மதுவின் ஆதிக்கம்

Dr. பா. நாகராஜன்

23rd Aug 2018

A   A   A

சில வாரங்களுக்கு முன் ஒரு காலை நேரத்தில் என் கலந்தாலோசனை அறையில் வழக்கமான என் பணியை செய்துக் கொண்டிருந்தேன். 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நோயாளிகளை பார்ப்பது வழக்கம். எப்பொழுது வீட்டிற்கு சென்று சிறிது ஓய்வு எடுப்போம் எனத்தோன்றும் மனநிலையில் இருப்பேன். அன்று இரண்டு நாற்பதைந்து மணி அளவில் வந்திருந்த ஒருவரிடம் இன்னும் எத்தனை பேர் வெளியே அமர்ந்திருக்கிறார்கள் எனக்கேட்டேன். அவர் இன்னும் 2 பேர் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் பயங்கர போதையில் இருப்பது போல் தெரிகிறது என்றார்.

வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் ஒரு தொல்லை வந்து சேர்ந்து விட்டது என எண்ணியபடி அடுத்த நோயாளியை பார்க்கத் தொடங்கினேன். அவர் வெளியே போனபின்பு, நாற்காலியில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரைக் கண்டேன். அவரது தோளில் நான்கைந்து தட்டு தட்டிய பிறகும் அவர் எழுந்த பாடில்லை.

உண்மையில் அவர் அமர்ந்திருந்த நிலை, சில சமயம் நாளிதழ்களில் வெளியிட்டிருக்கும் மரணச் செய்தியை ‘அதாவது, பேரூந்து கடைசி நிறுத்தத்தை அடைந்த பிறகும் ஒரு நபர் இருக்கையில் சாய்ந்து தூங்கிய நிலையில் இருப்பார். நடத்துனர் அவரது தோளில் தட்டி எழுப்ப முயலும் போது அவர் சரிந்து விழுந்ததாகவும், திடீர் மாரடைப்பில் இறந்ததாகவும்’ நினைவுறுத்தியது. கையை தூக்கி நாடியை பார்த்ததில் இரத்த ஓட்டம் நன்றாக இருந்தது. பின்னர் நான்கைந்து முறை உடலை உலுக்கிய பின் நிதானமாக எழுந்து என் கலந்தாலோசனை அறைக்குள் வந்தார். என்முன் நாற்காலியில் அமர்ந்த அவர் ஒரே ஒரு வேண்டுகோளை திரும்ப திரும்ப கூறினார். நான் நன்கு குடித்துள்ளேன், என் மனைவி மக்களையும், அவர்களைச் சார்ந்த குடும்பத்தாரையும் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு பத்து நாட்கள் அவர்களுக்கு தெரியாமல் ஒழிந்து இருக்க வேண்டும், அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் அது.

அவர் திரும்ப திரும்ப என்னிடம் நீங்கள் நிறைய கேள்வி கேளுங்கள் எனக் கூறினார். அவர் தன்னை பற்றி முழுமையாக கூறி முடித்தால் தானே நான் மேற்கொண்டு அவரிடம் கேள்விகள் எழுப்ப முடியும். அவர் பெயரைக்கூட கூறவில்லை. நான் அப்பொழுது இருந்த மனம் மற்றும் உடல்நிலையில் எதையும் வாய்திறந்து கேட்பதற்கோ அல்லது காதுகொடுத்து கேட்பதற்கோ தயாராய் இல்லாத நிலையில் இருந்தேன். எப்படி அந்த நபரை கழட்டி விடுவது என்பதை குறித்த சிந்தனையில் இருந்தேன்.

இம்மாதிரியான நபர்கள் பொதுவாக மிகுந்த தொல்லை தரக்கூடியவர்களாக இருப்பார்கள். மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருக்கும்படி கூறினேன். மறுத்துவிட்டார். ஏதாவது ஒரு லாட்ஜில் வீட்டுக்குத் தெரியாமல் தங்கி இருங்கள் எனக் கூறினேன். அதற்கும் மறுத்துவிட்டார். இல்லையெனில் அருகில் நாகராஜா கோவில் வளாகம் உள்ளது, அதில் படுத்துறங்கி விட்டு சற்று தெளிவானபின் மாலை 6.30 மணிக்கு என்னை சந்தியுங்கள் என்று கூறினேன். அதற்கும் மறுப்பு தெரிவித்து உங்கள் கிளினிக்கிலேயே தங்க இடம் கொடுங்கள் எனக் கூறினார். அம்மாதிரியான வசதிகள் ஏதும் இல்லாததால் அதற்கு நான் அனுமதிக்க வில்லை. அவர் கோபமாக எழுந்து சென்றுவிட்டார். ஆளைவிட்டால் போதும் என நானும் வீட்டிற்கு கிளம்பினேன்.

மாலைநேர கலந்தாலோசனை அறைக்கு வருவார் என சிறிது நம்பினேன், ஆனால் வரவில்லை. தொல்லை விட்டது என்று நானும் அவரைப் பற்றிய சிந்தனையை விட்டுவிட்டேன். ஆனால் காலை 11 மணியளவில் அந்நபர் எனது அறைக்கு எதிரிலிருந்த பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிச் சென்றதாக அக்கடைக்காரர் கூறினார். முதல்நாள் அவர் செய்த கலாட்டாவை கடைகாரரும் அறிந்து வைத்திருந்ததினால் அந்நபரை குறிப்பிட்டுக் கூறினார். அன்று ஒரு மணியளவில் இது மருத்துவமனை தானா? அருள்ராஜ் என்னும் நபர் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளாரா? என ஒரு பெண் குரல் வினவியது. நானும் நடந்ததைக் கூறி இனிமேல் என்னிடம் அவர் வந்தால் உங்களிடம் தெரிவிக்கிறேன் என கூறி மொபைலை துண்டித்தேன். அத்துடன் அருள்ராஜ் என்னும் பெயரை அறுவைராஜ் என மாற்றி அந்த எண்ணை என் கைபேசியில் பதிந்து வைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அந்நோயாளியின் மனைவியின் சகோதரரும், சகோதரியும் வந்து சேர்ந்தனர். அவர்கள் கூறியதை முழுமையாக இங்கு என்னால் கூற முடியாது. இருப்பினும் சுருக்கமாக அவர்கள் கூறியது கீழ்வருமாறு…

காலையில் இருந்து மாலைவரை தனது அலுவலகத்தில் நன்கு வேலை செய்வார். வேலை முடிந்ததும் மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து போதை ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளை திட்டுவது, அடிப்பது, பின்னர் வெகுநேரம் கழித்து உறங்குவது. காலை எழுந்ததும் பித்தம் தெளிந்து சராசரி நபராகி விடுவது. ஆரம்பம் முதல் இப்பொழுது வரை இதே நிலைதான் எங்கள் சகோதரிக்கு என அவர்கள் இருவரும் கூறினர். மீண்டும் உங்களை தேடிவந்தால் உங்கள் அறையிலேயே அவரை இருக்க வைத்து, அவருக்குத் தெரியாமல் உடனடியாக எங்களுக்கு தெரிவியுங்கள் நாங்கள் வந்துவிடுகிறோம் என கூறிச் சென்றனர்.

நான்கு நாட்கள் கடந்தன. மதியம் ஒரு மணியளவில் அவர் வந்து சேர்ந்தார். அவரைப் பற்றி ஓரளவு எனக்கும் தெரிந்து விட்டதால் அவர் கூறுவதை செவிமடுக்க தயாரானேன். அவர் தனது செயல்பாடுகளில் எந்த குறைபாடுகளும் இருப்பதாக ஏற்க தயாராக இல்லை. அவர் தன்சார்பாக உள்ள நேர்மறை செயல்களை மட்டும் கூறிக்கொண்டிருந்தார். தான் செய்வன எல்லாம் சரிதான் என கூறினார். கடுமையான உழைப்பின் முடிவில் உடல் அசதி தீர சிறிது மது அருந்தினால் என்ன ஆகிவிடப்போகிறது என்பது அவரது வாதம். அவரது மனைவியின் கூற்றுப்படி, கோபத்தில் கண்ணாடியை உடைத்ததில் அவரது கையில் 18 தையல்கள் போட வேண்டியிருந்ததாம். அதேப்போல இன்னொருமுறை, கத்தியை எடுத்து தன்னைத்தானே வயிற்றில் காயப்படுத்திக் கொண்டு கஷ்டப்பட்டிருக்கிறார். அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றதில் காயத்திற்கு சரியான காரணம் கூறாமல் நாங்கள் சிகிட்சையளிக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். பின்னர் மருத்துவக்கல்லூரி அவசர சிகிட்சை பிரிவிற்கு சென்று அங்கு உண்மையை கூறி முறைப்படி சிகிட்சை செய்து திரும்பினாராம்.

இவ்வாறு தம்பதியரில் ஒருவரை ஒருவர் குறைக்கூறில் கொள்வது மிகவும் சகஜம். பொதுவாக கணவன் தன் செயல்களை நியாயப்படுத்தி மனைவியை குறைகூறியும் மனைவி கூறும்பொழுது தன்னிடம் உள்ள எதிர்மறை காரியங்களை கூறாது, கணவனை மட்டும் குறைகூறுவதும் வழக்கமான ஒன்றே. இவ்வாறு எதிராளியான எதிர்மறைக் காரியங்களையும் தனது நேர்மறை காரியங்களையும் கூறிக்கொள்வது தனிப்பட்ட நபர்களை மட்டும் சார்ந்ததல்ல. உலகம் முழுவதிலும் அனைவரும் இவ்வாறுதான் உள்ளனர். நான் இம்முறையும் அவரது மனைவி சகோதரர்கள் கூறியதை அவரிடம் சொல்லவும் இல்லை. இவர் வாதத்தை அவர்களின் வேண்டுகோள்படி அவர்களுக்கு தெரிவிக்கவும் இல்லை. மாறாக, ஓர் தனியார் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொள்ளும்படி கூறினேன். அவர் என் அறையில் இருந்தபடியே உறவினர் ஒருவரை வரும்படி கூறினார். இந்த நான்கு நாட்களும் ஓர் தங்கும் விடுதியில் இருந்திருக்கிறார். நான்கு நாட்களுக்கு சரியான உணவில்லை. மதுவும் அருந்திக் கொண்டிருந்திருக்கிறார்.

அவரை உள்நோயாளியாக அனுமதித்த பின் நரம்பு வழியாக மருந்துகளை ஏற்றி மதுவின் போதை குறைவதற்கும் அவரின் வேகம் குறைவதற்கும் ஊசி போட்ட பின்னர் சிறிது தெளிவடைந்தார். அன்றிரவே வீடு செல்ல வேண்டும் என்று கூறியதால் மதுபோதைக்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தேன். இக்கட்டுரையை நான் எழுத விளைந்ததின் காரணங்கள் கீழ்வருமாறு. 

மது அருந்துபவர்களை நான்கு பிரிவாக பிரிக்கலாம்.

  1. ஒரு வருடத்தில் அவ்வப்பொழுது வரக்கூடிய முக்கியமான பண்டிகை நாட்களிலும் இன்னும் மகிழ்ச்சி அல்லது துக்க நிகழ்ச்சிகளிலும் மது அருந்துதல். அதன் பின்னர் தொடர்ச்சியாக அருந்தும் வழக்கமே இல்லாதோர்.
  2. தினமும் வேலை முடிந்தபின் குடும்பத்தினர் அனுமதியுடன் இரவு மற்றும் முழுமையான உணவுடன் குறைந்த மற்றும் குறித்த அளவே நிரந்தரமாக அருந்துவோர். ஆயுள் முழுவதும் அருந்தினாலும் அளவை கூட்டாதோர்.
  3. 6 மாதம் ஒரு வருடம் என குடிக்காமல் இருந்துவிட்டு விட்டக்குறை தொட்டாக்குறை என அத்தனையையும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் குடித்து முடித்து விடுவது.
  4. இந்த பிரிவில் உள்ளவரே மிகுதியாக பாதிப்படையக் கூடும். ஆரம்பத்தில் பிறர் அறியாமல் அருந்தத் தொடங்கி பின்பு படிப்படியாக அளவு கூடக்கூடும். வருடம் ஒருமுறை இரண்டு முறை என இருந்து மாதம் ஒருமுறை இருமுறை எனப்போய் வாரக்கடைசி மாத்திரம் குடித்து கடைசியாக ஒரு நாளில் இரவு நேரம் என அருந்தத் துவங்கி முடிவில் காலை கண் விழித்ததும் மதுவைத் தான் காண வேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்படுவர். இப்படி ஆனபின் இரவில் குடித்த மதுப்போதையினால் காலை எழுந்ததும் தலைவலி மயக்கம் ஏற்படும். கைகால்கள் நடுக்கம் ஏற்படும். இந்த உடல் உபாதைகள் தீர சிறிய அளவு மது கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவர். இதைத்தான் போதைக்கு அடிமையாதல் எனக் கூறுவர்.

நமது நோயாளி அந்த அளவில் இல்லை. ஆனால், குடித்தபின் அவர் எண்ணுவது, பேசுவது, செய்வது எதுவுமே தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு மனிதனுக்குள் ஓர் குழந்தைத்தனம், ஓர் தெய்வீகம், சராசரி மனித தன்மை என்னும் அடித்தளத்து மிருகத்தன்மை என்னும் நான்கும் கலந்து உள்ளது. மதுவானது மற்ற மூன்றையும் பின்னே தள்ளி மிருகத்தன்மையை மேலே எழுப்பி கொண்டு வந்துவிடும்.

இந்நபர் குடித்ததும் இதுதான் நடந்தேறுகிறது. இவருக்கு மட்டுமல்ல, மது அருந்தும் அனைவருக்குமே இதுதான் கதி. இந்த நபர் மீண்டும் என்னைத் தேடி வரவில்லை. உறவினர்களும் அணுகவில்லை என்பதும் கூடுதலான செய்தி.

 


ஜூலை 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.