கொஞ்சம் ரிலாக்ஸ்

Dr. பா. நாகராஜன்

12th Mar 2019

A   A   A

கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்லூரியில் உடன் பயின்ற பழைய மாணக்கர்கள் ஏதாவது ஒரு நல்ல இடத்தில் கூடுதலை வைப்பதுண்டு. சென்னையில் இரண்டு மூன்று முறையும், கொடைக்கானல், ஏற்காடு, ஊட்டி, மலேசியா என எங்களது சந்திப்பு நடத்தி வந்தோம். இந்த முறை மூணாறில் சந்திப்பதாக ஏற்பாடு செய்தோம். நானும் அரைகுறை மனதோடு கலந்துகொள்ள சம்மதித்தேன். ஏனெனில் ஏற்கெனவே மூணாறுக்கும், கொடைக்கானலுக்கும் பல பயணங்கள் சென்றதும், செல்ல திட்டமிடப்பட்டும் இருந்தது. அடுத்தடுத்து தூர பயணம் செல்வது அதுவும் வயதான காலத்தில் செல்வது ஆரோக்கியமாக இருக்காது என்பது எனக்கு தெரியும்.

இருப்பினும் கடைசி நிமிடத்தில் போவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தேன். மலை வாசஸ்தலம் செல்ல வேண்டுமென்றால் அதற்கென உடைகளை தயார் செய்வது நலமல்லவா? துணிவகைகளிலேயே லெனின் இழைகளினால் உருவான உடைகள் எப்போதுமே வெயில் காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் ஏற்றதாக இருக்கக் கூடும் எனச் சொல்வர். குளிர் காலத்தில் உஷ்ணத்தை தருவதாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், காற்றோட்டத்துடனும் இருக்கும் எனவும் கூறுவர்.

அதிகாலை நான்கு மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கிளம்பி தேனி வழியாக போடி சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக போடிமெட்டு போய் சேர்ந்தோம். தனியாக காரை ஓட்டாமல் முன்புற இருக்கையில் அமர்ந்து வழிநெடுக இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு செல்வது அருமையான சுக அனுபவம். வாய்மூடி மௌனியாக பயணிப்பது ஒரு விதமான தியானத்திற்குள் நம்மை செலுத்தி விடும். காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், நம் கவனம் அதில் செலுத்தப்படுவதால் நமது எண்ண ஓட்டங்கள் தானாகவே குறையும். எண்ண ஓட்டங்கள் இல்லாதிருப்பது, நமக்குள் இருக்கும் குழந்தை தனத்தை வெளிகொணரும்.

பின்னர் ஏறக்குறைய காலை பதினோரு மணிக்கெல்லாம் எங்களது சந்திப்பு நடக்கக்கூடிய ஷிர்லிங் ரெசார்ட்க்கு போய் சேர்ந்தோம். அந்த ரெசார்ட் மூணாறில் உள்ளது எனக் கூற இயலாது. ஏனெனில் மூணாறிலிருந்து ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு குறுகிய பாதையில் பயணித்து மிக கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தோம். மற்ற எல்லோரும் சரியான வழி கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து திரிந்து மிக தாமதமாக வந்து சேர்ந்தனர்.

அசந்தர்ப்பமாக அல்லது அதிஷ்டவசமாக நான் ஓர் வழிகாட்டும் பலகையை பார்த்ததன் காரணமாக அவ்விடத்திற்கு மிக விரைவாக செல்ல முடிந்தது.

ஏறக்குறைய இருபத்தியோரு நபர்கள் ஒட்டுமொத்தமாக வந்தனர். என்னைப் போல் தனிநபராக வந்தவர் ஏழெட்டு பேர் இருக்கும். வந்த அனைவரும் அறைகளில் உடைமைகளை வைத்துவிட்டு மாற்றுடை அணிந்து மதிய உணவுக்கு தயாரானோம். பப்பட் சிஸ்டத்தில் மிக சுவையான உணவுகள் இருந்தது. சிறிது நேரம் ஒரு பெரிய அறையில் அமர்ந்து அளவளாவி விட்டு அங்கிருந்து ஒரு தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு செல்வதற்கு தயாரானோம்.

அங்கு சென்ற பின்னர்தான் தேயிலைகளில் எத்தனை வகை உள்ளது எனத் தெரியவந்தது. நாம் சாதாரணமாக உபயோகிக்கும் தேயிலை டஸ்ட் அல்லது மூன்றாம் வகை தேயிலை தூளாகும். அதற்கும் மேல் தரமானது கிரீன் டீ எனக்கூறுகிறார்கள். இதில் நம் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது எனக் கூறினார்கள். இதற்கும் மேலானதாக ஒயிட் டீ என ஒன்று உள்ளதாம். இந்த வகையின் ஐம்பது கிராமின் விலையே 500 ரூபாய்க்கும் மேலாம்.

அந்த தொழிற்சாலையில் சிறந்த தேனீரும் பிஸ்கட்டும் சாப்பிட்டு பின்னர் அங்கிருந்து ஏறக்குறைய எட்டு கிலோமீட்டர் தொலைவில் செங்குத்தாக உள்ள பாதையில் ஜீப்பில் பயணிக்க வேண்டிய இருந்தது. போக வேண்டிய இடம் ’கொலுக்கு மலை’ என்பதாம். அந்த இடத்தில் நின்று ரசித்துப் பார்ப்பதற்கும், அங்கேயே தங்கி இருப்பதற்கும் ரம்மியமான இடமென கூறினார்கள்.

அரைமணி நேர பயணத்திலேயே எங்களது முதுகெலும்பு கழன்று விட்டது போல் ஆனதால், அதற்கு மேல் பயணிக்க யாரும் தயாரில்லை என கூறிவிட்டனர். ஏனெனில் எனது சகாக்கள் அனைவருமே 69 முதல் 72 வயது வரை உள்ளவர்கள். பெண்கள் ஏழெட்டு பேரும், குழந்தைகள் பத்து பன்னிரெண்டு பேரும் இருந்தனர். மாலையாகிவிட்டதால் திரும்ப ரெசாட்டுக்கு வந்துவிட்டோம். மீண்டும் தயாராகி உரையாட கிளம்பினோம்.

ஒவ்வொருவரும் தாங்கள் படித்த மேற்படிப்பு, தாங்கள் வேலை செய்த இடங்கள், தங்களது குடும்ப விபரம் இவற்றை தெரிவித்துக்கொண்டோம். மெல்லிசையும் மிமிக்கிரியுமாக ஒன்பது மணி வரை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் இரவு உணவு மிக பிரம்மாண்டமாக இருந்தது. இதில் என்ன வினோதம் என்றால் எனது உடலைப் பொறுத்தவரை முட்டையிலிருந்து மட்டன், சிக்கன் வரை அனைத்துமே அலர்ஜி. இந்த ஒவ்வாமை இதய அடைப்பு வந்த பின்னர் அதற்கான சிகிட்சை எடுத்தபோது அம்மருந்துகளால் ஏற்பட்டதாம். பின்னர் அக்குளிரில் இரண்டு மூன்று கம்பளி துணியால் போர்த்தி அரைகுறை உறக்கத்தில் காலை விழித்தேன். காலை உணவு முடிந்ததும் ஏலக்காய் எஸ்டேட் சென்றோம். அங்கு குறுகிய ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பாதைகளும் மிளகு, ஜாதிக்காய், பெருங்காய மரமும் மற்றும் வென்னிலா செடிகளும், கொகோ செடிகளும், கிராம்பு செடிகளும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தன.

இவ்வாறான தாவரங்களை ஒரே இடத்தில் பார்ப்பது அதிசயமாகவே தோன்றியது. பின்னர் அங்கிருந்து யானை இறங்கி என்னும் ஒரு பெரிய நீர்தேக்கத்திற்கு சென்றோம். இது தேக்கடி போன்ற பெரிய அளவிலான நீள அகல ஆழம் கொண்ட ஒரு நீர்தேக்கமாகும். சுற்றிலும் காடுகள் காட்டில் காட்டெருமைகள், யானைகள் என மிருகங்களை காண முடிந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் படகு சவாரி ரசிக்கத்தக்கதாக இருந்தது.

நாங்கள் எல்லோரும் 1967 – ல் எம்பிபிஎஸ் சேர்ந்து 1973 படிப்பு முடித்து வெளியே வந்தவர்கள். அனைவருமே தங்களது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடித்த நிலையில் இருப்பதாக எனக்கு தோன்றியது.

படகு சவாரியின் பின்னர் மீண்டும் ரெசாட்டுக்கு சென்று பிரிவுபசார மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் அடுத்ததாக கன்னியாகுமரியில் சந்திப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என சிலர் கூறினர். நான் அதற்கு மறுப்பு கூறி நாகர்கோவிலில் நம் நண்பர்கள் மூன்று பேர் இருக்கிறார்கள். ஆனாலும் இம்மாதிரியான சந்திப்பிற்கு கூட வருவதில்லை. பின் ஒழுங்கு செய்வது எப்படி என மறுத்துவிட்டேன். பின்னர் கோவையை சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆழியார் எனும் பகுதியில் எகோ டூரிசத்திற்கு என ஒரு இடம் இருப்பதாகவும் அங்கு செல்லலாம் எனவும் முடிவு செய்தனர்.

திரும்ப ஊர் வந்து சேரும்பொழுது இரவு பதினோரு மணி ஆயிற்று. நாம் ஊர் விட்டு வெளியூர் சென்று பல்வேறு நிகழ்வுகள், அனுபவங்கள், ஆச்சரியங்கள், அலைச்சல்கள் இவற்றையெல்லாம் கண்டு திரும்ப நம் ஊர், நம் வீடு, நம் படுக்கை என உணரும்போது தான் முழுதிருப்தியும், அமைதியும் பெற முடிகிறது என்பது உண்மை.

 


2018 மே மாத அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.