தொடர்புடைய கட்டுரை


தீவுகளின் விலங்குகள் (Island Animals)

பி.ரெ. ஜீவன்

13th Aug 2018

A   A   A

உலகில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளது. ஒவ்வோன்றும் ஒரு தனிப்பட்ட சிறு நுண்ணிய உலகம். நம் மொத்த பூமியின் ஒரு சிறு வெளிப்பாடு. இந்த சிறு உலகங்களின் வாழ்க்கை கொடுக்கும் சவால்கள், பூமியின் மொத்த உயிரினங்கள் சந்திக்கும் சவால்களையும் பிரதிபலிக்கிறது. வேறு இடங்களைவிட, இங்கு பரிணாமம் (evolution) மிக வேகத்தில் நடைபெறுகிறது. பரிணாமம் நிகழ்வதை கண்முன் காட்டும் இடங்களில் தீவுகள் ஓன்று. பரிணாம கொள்கையை முதலில் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின் (Charles Darwin) மற்றும் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் (Alfred Russel Wallace) இருவரும் தீவுகளில் தான் முதலில் பரிணாமத்தை கண்டுபிடித்தனர். பரிணாமம் பற்றி நான் இந்த மாதம் எழுதாவிட்டாலும், அது தீவுகளில் உற்பத்தி செய்த விலங்குகளை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் பல வளங்கள் உள்ளது. ஒவ்வொரு விலங்கும் அந்த சுற்று சூழலில் உள்ள வெவ்வேறு வளங்களை சூறையாடி வாழ்கிறது. ஒரு பெரிய தீவு உருவாகும்போது அங்கு இந்த வளங்களும் உருவாகும். சாதாரணமாக கண்டங்களில் சில விலங்குகள் சூறையாடும் அதே வளங்களை தீவுகளில் வேறு விலங்குகள் சூறையாடும்.

எடுத்துக்காட்டுக்கு நியூசிலாந்து (New Zealand) தீவை எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு பறவைகள் ஆட்சிபுரியும் தீவு. எங்கு பார்த்தாலும் பறவைகள். பாலூட்டிகள், ஊர்வன போன்ற எந்த விலங்கும் அந்த தீவுக்கு செல்லவில்லை. அந்த தீவுக்கு சென்ற முதல் பாலூட்டி விலங்கு மனிதர்கள் தான். முதல் மனிதர்கள் நியூசிலாந்துக்கு சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் தான் சென்றனர். அதுவரை அங்கு வெறும் பறவைகள் மட்டும்தான்.

ஒரு எலி கூட நியூசீலாந்தில் கிடையாது. ஆனால் எலி செய்யவேண்டிய வேலையை சில பறவைகள் செய்கிறது. எலி வழக்கமாக நிலத்தில் உள்ள வளங்களை சூறையாடும். அதே போன்று அங்கு கிவி (Kiwi) மற்றும் காகபோ (Kakapo) என்ற இரு பறவைகள் நிலத்தில் வாழ்கிறது. காக்போ என்ற கிளி, பெருச்சாளி போன்று நிலத்தில் துவாரமிட்டு நிலத்தடியே வாழ்கிறது. இதை போன்று குரங்குக்கு பதிலாக வேறு சில பறவைகள் உள்ளன. பறவைகளை வேட்டையாடும் பறவைகளும் உள்ளன. இப்படி ஒவ்வொரு வளத்தையும் வெவ்வேறு பறவைகளே இங்கு சூறையாடுகின்றன.

ஒவ்வொரு தீவும் நியூசீலாந்து போன்று தான். வழக்கமாக கண்டங்களில் இருக்கும் அதே விலங்குகள் தீவுகளில் இருக்காது. எனவே தீவுகளில் வாழும் விலங்குகள் அங்கு உள்ள வெவ்வேறு வளங்களை சூறையாடி வாழ்கிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் வாழும் சில வெளவால்கள், பறப்பதை விட்டு கோழி மாதிரி தரையில் மேய்கிறது. தரையில் உள்ள சிறு பூச்சிகளை உண்டு வாழ்கிறது. மடகாஸ்கர் தீவில் மரங்கொத்தி பறவை கிடையாது. அங்கு வாழும் லெமூர் (lemur) என்ற வகை விலங்கில் ஒரு வகை அங்கு மரங்கொத்தி பறவை செய்ய வேண்டிய வேலையை செய்து வருகிறது.

கண்டங்களில் வாழும் விலங்குகளை விட தீவுகளில் வாழும் விலங்குகள் வித்தியாசமாக வளங்களை சூறையாட கூடும். காலாபாகோஸ் (Galápagos) தீவில் ஆடு, மாடு, மான் போன்றவை கிடையாது. அங்கு இருக்கும் புல்லை மேய்ந்து உண்ண, அவைகளுக்கு பதிலாக ஆமைகள் உள்ளது. ஆடுகளை மறுபடியும் அந்த தீவுகளுக்கு கொண்டு சென்றால், அது அந்த ஆமைகளின் உணவை தான் உண்ணும்.

கடல்வாழ் பறவைகள், கடல் ஆமைகள், நீர் நாய் போன்ற பல விலங்குகளுக்கு புது தீவுகள் முட்டை இட்டு குட்டியை வளர்க்கும் இடமாக திகர்கிறது. புது தீவுகளில் செடிகள் கூட வளர்ந்திருக்காது. இங்கு குட்டியை வேட்டையாட வேறு விலங்குகள் இருக்காது. பல்வேறு கடல் பறவைகள் இப்படிப்பட்ட தீவுகளை தான் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க பயன்படுத்துகின்றன. பல தீவுகளில் அதன் கீழ் இருக்கும் எரிமலை அதன் முட்டையை குளிரவிடாமல் அடைகாக்கும்.

ஒரு தீவின் அளவு, அதில் வாழும் விலங்குகளின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரிய தீவுகளில் அதிக வளங்களும் பல வகை நில அமைப்புகளும் இருக்கும். இது பல இராட்சச விலங்குகளை உருவாக்கியுள்ளது. இந்தோனேஷியா நாட்டின் கொமோடோ (Komodo) தீவுகளில் உலகின் மிக பெரிய பல்லி இன்றும் வாழ்கிறது. அவை இராட்சஸ விடும்புகளானகொமோடோ டிராகன்”. ஏறக்குறைய 40 லட்சம் ஆண்டுகளாக அவை கொமோடோ தீவுகளில் வாழ்ந்து வருகிறது. சுமார் 10 அடி நீளம் உடைய இந்த இராட்சஸ மாமிச விடும்புகளின் எண்ணிக்கை இன்று சுமார் 2000 உள்ளது.

மிக பெரிய பல்லிகள், ஆமைகள் போன்ற பல விலங்குகள் மிக பெரிய அளவுக்கு தீவுகளில் வளர்ந்துள்ளது. சுமார் 1100 வருடங்கள் வரை மடகாஸ்கர் தீவில் உலகில் வாழ்ந்ததிலேயே பெரிய பறவை வாழ்ந்தது. இந்த இராட்சஸ விலங்குகளுக்கு போதிய உணவு ஒரு தீவிகளில் கிடைக்காது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவைகள் எல்லாம்குளிர் இரத்த பிராணிகள்” (cold blooded animals). எனவே நம்மை போன்றவெப்ப இரத்த பிராணிகளைவிட” (warm blooded animals) பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான உணவே அவைகளுக்கு போதுமானது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர் போன்ற மிக பெரிய தீவுகளில் சிலவெப்ப இரத்த பிராணிகள்கூட மிக பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இன்று அவை அழிந்துவிட்டாலும், அந்த மிக பெரிய தீவுகளில் பல இராட்சஸ பறவைகள் வாழ்ந்துள்ளது. அவை இன்று வாழும் தீக்கோழியைவிட (Ostrich) மிக பெரியது. மனிதர்கள் மிக அண்மையில் அந்த தீவுகளுக்கு சென்ற பொது தான் அனைத்தையும் வேட்டையாடி அழித்துவிட்டோம்.

வெப்ப இரத்த பிராணிகளுக்கு அதிக உணவு தேவை. அவைகள் சிறு தீவுகளில் மாட்டிக்கொண்டால் அவை பட்டினியால் சாகும். எனவே அவைகள் பரிணாமத்தினால் அதன் உடல் அளவை காலப்போக்கில் பல தலைமுறையாக குறைந்து வரும். சிறு விலங்காக அவை மாறினால், அவைகள் வாழ தேவையான வளங்கள் குறைவு. உலகெங்கும் சிறு தீவுகளில் வாழும் வெப்ப இரத்த பிராணிகளின் உடல் அளவு, கண்டங்களில் வாழும் அதே விலங்குகளின் அளவைவிட மிக சிறியதாக இருக்கும். உலகெங்கும் உள்ள தீவுகளில் இதை காணலாம். ஆனால், கடந்த காலத்தில் சில பிரமிக்கத்தக்க அளவுக்கு சிறிய விலங்குகள் தீவுகளில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் படிமங்களாக நமக்கு கிடைத்துள்ளது.

மத்திய தரைக்கடலில் (Mediterranean sea) பல தீவுகள் உள்ளது. சில காலகட்டங்களில் இந்த கடலின் ஆழம் குறையும். இது கடல் அடியே இருக்கும் பல நிலங்களை வெளியே காட்டும். இதில் சில தீவுகள் அருகில் உள்ள நிலப்பகுதியுடன் பாதையால் இணைக்கப்படுகிறது. இந்த பாதைகளை பயன்படுத்தி, அந்த குறுகிய காலகட்டத்தில் அந்த தீவுகளுக்கு பல யானைகள் சென்றுள்ளது.

அந்த யானைகள் பல தலைமுறையாக அந்த தீவுகளில் குள்ளமாக மாறியுள்ளன. தீவுகளில் குறைவான உணவு தான் கிடைக்கும். சிறு உடல் இருந்தால், குறைவான உணவை வைத்து வாழ முடியும். எனவே பரிணாமம் அவைகளின் உடலமைப்பை காலப்போக்கில் சிறியதாக்கியது. அவைகள் யானைகள். ஆனால் அவைகள் ஒரு சிறு செம்மறி ஆட்டின் அளவு தான் இருந்தது. சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் அவை அழிந்துவிட்டது. அவைகளின் படிமங்களை கண்டுபிடித்ததும், அனைவரும் அது ஒரு யானையின் குட்டி என்று நினைத்தனர். ஆனால் அவை வளர்ந்த யானைகள் என்று இன்று தெரியவந்துள்ளது. அந்த யானையின் குட்டி ஒரு பெருச்சாளி அளவு தான் இருந்தது.

தீவுகளில் வாழ்ந்த குட்டி யானைகளை பார்த்து நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தால், அதைவிட ஒரு மிக பெரிய அதிர்ச்சி 2003இல் கொமோடோ அருகே இருக்கும் புளோரெஸ் (Flores) தீவில் கண்டுபிடிக்கபட்டது. இந்த கண்டுபிடிப்பு உலகின் எல்லா விஞ்ஞானிகளையுமே ஒரு அவநம்பிக்கையில் ஆழ்த்தியது. எல்லோரும் இது பொய் என்று உடனடியாக கூறினர். ஆனால் அது உண்மை தான். புளோரெஸ் தீவில் சுமார் 200 முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சிறு மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். இந்த சிறு புளோரெஸ் மனிதர்களை ஹொபிட் (Hobbit) என்று கூறுவர்.

ஹொபிட் படத்தில் காண்பிப்பது போன்ற தோற்றம் உடையவர்கள் அல்ல. இவர்கள் மூன்றரை அடி உயரம் மட்டுமே வளர்ந்த மனிதர்கள். இன்றைய நவீன மனிதனான Homo sapiens சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டு வெளியே வந்தான். நாம் ஆசியாவுக்கு வரும்போதே இங்கு வேறு இன (species) மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். இப்படி ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மிக பழமையான வேறு பல இன மனிதர்களில் ஒரு சிறு ஜனத்தொகை புளோரெஸ் தீவில் சிக்கி ஹோமோ ஃப்ளாரெஸியன்சிஸ் (Homo floresiensis) ஆக மாறியுள்ளது. இன்றைய நவீன மனிதன் புளோரெஸ் தீவின் ஹொபிட் மனிதனாக பரிணாமத்தில் மாறவில்லை. வேறு ஏதோ மிக பழைய இனம் அங்கு ஹொபிட் மனிதனாக மாறியுள்ளது.

இப்படி தீவுகளில் பல விசித்திர அளவில், மிக சிறிய அல்லது மிக பெரிய விலங்குகளை பரிணாமம் உருவாக்கியுள்ளது. மற்றும் சில விலங்குகள் பார்ப்பதற்கே விசித்திரமாக உள்ளது. இந்த விசித்திர இடங்களில் பரிணாமம் எப்படி நிகழ்கிறது என்பதை மிக வெளிப்படையாக பார்க்கலாம்.

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை