திரும்ப திரும்ப வரும் எண்ணங்கள்

Dr. பா. நாகராஜன்

17th Jan 2019

A   A   A

சில நாட்களுக்கு முன் என் கலந்தாலோசனை அறைக்கு தம் மகளை கூட்டிக் கொண்டு வந்திருந்தனர் ஒரு பெற்றோர். அப்பெண்ணின் முகத்தில் கவலை, கோபம், இறுக்கம், பிடிவாதம் ஆகிய நான்கு உணர்ச்சிகளும் ஓடுவது தெள்ள தெளிவாக தெரிந்தது. அவளது கதை பின்வருமாறு..

அந்தப் பெண் எம்பிஏ முடித்துவிட்டு ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதாவது கடந்த மூன்று வருடங்களாக. அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு இளைஞனுடன் சாதாரணமாக பேசி பின் சகஜமாகப் பழகி ஆழ்ந்த நட்புடன் பேசி வந்திருக்கிறார். அந்த ஆண் நண்பர் இப்பெண்ணின் நடை, உடை, பாவனைகளில் இயைந்து நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளான். தினசரி அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் ஆதலால் அவர்களது நட்பு ஒன்றிரண்டு வருடங்களாக தொடர்ந்து நீடித்தது. இதன் காரணமாக அந்த ஆண் நண்பர் இப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறான். ஆனால் இந்த பெண்ணோ தன் பெற்றோர் கூறும் மற்றும் தேர்ந்தெடுக்கும் வரனையே திருமணம் செய்துகொள்வேன் என கூறி மறுத்துவிட்டாள். ஆனால் இவர்களது நட்பு மேலும் ஒரு வருடம் தொடர்ந்திருக்கிறது.

இப்பொழுது, அந்த ஆண் நண்பருக்கு வேறு மணப்பெண்ணைப் பார்த்து திருமணத் தேதியும் குறித்துவிட்டனர். விஷயம் அறிந்த இந்த பெண்ணோ ஆண் நண்பரிடமும், தன் பெற்றோரிடமும் பயங்கரமாக வாக்குவாதம் செய்து சண்டை பிடித்து சரிவர தூங்காமல் உணவு உண்ணாமல் பிடிவாதம் பிடித்திருக்கிறாள். இச்சமயத்தில் தான் என்னிடம் அழைத்து வந்தனர். அவர் ஒரு வாரமாக தூங்கவில்லை. குளிப்பது, துணிமணி மாற்றுவது போன்ற சொந்த காரியங்களும் செய்வதில்லை. வேலைக்கும் செல்வதில்லை. மூன்று நாட்களாக உணவு எதுவும் உண்ணாமல் வெறும் பழச்சாறு மட்டுமே அருந்தி வந்திருக்கிறார். என் அறைக்குள் வந்த பின்னரும் அவரது தந்தையிடம் அவருக்கு போன் செய்யுங்கள் நான் அவரிடம் பேச வேண்டும். அல்லது பெண் வீட்டுக்கு போன் செய்யுங்கள் அவர்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தி திருமணத்தை தடுத்து நிறுத்துவோம் என கூறிக் கொண்டிருந்தார். அப்பெண் என்னிடமும் நீங்களாவது அவருக்கு போன் செய்து விஷயத்தைக் கூறி கல்யாணத்தை நிறுத்துங்கள் என மன்றாடிக் கொண்டிருந்தாள்.

அப்பெண்ணை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்று உள்நோயாளியாக அனுமதிக்கும்படி கூறினேன். ஒரே எண்ணம் திரும்ப திரும்ப நம் மனதில் வந்து நம் மூளையை புழு குடைவது போல் குடைந்து கொண்டிருந்தால் சுற்றுப்புற சூழல் நிலைகளைப்பற்றி சிந்திக்கத் தோன்றாது. செக்குமாடு போன்று அதே காரியத்தை சுற்றி அவர்களது எண்ணம் சுழன்று கொண்டே இருக்கும். உணவு இன்றி உறக்கமும் இன்றி இருக்கும் நிலையில் குழப்பம் கூடிக்கொண்டே இருக்கும். இரண்டு மூன்று நாட்கள் எண்ணங்கள் ஏதும் உருவாகா வண்ணமும், கற்பனைகள் தோன்றா வண்ணமும் ஒரு நிலையை உருவாக்கிவிட்டால் அப்பெண்ணின் மனதில் தெளிவு பிறக்கக்கூடும். இதுவே என் நிலைப்பாடாக இருந்தது.

காரண காரியங்களைக் கூறி நியாயங்களை எடுத்துச் சொன்னால் ஏற்கும் நிலையில் அப்பெண் இல்லை. எனவே, இரத்தக்குழாய் மூலமாக குளுக்கோஸ் செலுத்தி, அத்துடன் வேறுசில ஊசி மருந்துகளும் செலுத்தப்பட்டது. இரண்டு நாட்கள் அவள் உறங்கி மூன்று நேரம் அரைகுறை உறக்கத்தோடே உணவும் உண்டு முழுவதும் ஓய்வு எடுத்திருந்தாள். மூன்றாவது நாள் யாரும் ஏதும் கூறமல், திருமணத்தை நிறுத்த இயலாது எனக் அவளாகவே கூறி விட்டாள். நான்கு நாள் மாத்திரைகள் கொடுத்து அதன்பின் வரும்படி கூறினேன்.

இவளது மனநிலையின் ஆய்வு கீழ் காண்பதாக இருக்கக் கூடும். தன் ஆண் நண்பர் திருமணத்திற்கு முன் கேட்கும்போது இவர் மறுத்திருக்கிறார். பின்பு அவரின் கல்யாண பெண்ணிற்கு பட்டுப்புடவை எடுக்கும்போது கூட உடன் வேலை செய்பவர் எனும் உரிமையுடன் ஜவுளிக்கடைக்கு சென்றிருக்கிறார். அவர்களது நட்பு பின்பும் தொடர தொடர இவ்வளவு அருமையான நண்பர் கணவராக கிடைக்காமல் போய்விட்டதே எனும் ஆதங்கம் மெதுவாக அவரின் மனதில் எழுந்திருக்கிறது. அந்த ஆதங்கமே ஆவல், ஆசை மற்றும் வெறியாக மாறி வியாதியாக பரிணாமம் எடுத்திருக்கிறது. லாஜிக்கல் திங்கிங் எனும் ஆராய்ந்து அறிந்து நியாயமான முறையில் முடிவெடுக்கும் தன்மை இப்பெண்ணிற்கு இல்லாமல் போயிற்று.

இரண்டு மூன்று நாட்களுக்குள் குறுகிய சிகிட்சைக்குள்ளேயே சரியாகி விட்டதால் இந்த நிலையை நாங்கள் “Brief Reactive Psychosis” என்றும் அல்லது “Transient Situational Reaction” என்றும் கூறுவோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கான வாய்ப்பு உள்ளதால் இது போன்ற நபர்களை மிக கவனமாக கையாள வேண்டும். மேலும் கல்யாணம் முடியும் வரை (அதாவது இவரது ஆண் நண்பருக்கு) சிகிட்சையில் இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இவரை அந்த ஆண் நண்பருடனோ அல்லது அவரின் மணமகளுடனும் பேச அனுமதிக்க கூடாது. இல்லையெனில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இவர் குழப்பம் விளைவிக்கக் கூடும். மேலும் திருமணத்திற்கு செல்லவும் அனுமதிக்க கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் இவருக்கு ஒரு மணமகனை தேர்வுச் செய்து இவரது மனதை அத்திசையில் செலுத்துவதே தகுந்த முறையான சிகிட்சையாகும்.

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.