சிறிய காரியத்தை பெரிதுபடுத்தி

Dr. பா. நாகராஜன்

30th May 2019

A   A   A

குறிஞ்சி மலரைப் பற்றி பள்ளிப் பருவத்திலேயே என் தமிழாசிரியர் மூலமாக கேள்விப் பட்டிருக்கிறேன். நடிகர்திலகம் சிவாஜி கணேசனும் மஞ்சுளாவும் நடித்த டாக்டர் சிவா என்னும் திரைப்படத்தில் வரும் ‘மலரே குறிஞ்சி மலரே’ என்னும் பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலமாகும். குறிஞ்சி மலர் இலக்கியங்களில் மிகவும் சிலாக்கியமாக பேசப்படும் ஒன்றாகும். பிரபல நாவலாசிரியர் குறிஞ்சி மலர் என்னும் பெயரில் எழுதிய நாவல் அறுபது எழுபதுகளில் பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய சிறப்பு இம்மலருக்கு ஏனெனில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூத்து குலுங்குவதே ஆகும்.

இப்பூவினத்தின் தாவரவியல்பு சிறப்பு வாய்ந்தது ஆகும். சீக்கிரம் அழிந்துவிடும் தன்மை வாய்ந்தது என்பதால் பன்னிரெண்டு ஆண்டுகள் காத்திருந்து வேரும் விதையும் தக்க காலத்தில் தக்க சீதோஷ்ண நிலையில் வளர்ந்து, தன்னை வெளிக்காண்பிக்கும் தன்மை உடையதாய் உள்ளது. அத்தி பூத்தார்ப் போல் என்று சொல்வார்கள், அதுபோன்ற அரிய தன்மை வாய்ந்தது குறிஞ்சி மலர்.

ஒவ்வொரு முறையும் அதாவது ஒவ்வொரு பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குறிஞ்சி பூத்து குலுங்குவதை பார்க்க கொடைக்கானல் செல்ல வேண்டும் என்பது என் அவாவாய் இருந்தது. இரண்டு மூன்று முறை தவற விட்டதால் இம்முறை கட்டாயம் சென்றுவிட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். குறிஞ்சியை காண மூணாறு செல்வதா கொடைக்கானல் செல்வதா அல்லது உதகை செல்வதா என்ற நிலைப்பாடுகளில் கொடைக்கானலே முதன்மையாக நின்றது. மூணாறில் வெள்ளபெருக்கால் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அதை தவிர்த்து விட்டேன். உதகை அதிக தூரம் என்பதால் அதையும் தவிர்த்து விட்டேன்.

கொடைக்கானல் செல்வதற்காக ஒரு நாள் குறித்து நண்பர்களுடன் செல்வதற்கு தயாரானேன். ஆனால் ஒவ்வொரு நண்பருக்கும் ஒவ்வொரு பிரச்சனை எழுந்து குறித்த நாளில் செல்ல இயலாது போயிற்று. நான் ஒரு சமயம் நண்பர் ஒருவரிடம் குறிஞ்சி காண செல்ல வேண்டும் என கூறி இருந்தேன். அதை நினைவில் வைத்திருந்த அவர் ஒருநாள் எப்போது கொடைக்கானல் செல்லலாம் என கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். மறுநாள் காலையிலேயே கிளம்பலாம் என பதில் செய்தி அனுப்பினேன். அன்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எங்கள் நகரில் நடக்க இருந்ததால் பேரூந்து வழிப்பாதை மாற்றம் மற்றும் ஜன நெருக்கடி காரணமாக என் கலந்தாலோசனை அறைக்கு நோயாளிகள் யாரும் வர மாட்டார்கள் என்று தெரிந்ததால் அந்த நாளில் செல்ல முடிவு செய்தேன்.

இதற்கு முன்னரே தொலைக்காட்சியிலும் யுடியூப் மற்றும் செய்திதாள்களிலும் கொடைக்கானலில் நகர் முழுவதும் போகும் வழியெல்லாம் குறிஞ்சி பூத்து குலுங்குவதை பார்த்திருந்தேன். குறிப்பிட்ட நாள் அதிகாலை 4.30 மணியளவில் ஒரு மருத்துவரும் என் நண்பருமான ஒருவருடனும் அவரது குடும்பத்தாருடனும் நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டோம். ஏறக்குறைய ஐந்தரை மணிநேரம் கழித்து கொடைக்கானல் போய் சேர்ந்தோம். சீதோஷ்ண நிலை என்னவோ ரம்மியமாக தான் இருந்தது. ஆனால் நான் அங்கு சந்தித்த முதல் நபரே ஒரு வெடிகுண்டை தூக்கி போட்டது போன்ற செய்தியை சொன்னார்.

வழக்கமாக கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் பார்க்கிங் ஏரியாக்களில் கைடுகள் என்னும் நபர்கள் நம்மை சுற்றி சுற்றி வருவார்கள். அத்தகைய வழிகாட்டி ஒருவர் தான் பூக்கள் இருந்தன ஆனால் கருகிவிட்டன. குறிஞ்சி செடிகளை காண்பிக்கிறேன் என்றார். நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எப்படியாவது பூக்களை கண்டுபிடித்து விடலாம் என்று முக்கியமான இடங்களுக்கு சென்றோம். அதாவது தற்கொலை முனை, கோக்கர்ஸ் வாக்ஸ் வேலி, பைன் ஃபாரஸ்ட் மற்றும் பில்லர் ராக் ஆகிய இடங்கள் கண்டுகளித்தோம். வழியெங்கிலும் என் கண்கள் குறிஞ்சியை தேடி அலைந்தன எங்கும் காண முடியவில்லை. பின்னர் லேக் ஏரியாவை சுற்றி வந்த பின்னர் கடைசியாக பிரையண்ட் பார்க்க என்னும் தோட்டத்திற்கு வந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டதற்கு பார்க்கின் உள்ளே சிறுவர் பூங்காவிற்கு சிறிது மேற்பகுதியில் குறிஞ்சி மலர் உள்ளது என்று கூறி என்னை ஆசுவாசப் படுத்தினார். அருகில் சென்று பார்த்தபோது இருபதுக்கு இருபது அடி நீள அகலத்தில் ஒரு புதர் போன்று பூக்களுடன் குறிஞ்சி செடிகள் இருந்தன. பாதி மலர்கள் கருகும் நிலையில் இருந்தன. உண்மையில் வயலெட் நிறத்தில் நம் சுண்டு விரலில் பாதி அளவில் உள்ள மணம் இல்லாத மலர்களாய் இருந்தன. எப்படியோ குறிஞ்சி மலர்களை கொஞ்சமாவது பார்த்துவிட்ட திருப்தியில் கொடைக்கானலை விட்டு மூன்றரை மணியளவில் கிளம்பினோம்.

மீடியாக்கள் அனைத்துமே ஒரு சிறிய காரியத்தை வைத்து தங்களது வியாபாரத்திற்கென்று கூட்டி கழித்து ஜோடனை செய்து பிரம்மாதப் படுத்துவது அவர்களது வழக்கம் என தெரிந்துவிட்டது. உண்மையில் பத்திரிகையாளர்களுக்கும், தொலைக்காட்சியினருக்கும் உண்மையை திரித்து கூறி மக்களை கவர்வது எப்படி என தெரிந்து வைத்துள்ளனர். உண்மை ஒட்டுமொத்தமாக பத்து சதவீதம் எனில் மீதம் தொண்ணூறு சதவீதம் பொய்யும் புரட்டும் விளம்பரமும், வியாபாரமுமே என தெளிவாக தெரிந்தது. பத்திரிகைகளில் பழைய புகைப்படங்களையே போட்டு சமாளிப்பதும் நடக்காததை நடந்ததுபோல் கூறுவதும், நேர்மறையான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எதிர்மறை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இவர்களின் வேலை என தெளிவாக தெரிகிறது. ஒரு சிறிய காரியத்தை பெரிதுபடுத்தி பக்கம் பக்கமாக போட்டு முக்கியமான விஷயத்தை சிறிய பத்தியில் போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படிதான் நானும் ஏமாந்து குறிஞ்சி மலர்களை தேடி கொடைக்கானலில் அலைந்தேன் என்பதை எனது நேரடி அனுபவம் புரிய வைத்தது.

 


2018 அக்டோபர் அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.