காட்சியளிக்கிறது. பசிபிக் தட்டு இவ்விடத்தில் கிழக்கு பகுதியில் நகர்ந்து வருகிறது. அதாவது, தென் அமெரிக்காவை நோக்கி பசிபிக் தட்டு இவ்விடத்தில் நகர்ந்து வருகிறது. ஆனால், அதன் கீழ் இருக்கும் சூடான திரவ நிலையில் உள்ள பாறை அதே இடத்தில் நகராமல் அப்படியே இருக்கிறது.

புது தீவுகளை காலாபாகோஸ் கீழ் இருக்கும் சூடான திரவ நிலையில் உள்ள பாறை உருவாக்க உருவாக்க, மேல் இருக்கும் தட்டு நகன்று போகிறது. இதனால் புது இடம் இந்த திரவ நிலையில் உள்ள பாறையின் மேல் வந்துவிடுகிறது. அங்கு அது புது தீவுகளை உருவாக்கி வருகிறது. இளமையான தீவான பெர்னாண்டின இன்று காலாபாகோஸின் மேற்கு பகுதியில் உள்ளது. வயது முதிர்ந்த தீவுகள் கிழக்கு பகுதியும் தள்ளப்பட்டுள்ளது. ஒரு நாள் பெர்னாண்டினவும் அழித்துவிடும். ஓநாய் தீவு போன்று அதுவும் ஒருநாள் மாறிவிடும். இதுவே உலகின் எல்லா எரிமலை தீவுகளின் விதி.

தீவுகள் உருவாவதற்கு முன்பாகவே, அது உருவாகிக்கொண்டு வருவதை தண்ணீரின் அடியில் இருந்து பார்க்கலாம். கடல் மட்டம் அருகே வந்ததும், புது தீவு விரைவில் வருவதை எதிர்பார்க்கலாம். அதைப்போன்று இறந்துபோன தீவுகள் கடலின் கீழ் மூழ்கி இருப்பதையும் நாம் காணலாம்.

அதிக ஊட்டச்சத்துடைய நீரோட்டம் வழக்கமாக தீவுகளை சுற்றி இருக்கும். இதனால் தீவுகளை சுற்றி இருக்கும் நீரில் உயிரினங்கள் மிக செழிப்பாக இருக்கும். பவள பாறைகளை பார்க்க இது சிறந்த இடம். அண்மையில் இறந்துபோன தீவுகளின் மேல்பகுதியும் பவள பாறைகளால் மூடி இருக்கும். புதிதாக உருவாகப் போகும் தீவுகள் மேலும் அப்படியே. இது தான் தீவுகளின் சிறப்பம்சம்.

எல்லா தீவுகளும் எரிமலை வெடிப்பால் உருவானவை இல்லை. எல்லா தீவுகளும் காலப்போக்கில் ஓநாய் தீவு போன்றும் அழியாது. எடுத்துக்காட்டுக்கு இலங்கையை (Sri Lanka) எடுத்துக்கொள்ளுங்கள். இது கண்டங்கள் உடைந்ததால் ஏற்பட்ட சிறு துண்டு. இவ்விடங்கள் பல கோடி ஆண்டுகள் பழமையானது. ஆஸ்திரேலியா தான் உலகின் மிக பெரிய தீவு. அதுவும் கண்டங்கள் உடைவதால் ஏற்பட்ட தீவு.

கண்டங்கள் நகர்வதால் சில சிறு தீவுகள் ஒன்றாக இணைத்து பெரிய தீவாக மாறுகிறது. இப்படி தான் நியூசிலாந்து (New Zealand) தீவு உருவானது. நியூசிலாந்து நாட்டின் நடுவில் உள்ள மலைத்தொடர்கள் சிறு தீவுகள் இணைத்தபோது ஏற்பட்ட தழும்புகள்.

தீவுகள் திடீர் என்று கடல் நடுவே உருவானால், அங்கு எப்படி உயிரினங்கள், தாவரங்கள் வந்தது? பல மிக பெரிய விலங்குகள் கூட தீவுகளில் காணப்படுகிறது. அவை எப்படி அங்கு வந்தது. அடுத்த மாதம் அதைப்பற்றி பார்க்கலாம். காலாபாகோஸ் ஒரு சிறப்பம்சம் வாய்த்த தீவு. அது எப்படி உருவானது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்த்தோம், பின்பொரு மாதம் அங்கு வாழும் விலங்குகளை பற்றி பார்க்கலாம்.

 


ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை