தொடர்புடைய கட்டுரை


அடர்ந்த காடு

பி.ரெ. ஜீவன்

26th Jul 2018

A   A   A

அடர்ந்த காடு உயிரினங்களுக்கு ஒரு சொர்க்க பூமி. பண்டைய தமிழர்கள் இந்த நிலத்தை முல்லை நிலமாக வகைப்படுத்தியுள்ளனர். உயிரினங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று இருக்கும். பெரிய மரங்களில் துவங்கி சிறு பூச்சிகள் வரை அனைத்தும் இங்கு வாழ்கிறது. மழை அடிக்கடி பொழிவதால், இதை வெப்பமண்டல மழைக்காடுகள் என்றும் கூறலாம். எல்லா செழிப்பும் இருப்பதால், இது மிக ஆபத்தான இடமும் கூட.

பூமியின் பரப்பில் 6 சதவிகிதத்தை விட குறைவான இடங்கள் மட்டுமே அடர்த்த காடாக இருக்கிறது. இங்கு பூமியின் விலங்குகளிலும் தாவரங்களிலும் ஏறக்குறைய 50 சதவிகித வகைகள் காணப்படுகிறது. அதிக சூரிய வெளிச்சமும், சரியான மழையும் இருப்பதால் இவ்விடங்கள் மரங்கள் வாழ மிக தகுதியான இடம். இந்த தாவரங்களை உண்ண பல விலங்குகளும், அவற்றை வேட்டையாட பல விலங்குகளும் இங்கு வரும்.

காடுகள் சொர்க்க பூமியாக காட்சியளிக்கலாம், ஆனால், இங்கு வாழும் அனைத்து விலங்குகளும் ஒரு மிக முக்கிய சவாலை சந்திக்க வேண்டும். உணவுக்கும் தங்க இடத்திற்கும் ஒவ்வொரு விலங்கும் தினமும் போராடவேண்டும். மற்ற விலங்குகளின் கண்ணில் தென்படாமல் இருப்பதும் ஒரு முக்கியமான திறமை. இந்த திறமையை சிறு வயதிலேயே படிக்காத எந்த விலங்குகளாலும், காடுகளில் வாழ முடியாது. நெரிசலான இடத்தில் எங்கு பார்த்தாலும் கண்கள் இருக்கும். தவறான சிறு அசைவு கூட மிக ஆபத்தானது. வேட்டையாடும் விலங்குகள் எப்போது, எங்கிருந்து வேண்டுமென்றாலும் தாக்கலாம். காடு ஒரு மிக ஆபத்தான இடம்.

சிங்கம் காட்டுக்கு ராஜா என்று கூறுவர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா துவங்கி பாரசீகம் வரை பல சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. மனிதர்கள் வேட்டையாடியதில் அவையனைத்தும் அழிந்துவிட்டன. ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சிசெய்தபோது சிங்கம் மற்றும் சிறுத்தைகளை வேட்டையாடினர். அதற்கு முன்பு இந்திய காடுகள் முழுவதிலும் சிங்கங்களும், சிறுத்தைகளும், புலிகளும் இருந்தன.

17ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் (Junagadh district) 1880இல் 12 சிங்கங்கள் மட்டுமே இருந்தது. அங்கு அப்போதிருந்த நவாப், இவை தான் ஆசியாவின் கடைசி சிங்கங்கள் என்பதை உணர்ந்தார். அவரது குடும்பத்தினர் அன்றிலிருந்து சிங்கங்களை பாதுகாக்க துவங்கினர். அவர்களின் முயற்சியில் ஆசியாவின் கடைசி சிங்கங்கள் பாதுகாக்கப்பட்டன.

பைபிளில் (Bible) பல இடங்களில் கூறப்படும் சிங்க இனமான ஆசிய சிங்கம், ஒரு காலத்தில் பாரசீகம், துருக்கி, இந்தியா முழுவதும், இஸ்ரேல், அரேபியா போன்ற இடங்களில் இருந்தாலும், இன்று குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. ரோமையர்கள் கிளாடியேட்டர் (Gladiator) என்ற வீர விளையாட்டுக்கு பயன்படுத்திய சிங்கங்கள் இவைகள் தான். பல பண்டைய போர்களிலும் இந்த சிங்கங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்திய அரசின் முயற்சியினால் அதன் எண்ணிக்கை அதிகரித்து, இன்று ஏறக்குறைய 500 ஆசிய சிங்கங்கள் உள்ளன.

கடந்த சில நூற்றாண்டில் நடந்த வேட்டையில் சில சிங்கங்களும், புலியும் இந்தியாவிலிருந்து உயிர் தப்பியது. ஆனால் இந்தியாவில் சிறுத்தைப்புலிகள் (cheetah) முற்றிலும் அழிந்துவிட்டது. 1948இல் இந்தியாவின் கடைசி 3 சிறுத்தைப்புலிகளும் சுட்டு கொல்லப்பட்டது. இந்தியா அரசாங்கம் அழிந்துபோன விலங்காக பட்டியலிட்ட முதல் விலங்கு இந்திய சிறுத்தைப்புலி. ஆனால் இந்த வகை சிறுத்தைப்புலிகள் (cheetah) முழுவதுமாக அழியவில்லை. ஈரான் நாட்டில் இவை இன்று காணப்படுகிறது. வெறும் 70 ஆசிய சிறுத்தைப்புலிகள் மட்டுமே இன்று உலகில் உள்ளது. இன்று அவைகளை ஈரானிய சிறுத்தைப்புலி (Iranian cheetah) என்று கூறுவர். பூமியில் மிக வேகமாக ஓடும் விலங்குகான சிறுத்தைப்புலி ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவை இன்று இல்லாமல் போனது வருந்தத்தக்கது.

ஆப்பிரிக்காவின் பல இடங்களில் இன்று சிங்கங்கள் காணப்படுகிறது. ஆனால் அவைகள் ஆசிய சிங்கங்களில் இருந்து மாறுபடுகிறது. அவை வேறு ஒரு இனம். அங்கு இன்று வாழும் பெரும்பான்மையான சிங்கங்கள் சமவெளிகளிலும் பாலைவனத்திலும் தான் வசிக்கிறது. எனவே அவற்றை அடர்ந்த காட்டுக்கு ராஜா என்று சொல்ல முடியாது. இன்று வாழும் விலங்குகளில் காட்டுக்கு ராஜா புலி. நம் இந்திய நாட்டின் தேசிய விலங்காக கருதப்படும் வங்காள புலி காட்டில் வாழ்வதில் ஒரு வல்லுநர்.

அடர்ந்த காட்டில் எல்லா திசையிலிருந்தும் கண்கள் பார்த்துகொண்டே இருக்கும். புலி வருவது தெரிந்தால் குரங்குகள், பறவைகள், மான்கள் மற்றும் பல விலங்குகள் எச்சரிக்கை கொடுத்துவிடும். இதனால் எல்லா விலங்குகளும் அந்த இடத்தைவிட்டு ஓடிவிடும். அப்படியாக புலிக்கு உணவு கிடைக்காது. காட்டில் வேட்டையாடுவது ஒருவகை கண்ணாமுச்சியாட்டம். இந்த கண்ணாமுச்சியாட்டத்தில் கைதேர்ந்த நிபுணர் புலி தான். அதனால் தான் அது அடர்த்த காட்டுக்கு ராஜா.

சிறு வயதிலிருந்தே ஒளிந்து வேட்டையாடும் கலையை கற்றுக்கொண்டு வரும் விலங்கு புலி. அது நடக்கும் சத்தம் கூட வெளியே கேட்காது. யார் கண்ணிலும் படாமல் இருந்தால் தான் வேட்டையாட முடியும். இந்த கலைகளை சரியாக கற்றுக்கொள்ளாத புலி உயிர்வாழ முடியாது.

பூமியில் காண்பதற்கு மிக அபூர்வ காட்சிகளில் ஓன்று புலி அடர்ந்த காட்டில் வேட்டையாடுவது. மிக குறைவான மனிதர்கள் மட்டுமே அந்த காட்சியை பார்த்துள்ளனர். புலி வேட்டையாடுவதை படம்பிடிப்பது மிகப்பெரிய சவால். பல ஆண்டுகள் முயற்சி செய்தும் இதுவரை மிக தெளிவான வேட்டையை சிலமுறை தான் பதிவு செய்துள்ளோம். அந்த அளவுக்கு புலி வேட்டை ஒரு அபூர்வ காட்சி.

அமேசான் காட்டில் புலி கிடையாது. அங்கு ஜாகுவார் (Jaguar) என்ற ஒரு பெரிய பூனை வேட்டைக்காரனாக உள்ளது. அவைகள் முதலைகளைகூட வேட்டையாடும் திறன்படைத்தது. எந்த வேட்டைக்காரனாக இருந்தாலும் இங்கு ஒழிந்து தாக்கும் திறனுடையதாக இருக்கவேண்டும். இந்த திறன் இல்லாமல் வாழ முடியாது. வேட்டையாடப்படும் விலங்குகள் பெரும்பாலும் சேர்ந்து வாழும். ஒன்றுபட்டு நிற்காவிட்டால் அவை சுலபமாக வேட்டையாடப்படும்.

காட்டில் வாழும் விலங்குகள் பெரும்பாலும் பயன்படுத்தும் நுட்பம் உருமறைப்பு (camouflage). பல பூச்சிகள், இலை போன்று தோற்றமளிக்கும். வேட்டையாடும் விலங்குகள் இதை பார்த்து இலை என்று நினைத்து விட்டுவிடும். மற்றும் சில மரம் போன்றும், பாறை போன்றும் தன்னை உருமறைப்பு செய்துகொண்டது. பல வேட்டைக்காரர்களும் உருமறைப்பு பயன்படுத்தியுள்ளது. சில பாம்புகள் பச்சை நிறமாகவே மாறி பச்சை இலைகளினுள் ஒழிந்து வேட்டையாடும். இப்படிப்பட்ட உருமறைப்பு செய்யும் விலங்குகள் பல அடர்ந்த காட்டில் தான் காணப்படும்.

நம் முன்னோர்கள் குரங்குகள் போன்று இருந்தபோது இப்படி பட்ட அடர்ந்த காட்டில் தான் வாழ்ந்து வந்தனர். சிறுத்தைகள் அவர்களை வேட்டையாடியதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காடு கொடுக்கும் சவால்கள், உணவு மற்றும் உறைவிடத்திற்கான போட்டி, ஒளித்து வாழும் திறன், கூடி வாழும் பண்பு, சக விலங்குகளின் எச்சரிக்கைகளை புரிந்துகொள்வது போன்ற பல திறமைகளை அவர்கள் அப்போது சேகரித்தனர். இந்த சவால்கள் நம் முன்னோர்களை வடிவமைத்துள்ளது.

சுமார் 2.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் 53 லட்சம் ஆண்டுகள் முன்பு வரை இருந்த காலகட்டத்தில் பூமியில் இன்று இருப்பதைவிட அதிக காடுகள் இருந்தது. பல்வேறு வகையான மனிதக்குரங்குகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்தது. அந்த காடுகளில் பல காலப்போக்கில் சுருங்கி அழித்துவிட்டது. இன்று சில மனிதக்குரங்குகள் மட்டுமே வாழ்கிறது. அதில் ஓன்று இன்று மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் வாழும் ஒராங்குட்டான் (Orangutan).

ஒராங்குட்டான்கள் மிக சாதுவான மனிதக்குரங்குகள். இவைகள் தாவரங்களை மட்டுமே உண்ணும். சில அபூர்வ நேரங்களில் மட்டுமே பறவை முட்டைகளை வேட்டையாடி உண்ணும். இவைகளின் வாழ்க்கை நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. ஒராங்குட்டான்கள் காட்டின் பல்வேறு இடங்களுக்கு வந்து போகும். எந்த மரம் எங்கு இருக்கிறது, அந்த மரத்தில் எப்போது பழம் பழுக்கும், வேறு எந்த இடத்தில என்ன உணவு உள்ளது என்பதை நன்றாக தெரிந்து வைத்துள்ளது. முழு காட்டின் ஒரு படம் அதன் மூளையில் பதிவுசெய்து வைத்துள்ளது. இந்த பதிவை பயன்படுத்தி தான், எப்போது எங்கு செல்லவேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும். காட்டின் ஒவ்வொரு சிறு சிறு தகவல்களை சேகரித்து படித்து வைத்து காட்டை அங்கு அது ஆட்சி புரிகிறது.

ஒராங்குட்டான் குட்டிகள் ஏறக்குறைய 10 வருடங்கள் அதன் தாயுடன் சேர்ந்து வாழும். தாய் ஒராங்குட்டான்கள் குழந்தைக்கு பல தகவல்களை கற்று கொடுக்கும். இதில் மிக முக்கியமாக காட்டின் மொத்த படத்தை குழந்தைக்கு கற்பித்து கொடுக்கும். இப்படி பட்ட வாழ்க்கைமுறைகளை நம் முன்னோர்களும் பின்பற்றி காட்டை ஆண்டுவந்தோம். காடு கற்பித்து கொடுத்த திறமைகளை பயன்படுத்தி பின்பு சமவெளிகளையும், அதற்கு பின்பு உலகத்தையும் ஆழத் துவங்கினோம்.

மனிதர்கள் மட்டுமல்ல, உலகின் எல்லா நிலவாழ் உயிரினங்களின் முன்னோர்களின் கதைகளும் காட்டில் இருந்து தான் ஆரம்பிக்கும். இந்த நெருக்கமான இடத்தின் பரிணாமம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளது. காடு நம் முன்னோர்களின் வீடு.

 


மார்ச் 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை