கவனக் குறைவின் விலை..!

Dr. பா. நாகராஜன்

23rd Jul 2018

A   A   A

இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் என் மகனிடமிருந்து ஒரு கைபேசி அழைப்பு வந்தது. அவன் தனது நண்பன் நாகர்கோவில் நகரில் இருக்கும் ஒரு பிரபல எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்றும் அவனை சென்று பார்த்து வாருங்கள் என்றும் கூறினான். என் மகன் கூறியக் கதை காரியங்கள் என்னை நிலைகுலைய செய்தன. குறிப்பிட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதற்கான காரணம் கீழ்வருமாறு.

அந்நபர் திருப்பூரை சார்ந்தவர். MVSC மற்றும் PhD முடித்துவிட்டு திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் யாவரும் திருப்பூரில் வசித்து வருவதால் 2 வாரத்திற்கு ஒருமுறை திருப்பூர் சென்று திருநெல்வேலி திரும்புவது வழக்கமாக இருந்துள்ளது. கடந்தமுறை திருப்பூரில் இரயிலில் ஏறி பயணித்துள்ளார். நன்கு உறங்கி விட்டதால், அவர் இறங்கவேண்டிய இடமாகிய திருநெல்வேலியையும் தாண்டி இரயில் சென்றுவிட்டது.

அவர் பதறியடித்துக் கொண்டு இரயில் எந்த ஊருக்கு பக்கம் சென்றுக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பதற்காக இரயில் பெட்டியின் கதவை திறந்து வாசலின் ஓரத்தில் நின்று எட்டிப் பார்த்துள்ளார். அச்சமயம் இரயில் பாதை அந்த இடத்தில் வளைவாக இருந்த காரணத்தினாலும் மழைபெய்து வாசற்படி நனைந்து இருந்ததாலும், இரயில் பெட்டியின் கதவு சட்டென இவர்மேல் தட்டி இரயில் பெட்டியிலிருந்து கீழே விழுந்து விட்டார். இன்னும் விடியாமல் இருட்டாக இருந்ததாலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததாலும் விழுந்த இடத்திலேயே 2 மணிநேரம் காயம் மற்றும் இரத்த பெருக்கோடு தண்டவாளம் அருகிலேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதே தண்டவாளத்தில் அடுத்துவந்த கன்னியாகுமரி – நாகர்கோவிலின் விரைவு இரயிலில் பயணித்த ஒருவர் இவரைக் கண்டு அபாயச் சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தி பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடந்தது வள்ளியூருக்கு அருகில் என தெரிய வந்தது.

நான் அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியை சந்தித்த போது அவர் கூறியது என்னவெனில் நீங்கள் கூறிய நபர் மிகவும் ஆபத்தான நிலையில் முழங்காலுக்கு கீழ் இருகால்களும் சிதைந்து எலும்பு முறிவுகள் உடன் காணப்பட்டதாகவும் உடனே கால்களை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை இருந்ததால் இருகால்களையும் அகற்றி விட்டேன் எனக் கூறினார். நான் அவரை முதன்முறையாக பார்க்கச்சென்ற பொழுது எனக்கு என்ன ஆறுதல் சொல்ல என்றே தெரியவில்லை. உயிர் பிழைத்ததே பெரிய காரியம்.

அதுவும் முழங்கால்களுக்கு கீழ் கால்களை அகற்றினால் போதும் என்ற நிலை இருந்ததே பெரிய அதிர்ஷ்டம் என ஆறுதல் கூறினேன். பிறகு நான் மூன்று முறை சென்று பார்த்துவிட்டு வந்தேன். இன்ஃபெக்‌ஷன் இருந்ததால் கால்களை அகற்றிய இடத்தில் வேறொரு அறுவை சிகிட்சை செய்ய ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டுசென்று மயக்க மருந்து கொடுத்த பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் வேறோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்த மருத்துவமனைக்கும் சென்று 2 முறை பார்த்துவந்தேன். அடுத்த நாளே வேறொரு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுவிட்டதாக அறிந்தேன். அவரை வெண்டிலேட்டர் எனப்படும் இருதய – நுரையீரல் இயந்திரத்தில் இணைக்கப்பட்டிருந்ததால் இங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை கோவைக்கு கூட்டிச் செல்லுங்கள் என எழுதிக் காட்டியிருக்கிறார்.

பின்பு அவரது பெற்றோர்கள் என்னிடம், எனது மகனின் இன்னொரு நண்பனின் மூலமாக ஐசியூ வசதியுள்ள ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டார். அவ்வாறே நான் ஏற்பாடு செய்து கொடுத்தபின்னர் மதுரை போகும் முன்னே அந்த ஆம்புலன்சில் இருந்த ஐசியூ இயந்திரம் சரிவர வேலை செய்யவில்லை எனக்கூறி மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 2 நாட்களில் குடும்பத்தினரின் அசௌகரியங்களால் கோவைக்கு போவதற்கு ஒழுங்கு செய்து தரும்படி என்னிடம் கூறினர். நானும் கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையான கோவை மெடிக்கல் செண்டரில் வேலை செய்யும் நண்பரான ஒரு மருத்துவர் மூலமாக அனுமதிக்க ஆவன செய்தேன்.

இப்போது அம்மருத்துவமனையில் அவரது இருதயம் நன்றாக உள்ளது என்றும், கால்களில் இன்ஃபெக்‌ஷன் குறைந்து உள்ளது என்றும் அறிந்தேன். அங்குள்ள என் மருத்துவ நண்பர் தினமும் இவரை சென்று பார்த்து வருவதாகவும் அறிந்தேன். காலில் புண்கள் நன்கு ஆறிய பின்னர் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து தழும்புகள் உறுதியான பின்னர் அளவெடுத்து செயற்கை கால்களைப் பொருத்த இயலும் எனத் தெரிகிறது. இவர் ஏறக்குறைய குணமடைந்து வேலைக்கு செல்ல ஏழு அல்லது எட்டு மாதங்களாவது ஆகும். செயற்கைக் கால்கள் பொருத்திய பின்பும் நடந்து பழக சிறிது காலம் ஆகும். மருத்துவச் செலவோ 30 இலட்சத்திற்கு மேல் ஆகும்.

இவையனைத்தும் சிறிய கவனக்குறைவின் காரணமாக எழுந்த விபரீதங்கள் எனப் புரிகின்றதா? திருநெல்வேலியில் இறங்குவதற்காக கோவில்பட்டி வரும்போதே மொபைலில் அலாரம் வைத்து எழுந்திருக்க வேண்டும். அல்லது சகபயணி எவரிடமாவது திருநெல்வேலி இரயில் நிலையம் வந்ததும் எழுப்புமாறு கூறியிருக்க வேண்டும். அல்லது என்ன கெட்டுவிடப் போகிறது அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ளலாமே என இருந்திருக்கலாம். இதில் எதுவுமே அவர் கவனிக்க வில்லையாதலால், கவனக்குறைவும், அவசரமும், பதட்டமும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு சான்றாக இவ்விபத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

இன்னும் இம்மாதத்திலேயே ஏற்பட்ட ஒரு விபத்தை சான்றாக கூற விரும்புகிறேன். என் கலந்தாலோசனை அறை இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் வசிக்கும் ஒரு நபரைப் பற்றியதாகும். நான் அனுதினமும் சுமார் ஏழேமுக்காலுக்கு பாக்கெட் பால் வாங்க செல்லும்போது அவரும் பால் வாங்க வருவது வழக்கமாக இருக்கும். வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறையாவது அவரை சந்திப்பது வழக்கம். இம்மாதம் முதல் வாரத்தில் நான் குறிப்பிட்ட அந்த நண்பரும் அவரது உறவினர்கள் 14 பேரும் ஒரு சிற்றுந்து எடுத்து திருப்பதி செல்வதற்காக புறப்பட்டுச் சென்றனர். ஏறக்குறைய மாலை 6 மணிக்கு கிளம்பி திருச்சிக்கு செல்வதற்கு முன் வழியில் ஓட்டுநர் அசதியாக இருந்தது போல் தெரிந்ததால் அருகில் அமர்ந்திருந்தவர் வண்டியை சாலையோரத்தில் நிறுத்தி சிறிது தூங்கி பின்னர் செல்லலாம் எனக் கூறியிருக்கிறார். அந்த ஓட்டுனரோ திருச்சி தாண்டிய பின்னர் சிறிது ஓய்வெடுக்கிறேன் என்று கூறினாராம். இந்த உரையாடல் நடந்த 10 நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.

இவர்களது வாகனத்திற்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஆழ்துளை கிணறு தோண்டக்கூடிய கனரக வாகனம் சாலையின் ஓரத்தில் நிறுத்துவதற்காக இடது பக்கம் ஒதுங்கும்போது பின்னால் சென்றுக் கொண்டிருந்த இவர்களது வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்ததாக அறிந்தேன். விபத்து நடந்த நேரம் அதிகாலை 1.30 – 2 மணி இருக்கும். உதவிக்கு ஆட்கள் யாரும் உடனடியாக கிடைக்கவில்லை. அருகே உள்ள கிராமத்திலிருந்து வந்தவர்களும் இவர்களது உடமை, பணம், நகை, மொபைல் எல்லாவற்றையும் பறித்துவிட்டு ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. மேலும் காயமடைந்தவர்களுள் அடுத்தடுத்து ஒன்றிரண்டு பேரும், இரண்டு வாரங்கள் கழித்து 17 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவரும் இறந்ததாக நாளிதழில் கண்டேன். ஒவ்வொரு முறையும் நான் பால் வாங்க செல்லும்பொழுது அவரது உருவமே என் மனக்கண்முன் எழுகிறது.

அதேப்போல் இராஜஸ்தானில் ஒரு குறிப்பிட்ட பிரசித்தமான கோவிலுக்கு செல்வதற்காக ஒரு பேரூந்தில் இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உறவினர்கள் 35 பேர் பயணித்தனர். விடியற்காலை 3 மணியளவில் உறக்கம் வந்ததால் ஓட்டுநர் 16 வயதேயான கிளீனரிடம் வண்டியை ஓட்டச் சொல்லியதில், வண்டி பாலத்தில் மோதி பாலம் உடைந்து பேரூந்து ஆற்றுக்குள் விழுந்து 33 பேர் உயிரிழந்ததாக கண்டேன்.

இம்மூன்று விபத்துக்களிலும் கவனக்குறைவு என்பதை தவிர வேறு எதையாவது கூற இயலுமா?

 


ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.