மனநிலை ஒன்றே போதும்

Dr. பா. நாகராஜன்

21st Sep 2018

A   A   A

சராசரி வாழ்க்கையில் மட்டுமல்ல நமது உடலில் உள்ள நோய்களை கூட்டவும் குறைக்கவும், புதிதாக உருவாக்கவும் வல்லமை படைத்தது மனம். எங்களது பட்டப்படிப்பில் இதுபற்றி ’சைக்கோ சோமாடிக் டிசார்டர்’ என்று தனி அத்தியாயமே உள்ளது. சாதாரண ஒவ்வாமையில் இருந்து இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய அடைப்பு, வயிற்றுப்போக்கு என ஆரம்பித்து புற்றுநோய் வரை வரிசைப்படுத்தி போட்டிருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். புற்றுநோய் கூட மன அழுத்தத்தினால் வருமா? என எனக்கு சந்தேகம் இருந்தது.

பொதுவாக ஒரு இடத்தில் அழுத்தம் கொடுக்கும் பொழுது அந்த அழுத்தத்தின் பாதிப்பு இன்னோர் இடத்தில் மேலெழும்பும் என்பது பௌதிக விதி. இதை நியூட்டனின் இரண்டாம் விதிக்குக் கூட சமமாக கூற முடியும்.

நம் காலத்தைய முனிவர்களில் ஒருவரான ரமண மகரிஷிக்கு தோள்பட்டையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதனால் அவர் இறந்ததாக அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதை படித்து ஞானிகளுக்கு கூட மன அழுத்தம் வருமா? என்று நான் எண்ணிப் பார்த்தேன். உண்மையில் ரமண மகரிஷி பதினான்கு வயதிலேயே ஞானமடைந்ததற்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த வயதில் தன் வீட்டை விட்டு திருவண்ணாமலை அடைந்து பத்து, பன்னிரெண்டு வருடங்களாக தவநிலையில் இருந்து பின் ஞானமடைந்ததாக எழுதப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காலத்தில் உருவான அழுத்தம், மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்து ஒவ்வொரு நபரின் ஒரு குறிப்பிட்ட உறுப்பையோ அல்லது ஒரு குறிப்பிட்ட திசுக்களின் தொகுதியையோ, நோய்வாய் படுத்த ஏதுவாக இருக்கும். அந்த விதமாக என் கலந்தாலோசனை அறைக்கு வந்திருந்த ஒரு பெண்மணியின் நோயைப் பற்றி கூறுவதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

அப்பெண்மணிக்கு வயது ஏறக்குறைய 45 இருக்கும். சுறுசுறுப்பானவர். எதையும் சமாளிக்கும் திறமை உள்ளவர். கடந்த 20 வருடங்களாக அவரது கணவர் என்னிடம் ஒரு சிறிய மனக்கோளாறுக்காக சிகிட்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். மகனும் மகளும் படித்து வேலைப்பார்த்து வருகின்றனர். மேலோட்டமாக எந்த கவலையும் இல்லாத கலகலப்பான நபராகத் தான் அவரை பார்க்கத் தோன்றும். சில வாரங்களுக்கு முன் பயங்கரமான தலைவலி என்று கூறிக்கொண்டு அவர் வந்து அமர்ந்தார். மிகச் சாதாரணமாக அதை எடுத்துக்கொண்டு நான் இரத்த அழுத்தத்தை காண விளைந்தேன். அவரது இரத்த அழுத்த அளவை பார்த்ததும் என் இரத்த அழுத்தம் கூடியது போல் அதிர்ச்சியடைந்தேன். 220/120 எனக் கண்டேன். இம்மாதிரியான இரத்த அழுத்தம் இருப்பின் மற்ற மருத்துவ மனைகளுக்குச் சென்றால் உடனடியாக அவசர சிகிட்சை பிரிவில் உள்ளிருப்பு நோயாளியாக அனுமதித்து தேவையான இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன் என வரிசையாக பரிசோதனைகளுக்கு உட்படுத்திவிடுவர். எதற்கும் ஒரு நாளைக்கு மட்டும் மருந்து கொடுத்து பார்ப்போம் என கொடுத்து அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு வரும்படி கூறினேன். உண்மையில் அன்று இரவு நான் நிம்மதியாக தூங்கவில்லை என்றே கூறுவேன்.

ஏனெனில், இம்மாதிரியான இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அவர்கள் தம் மூளைக்குள் இரத்த குழாய் வெடித்து இரத்த ஒழுக்கு ஏற்பட்டு பாரிசநோய் வந்தோ அல்லது அதிக இரத்த ஒழுக்கு இருப்பின் கோமா நிலைக்கு கூட போக வாய்ப்பு உள்ளது. எனக்கும் அம்மாதிரியான எண்ணங்கள் ஏற்பட்டு அப்பெண்மணியை அதற்கென உள்ள மருத்துவரிடம் அனுப்பியிருக்க வேண்டுமோ என குழம்பிக்கொண்டிருந்தேன். உண்மையில் அவர் எனது அறைக்கு முதன் முறையாக வந்தது இரவு 9 மணி இருக்கும், அதாவது இரத்த அழுத்தம் பார்த்த நேரம். அடுத்த நாள் காலையில் 8 மணிக்கு வரும்பொழுது இரத்த அழுத்தம் குறையவில்லை எனில் அவரை வேறு மருத்துவரிடம் அனுப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டே அடுத்த நாள் காலை அவருக்கு இரத்த அழுத்தம் பார்த்தேன், கருவியில் 140/90 என காட்டியது. ஒரு நாள் இரவிலேயே இந்த அளவுக்கு இறங்கி இருந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. அவரது முழு கதை கீழ் வருமாறு.

அவரது மூத்த சகோதரர் 48 வயது மதிக்கத்தக்கவர். நல்ல செல்வாக்கு உள்ளவர். இவரது குடும்பத்திற்கு அனைத்தும் அவர்தான். எந்த உதவி தேவைப்பட்டாலும் தன் அண்ணனிடம் தான் செல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன் அவர் பைக்கில் செல்லும் போது சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதிலிருந்து இவருக்கு சரியான உறக்கமில்லை. தன் சகோதரரின் நினைவுகளாலேயே சூழ்ந்திருந்திருக்கிறார். மனக்கவலைகள் கூடி கடந்த ஆறு மாதங்களாக உறக்கமின்றி தவித்திருக்கிறார். அதுவே, அதாவது இறந்த சகோதரரின் எண்ணங்களே அவரது இரத்தகுழாய் மற்றும் இருதய பகுதியை பாதித்து, இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மனதை பாதித்து தூக்கத்தை கெடுத்துள்ளது. மூளையில் உள்ள இரத்த குழாய்களின் அழுத்தம் தலைவலியாக பரிணாமம் எடுத்திருக்கிறது. எனவே தூக்கமின்மை, தலைவலி, இரத்த அழுத்தம் என மூன்று நிலைகளும் இவரது ஆரோக்கியத்தை சிதைத்துவிட்டது. நான் அவருக்கு கவலைப் போக்கும் மருந்து, உறக்கத்திற்கென மருந்து, இரத்த அழுத்தத்திற்கான மருந்து மற்றும் ஆபத்தில்லாத வலி நிவாரணி என இதை கலந்து கொடுத்ததும் அவர் நோயில் இருந்து மிக விரைவில் குணமடைந்தார்.

எனவே எண்ண அழுத்தம், மனக்கவலை, இவை இரண்டும் நம் உடலில் எந்த வியாதியை வேண்டுமானாலும் கொண்டுவந்து சேர்க்குமென புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.