நவீன தொழில்நுட்ப பாதிப்புகள்

Dr. பா. நாகராஜன்

15th Apr 2019

A   A   A

ஒரு காலத்தில் நாம் ஊருக்கு கிளம்பும்போது பஸ்சிலோ அல்லது இரயிலிலோ நம்மை ஏற்றிவிட வந்திருக்கும் பெற்றோர் ஊருக்கு போனதும் ஊர் சேர்ந்ததை உடனடியாக ஓர் கடிதம் மூலம் மறக்காமல் எழுதி போடு என்று கூறி அனுப்புவது வழக்கம். அப்படி கடிதம் எழுதி போட்டாலும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் வந்து சேரும். அதுவரை நம் பெற்றோர் பொறுமையாக தான் இருப்பார்கள். அதற்கு முந்தைய காலத்தில் தபால்காரர்கள் ஓடோடி சென்று கடிதங்களை கொடுப்பார்களாம். மன்னர்கள், சேவகர்கள் மூலமாக அதாவது குதிரையில் பயணித்து வரும் சேவகர்கள் மூலமாக வந்த அடுத்த நாட்டு அரசரின் ஓலையையோ அல்லது துணி மடிப்புகளில் வரும் செய்திகளையோ பெறுவது வழக்கம். 30-40 ஆண்டுகளுக்கு முன் தபால்துறை என்பது மிகச்சிறந்த சேவையை செய்து வந்தது.

தொலைத்தொடர்பு சாதனம் என்பது முதன் முதலில் ஓர் ஊரில் உள்ள மிகப்பெரிய பணக்காரர் வீட்டில் மட்டுமே டெலிபோன் சாதனம் இருக்கக் கூடும். நாகர்கோவிலில் எனது கிளீனிக்குக்கு என்று 1985-ல் டெலிபோன் கனெக்‌ஷன் பெற்றேன். தொலைதூரத்தில் இருந்த முக்கிய நபர்களுக்கு போன் செய்வதற்காக மட்டும் இரவு 10 மணிக்கு மேல் கிளம்பி வந்து போன் செய்துவிட்டு திரும்புவது வழக்கம்.

பின்னர் 91-92 என்று நினைக்கிறேன் ஏர்செல் கம்பெனியார் ஏறக்குறைய பாதி செங்கல் அளவு கொண்ட ஓர் மொபைலை அறிமுகப்படுத்தினர். நான் சாலையில் பேசிக்கொண்டு செல்லும்பொழுது சிலர் அதிசயமாக பார்த்தது இன்றும் நினைவில் நிற்கிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு கம்பெனிகள் 2G, 3G 4G இனி வர போகும் 5G என புதுப்புது பரிணாமங்களில் மொபைல் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

தபால் துறையிலிருந்து பி.எஸ்.என்.எல் கம்பெனி தனியாக பிரிந்து மேலும் வளர்ச்சி பெற்றும், ஏர்டெல், ஜியோ, ஓடோபோன் என நிறைய கம்பெனிகள் உருவாகி ஆயிரக்கணக்கான மாடல்களில் மொபைல் போன்கள் விற்கப்படுகின்றன. தெருவுக்கு தெரு கடைகள் என கூவிக்கூவி விற்க ஆரம்பித்தது விட்டனர். மனிதனின் ஆறாம் விரல் போன்று அது நம்மை விட்டு பிரிவதில்லை. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை ஆண் - பெண், ஏழை – செல்வந்தன், படித்தவர் – படிக்காதவர், வேலை உள்ளவர் – வேலை இல்லாதவர், உழைத்து பிழைப்பவர் – பிச்சையெடுப்பவர் ஈராக அனைத்து தரப்பினரும் மொபைல் உபயோகிக்கின்றனர். ஒரு இலட்சம், ஒரு கோடி என விலைமிக்க மொபைல்களோடு, ரூபாய் 300, 400 க்கும் கூட அவை கிடைக்கின்றன.

ஒரு விளம்பரத்தை தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். புதிய ஷோரூம் ஒன்று திறக்கிறார்கள். முதன் முதலாக கடை திறந்ததும் வரும் முதல் வாடிக்கையாளருக்கு 1 ரூபாய் விலையிலும், இரண்டாம் நபருக்கு 2 ரூபாய் விலையிலும் அவ்வாறே கூடிச் சென்று நூறாம் நபருக்கு ரூ.100 விலையிலும் மொபைல் விற்கப்படும் என அறிவித்திருந்தனர். இவ்வாறாக மொபைல் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையிலும் உள்ளனர்.

அதிலும் செல்பிக்கு என்று தனி மொபைல் போன்களும் வந்து, அதில் செல்பி எடுத்து தினசரி 4 முதல் 5 பேர் மரணமடைவதை நாளிதழ்களில் காண்கிறோம். புலி, யானை, ஆகிய மிருகங்கள், வேகமாக வரும் ரயில்களுக்கு முன், பிரம்மாண்ட அலைகளுக்கு முன், மிக உயர்ந்த பாலங்களில் இருந்தும் மற்றும் நடிகர்கள், தலைவர்கள் மேலும் பிற பிரபலங்களுடன் செல்பி எடுத்து கொள்வது வழக்கம் ஆகும். இதுவும் அல்லாமல் எண்ணற்ற விளையாட்டு ஆப் மொபைல்களில் இருப்பதால் இரவுப் பகலாக அதிலேயே கண் விழித்து தன் பொழுதை போக்கி ஆரோக்கியத்தையும் போக்கி கொள்வோர் ஏராளம்.

மொபைகளிலிருந்து வரக்கூடிய அலைகள் பாதுகாப்பானது அல்ல என தெரிந்தும் அரசுகளிலிருந்து, உலக சுகாதார நிறுவனம் வரை எவருமே கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் கோடி கோடியாக கொட்டி கொடுக்கும் உலக மையமான வியாபாரமாக வளர்ந்துள்ள அசுர வளர்ச்சி – பிளாஸ்டிக் போன்றே உலக மக்கள் தொகைக்கு இரண்டு மடங்காகவே மொபைல்களின் எண்ணிக்கை இருக்கக் கூடும். ஏனெனில் அனேகமாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒவ்வொருவரும் பழைய மொபைல்களை கொடுத்து விட்டு புதிய மாடல் மொபைலை வாங்கி கொள்கின்றனர்.

பொதுவாக எந்த அளவுக்கு மலிவாக உள்ளதோ அந்த அளவுக்கு மொபைலின் கதிர்வீச்சு ஆபத்தை விளைவிக்க கூடும். டி.வி ஒன்றும் மொபைலுக்கு சளைத்ததல்ல. 1981 என்று நினைக்கிறேன், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக என் உறவினர்களும் நண்பர்களும் சென்னையில் இருந்த என் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் மூன்று நாட்கள் தங்கியிருந்து டெஸ்ட் மேட்சை பார்த்தனர். அச்சமயம் விஜய் என்னும் போர்டபிள் டி.வி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மேட்சை தொடர்ந்து மூன்று மணிநேரம் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட தலைபாரம் இன்றும் நினைவில் உள்ளது.

அது போன்றே 1986 ல் முதல் முறையாக சோனி போர்டபிள் டி.வி ஒன்றும் விசிஆர் ஒன்றும் பன்னிரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தது வாங்கினேன். அவ்விரண்டும் வாங்கியதற்காக அந்த கடைக்காரர், அப்போது பிரபலமாக இருந்த இரண்டு படங்களின் கேசட்களை இலவசமாக கொடுத்தார். அன்று இரவு அவ்விரண்டு படங்களையும் விழித்திருந்து பார்த்ததில் உறக்கம் கெட்டு தலை பாரமாகவும், மூளைக்குள் ஏதோ ஒரு இயந்திரம் அதி விரைவாக ஓடுவதை உணர்ந்தேன். அந்த காலத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு தியேட்டர்களுக்கு தான் செல்ல வேண்டும். அந்த காலம் எல்லாம் மாறி மொபைல்களிலேயே திரைப்படம் பார்க்கும் சிறுவர்களும் வாலிபர்களும் இன்று ஏராளம்.

அவ்வாறே விளையாட்டுக்கள் செய்திகள், சீரியல்கள் என தொடங்கி யூ ட்யூப், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் இவையெல்லாம் நம் வாழ்வை, நம் நேரத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி பண பரிவர்த்தனைகளும் மொபைல் மூலமாகவே நடைபெறுகின்றன. இளைஞர்களை திசைதிருப்பக் கூடிய புளூவேல், மோமோ, போகோ போன்ற விளையாட்டுக்கள் தற்கொலை வரை இளைஞர்களை கொண்டு செல்கின்றன. பேஸ்புக் மூலமாக காதலித்து கல்யாணம் செய்வதிலிருந்து பணம் பறித்து ஏமாற்றுவது வரை நடைபெறுகிறது.

முன்பெல்லாம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க முடியும் என்ற நிலையிலிருந்த பலான படங்கள் கூட சிறுவர் சிறுமியர்களுக்கு சுலபமாக தெரிந்து அவர்களை சீரழிக்கும் காட்சிகள் பழக்கங்கள் அவர்களை சுலபமாக எட்டி விடுகின்றன. போதை பொருட்கள் கூட ஆன்லைனில் கிடைக்கும் படியாக வசதிகள் இருக்கின்றன. பெற்ற தாய் தந்தையரை தவிர அனைத்தும் ஆன்லைனில் வாங்கும்படியான நிலைமை உருவாகி விட்டது. இலை மறைவு, காய் மறைவாக இருந்த காரியங்கள் சமூகத்தில் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றன.

நான் மேற்கூறிய அனைத்தும் பீடிகை தான். இவ்வளவு பில்டப் எதற்கு என்று கேட்கிறீர்களா… காரணம் கடந்த பத்து நாட்களில் என்னைத் தேடி வந்த – அல்ல அல்ல அழைத்து வரப்பட்ட மூன்று நபர்களே.

சில நாட்களுக்கு முன் மதுரையிலிருந்து 24 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை கூட்டி வந்தனர். தூங்குவதில்லை, வேலை செய்வதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை, பகல் இரவு முழுவதும் இரண்டு மொபைல்களை வைத்துக்கொண்டு அதிலேயே அதிக கவனம் செலுத்திக் கொண்டு இருப்பதுதான் அவள் வேலையாக இருந்திருக்கிறது. எந்தவித சம்பந்தமும் இல்லாத எண்களை தட்டி தொடர்பு கிடைத்தவுடன் வைத்துவிடுவது இவளது வழக்கமாக இருந்திருக்கிறது.

இப்படியாக இவளது போனிலிருந்து தினசரி 40 – 50 கால்கள் வரை தொடர்பை ஏற்படுத்தியிருப்பாள். அவர்களால் வீட்டினருக்கு மிகுந்த தொல்லை ஏற்பட்டுள்ளது. சில நபர்கள் தமக்கு வருவது பெண்ணின் குரல் என்பதால் பேச ஆரம்பித்து விடுகின்றனர். இத்தனைக்கும் இன்னும் மூன்று வாரங்களில் திருமணம் நடக்கப் போகிறது. உள்நோயாளியாக அனுமதித்து மேற்கூறிய இந்த கோளாறுகளை குறிக்கும் இண்டர்நெட் அடிக்‌ஷன் எனும் புதியதொரு தொலைதொடர்பு நோய்க்கான மருந்தை கொடுத்து சிகிட்சை செய்து அனுப்பி வைத்தேன்.

இன்னொரு இளைஞன் 19 வயது மதிக்கத்த நபர், பாலிடெக்னிக் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருப்பவர். கல்லூரிக்கு செல்வதில்லை, சரியாக உணவு உண்பதில்லை, குளிப்பதில்லை, நண்பர்கள் கிடையாது, நாள் முழுவதும் மொபைலை நோண்டி கொண்டிருத்தல், அதை பிடுங்கிவிட்டால் டி.வி. பார்த்துக் கொண்டிருப்பது என அலைவரிசையில் தத்தளித்து கொண்டிருந்தான். பொதுவாக மொபைல்களின் கதிர்வீச்சு நரம்புகளையும் ஒட்டுமொத்த மூளையையும் வெகுவாக பாதிக்கக் கூடியதாம். இந்த நபருக்கும் புகைபிடிப்பது, மது அருந்துவது, கஞ்சா போன்ற பொருட்களை உபயோகிப்பவருக்கு கொடுக்கக் கூடிய காட்டமான மருந்துகளை கொடுக்க வேண்டி இருந்தது. சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பெற்றோர்களால் மொபைல் கொடுக்கப்பட்டு அவற்றிலேயே லயித்து விடுவதை காண முடிகிறது. பொதுவாக கருவில் இருக்கும் குழந்தையிலிருந்து ஆறு வயது வரை மூளை வளரும். அச்சமயம் மொபைல்களால் கதிர்வீச்சினால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்கள் அறிதல் வேண்டும்.

நாம் அன்றாடம் காணும் காட்சிகள் சில – மொபைலில் பேசிக் கொண்டு சாலையை கடப்பது, வாகனங்கள் ஓட்டுவது, சார்ஜரிலிருக்கும் மொபைலை உபயோகிப்பது, தரம்குறைந்த மொபைல்களை உபயோகிப்பது என இவையெல்லாம் எவ்வளவு ஆபத்துக்களை விளைவிக்கும் என நாள்தோறும் பல்வேறு ஊடகங்களிலும் காண்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை போன்றே மொபைல், டேப்லட், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றின் கழிவுகளும் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை எதிர்காலம் நமக்கு கற்றுத்தரும்.

 


2018 செப்டம்பர் மாத அமுதம் இதழில் வெளிவந்தது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.