தொடர்புடைய கட்டுரை


சிகரங்கள்

பி.ரெ. ஜீவன்

20th Jul 2018

A   A   A

கைவிட்டு எண்ணும் அளவுக்கு சில சிகரங்கள் மட்டுமே 8 கிலோமீட்டரைவிட உயரமானது. அவை அனைத்தும் இமயமலைத்தொடரில் உள்ளது. அடர்ந்த பனி, கடும் குளிர், பனிப்புயல் மற்றும் பலத்த காற்றுடைய இடங்கள் இவை. பூமியில் உயிரினங்களுக்கு விரோதமான இடங்களில் இவைகளும் ஓன்று. பண்டைய தமிழர்கள் இந்த நிலத்தை குறிஞ்சி நிலமாக வகைப்படுத்தியுள்ளனர். இவை பூமியின் உயரமான எல்லை.

பூமியின் பரப்பு சில தட்டுகளால் ஆனது. அதில் இரு தட்டுக்கள் நேருக்கு நேர் மோதும்போது மலைத்தொடர்கள் உருவாகிறது. இந்திய தட்டு யூரேசியா (Eurasia) தட்டுடன் மோதும்போது இமயமலை உருவானது. இந்த மோதல் இன்னும் முடியவில்லை. எனவே இந்த சிகரங்கள் உயர்ந்துகொண்டு வருகிறது. உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மலை சிகரம் (Mount Everest) 8,848 மீட்டர் உயரமானது. இது வருடத்திற்கு சுமார் 4 (mm) மில்லி மீட்டர் உயர்ந்துகொண்டே வருகிறது. இமயமலையின் சில இடங்கள் வருடத்திற்கு சுமார் 7 (mm) மில்லி மீட்டர் உயரம் கூட இவை வளர்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் அதன் கீழ் இருக்கும் தட்டுக்களின் மோதல் தான்.

எவரெஸ்ட் மலை சிகரதை பலர் ஏற முயன்று தோற்றுப்போயுள்ளனர். இந்த முயற்சியில் பலர் உயிர் இழந்துள்ளனர். பூமியில் உயிர் வாழ தகுதியற்ற இடங்களில் இவைகள் ஓன்று. இந்த சிகரங்களை ஏறுவது மனித ஆற்றலுக்கு ஒரு சவால் தான். அந்த சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, அந்த சிகரங்களை ஏறினவர்களை உலக மனிதர்கள் அனைவரும் கொண்டாடும் அளவுக்கு, அங்கு செல்வது கடினம். ஏறக்குறைய 287 பேர் எவரெஸ்ட் சிகரதை ஏறும் முயற்சியில் உயிர் இழந்துள்ளனர். அதில் சுமார் 120 பேரின் சடலங்கள் மட்டும் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் எவரெஸ்ட் (George Everest) என்ற ஆங்கிலேயர் இந்தியாவில் மண்ணியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றும்போது 1841இல் எவரெஸ்ட் மலை சிகரதை கண்டுபிடித்தார். 1922 இல் துவங்கி பலர் இந்த மலையுச்சியை அடைய முயன்று வந்துள்ளனர். துவக்க காலத்தில் நடைபெற்ற எல்லா சிகரம் ஏறும் பயணமும் தோல்வியில் தான் முடிந்தது. 1953ஆம் ஆண்டு மே 29 அன்று நியுசிலாந்து நாட்டை சார்ந்த எட்மண்ட் ஹிலாரி (Edmund Hillary) மற்றும் நேபாள நாட்டை சார்ந்த டென்சிங் நார்கே (Tenzing Norgay) முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். அவர்களின் சாதனை உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

இன்று சுமார் 800 பேர் ஒவ்வொரு வருடமும் எவரெஸ்ட் சிகரத்தில் எற முயற்சி செய்கின்றனர். இதுவரை ஏறக்குறைய 4000 பேர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியுள்ளனர். 13 வயதுடைய சிறுவனில் துவங்கி 80 வயதுடையவர் வரை பலர் எவரெஸ்ட் சிகரத்தை அடைத்துள்ளனர். ஆனாலும் அங்கு செல்பவர்களில் பத்தில் ஒருவர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. சிகரங்கள் ஒரு கடுமையான இடம்.

பெரும்பான்மையான மக்கள் உயிரிழப்பதின் காரணம் பனிச்சரிவு (avalanche). மலையின் சரிவில் பனி இருக்கும். அதன் மேல் தான் மக்கள் நடந்து சிகரதை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் திடீர் என்று, எந்தவித அறிவிப்பும் இல்லாமல் மலை சரிவில் உள்ள பல கிலோமீட்டர் பரப்பளவுடைய பனி நிலைகுலைந்து, கீழே சறுக்கி வரும். இதன் பெயர் தான் பனிச்சரிவு. இந்த சரிவில் கீழே உள்ள அனைத்தையும் அழித்துவிடும். வெள்ளப்பெருக்கெடுப்பில் பல மரங்கள் அழிவது போன்று இது காட்சியளிக்கும். பனிச்சரிவில் சிக்கும் எல்லா மரங்கள், மனிதர்கள், மற்றும் அனைத்தையும் அழித்துவிடும்.

நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜன் (oxygen) சிகரங்களில் மிக குறைவாகவே இருக்கும். சிகரம் ஏறுபவர்கள் இதை கவனித்து தான் செல்லவேண்டும். குறைவான ஆக்சிஜன் அவர்களை மயக்கமடையச் செய்யும். இதிலும் பலர் உயிரிழந்துள்ளனர். குறைவான ஆக்சிஜன் இருப்பதால், மிக குறைவான மரங்களும், செடிகளும் வளரும். சிலவகை பூச்சிகள் இந்த கடும் குளிரில் வாழ்கிறது. இதைவிட முக்கியமாக பலவகை ஆடுகள் அங்கு வாழ்கிறது. இந்த ஆடுகளை வேட்டையாட ஒரு கம்பீரமான விலங்கு இமயமலைத்தொடரில் வாழ்கிறது.

சிகரங்களின் கடுமையான சூழ்நிலை, உலகின் மிக உரம்வாய்ந்த மற்றும் கடினமான விலங்குகளை உருவாக்கியுள்ளது. அதில் மிக கம்பீரமான விலங்கு, இமயமலைத்தொடருக்கு ராஜா, பனி சிறுத்தை. உலகின் சிகரங்களை இது ஆண்டு வருகிறது. இந்த விலங்கை மிக குறைவான மனிதர்களே பார்த்துள்ளனர். இமயமலைவாழ் மக்கள் இதை சிலமுறை பார்த்ததாக கூறினாலும், விஞ்ஞானிகள் மிக அண்மையில் தான் இவற்றை பார்த்துள்ளனர். இதன் வாழ்க்கை மிக ரகசியமாகவே உள்ளது. அந்த உயரத்தில், கடும் குளிரில் யார் தங்கி இவற்றின் வாழ்க்கையை படிப்பது? இமயமலைவாழ் மக்கள்கூட இந்த விலங்கை பார்ப்பது அரிது.

சிகரங்கள் மேல் ஏறி சாதனைபுரிந்தாலும், அங்கு மனிதர்கள் ஒரு தற்காலிக வருகையாளர்கள்தான். யாராலும் சிகரங்களை அவர்களின் வீடாக மாற்ற முடியவில்லை. சிகரங்கள் அந்த அளவுக்கு விரோதமான இடங்கள்.

பூமியின் மிக வெப்பமான இடம் பூமத்திய ரேகை (equator). இங்கு தான் சூரியனின் தாக்கம் பூமியில் அதிகமாக இருக்கும். ஆனால் பூமத்திய ரேகையில் கூட பனி பூமியில் உள்ளது. ஆப்பிரிக்காவின் இரண்டாம் உயரமான சிகரம் மவுண்ட் கென்யா (Mount Kenya). இது 5.199 கிலோமீட்டர் உயரமுடைய பூமத்திய ரேகையில் உள்ள சிகரம். இந்த மலை உச்சியில் பனி வருடம் முழுவதும் இருக்கும். தென் அமெரிக்காவின் ஈக்குவடோர் (Ecuador) நாட்டின் காயம்பே (Cayambe) மலையும் இது போன்றது தான். பூமியின் வெப்பமண்டலத்திலும் மிக குளிரான இடங்கள் சிகரங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பூமத்திய ரேகை அருகே இருக்கும் சிகரங்களில் வாழும் விலங்குகள் ஒரு வித்தியாசமான சவாலை சந்திக்க வேண்டி இருக்கும். காலையில் சூரியனின் வெட்பத்தினால் கடும் வெப்பத்தையும், இரவில் கடும் குளிரையும் சந்திக்க வேண்டி இருக்கும். தினமும் இரவில் அங்கு நீர் வீழ்ச்சிகள் உறைந்துவிடும், மறுபடியும் பகலில் அவை கரைந்துவிடும். கடும் குளிர் மற்றும் கடும் வெப்பம் என்ற இரண்டையும் தினமும் இங்கு வாழும் விலங்குகளும் செடிகளும் சந்திக்க வேண்டி இருக்கும்.

கடுமையான குளிரில், குறைந்த ஆக்சிஜனில் வாழ்வது சுலபமல்லாமல் இருந்தாலும் இங்கு இந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகள் மிக குறைவு. இதனால் அவைகள் பயமின்றி அங்கு வாழலாம்.

ஒவ்வொரு சிகரமும் ஒரு தனி தீவு போன்றது. அதில் வாழும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் வழக்கமாக உலகில் வேறு எங்கும் காணப்படாது. ஒவ்வொன்றும் தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு சிகரத்தில் உருவாகியுள்ளது. ஒரு சிகரத்தில் காணப்படும் உயிரினங்கள் வழக்கமாக வேறு சிகரத்தில் காணப்படாது. சில தாவரங்கள் தான் காற்று வழியாக வெவ்வேறு இடங்களில் பரவியிருக்கும். ஒவ்வொரு சிகரமும், வெவ்வேறு வகையில் ஒரு தனிப்படுத்தப்பட்ட பாலைவனம். இங்கு வாழும் உயிரினங்கள் மிக கடுமையான சூழ்நிலைக்கு அவைகளை தயார்படுத்தவேண்டி வேண்டி இருக்கும்.

உலகின் சிகரங்கள் என்றும் அழியாதது போன்று காட்சியளித்தாலும், சிகரங்களுக்கும் அழிவு உண்டு. இமயமலை இன்று உயிருடன் இருக்கலாம். அதாவது அதன் கீழ் இருக்கும் தட்டுகளின் ஆற்றல் இன்றும் இருக்கிறது. ஆனால் அந்த ஆற்றல் கண்டிப்பாக ஒருநாள் அணைந்துவிடும். அன்றிலிருந்து இமயமலைத்தொடர் மெதுவாக நிலைகுலைய ஆரம்பித்துவிடும். புவி ஈர்ப்பு, அரிப்பு போன்ற காரணத்தினால் சிகரங்கள் அழித்துவிடும்.

நியூயார்க் (New York) பெருநகரம் இன்று ஒரு கான்கிரீட் (concrete) சமவெளியாக காட்சியளிக்கிறது. அங்கு மிக உயரமான கட்டிடங்களை மனிதர்கள் கட்டியுள்ளார்கள். இப்படிப்பட்ட உயரமான கட்டிடம் கட்டுவதற்கு ஆழமான அடித்தளம் தேவை. அடித்தளம் போடுவதற்கு அதன் கீழ் இருக்கும் பாறை மிக கடினமாக இருக்கவேண்டி இருக்கும். நியூயார்க் முழுவதும் அதன் கீழ் இருக்கும் பாறை மிக கடினமானது. அந்த அளவு கடினமான பாறைகளுக்கு காரணம், அந்த நிலம் உருவான சூழ்நிலை.

சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் ஒரு சிகரம். பாஞ்சியா (Pangea) என்ற பெருங்கண்டம் அப்போது இருந்தது. அந்த கண்டத்தின் நடுவில் ஒரு மிக பெரிய மலைத்தொடர் இருந்தது. அந்த மலைத்தொடரின் ஒரு பக்கம் ஒரு அழகிய செழிப்பான காடு, மற்றொரு பக்கம் கடுமையான பாலைவனம். மலைகள் ஒரு திசையில் இருக்கும் காற்றை திசை திருப்பி ஒரு பக்கம் பாலைவனமாகவும் மற்றொருபக்கம் செழிப்பான காடாக உருவாக்கும். இப்படி தான் பாஞ்சியா பெருங்கண்டத்திலும் இருந்தது. காலப்போக்கில் அந்த சிகரம் அரிப்பினால் கரைந்துவிட்டது.

இமயமலையின் ஒரு பக்கம் திபெத் பாலைவனம், மற்றொரு பக்கத்தில் உலகத்திலேயே மிக அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சி உள்ளது. திபெத்துக்கு போகவேண்டிய மழையும் சேர்ந்து சிரபுஞ்சியில் பொழிகிறது. இமயமலை இந்த திசை மாற்றும் வேலையை செய்கிறது.  

மனிதனின் செயல்பாடு பூமியின் தட்ப வெட்ப நிலையை மாற்றியுள்ளது. பூமியின் சிகரங்களில் இந்த மாற்றம் மிக தெளிவாக தெரிகிறது. பனி கடந்த ஆண்டுகளைவிட குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பனி குறைகிறது என்பதை நம்மால் அளக்க முடியும். மனிதன் பூமியில் ஏற்படுத்தும் மாற்றத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.  

இன்று சிகரங்களில் குளிர் கடந்த காலங்களைவிட மிக குறைவு. அதனால் பல பூச்சிகள் சிகரங்களின் மேல் புதிதாக வர துவங்கியுள்ளது. சிகரங்களில் பனி இல்லாவிட்டால் பூமியின் தட்ப வெட்ப நிலை மாறும். காற்று செல்லும் திசையும் மாறும். இதன் விளைவை பூமி முழுவதிலும் பார்க்கமுடியும்.

 


பெப்ரவரி 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.